TNPSC Thervupettagam

இழைக்கப்படும் அநீதியைப் பகிரங்கப்படுத்துவதும் உரிமைப் போராட்டமே!

June 14 , 2021 1143 days 454 0
  • இதழியல் துறையில் மிக உயர்ந்த கௌரவமான புலிட்சர் பரிசானது இந்த ஆண்டு தொழில்முறைப் பத்திரிகையாளர் அல்லாத ஒருவருக்கு வழங்கப்பட்டிருப்பது இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகத்தில் இதழியலின் எல்லை விரிவடைவதையும் தனிநபர்களும் அதன் அங்கமாக மாறுவதையும் உணர்த்துகிறது.
  • கடந்த ஆண்டு மே 25-ல் அமெரிக்காவின் மின்னியாபோலிஸ் நகரத்தில் கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்டு, நிறவெறி கொண்ட காவலர் ஒருவரால் கழுத்தில் மிதிக்கப் பட்டுக் கொல்லப்பட்டார்.
  • அந்தச் சம்பவத்தைத் தனது செல்பேசியில் படம்பிடித்த டார்னெல்லா பிரேஸியர் என்ற பதின்வயது சிறுமிக்குத்தான் புலிட்சர் சிறப்புப் பரிசு அளிக்கப்பட்டுள்ளது.
  • காவலரின் காலணியானது கழுத்திலேறி அழுத்தியபோது ஜார்ஜ் ஃப்ளாய்டு “எனக்கு மூச்சு முட்டுகிறது” என்று முனகியதை வெளியுலகின் கவனத்துக்குக் கொண்டுவந்தவர் இவர்தான்.
  • ஃப்ளாய்டு உயிருக்குப் போராடித் தவித்ததைப் பற்றி டார்னெல்லா பிரேஸியர் அளித்த நீதிமன்ற வாக்குமூலத்தின் ஒவ்வொரு வாக்கியமும் உலகின் மனசாட்சியை உலுக்கியது.
  • கொலம்பியா பல்கலைக்கழகத்தால் அளிக்கப்பட்டுவரும் புலிட்சர் விருதானது செய்தித்தாள்கள், பத்திரிகைகள், மின்னூடகங்கள் ஆகியவற்றில் வெளியாகும் சிறந்த செய்தி அறிக்கைளை ஆண்டுதோறும் கௌரவித்துவருகிறது.
  • பொதுச் சேவைகள், உடனடிச் செய்திகள், புலனாய்வு, உள்ளூர், தேசிய, சர்வதேசியச் செய்திகள், புகைப்படங்கள், இணைப்பிதழ்கள், விமர்சனம், தலையங்கம் உள்ளிட்ட பல பிரிவுகளில் இந்தப் பரிசுகள் வழங்கப்பட்டுவருகின்றன.
  • பொதுச் சேவைகளுக்கான உயர் பரிசு ‘தி நியூயார்க் டைம்ஸ்’ இதழுக்குக் கிடைத்துள்ளது.
  • பெருந்தொற்றுக் காலத்தில் அமெரிக்காவில் நிலவிய நிறபேதங்களையும் பொருளாதாரச் சமத்துவமின்மையையும் கவனப்படுத்தியதைப் பாராட்டி இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது.
  • சர்வதேசியச் செய்திகள் பிரிவில் ‘பஸ்ஃபீட்’ இணைய இதழில் வெளிவந்த கட்டுரைக்கான விருது பெற்ற மூவரில் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த மேகா ராஜகோபாலனும் ஒருவர். சீனாவில் சிறுபான்மையினர் நடத்தப்படும் நிலையைக் கவனப்படுத்தியது அவரது செய்தி.
  • டார்னெல்லா பிரேஸியருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்புப் பரிசானது அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களின் உரிமைகளுக்கான நீண்ட காலப் போராட்டத்தில் பத்திரிகைகள் வகித்துவரும் பெரும்பங்கின் தொடர்ச்சி.
  • கடந்த ஆண்டில் அளிக்கப்பட்ட சிறப்புப் பரிசு, பத்திரிகையாளரும் நிறவெறி எதிர்ப்புச் செயல்பாட்டாளருமான ஐடா பி.வெல்ஸ்க்கு வழங்கப்பட்டது. ஆனால், அவர் இறந்து 89 ஆண்டுகளுக்குப் பிறகு.
  • ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் கண்மூடித்தனமாகக் கொன்று குவிக்கப்பட்டதை எதிர்த்து, தனது ‘மிஸிஸிப்பி ஃப்ரீ ஸ்பீச் அண்டு ஹெட்லைட்’ இதழில் தொடர்ந்து எழுதியவர் அவர். அதன் காரணமாகத் தனது கடைசிக் காலம் வரையிலும் அச்சுறுத்தல்களுக்கு நடுவிலேயே வாழ்ந்தவர்.
  • இந்த ஆண்டிலும் நிறவெறிக் கொடுமைக்கு எதிரான செய்திக்கே சிறப்புப் பரிசு வழங்கப் பட்டுள்ளது.
  • இரண்டுக்கும் பொதுவான ஒற்றுமை ஒன்றுதான்: உங்கள் கண் முன்னால் ஒரு அநீதி இழைக்கப்பட்டால் குறைந்தபட்சம் அதை உலகுக்குப் பகிரங்கப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பை நழுவவிட்டுவிடாதீர்கள்; அதுவே இதழியலின் ஆன்மா.

நன்றி: இந்து தமிழ் திசை (14 - 06 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்