- நாட்டில் 10 முதல் 17 வயதுக்குட்பட்ட 1.58 கோடி சிறார்கள் பல்வேறு வகையான போதைப் பொருள்களுக்கு அடிமையாகி உள்ளனர் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அண்மையில் தெரிவித்துள்ளது.
- உச்சநீதிமன்றம் 2016-ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வை அடுத்து மத்திய அரசு தெரிவித்துள்ள புள்ளிவிவரங்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.
- "10 முதல் 75 வயதுக்குட்பட்டவர்களில் 14.6 % பேர் (16 கோடி பேர்) மது அருந்துகின்றனர். அப்படி மது அருந்துவோரில் 17 ஆண்களுக்கு ஒரு பெண் (1.6 %) என்ற விகிதத்தில் அந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர். மதுவுக்கு அடுத்ததாக கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. "பாங்' என்ற வகை கஞ்சாவை 2.2 கோடி பேரும், சட்ட விரோத கஞ்சா பொருள்களை 1.3 கோடி பேரும் பயன்படுத்துகின்றனர்' என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- பொதுவாக புள்ளிவிவரங்கள் முழு உண்மையை வெளிப்படுத்துவதில்லை. இப்போது மத்திய அரசு தெரிவித்ததைவிட பல மடங்கு அதிகம் பேர் இவற்றுக்கு அடிமையாகி இருக்க வாய்ப்புள்ளது. மது அருந்தினால் அதன் வாசனை எளிதில் காட்டிக் கொடுத்துவிடும். அதனால், இப்போது பெரும்பாலான இளைஞர்கள் மது தவிர மற்ற போதைப் பொருள்களை நாடுகின்றனர்.
- தென்காசி அருகே பாவூர்சத்திரத்தில் ஒரு சிறுவனுக்கு "கூலிப்' என்ற பாக்கு போன்ற, நாக்கின் அடியில் வைத்துக் கொள்ளக்கூடிய போதைப் பொருளை 16 வயதுக்குட்பட்ட மூன்று சிறுவர்கள் கொடுத்து அதை விடியோ எடுத்து வெளியிட்டதால் இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
- பள்ளி, கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து சாக்லெட் வடிவிலும் போதைப் பொருள் விற்பனை செய்வது இப்போது அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே 16 கிலோ கஞ்சா சாக்லெட்டுகளுடன் இளைஞர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
- மதுவிலக்கு அமலில் உள்ள பிகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதில் சரண் மாவட்டத்தில் கடந்த சில நாள்களில் 30 பேர் இறந்துவிட்டதாக மாநில அரசு அறிவித்துள்ளது. ஆனால், அங்கு 60-க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் அண்டை மாவட்டமான
- சிவானில் 6 பேர் இறந்துள்ளனர். அத்துடன் பலர் பார்வை இழந்துள்ளனர். இது குறித்த முழுவிவரம் இனிதான் தெரியவரும்.இங்கே குறிப்பிட்ட சம்பவங்கள் பெரிய மலை முகட்டின் நுனி போன்றவைதான் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. இதுபோன்று போதைக்கு அடிமையாவது ஏதோ அவர்களோடு முடிந்துவிடக் கூடிய விஷயம் அல்ல.
- இது மிகப் பெரும் சமூகப் பிரச்னையாக எதிர்காலத்தில் உருவெடுக்கும். மதுவுக்கு அடிமையாகி உள்ள 16 கோடி பேரில் 5.7 கோடி பேரும், போதை மாத்திரைகள் பயன்படுத்தும் 2.26 கோடி பேரில் 77 லட்சம் பேரும் கடும் உடல் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
- உடல் ரீதியான பிரச்னைகள் ஒருபுறம் இருக்க, இதனால் குடும்ப அங்கத்தினர்களிடையே அடிக்கடி தகராறு, அமைதியின்மை, கணவன் - மனைவி பரஸ்பரம் விவாகரத்து கோருதல், போதைக்கு அடிமையானவர்களின் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுதல் போன்றவை அதிகரிக்கின்றன. இவற்றை எல்லாம், எந்தக் கணக்கெடுப்பிலும் அறிந்துகொள்ள முடியாது.
- கோவையில் நடைபெற்ற ஒரு கல்லூரி விழாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, "போதைப் பொருள் பழக்கத்துக்கு ஒரு சிலர் அடிமையாவது கவலையாக உள்ளது. ஒரு மாணவன் போதைக்கு அடிமையாவது என்பது அவருக்கு மட்டுமல்ல, அவரது குடும்பத்துக்கு மட்டுமல்ல, மாநிலத்தின் வளர்ச்சிக்கே தடையாக உள்ளது' என்று பேசியது குறிப்பிடத்தக்கது.
- போதைப் பொருள்களைத் தடுக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கஞ்சா வேட்டை - 1, கஞ்சா வேட்டை - 2 என்ற பெயரில் பெரிய அளவில் சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 22,852 கிலோ கஞ்சா பிடிபட்டது. 11,964 பேர் கைது செய்யப்பட்டனர். 6,323 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. 482 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
- கடந்த சில நாள்களாக "ஆபரேஷன் கஞ்சா வேட்டை -3' நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. போதைப் பொருள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்குப் பரிசு அளிக்கப்படும் எனவும் தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.பி.) சி.சைலேந்திரபாபு அறிவித்துள்ளார்.
- ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் என்ற இடத்தில் ரூ.160 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி கைப்பற்றினர். சென்னை முதல் ராமநாதபுரம் வரை அத்தனை சோதனைச் சாவடிகளையும் கடந்து போதைப் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டது எப்படி என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி எழுப்பி இருக்கும் கேள்வி சிந்தனைக்குரியது.
- தேசிய கல்விக் கொள்கை அடிப்படையிலான பாடத் திட்டத்தில் போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்துகள் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. போதைப் பொருள்கள் கடத்தலில் ஈடுபடும் பெரும் புள்ளிகள் அடையாளம் காணப்பட்டு முடக்கப்படுவதுடன், போதைப் பொருள்கள் உள்ளே நுழையும் எல்லா வழிகளும் அடைக்கப்பட வேண்டும். மாணவர்களும், இளைஞர்களும் போதைக்கு அடிமையாவதைத் தடுப்பதில் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெரும் பங்கு உள்ளது.
நன்றி: தினமணி (19 – 12 – 2022)