இளைஞர்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் கிடைக்கிறதா?
- இந்திய அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவுற்றிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இன்றைய சூழலில், நமது மக்களவையில் அரசியல் கட்சிகளின் சித்தாந்தப் பன்மைத்துவம் மட்டுமன்றி பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட வெகுஜனத் திரளின் பன்மைத்துவமும் நலன்களும் பிரதிபலிக்கக்கூடிய வகையில் பிரதிநிதித்துவம் அமைந்துள்ளதா என்ற கேள்வி அவ்வப்போது எழுப்பப்படுகிறது.
- நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு என்கிற ஏற்பாட்டின் மூலம் பெண்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் குறித்து விவாதங்களும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், இளைஞர்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் குறித்து விவாதங்கள்கூட நடைபெறுவதில்லை. நாட்டின் வளர்ச்சிப் போக்கைத் தீர்மானிக்கும் ஆற்றல் நிறைந்த இளைஞர் சமுதாயத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் குறித்து ஆச்சரியமூட்டும் பல தகவல்கள் உள்ளன.
- 25 வயது முதல் 40 வயதுக்கு உள்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் சதவீதம் தொடர்ந்து சரிந்துவருகிறது. 1952இல் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களில் சுமார் 30% உறுப்பினர்கள் 40 வயதுக்கு உள்பட்டவர்கள். காலப்போக்கில், இளைஞர்களின் பிரதிநிதித்துவம் படிப்படியாகக் குறைந்து, 2024இல் வெறும் 10% உறுப்பினர்கள் மட்டுமே 40 வயதுக்கு உள்பட்டவர்கள் என்கிற மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.
- முதலாவது மக்களவையில், (1952) ஒரு உறுப்பினர் மட்டுமே 70 வயதைக் கடந்தவராக இருந்திருக்கிறார். ஆனால், தற்போதுள்ள 18 ஆவது மக்களவையில் (2024), 8% உறுப்பினர்கள் 70 வயதைக் கடந்தவர்கள். ஒருபுறம் இளைஞர்களின் எண்ணிக்கை நாடாளுமன்றத்தில் குறைந்துவருகிறது. மற்றொரு புறத்தில், வயதில் மூத்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது.
- மேலும், மக்களவை உறுப்பினர்களின் சராசரி வயது 1952இல் 46.5 ஆக இருந்தது; 2024இல் 55.6 என்று அதிகரித்திருக்கிறது. மாநிலங்களவை உறுப்பினர்களின் சராசரி வயது 63. அதிகமான மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், இளைஞர்களுக்கான அரசியல் அதிகாரப் பிரதிநிதித்துவம் குறைந்துவருவது எளிதில் கடந்து சென்றுவிட முடியாதது. இதனால் ஏற்படக்கூடிய சமூக அரசியல் சிக்கலானது நாட்டின் வருங்காலத்தையும், வளர்ச்சியையும் கடுமையாகப் பாதிக்கக்கூடிய நெருக்கடியைத் தோற்றுவிக்கும்.
சர்வதேச நிலவரம்:
- 2024ஆம் ஆண்டு நிலவரப்படி, உலக மக்கள்தொகையில் சரிபாதி 30 வயதுக்கு உட்பட்டவர்கள். ஆனால், உலக அளவில், 30 வயதுக்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று எடுத்துக்கொண்டால் வெறும் 2.8% மட்டுமே. ஜப்பான், பிரிட்டன், எகிப்து, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இளைஞர் பிரதிநிதித்துவம் தொடர்பான இந்தப் பிரச்சினை நீடிக்கிறது.
- தொழில்நுட்பப் புரட்சி, பொருளாதார வளர்ச்சி, சமுதாய மாற்றம் ஆகியவற்றில் மகத்தான பங்களிப்பை வழங்கிவரும் இளைஞர்களுக்கு அரசியல்ரீதியிலான அமைப்புகளில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை; ஜனநாயகக் கட்டமைப்புகளில் இளைஞர்கள் ஓரங்கட்டப்பட்டு வஞ்சிக்கப்படுகிறார்கள்.
- பிரதிநிதித்துவ ஜனநாயக முறையில் (Representative Democracy) இளைஞர்களுக்கு இழைக்கப்பட்டுவரும் இத்தகைய அநீதியை, ‘ஜனநாயகப் பற்றாக்குறை’ (Democratic Deficit) என்று அறிஞர்கள் வகைப்படுத்துகிறார்கள். இந்தப் பற்றாக்குறையை இட்டு நிரப்ப வேண்டியது காலத்தின் கட்டாயம். தேசிய, மாநில அளவில் இயங்கிவரும் இளைஞர் அமைப்புகள் இது தொடர்பான உரையாடலை முன்னெடுக்க வேண்டும்.
கள நிலவரம்:
- 2024ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவின் சராசரி வயது 28. அதாவது, இந்தியாவின் மக்கள்தொகையில் சரிபாதி மக்கள் 28 வயதுக்கு உள்பட்டவர்கள்; ஏறத்தாழ 65 கோடி இளைஞர்கள் 28 வயதுக்கு உள்பட்டவர்கள். உலகத்திலேயே மிகப்பெரும் இளைஞர் திரளைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்ந்துவருகிறது. இந்தியாவின் அரசியல் திசைவழியைத் தீர்மானிப்பதில் இளைஞர்களின் பிரதிநிதித்துவம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது.
- எனினும், இந்திய நாடாளுமன்றத்தில் இளைஞர்களின் பிரதிநிதித்துவம் என்பது விகிதாசார அடிப்படையில் மிக மிகக் குறைவாகவே இருக்கிறது. அரசியல் பயிற்சியும், செயல்பாடும், நேர்மையும் கொண்ட இளைஞர்களுக்கு உரிய வாய்ப்புகள் கிடைப்பதில்லை. குடும்ப அரசியல் பின்புலம் கொண்ட இளைஞர்கள்தான் அதிக வாய்ப்புகளைப் பெறுகிறார்கள்.
- இத்தகைய சூழலுக்குச் சமூக, அரசியல் பொருளாதாரக் காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. தற்போது, வேட்பாளரை மையமாகக் கொண்ட தேர்தல் நடைமுறை வழக்கத்தில் இருந்துவருகிறது. எனவே, மக்களுக்கு நன்கு அறிமுகமான, சமூகச் செல்வாக்குமிக்க, பொருளாதாரப் பின்புலம் கொண்ட, (வயதில்) மூத்தவர்களையே தேர்தல் களத்தில் வேட்பாளர்களாக நிறுத்த வேண்டிய சூழல் நிலவுகிறது.
- பொருளாதாரப் பின்புலம் இன்மை, அனுபவமின்மை ஆகியவற்றின் காரணமாக இளைஞர்களை வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு அரசியல் கட்சிகள் தயங்குவதாகக் கூறப்படுகிறது. இது போன்ற தயக்கங்கள் தகர்க்கப்பட வேண்டும். இதற்கான முயற்சிகள் குறித்து, கட்சி, அமைப்பு பேதங்களைக் கடந்து இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்; உரையாடல்களைத் தொடங்க வேண்டும்.
- நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புகளில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டிய அவசியம் என்ன? அறிவியல், தகவல் தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி சமுதாயத்தின் இயக்கவியல் (Societal Dynamics) மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது; சமூக வாழ்வை மறுவடிவமைப்பு செய்துவருகிறது என்று சமூகவியலாளர்கள் கருதுகிறார்கள்.
- இதன் பொருட்டு, இளைய சமுதாயத்தினரிடையே பரிணமித்துவரும் புதிய சிந்தனைகள், நமது சமுதாயத்தில் இதுவரையில் வேரூன்றி இருக்கும் அரசியல் சம்பிரதாயங்களுக்கு எதிரான, வலிமையான சவால்களை முன்வைக்கின்றன. தலைமுறை இடைவெளியும், நிலவுடைமைச் சமுதாய மனப்பான்மையும் கொண்ட மூத்த உறுப்பினர்களால் இப்போது உள்ள இளைஞர்களின் வாழ்க்கை முறை வளர்ச்சிப் போக்குகளையும், பிரச்சினைகளையும் புரிந்து கொள்ள முடிவதில்லை. காலநிலை மாற்றம், நவீன உற்பத்திமுறை, செயற்கை நுண்ணறிவு என்று பல்வேறு தளங்களில் முற்போக்கான கருத்துகளைக் கொண்டவர்களாக இளைஞர்கள் இருக்கிறார்கள். எனவே, இளைஞர்களின் தேவைகளையும், பிரச்சினைகளையும் விவாதித்து உரிய முறையில் தீர்வு காண அவர்களுக்கான பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
செய்ய வேண்டியவை:
- அரசியல் செயல்பாடுகளில் இளைஞர்களின் பங்கேற்பை ஊக்கப்படுத்தும் வண்ணம் தேர்தல் சீர்திருத்தங்களும், திட்டவட்டமான கொள்கை முடிவுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, தேர்தலில் வாக்களிப்பதற்கான வயது (18), தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது (25) - இவை இரண்டுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைப்பது, தேர்தலில் போட்டியிடுவதற்கான அதிகபட்ச வயது வரம்பைக் கொண்டுவருவது போன்ற சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- அரசின் கொள்கைகளை இறுதிசெய்யும் நாடாளுமன்ற/மாநில சட்டமன்றக் குழுக்களில் இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்க உரிய ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும். இது போன்ற சீர்திருத்தங்கள் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை ஓரளவுக்கு அதிகரிக்கச் செய்யும் வாய்ப்பு இருக்கிறது. கூடவே, அரசியல் கட்சிகள், அவற்றின் வர்க்க, வெகுஜன அணிகளில் இளைஞர்களுக்கான பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்தினால் நிச்சயமாக மிகப்பெரும் மாற்றம் சாத்தியப்படும். வேட்பாளர்களாக மட்டுமின்றி, கட்சிப் பொறுப்புகளிலும் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளித்திட அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும்.
- மாணவர்/இளைஞர் அமைப்புகளின் மூலம் இன்றைய காலச்சூழலுக்குப் பொருத்தப்பாடுமிக்க அரசியல் பயிற்சி அளிப்பதன் மூலம் நாடாளுமன்ற ஜனநாயகத் தளத்தில் பொறுப்புணர்வுடன் கடமையாற்றக்கூடிய இளைஞர்களை உருவாக்கிட முடியும். இளைஞர்களுக்கான நியாயமான அரசியல் பிரதிநிதித்துவம் என்னும் பொருண்மை குறித்து ஆக்கபூர்வமான உரையாடலை இளைஞர், மாணவர், பெண்கள், குடிமைச் சமூக அமைப்புகள் முன்னெடுக்க வேண்டும். அரசியல் தளத்தில் இளைஞர்களின் பங்கேற்பும் பிரதிநிதித்துவமும் உயரும்போது, சமுதாய மாற்றம் நிச்சயம் சாத்தியமாகும்.
நன்றி: இந்து தமிழ் திசை (09 – 12 – 2024)