TNPSC Thervupettagam

இஸ்மாயில் குழு அறிக்கையும் எண்ணெய்த் துரப்பண அறிவிப்பும்

November 16 , 2023 376 days 219 0
  • 2021 இல் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில்நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் காலநிலைமாநாட்டில் (COP26) உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, புதைபடிவ எரிபொருள்கள் பயன்பாடு தொடர்பாக வெளியிட்ட ஐந்து கொள்கைகளில், இரண்டு கொள்கைகள் மிக முக்கியமானவை.

முதலாவது

  • புதைபடிவ எரிபொருள்களைப் பயன்படுத்தாமல் 2030ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் ஆற்றல் திறனை அடைவது; இரண்டாவது: 2030-க்குள் நாட்டின் எரிசக்தித் தேவைகளில் 50%ஐப் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி மூலம் நிறைவுசெய்வது. இவற்றை முழுமையாகச் செயல் படுத்துவதன் மூலம் நாட்டின் எண்ணெய், எரிவாயுப் பயன்பாடு கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது. ஆனால், உண்மையில் என்ன நடக்கிறது?

புதிய மாற்றங்களும் பாதிப்புகளும்

  • உலக அளவில் எண்ணெய்-எரிவாயு வளத்தில் 24ஆவது இடத்திலும், அதைப் பயன்படுத்துவதில் மூன்றாவது இடத்திலும் இந்தியா உள்ளது. ஆனாலும்ஒட்டுமொத்தத் தேவையில் 82% இறக்குமதியைச் சார்ந்தே உள்ளது.அதனால், உள்நாட்டு உற்பத்தியை அதிகப் படுத்துவதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து எடுத்துவருகிறது. புதிய எண்ணெய்த் துரப்பணம் சார்ந்த முந்தைய கொள்கைக்கு (NELP) மாற்றாக, 2016இல் மத்திய அரசு கொண்டுவந்த ஹைட்ரோகார்பன் துரப்பணக் கொள்கை (HELP), உற்பத்தி-அனுமதி முறைகளில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தது. ‘ஒற்றை அனுமதி’ என்கிற பெயரில் கச்சா எண்ணெய், நிலக்கரிப் படுகை மீத்தேன், ஷேல் உள்ளிட்ட மரபு சார்ந்த, மரபு சாராத உற்பத்தி முறையில் அனைத்து வகை வளங்களையும் எடுக்க அனுமதிக்கப்பட்டது.
  • மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள புதைபடிவ எரிபொருள் வளங்கள் குறித்த மத்திய எரிசக்தி இயக்குநரகத்திடம் உள்ள உத்தேசத் தரவுகளின் அடிப்படையில், உள்நாட்டு-வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான பகுதிகளைஅடையாளம் காட்டினால், அந்தப் பகுதிகளை ஏலப்பட்டியலில் சேர்க்கும் திறந்தவெளி அனுமதி முறையும் (OALP) கொண்டு வரப் பட்டது. இதுவரை ஏழு சுற்று ஏலம் முடிவடைந்த நிலையில் எட்டு, ஒன்பதாவது சுற்று ஏலம் நடைமுறையில் உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, காவிரிப் படுகை என்பது வேளாண்மையை மையப்படுத்திய சில மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி. ஆனால், பூமிக்குக் கீழே பல ஆயிரம் அடிகளில் உள்ள எண்ணெய், எரிவாயுவை ஆய்வுசெய்து, அதை ஏலம் விடும் மத்திய எரிவாயு இயக்குநரகத்தைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடல், நிலப் பகுதிகள் காவிரிப் படுகை என்றே அடையாளம் காட்டப்படுகின்றன.

குறிவைக்கும் ஓஎன்ஜிசி

  • 2019இல் அறிவிக்கப்பட்ட திறந்தவெளி அனுமதி முறையின் மூன்றாவது சுற்றில், தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் 459.83 சதுர அடி நிலமும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 1403.41 சதுர அடி நிலமும் ஏலம் விடப்பட்டன. ஏலத்தின் இறுதியில், எண்ணெய்-இயற்கை எரிவாயுக் கழகம் (ஓஎன்ஜிசி) அந்த அனுமதியைப் பெற்றது. இதில் மயிலாடுதுறை பகுதி பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலத்துக்குள் வருவதால், அதைத் தவிர்த்துவிட்டு ராமநாதபுரம் மாவட்டப் பகுதியில் 20 சோதனைக் கிணறுகளை அமைப்பதற்கான பணிகளை ஓஎன்ஜிசி நிறுவனம் தொடங்கியுள்ளது. அதன் முதல் கட்டமாக, சுற்றுச்சூழல் அனுமதிக்காகத் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் 31.10.2023 அன்று அந்நிறுவனம் விண்ணப்பித்திருக்கிறது. அத்துடன் அரியலூர் மாவட்டத்தில் 10 உற்பத்திக் கிணறுகள் அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பித்திருக்கிறது. இந்த இரண்டு பகுதிகளும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதியில் அமையாதது குறிப்பிடத்தக்கது.

பாதிப்புகள் குறித்த ஆய்வுக் குழு

  • காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்ய, மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் பகுதி நேர உறுப்பினரான பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் தலைமையில் ஆகஸ்ட் 2021இல் குழு அமைக்கப்பட்டது. சென்னை ஐஐடி பேராசிரியர் இந்துமதி எம்.நம்பி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியர் மகேஸ்வரி, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் செல்வம், பொதுப் பணித் துறை திருச்சி மண்டலத் தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி, பொதுப் பணித் துறை நீர் ஆதார அமைப்பின் நிர்வாகப் பொறியாளர் ராஜா ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாகவும், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் பொது மேலாளர் கார்த்திகேயன் உறுப்பினர் - அழைப்பாளராகவும் (convener) நியமிக்கப்பட்டனர்.
  • குழு அமைக்கப்பட்ட சில நாள்களில் ஆய்வுக்கான பகுதிகள் தொடர்பாகத் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை வெளியிட்ட அறிக்கையில், ஆய்வுப் பகுதிகளுக்கான வரையறைகள் திருத்தப்பட்டன. அதன்படி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதி மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஹைட்ரோகார்பன் திட்டத்தால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்ய அனுமதி அளிக்கப்பட்டது. ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர், மண்ணின் தரம், காற்றின் தரம், பாசன வசதி, வேளாண்மை, உயிரினங்கள் ஆகியவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், மக்களின் வாழ்வாதாரம், உணவு உற்பத்தியில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் இந்தக் குழு ஆய்வுசெய்தது. நான்கு மாதங்கள் கள ஆய்வுசெய்து, 106 பக்கங்கள் கொண்ட அறிக்கையை அப்போதைய தொழில் துறைச் செயலாளர் கிருஷ்ணனிடம் பிப்ரவரி 2022இல் இக்குழு சமர்ப்பித்தது.

அறிக்கை சொல்லும் ஆபத்துகள்

  • அறிக்கையைச் சமர்ப்பித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆய்வுக் குழுத் தலைவர் பேராசிரியர் இஸ்மாயில், ஹைட்ரோகார்பன் திட்டத்தால் நிலம், நீர், காற்று மாசுபாடு, அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை அறிவியல்பூர்வமான ஆவணங்களுடன் அறிக்கையாகக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார். ஏற்கெனவே, தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுவரும் ஹைட்ரோகார்பன் திட்டத்தால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளையும், புதிய ஹைட்ரோகார்பன் திட்டத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் விரிவாக ஆய்வுசெய்துஅறிக்கையாகக் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, காவிரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோண்டி எண்ணெய் எரிவாயு எடுக்கப்பட்டதால் அப்பகுதியில் நில வளமும், நீர் வளமும் மாசடைந்துள்ளதாகவும், ஓஎன்ஜிசி நிறுவனம் கழிவுகளைக் கையாண்ட முறைகளில் பல்வேறு தவறுகள் இருந்தது குறித்தும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிவித்தார்.

அரசு செய்ய வேண்டியது

  • அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 20 மாதங்கள் கடந்த பின்னரும், இது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசிடமிருந்து எந்த அறிவிப்பும் இல்லாத சூழலில், மேற்கண்ட அறிவிப்புகளை ஓஎன்ஜிசி வெளியிட்டிருப்பது கவனிக்கத்தக்கது. வெறுமனே சில பத்தாண்டுகளுக்கு மட்டுமே பயன்தரும் எண்ணெய் வளத்தை எடுக்கும் பணிகளால், மனித வாழ்வின் அடிப்படை அம்சங்களாக விளங்கும் வேளாண்மையும் நீர் வளமும் பாதிக்கப்படாமல் பாதுகாப்பது அரசின் கடமை. இந்நிலையில், தமிழ்நாடு அரசு எண்ணெய்-எரிவாயு துரப்பணம் தொடர்பான தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கவும், இஸ்மாயில் குழுவின் பரிந்துரைகள் குறித்த கருத்துக்களை உடனடியாக வெளியிடவும் கோரிக்கை வலுத்திருக்கிறது.
  • தமிழ்நாடு அரசு மௌனம் கலைக்குமா?

நன்றி: இந்து தமிழ் திசை (16 - 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்