TNPSC Thervupettagam

இளைஞர்களிடமிருந்து தொடங்கட்டும் தற்சார்பு

September 14 , 2020 1587 days 726 0
  • செங்கோட்டையில் நின்று பிரதமர் மோடி ஆற்றிய உரையில்: 'தற்சார்புள்ள இந்தியாஎன்பதே முக்கியப் பேசுபொருளாக இருந்தது.
  • தற்சார்புக்கு இந்தியாவில் நெடிய வரலாறு உள்ளது. இறக்குமதிசெய்யப்பட்ட பொருட்களைப் புறக்கணிப்பதோ அல்லது மக்களை ஒடுக்கும் பொருட்டு, விதிக்கப்பட்ட உப்பு வரியை எதிர்ப்பதோ, எதுவாயினும் அதில் காந்தியை வழிநடத்திய தாரக மந்திரம் தற்சார்புதான்.
  • தற்சார்பே கதரை இந்திய சுதந்திரப் போராட்டத்தின் அடையாள உடையாக மாற்றியது, தற்சார்பே தண்டி சத்தியாகிரகம் ஒத்துழையாமையை உருவாக்கிட வழிவகுத்தது.
  • இன்றைய இந்தியாவில் நமது குடிமக்களின் திறன்களை மேம்படுத்துவதன் மூலமே நாம் தற்சார்பை அடைய முடியும். மக்கள்தொகைப் பகுப்பைக் கணக்கில் கொண்டு, முதலில் நமது இளைஞர்களிடமிருந்துதான் தொடங்க வேண்டும்.
  • ஆனால், இளைஞர்களுக்கான நமது முதலீடு போதுமானதாக உள்ளதா? 2014-ன் தேசிய இளைஞர்கள் திட்டம், 15-29 வயது வரையுள்ள நபர்களை 'இளைஞர்கள்என வரையறுக்கிறது.
  • இந்த இளைஞர்கள் குழுமம் 2021-ல் மக்கள்தொகையில் 26.1% ஆக இருக்கும். தேசிய இளைஞர்கள் திட்ட அறிக்கையின்படி மத்திய அரசு ஒரு இளைஞருக்குச் சுமார் ரூ.2,710 வீதம் கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, உடல்நலம் மற்றும் உணவு மானியம் ஆகியவற்றுக்காகச் செலவிடுகிறது.
  • மொத்தத் தொகை சுமார் ரூ.90,000 கோடியளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5%-க்கும் குறைவாகும். மாநிலங்கள் அனைத்தும் இதற்கிணையாகச் செலவிடுவதாக வைத்துக்கொண்டாலும், இளைஞர்களுக்கான மொத்த முதலீடு நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1%-க்கும் குறைவாகவே இருக்கும். இளைஞர்களின் எண்ணிக்கைக்கும் ஆற்றலுக்கும் இது நிகராகாது.

வேலையின்மையும் இளைஞர்களும்

  • உலக வங்கியின் அறிக்கைப்படி, குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக முதலீடுசெய்யப்படாத தொகை (இழப்பு) ஒவ்வொரு ஆண்டுக்கும் உள்நாட்டு உற்பத்தியில் 4% ஆகும். இதில் 0.6% வேலைவாய்ப்பின்மையின் பங்கீடு.
  • 2017-18 வரை, இந்தியாவின் தொழிலாளர் தொகுப்பில் இளைஞர்களின் பங்கேற்பு 38.3% ஆக உள்ளது. 2018 கணக்கீட்டின்படி பணியாற்றும் இந்தியாவின் நிலைஎன்ற அறிக்கையில், இளைஞர்களின் வேலையின்மை விகிதம் குறைந்தபட்சம் 18.3% ஆக (அதாவது, 3.47 கோடியாக) இருக்கிறது.
  • மேலும், இரண்டு புள்ளிவிவரங்கள் இளைஞர்கள் வேலையின்மையின் தீவிரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. சுமார் 33% இளைஞர்கள் வேலைவாய்ப்பும் கல்வியுமற்ற (NEET) பிரிவின் கீழ் வருகின்றனர்.
  • அதோடு, இந்தியாவின் திறமையான இளைஞர்களில் 33% பேர் வேலையில்லாமல் இருக்கின்றனர். மேலும், குறைந்தபட்சம் 50 லட்சம் இளைஞர்கள் ஒவ்வோர் ஆண்டும் பணியாளர் தொகுப்பில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • கரோனா ஊரடங்கைத் தொடர்ந்து, இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (CMIE), ஏப்ரலில் மட்டும் இளைஞர்களிடையே 2.7 கோடி வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது. இவ்வனைத்தும், பெருந்தொற்றால் இனிமேல் வரவிருக்கும் கடுமையான விளைவுகளும் சேர்ந்து, நம்மைக் கவலைக்குரிய பொருளாதாரச் சிக்கலில் கொண்டுவந்து நிறுத்தியுள்ளன.

இனி என்ன செய்யலாம்?

  • வரலாற்று நிகழ்வான 1991-ன் தாராளமயமாக்கலின் பின் பிறந்த இளைய தலைமுறையின் கையில்தான் இந்தியாவின் பொருளாதாரம், அரசியல் எதிர்காலம் உள்ளது. மக்கள்தொகைப் பகுப்பில் இளைஞர்களின் பெரும்பான்மையை உணர்ந்து, இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ள இந்தியாவுக்கு இன்னும் பத்தாண்டு காலமே உள்ளது.
  • 2010-ல் வேலையின்மை 20%-க்கு அதிகமாக உயர்ந்தபோது ஐரோப்பிய ஒன்றியத்தில் இளைஞர் உத்தரவாதத் திட்டம் உருவாகியது. இந்தத் திட்டத்தைப் போல நமது நாட்டுக்கேற்ப இந்திய இளைஞர் உத்தரவாதத் திட்டத்தைத் தொடங்க இதுவே சரியான தருணமாகும். இத்திட்டம் சட்டத்தின் ஆதரவோடு, இளைஞர்களை ஆக்கபூர்வமாக ஒருங்கிணைத்து வழிநடத்திச் செல்லும் ஒரு கட்டமைப்பாகச் செயல்படும்.
  • கல்லூரியிலிருந்து பட்டம் பெற்று வெளிவரும் இளைஞர்கள் அல்லது வேலையிழந்த இளைஞர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் தங்களின் படிப்புக்கும் அனுபவத்துக்கும் ஏற்ற ஒரு நல்ல தரமான வேலையைப் பெறச்செய்வது அல்லது பயிற்சியின் மூலம் வேலை பெறுவதற்கு உண்டான திறன்களை அடையச்செய்வதே இத்திட்டத்தின் இலக்காக இருக்க வேண்டும்.
  • மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி மன்றங்கள், தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்தி ஏற்கெனவே இருக்கும் இளைஞர் திட்டங்களையும் திறன் மேம்பாட்டுக் கட்டமைப்புகளையும் ஒன்றிணைத்துச் சீரமைக்க வேண்டும்.
  • எப்படி நிதி ஒதுக்கீட்டில் பட்டியலினத்தவர்க்கும் பழங்குடியினருக்கும் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறதோ, அதேபோல் இளைஞர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட சதவீத நிதி ஒதுக்கீடு வழங்கலாம். மாநில/ மாவட்ட அளவில் அங்குள்ள இளைஞர்களின் எண்ணிக்கைக்கேற்ற விகிதத்தில் செலவினங்களும் பயன்களும் சென்றுசேருமாறு ஒழுங்குபடுத்தலாம்.
  • இந்த இளைஞர் உத்தரவாதத் திட்டம் மற்றுமொரு பட்ஜெட் திட்டமாக மட்டுமே இருந்துவிடக் கூடாது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (MGNREGA), கிராமப்புறங்களில் வாழ்வாதாரத்தையும் சமூகப் பாதுகாப்பையும் மிகச் சிறப்பாக வழங்கிவருகிறது. எனினும், தொழிலாளர் தொகுப்பில் உள்ள இளைஞர்களில் சுமார் 4% மட்டுமே இதனால் பயனடைந்துள்ளனர்.
  • நகர்ப்புற இளைஞர் வேலைவாய்ப்புத் திட்டம் ஒருபுறம் புதியதாக இருக்க, கிராமப்புற இளைஞர் வேலைவாய்ப்புத் திட்டமும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தோடு சேர்த்து தொடங்கப்பட வேண்டும். பொருளாதாரத்தில் அடிக்கடி அமைப்புசார் மாற்றம் ஏற்படும் இந்தச் சூழலில், இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க, இந்த இளைஞர் உத்தரவாதத் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டும்.
  • அத்தகைய உத்தரவாதம் எவ்வகையில் இளைஞர்களின் தேவைகளைக் கண்டறியும்? மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அலுவல்கள் அமைச்சகம், 2010-ல் இளைஞர் முன்னேற்றக் குறியீட்டை முன்னெடுத்தது. அது இளைஞர் முன்னேற்றத்தில் ஆலோசனை கூறிக் கண்காணிக்கும் கருவியாக உள்ளது.
  • இந்தக் குறியீடு, ஒவ்வொரு மாநிலத்திலும் முன்னுரிமை கொடுக்க வேண்டிய பகுதிகள், இடைவெளிகள் மற்றும் மாற்று அணுகுமுறைகள் ஆகியவற்றைக் கண்டறிய உதவுகிறது. இந்தக் குறியீடு சமூக உள்ளடக்கலுக்கு மேலும் ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்க்கிறது. சுருக்கமாக, இளைஞர் முன்னேற்றக் குறியீட்டை சரியாக அமல்படுத்தினால், அது மண்டல வாரியாக இளைஞர் உத்தரவாதத் திட்டத்தைக் கட்டமைப்பதில் பெரும் பங்கு வகிக்கும்.
  • நம் இளைஞர்களின் மீதான அடிப்படைக் கவனக்குவிப்பே தற்சார்பை நோக்கி நாம் எடுத்து வைக்கும் முதல் படியாகும்.
  • அரசியல்சார் விருப்பத்தை வெளிக்கொணர்ந்து, நம் இளைஞர்களுக்கு ஒரு தரமான எதிர்காலத்தை உறுதிசெய்ய இதுவே சரியான தருணமாகும்.

நன்றி:  தி இந்து (14-09-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்