TNPSC Thervupettagam

இஸ்ரேலின் சிதைந்த ஈகோவும் நெதன்யாகுவின் இழந்த செல்வாக்கும் தொடரும் காஸா தாக்குதலின் பின்னணி

October 19 , 2023 273 days 193 0
  • காஸா நகர மருத்துவமனையின் மீது இஸ்ரேல் படை விமானங்கள் குண்டுகளை வீசியதில் ஏறத்தாழ 500 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
  • காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் காயமுற்றவர்களும் மற்றவர்களும் அடைக்கலமாகத் திரண்டிருக்கும் ஒரு மருத்துவமனையின் மீது கண்மூடித்தனமாக இஸ்ரேல் விமானங்கள் குண்டுகளை வீசியிருக்கின்றன.
  • அல் அஹ்லி மருத்துவமனை வளாகத்தில் தீப்பற்றியெரிகிற, கண்ணாடிகள் நொறுங்கிக் கிடக்கிற, மனித உடல்களின் பாகங்கள் சிதறிக் கிடக்கிற புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன.
  • ஆனால், இதுபற்றிய தகவல்கள் தெரியவில்லை என்றும் இஸ்ரேலியே விமானத் தாக்குதல்தானா? என்றும் சொல்லத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார் இஸ்ரேலின் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி.
  • காஸாவில் மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, உணவு இல்லை. வீடுவாசல்களை விட்டு வெளியேறி அகதிகளாக மக்கள் தங்கியுள்ள முகாம்களும் குண்டுவீசித் தாக்கப்படுகின்றன.
  • ஆனால், ஹமாஸ் மறைவிடங்களையும் கட்டமைப்புகளையும்தான் தாக்குகிறோம் என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துக் கொண்டிருக்கிறது. உலகமும் பார்த்துக் கொண்டிருக்கிறது.
  • ஹமாஸ் படையினர் தங்கியிருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்தைக் கூறிக்கொண்டு, காஸாவின் பொது மக்கள் மீது இவ்வளவு பெரிய தாக்குதலை இஸ்ரேல் நடத்திக் கொண்டிருப்பதற்கு அரசியல்ரீதியாகவும் உளவியல்ரீதியாகவும் முக்கியமான காரணங்கள் இருக்கின்றன.
  • இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலை இன்னமும் இஸ்ரேலிய அரசு அமைப்புகளாலும் ராணுவ, உளவு அமைப்புகளாலும் நினைத்தும் பார்க்க முடியவில்லை. கெட்ட கனவாக இதை மறக்கவும் முடியாது.
  • உலகின் மிகத் திறமையானவை என்பதாக, இஸ்ரேலைப் பற்றியும் அதன் ராணுவ, உளவு அமைப்புகளைப் பற்றியும் இவ்வளவு காலம் உலகம் கொண்டிருந்த அனைத்து நம்பிக்கைகளையும் அண்மையில் ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலும் பிணைக் கைதிகளைப் பிடித்துச் சென்றதும் உடைத்தெறிந்திருக்கிறது.
  • இஸ்ரேலில் முற்றிலும் செல்வாக்கு இழந்துபோய், எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களுக்கும் மக்களின் எதிர்ப்புக்கும் உள்ளாகி, எப்போது வெளியேறப் போகிறார் என்ற நிலையில்தான் இருந்தார் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.
  • தேச பக்தியின் பெயரால் காஸா மக்கள் மீதான இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தி, பெரும் வெற்றி பெற்றதாகக் காட்டிக் கொள்வதன் மூலம் இஸ்ரேல் வென்றதாகவும் கூடவே தானும் வென்றதாகத் தம்மை முன்னிறுத்திக் கொள்ளும் அரிய வாய்ப்பை நெதன்யாகுவுக்கு ஹமாஸ் அமைப்பினர் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள்.
  • உத்தியிலும் உளவுத் திறனிலும், ராணுவரீதியாகவும் என எல்லாவகையிலும்  இஸ்ரேல் ராணுவம் தோற்றுப் போய்விட்டிருக்கிறது என்ற ஓய்வுபெற்ற இந்திய வெளியுறவுத் துறை அலுவலர் தல்மிஸ் அகமதுவின் அவதானிப்பு குறிப்பிடத் தக்கது.
  • உருப்படியான பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் இல்லாமல் இஸ்ரேலின் எல்லைப் பகுதியில் காஸாவுக்கு மிக அருகில் இசை விழா நடத்தப்பட்டிருக்கிறது. மேற்குக் கரையில் பாலஸ்தீனர்கள் தாக்கப்படுவதும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் புனிதமான அல் அக்ஸா மசூதி அவமரியாதை செய்யப்படுவதும் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கும் நிலையில், ஹமாஸ் அமைப்பினர் திருப்பித் தாக்குவார்கள் என்று இஸ்ரேல் எதிர்பார்த்திருக்க வேண்டாமா?
  • தங்கள் பகுதிக்குள் நுழைந்து பெரும் தாக்குதலை நடத்திவிட்டுச் சென்றுவிட்ட ஹமாஸினரை விட்டுவிட்டு, சண்டையைத் தொடங்குவதற்கு முன்னரே முற்றிலுமாகத் தோற்றுப் போய்விட்ட இஸ்ரேல், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைப் போல, தற்போது காஸாவிலுள்ள ஒன்றுமறியா மக்கள் மீது குண்டுகளை வீசிக்கொண்டிருக்கிறது. தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினரை ஒழிப்பதாகச் சொல்லிக் கொண்டு வான்வழியும் தரைவழியும் குண்டுகளை வீசி மக்களைக்  கொன்றுகொண்டிருக்கிறது இஸ்ரேல்.

அல் ஷிபா மருத்துவமனையில் கிடத்தப்பட்டுள்ள பாலஸ்தீனர்களின் சடலங்கள்

  • இத்தகைய தாக்குதல்களால் மட்டுமே ஹமாஸ் படையினரை ஒழித்துவிட முடியுமா? முடியாது என்று இஸ்ரேலுக்கும் தெரியும், நெதன்யாகுவுக்கும் தெரியும். ஆனால், இந்தத் தாக்குதலை நடத்தி, ஆபத்து ஆபத்து என சொந்த நாட்டு மக்களையும் பதற்றத்தில் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் நேரிட்டிருக்கிறது. மக்கள் மத்தியில் இழந்துவிட்ட நம்பிக்கையைப் பெறக் கிடைத்திருக்கும் இந்த  வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் இஸ்ரேலும் நெதன்யாகுவும் (அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் வந்துவிட்டார்).
  • யார் யாரோ பயன்பெறுவதற்காக, ஹமாஸ் ஒழிப்பு என்ற பெயரில்,  ஒட்டுமொத்தமாக ஒன்றுமறியா மக்களை அழித்தொழித்து, அகதி முகாம்களுக்குத் துரத்தி, காஸாவையும் பாழடைந்த பிரதேசமாக மாற்றும் நடவடிக்கையைத்தான் வெவ்வேறு பெயர்களில் செய்துகொண்டிருக்கிறது இஸ்ரேல்.
  • இவ்வளவு மரண ஓலம் கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில், மருத்துவமனையின் மீதே குண்டுகள் வீசப்பட்டு நூற்றுக்கணக்கில் மக்கள் கொல்லப்படும் நிலையில்,  ஏனோ உலகத் தலைவர்கள் எல்லாரும் பேசாமல் இருக்கின்றனர்.
  • கேட்பதற்கு யாருமில்லாத நிலையில் ஐக்கிய நாடுகளின் அவையின் குரல் ஈனஸ்வரத்தில் ஒலித்துக் கொண்டிருக்க, இவ்வளவு பெரிய மனிதப் படுகொலை நடந்துகொண்டிருக்கும்போது ஒட்டுமொத்த உலகமும் கள்ள மௌனம் சாதித்துக் கொண்டிருக்கிறது!
  • அல்லற்பட்டு ஆற்றாது அழும் மக்களின் கண்ணீர் உலக வரைபடத்தில் வெள்ளமாகப் பெருக்கெடுத்தோடிக் கொண்டிருக்கிறது!

நன்றி: தினமணி (19 – 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்