TNPSC Thervupettagam

இளைஞர்களை நம்பிய முதல் தலைவன்

January 12 , 2024 313 days 226 0
  • இன்றைய இளைஞனே! நாளைய தலைவன் என்கிற பெருமை கொண்டவனே! நீ என்றும் இளமை சக்தியுடனும் தலைமைப் பண்புடனும் விளங்கிட ஆசையா? வா, ஓர் உத்தமரை உனக்கு அறிமுகப்படுத்துகிறேன். யுவனே, உனக்கு இவரை அறிமுகப்படுத்துவது, உன் திறமைகளையும் உனது சக்திகளையும் உனக்கே அறிமுகப் படுத்துவதற்குச் சமம் ஆகும்.
  • அவரை நீ தெரிந்துகொண்டால், உன் தேகம் முறுக்கேறி நிற்கும். நெஞ்சு நிமிர்ந்து நிற்கும். உனக்குள் எதிர்மறையான எண்ணங்களே வராது.

யார் அவர்

  • அவர் பெரிய விளையாட்டு வீரரா? திரைப்பட நடிகரா? பெரும் கோடீஸ்வரரா? அரசியல் செல்வாக்கு உடையவரா? இவற்றுள் எதுவும் அவரில்லை. ஆனால், அவரால் ஊக்கம்பெற்றவர்கள், அவரது சிந்தனைகளால் செம்மையுற்றவர்கள் எல்லாத் துறையிலும் சாதனையாளர்களாகத் திகழ்கிறார்கள்.
  • நல்ல மனமுள்ள, திறமையானவர் அமரும் நாற்காலிக்குப் பின்னே கம்பீர உருவம் கொண்ட ஒரு ஒளிப்படத்தை நீ பார்த்திருப்பாய். அது இந்தத் துறவியின் திருவுருவம்தான்.
  • வாலிபனே, உலகில் இன்று நீ இந்தியனாக எங்கே சென்றாலும் உனக்கு வரவேற்பு கிடைக்கிறது. அதன் காரணத்தை நீ அறிவாயா? நம் நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டுக் கிடந்தது. அடிமை பூமியிலிருந்து உலக அரங்கிற்குச் சென்று நம் நாட்டின் பெருமையை, கலாச்சார - பண்பாட்டுப் பெருமையை, சமயச் சான்றாண்மையை முழங்கினார் அவர். அதன் மூலம் பாரதீயன் என்கிற நிரந்தரகௌரவ விசாவினை நமக்காக வாங்கி, அதை உனக்காகவும் வழங்கியவர்!
  • 1893ஆம் ஆண்டில் சிகாகோ நகரில் உலக சர்வ சமயப் பேரவையில், ‘அமெரிக்கச் சகோதரிகளே, சகோதரர்களேஎன்கிற ஒற்றை வரியால் உலகையே உலுக்கியவர் அவர்.அதோடு, சுயநலத்திலிருந்து உலகை விழிக்கச் செய்து உன்னதத்திற்கு உயர்த்தியவர் அவர். எல்லாச் சமயத்தினரும் பாராட்டும் வகையில் இந்தியப் பெருமையை உலகறிய உயர்த்தியவர்.
  • இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மிதவாதிகளோ அல்லது தீவிரமாகப் போராடியவர்களோ, யாராக இருந்தாலும் அவர்களிடம் நாட்டுப்பற்றையும் விடுதலை வேட்கையையும் நல்கியவை இவரது நூல்களே. இவரது வீர உரைகளை வாசித்ததாலேயே அந்த வீரர்கள் மாவீரர்கள் ஆனார்கள் என்பது வரலாறு.

நாட்டிற்குச் சாபக்கேடு யார்

  • தாய்த்திருநாட்டை நேசிக்காதவன் நாட்டிற்குக் களங்கம், அவன் சமுதாயத்திற்கே ஒரு சாபக்கேடுஎன்று சாடியவர் அவர். இன்று நாட்டில் பொதுநலம் நாடுபவர்கள் யாராவது இருந்தால், அவர்கள் இவரது கருத்துகளால் ஈர்க்கப்பட்டதாலேயே அது சாத்தியமாகிறது. அன்று காந்தி முதல் இன்று கலாம் வரை இருந்த அனைவருக்கும் ஆதர்ச தலைவராக இருப்பவர் இவர்.
  • யுவதியே, பிறரது சுமைகளை உன் தோள்கள் சுமக்காதபோது நீ சுமப்பது உன் சவத்தையேஎன்று இடியாக முழங்கியவர் இவர். அரசியல் முதல் மதம் வரையிலும் உள்ள சுயநலப் பதர்களைத் தமது சூறாவளிப் பேச்சால் பஞ்சாகப் பறக்கவிட்டவர்.
  • கடவுள் எப்படிப்பட்டவர் என்பதைப் பற்றிச் சமயவாதிகள் அலசிக்கொண்டிருந்தபோது இவர், ‘சுயநலமின்மையே கடவுள்என்று ஆணித்தரமாக - இதுதான் கடவுள், இப்படிப்பட்டதுதான் ஆன்மிகம் என்று எழுதி மக்களின் நெற்றியில் ஒட்டியவர்.
  • இந்த மகான் இன்று உயிரோடு இருந்திருந்தால் இவரது காலடியில் அமர்ந்து பாடம் படித்திருப்பேன்' என்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சொல்ல முடிந்தது என்றால் அவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்!

யார் இளைஞன்

  • இளைஞன் என்றால் உடல் பலம் கொண்டவன் என்று மட்டும் நினைக்காதே. உடல், உள்ளம், அறிவு ஆகிய அனைத்திலும் திடமாக இருந்தால்தான் இளைஞன் என்று நிர்ணயித்தவர். பெண்ணைப் பேயாகக் கருதியவர்கள் சிலர். அவர்கள் நடுவே, ‘பெண்ணுக்குக் கல்வி கொடு, கல்வியால்தான் அவள் முன்னேறுவாள். சாதம் வடிக்கக் கற்றுக்கொடு; சாஸ்திரம் படிக்க வாய்ப்புக் கொடுஎன்று நம் சகோதரிகளுக்காகத் தாய் போன்று முதலில் பரிந்து பேசியவர் அவர்.
  • பெண்களுக்கு ஆன்மிக வாழ்க்கையில் ராஜபாதையைக் காட்டியவர்; பாரதப் பண்பாட்டுப் பெருமையை மெருகூட்டியவர்; தியாகசீலம் மிக்க மேலைநாட்டுப் பெண்மணிகள் பலரைப் பாரதப் பாரம்பரியத்திற்குக் கொண்டுவந்தவர்.
  • அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பெதற்கு என்று கேட்டவர்கள் பலர். அப்படிப்பட்டவர்களைத் தட்டிக்கேட்டு, பெண்களின் விடுதலைக்காக குரல் கொடுத்தவர் இந்த மாமனிதர். அதனால்தான் இன்று நம் பெண்கள் பெரும் பிரச்சினைகளைக்கூட ஊதித் தள்ளிவிடுகிறார்கள்.
  • இன்று யுவதிகள் நிமிர்ந்து நடக்கவும், நேர் கொண்டு சவால்களை நோக்கவும் பாதை வகுத்துக் கொடுத்தவர். ‘இளைஞனே, உன்னை அடக்க முடியாது, நீ யாருக்கும் பணிய மாட்டாய்; உனக்குத் திமிர் அதிகம்; யார் பேச்சையும் கேட்காதவன் நீஎன்றெல்லாம் உன்னைச் சேர்ந்தவர்களே உனக்குப் பட்டம் கொடுப்பார்கள்; உனக்குப் பின்னே பரிகசிப்பார்கள். ஆனால் தம்பியே! தங்கையே! உன்னை முழுமையாக நேசிப்பவர் அவர்தான். இளைஞர்களை முதலில் நம்பிய தலைவரே அவர்தான்.
  • அந்தத் தலைவர் சொன்னார்: உடலை உறுதி செய்; ஊருக்கு உழைக்க!
  • உள்ளத்தைப் பலப்படுத்து, பிறருக்குத் தொண்டாற்ற!
  • அறிவை ஆழமாக்கு, உலகத் தரத்தில் உன்னையும் உன் நாட்டையும் உயர்த்த!
  • இவ்வாறு உனக்குள் ஓர் உந்துசக்தியாக இருந்தவர், இன்றும் உனக்காக இருப்பவர் யார் தெரியுமா?
  • ஒரு கணம் நெஞ்சை நிமிர்த்து. சிந்தனையைத் திரட்டு. கண்களை மலரென மெல்ல மூடு. இப்போது உன் நெஞ்சில் ஒரு திருவுருவம் உதிக்கும். உன் காதுகளில் அவரது திருநாமம் ஒலிக்கும். தேச முன்னேற்றத்திற்காக அந்தத் துறவியின் பங்களிப்பை எண்ணி உன் கைகள் நன்றியினால் குவியும். அவரது கருத்துகள் உன்னை உன் காலில் நிற்க வைக்கும். பகவானின் பாதத்தைப் பற்றவைக்கும்.
  • இளைஞனே, அவர் உனக்காகக் காத்திருக்கிறார். தேசபக்தி, தெய்வ பக்தி இரண்டும் அவரின் கண்கள். துறவும் தொண்டும் அவரது நாசித் துவாரங்கள். அப்படிப்பட்ட உன்னதத் துறவி, லட்சிய மாமனிதர் வேறு யாருமல்ல, சுவாமி விவேகானந்தர்தான்!
  • பாரத தேசத்தில் எத்தனையோ மாமனிதர்கள் தோன்றினாலும் விவேகானந்தர் பிறந்த நாளைத் தேசிய இளைஞர் நாளாகக் கொண்டாடுகிறோம். தம்பி, தங்கையே! விவேகானந்தரின் கருத்துகளை நீ உள்வாங்கு. கோடியில் ஒருவனாக, ஒருத்தியாக இருக்கும் உன் நிலை மாறி நூற்றில் ஒருவனாக நிமிர்ந்து நிற்பாய்.
  • ஆம், சுவாமி விவேகானந்தர் நாட்டை நன்கு நிர்வகிக்க வேண்டியது 100 இளைஞர்கள்தான். அந்த நூறில் நீயும் ஒன்றாக வா!
  • ஜன - 12: சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள்

நன்றி: இந்து தமிழ் திசை (12 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்