TNPSC Thervupettagam

இழுபறியில் நாடாளுமன்ற நிலைக்குழு நியமனங்கள்!

September 25 , 2024 112 days 159 0

இழுபறியில் நாடாளுமன்ற நிலைக்குழு நியமனங்கள்!

  • மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கூட்டணி அரசு மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்து 100 நாள்களைக் கடந்துள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் துறை வாரியாக நியமிக்கப்பட வேண்டிய நிலைக்குழு நியமனங்கள் மேற்கொள்ளப்படாமல் இழுபறி தொடர்கிறது.
  • இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, உரிய நிலைக்குழுக்களின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பெயர்களை எதிர்க்கட்சிகள் உரிய காலத்தில் வழங்கவில்லை என்று குற்றஞ்சாட்டுகிறார். அதேசமயம், நிலைக்குழு தலைவர் பதவிகளை வழங்காமல் இழுத்தடிப்பது மத்திய அரசுதான் என்று எதிர்க்கட்சிகள் எதிர்வினையாற்றுகின்றன.
  • நாடாளுமன்றத்தில் மக்களவையில் 18, மாநிலங்களவையில் 6 என மொத்தம் 24 துறைவாரி நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் உள்ளன. இதில் முக்கியத் துறைகளின் உள்துறை, பாதுகாப்பு, நிதி உள்ளிட்ட பெரும்பாலான துறைகளுக்கான நிலைக்குழு தலைமை பொறுப்பை ஆளும் அரசு தன் வசமும் பிற துறைகளின் தலைமை பொறுப்பை எதிர்க்கட்சிகள், கூட்டணி கட்சிகள் ஆகியவற்றுக்கும் வழங்குவது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் காணப்படும் நடைமுறை. இந்த குழுக்களின் தலைவர்களையும் உறுப்பினர்களையும் மக்களவைத் தலைவர் நியமிப்பார்.
  • நாடாளுமன்றம் பரிந்துரைக்கும் மசோதாக்கள், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு பரிந்துரைக்கப்படும் துறை வாரி அறிக்கைகள், மானியக் கோரிக்கைகள் மீதான அறிக்கைகள் போன்றவற்றை இந்த நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு உட்படுத்தும் அல்லது மசோதாவுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் அழைப்பாணை அனுப்பி விசாரிக்கும்; கருத்துக் கேட்புக் கூட்டங்கள் போன்றவற்றை நடத்தி அதன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும். அதன் அடிப்படையில் மத்திய அரசு திருத்த மசோதாக்களை தாக்கல் செய்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டால் அந்த சட்ட மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.
  • இரு அவைகளில் ஏதேனும் ஒன்றில் மசோதா நிறைவேறாவிட்டாலும், ஒன்று அது நிலைக்குழு பரிசீலினைக்கு அனுப்பி வைக்கப்படும் அல்லது திரும்பப் பெற்றுக் கொள்ளப்படும். இத்தகைய அதிகாரம் மிக்கதாக நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் உள்ளன.
  • தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்த முந்தைய இரண்டு பதவிக்கால தொடக்கத்தில் இந்த நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் செப்டம்பர் 15}ஆம் தேதிக்கு முன்பாகவே நியமிக்கப்பட்டிருப்பர்.
  • ஆனால், மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைத்துள்ள கூட்டணி அரசு, 100 நாள்களைக் கடந்த பிறகும் இன்னும் நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நியமனங்கள் மக்களவைத் தலைவரால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றாலும், மத்திய அரசின் இசைவுப்படியே எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த துறைகளின் தலைமை பொறுப்பை வழங்கலாம் என்பது தீர்மானிக்கப்படுகிறது.

கட்சிகளின் முன்மொழிவு:

  • நாடாளுமன்ற வட்டாரங்களில் விசாரித்தபோது, முந்தைய நடைமுறை போலவே இம்முறையும் வெளியுறவுத் துறை, வேளாண், கால்நடை, உணவுப் பதப்படுத்துதல் துறை, கிராமப்புற வளர்ச்சி, கல்வித் துறை போன்றவை காங்கிரஸýக்கு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. இது தொடர்பாக ஏற்கெனவே காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுடன் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மற்றும் பாஜக மேலிடத் தலைவர்கள் பேசியுள்ளனர்.
  • அதன்படி வெளியுறவுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவராக முந்தைய ஆட்சியில் இருந்த சசி தரூரை காங்கிரஸ் மேலிடம் முன்மொழிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பஞ்சாப் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சரண்ஜித் சிங் சன்னியை வேளாண் துறைக்கான நிலைக்குழு தலைவராகவும் கல்வித் துறை நிலைக்குழு தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் பெயரும் முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
  • மாநிலங்களவையில் உள்ள நிலைக்குழுவில் ஏதேனும் ஒன்றின் தலைவராக சமாஜவாதி கட்சி இசைவு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் ராம் கோபால் யாதவுக்கு அநேகமாக சுகாதாரத் துறை கிடைக்கலாம்.
  • இதேபோல, திமுகவுக்கு நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவு, பொதுவிநியோகத் துறை ஆகியவற்றை வழங்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. அத்துடன், தெலுங்கு தேசம் கட்சிக்கு நகர்ப்புற விவகாரங்கள், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சிக்கு எரிசக்தி, ஐக்கிய ஜனதா தளத்துக்கு போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை ஒதுக்கப்படலாம் என்கிறது நாடாளுமன்ற வட்டாரம்.
  • இந்தக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் நியமன முன்மொழிவுக் கடிதங்களை சில கட்சிகளின் நாடாளுமன்ற குழுத் தலைவர்கள் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு அனுப்பியுள்ளனர். ஆனால், மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மட்டும் இன்னும் தனது நிலைப்பாட்டை மக்களவைத் தலைவர் அலுவலகத்திடம் பகிரவில்லை. அந்தக் கட்சிக்கு ரசாயனம், வர்த்தகம் ஆகிய துறைகளுக்கான நிலைக்குழு தலைவர் பதவி கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
  • ஆனால், அந்தக் கட்சியின் மக்களவை குழு தலைவர் சுதீப் பந்தோபாத்யாய அமெரிக்கா சென்றிருப்பதால் அவர் இரண்டு நாள்களில் நாடு திரும்பிய பிறகு கட்சியின் முடிவு மக்களவைத் தலைவருக்கு தெரிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
  • இந்த விஷயத்தில் தாமதம் செய்வது திரிணமூல் காங்கிரஸ்தான் என்று மத்தியில் ஆளும் பாஜக சாடுகிறது. இதை மறுக்கும் டெரெக் ஓ பிரெய்ன், "உறுப்பினர் பலத்தின் அடிப்படையில் உரிய துறைகளை ஒதுக்காமல் மத்திய அரசுதான் நிலைக்குழு நியமனத்தை அலைக்கழிக்கிறது' என்றார். திரிணமூல் காங்கிரஸýக்கு மக்களவையில் 29, மாநிலங்களவையில் 12 உறுப்பினர்கள் உள்ளனர்.

காங்கிரஸ் ஆட்சேபம்:

  • முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நிலைக்குழுவின் முக்கிய துறைகளாகக் கருதப்படும் உள்துறை, நிதி, வெளியுறவுத்துறை, சுகாதாரம் போன்றவை எதிர்க்கட்சி வரிசையில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும். 1993 முதல் 2014 வரை இதுவே நடைமுறை. ஆனால், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த 2014}க்குப் பிறகு பிரதான துறைகளை தன்வசமே வைத்துக் கொண்டது.
  • நிலைக்குழு தலைமை நியமனம் தொடர்பாக எதிர்க்கட்சிகளுடனும் பாஜக மேலிடம் தொடர்ந்து பேசி வருகிறது. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கூறுகையில், "எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் காங்கிரஸýக்கு நான்கு துறைகளின் தலைமைப் பதவியை ஆளும் பாஜக அரசு வழங்க வேண்டும் ஆனால், மூன்று மட்டுமே தருவதாக கூறுகிறார்கள்.இதுவும் தாமதத்துக்கு ஒரு காரணம்' என்றார்.

"மாத இறுதிவரை அவகாசம் உண்டு'

  • அனைத்து துறைகளுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க இந்த மாத இறுதிவரை அவகாசம் உள்ளது என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் "தினமணி' நிருபரிடம் கூறியது:

  • நிலைக்குழு தலைமை மற்றும் உறுப்பினர்கள் நியமனத்தில் தாமதம் ஏதும் இல்லை. அவற்றை மேற்கொள்ள செப்டம்பர் 30 வரை அவகாசம் உள்ளது. அதை ஏதோ 100 நாள்கள் ஆட்சியுடன் ஒப்பிட்டு அதற்குள்ளாக நியமிக்க வேண்டும் என அழுத்தம் வருவது ஏற்புடையது அல்ல. அனைத்து நியமனங்களும் முறைப்படி மேற்கொள்ளப்படும் என்றார் ஓம் பிர்லா.

நன்றி: தினமணி (25 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்