- காஸா போரின் தீவிரம் இன்னமும் குறையாத நிலையில், ஹமாஸ், ஹெஸ்புல்லா அமைப்புகளின் தலைவர்களைப் படுகொலை செய்வதன் மூலம் மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துவருகிறது இஸ்ரேல். இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்துவரும் நிலையில், 2023 அக்டோபர் 7இல் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து நிலைமை மேலும் படுமோசமானது.
- பதிலடி என்கிற பெயரில் காஸாவில் இதுவரை 40,000 பேரை இஸ்ரேல் கொன்றழித்திருக்கிறது. அமைதிப் பேச்சுவார்த்தைகள் இதுவரை எவ்விதப் பலனையும் அளிக்காத நிலையில், ஹமாஸ், ஹெஸ்புல்லா அமைப்புகளின் தலைவர்களைக் குறிவைக்கத் தொடங்கியிருக்கிறது இஸ்ரேல்.
- ஈரானின் புதிய அதிபராகப் பதவியேற்றிருக்கும் மசூத் பெஸெஷ்கியான், மேற்கத்திய நாடுகளுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடிப்பவர் எனக் கருதப்படுபவர். அவரது பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹமாஸ் அரசியல் பிரிவின் தலைவர் இஸ்மயீல் ஹனியேவை ஈரானிலேயே வைத்துப் படுகொலை செய்திருக்கிறது இஸ்ரேல்.
- அதற்கு முதல் நாளில் (ஜூலை 30), லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹெஸ்புல்லா அமைப்பின் தளபதி ஃபுவாத் ஷுகுர் கொல்லப்பட்டார். முன்னதாக ஜூலை 13இல் ஹமாஸ் ராணுவத் தளபதி முகமது டெய்ஃப் இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்டார்.
- பேச்சுவார்த்தை மூலம் சண்டை நிறுத்தத்தைச் சாத்தியமாக்கும் திறன் கொண்டவரான ஹனியேவின் இழப்பு பாலஸ்தீனத்துக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. பாலஸ்தீனப் பகுதிகளில் யூதக் குடியிருப்புகளை அமைப்பது, தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் காரணம் சொல்லி, அப்பாவி பாலஸ்தீனர்களைக் கொன்றழிப்பது போன்றவற்றை முடிவுக்குக் கொண்டுவர விருப்பம் இல்லாத இஸ்ரேல், தொடர்ந்து பாலஸ்தீனத்துக்கு ஆதரவான அமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதை ஒரு உத்தியாகவே கைக்கொண்டிருக்கிறது.
- இதற்கு முன்னர் ஹமாஸ் அமைப்பின் நிறுவனர் ஷேக் அஹ்மது யாஸின் (2004) உள்ளிட்ட பல ஹமாஸ் தலைவர்களை இஸ்ரேல் படுகொலை செய்திருக்கிறது. அதே வேளையில், இது ஒரு வகையில் இஸ்ரேலின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
- யாஸின் காலத்தில் சௌதி அரேபியாவுடனான உறவில் ஹமாஸுக்குக் கிடைத்த ஆயுத உதவிகளைவிடவும், அவருக்குப் பின்னர் அரசியல் பிரிவின் தலைவர் பொறுப்பை ஏற்ற காலித் மெஷால் காலத்தில் - ஈரானுடனான நெருங்கிய நட்பில் கிடைத்தவை ஏராளம். தற்போது காலித் மெஷால் மீண்டும் ஹமாஸ் அரசியல் பிரிவின் தலைவராவார் என ஊகங்கள் வெளியாகியிருக்கின்றன.
- அதேபோல், 1992இல் ஹெஸ்புல்லா அமைப்பின் பொதுச் செயலாளர் அப்பாஸ் அல்-முஸாவி இஸ்ரேலால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கு வந்த ஹஸன் நஸ்ரல்லா, இன்னும் தீவிரமாகச் செயல்பட்டு, ஹெஸ்புல்லா அமைப்பை வலுப்படுத்தினார்.
- ஹெஸ்புல்லாவின் ஆயுத பலத்தை அதிகரித்த தளபதியான ஃபுவாத் ஷுகுரை வளர்த்துவிட்டவர் நஸ்ரல்லாதான். ஆரம்பத்தில், சிறிய அளவிலான அமைப்பாகவே இருந்த ஹெஸ்புல்லா, பின்னாளில் இஸ்ரேலுக்குச் சவால் விடும் வகையில் வளர்ந்ததற்குக் காரணம், பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காத இஸ்ரேலின் அணுகுமுறைதான்.
- அரசியல்ரீதியில் பின்னடைவைச் சந்தித்துவரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, இப்படியான நடவடிக்கைகள் மூலம் தனது செல்வாக்கை மீட்டெடுத்துக்கொள்ள நினைக்கிறார்.
- இவ்விஷயத்தில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும், ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும் காத்திரமான எந்தத் தீர்வையும் எட்டிவிடவில்லை. மொத்தத்தில், இஸ்ரேல் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாதவரை மேற்கு ஆசியாவில் போர்ப் பதற்றம் இன்னும் அதிகரிக்கும். அது இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளைப் பல்வேறு வகைகளில் பாதிக்கும்!
நன்றி: இந்து தமிழ் திசை (05 – 08 – 2024)