- இரண்டாவது இண்டிஃபாதாவில் ஹமாஸின் ஈடுபாடு, அது அறிந்த அனைத்து விதமான ஆயுதப் பயன்பாட்டு வழிகளிலும் இருந்ததென்றாலும் இஸ்ரேல் அரசை செய்வதறியாமல் திகைக்கச் செய்தது அதன் தற்கொலைத் தாக்குதல்கள்தாம். இரண்டு வருடங்களில் இருபது தாக்குதல்கள். (2001 டிசம்பர் இறுதியில் இருந்து 2003 டிசம்பர் இறுதிக்குள்.) இந்தத் தாக்குதல் ஒவ்வொன்றினைக் குறித்தும் தனித்தனியே பேச இயலும். ஆனால் அனைத்துக்கும் விளைவு ஒன்றுதான். அழிவு அல்லது பேரழிவு.
- பெண்களைக் கொண்டு ஹமாஸ் இந்தத் தாக்குதல்களைச் செய்ய தொடங்கியதும் இஸ்ரேலிய அரசு உண்மையில் நிலைகுலைந்துவிட்டது. ஏற்கெனவே அவர்கள் காவல் துறையில் பெண்களைச் சேர்க்கத் தொடங்கியிருந்தார்கள். இப்போது ராணுவத்திலும் பெண்கள். இதற்காக நாடு முழுவதும் லட்சக்கணக்கில் போஸ்டர் அடித்து ஒட்டினார்கள். பெண்களே, ராணுவத்துக்கு வாருங்கள். தேச சேவை செய்யுங்கள்.
- வெறும் அழைப்பல்ல. ராணுவப் பணிக்கு வருகிற பெண்களுக்கு வரலாறு காணாத லாபங்களையும் சேர்த்துத் தர ஆயத்தமானார்கள். சம்பளம் அதேதான். ஆனால், படிகள் மிக அதிகம். தவிரவும் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டன. ஓய்வுக்குப் பிறகு உயிரோடு இருக்கும் காலம் வரை ராணுவப் பெண்களை இஸ்ரேலிய அரசு கிட்டத்தட்ட தத்தெடுத்துக் கொண்டு, அனைத்து வித சுக சவுகரியங்களுக்கும் பொறுப்பேற்க தயார் என்றார்கள்.
- இது ஒரு புறம் நடந்து கொண்டிருந்த போதே ஹமாஸின் தற்கொலைப் படைப் பிரிவின் முக்கியஸ்தர் யார்என்று தேடுகிற பணியையும் முடுக்கிவிட்டார்கள். 2003-ம் ஆண்டின் இறுதியில் இஸ்ரேல் சிறப்புக் காவல் படைப் பிரிவினரிடம் ஹமாஸின் 7 தலைவர்களின் பெயர்கள் கொண்ட பட்டியல் ஒன்று இருந்தது. உண்மையிலேயே அதற்கு மேல் யார் யார் திட்டமிடும் பொறுப்புகளில் இருக்கிறார்கள் என்று அவர்களால் கண்டறிய முடியவில்லை. 2004-ம்ஆண்டு முழுவதும் அந்தப் பட்டியலில் இருந்த 7 பேரையும் வட்டமிட்டு கவனிக்க ஆரம்பித்து, அடுத்த ஆண்டின் இறுதியில் அதில் 5 பெயர்களை நீக்கினார்கள். இப்போது வெறும் 2 பெயர்கள்.
- அந்த இரண்டு பேரில் ஒருவர்தான் தற்கொலைப் படைப் பிரிவின் தலைவர், அவர் பெயர் இப்ராஹிம் ஹமீத் என்று தெரிந்து கொள்ள மேலும் ஒரு வருடம் ஆனது. இடைப்பட்ட காலத்தில் இண்டிஃபாதாவெல்லாம் முடிவடைந்து, பாலஸ்தீனத்தில் ஒரு தேர்தலும் நடந்து ஹமாஸ் ஆட்சியையே பிடித்துவிட்டிருந்தது. அந்தக் கதையைப் பிறகு பார்க்கலாம். இப்போது இப்ராஹிம்.
- இஸ்ரேல் உளவுத் துறைக்கு இப்ராஹிம் என்ற மனிதரைக் குறித்துக் கிடைத்த முதல்தகவல், அவர் ஒரு கவிதை ரசிகர் என்பது.பாரசீகக் கவிஞர் ஜலாலுதீன் ரூமியின் மிகப் பெரிய ரசிகர்.இரண்டாவது தகவல்,அவர் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார் என்பது. அவர் இருக்கும் இடத்தில் எப்போதும் நகைச்சுவைப் பேச்சு இருக்கும். அப்படிப் பேச விஷயம் இல்லாவிட்டால் அவரே தொடர்ந்து ஜோக்குகள் சொல்லிக் கொண்டிருப்பார். மூன்றாவது தகவல்தான், அவர் ஹமாஸின் தற்கொலைப் படைப் பிரிவின் தலைவர் என்பது.
- நான்காவதாக ஒரு தகவல் இருந்தது. அதை இப்ராஹிம் கைது செய்யப்படும் வரை மொசாட் கண்டுபிடிக்கவில்லை. 1998-ம் ஆண்டிலேயே அவர் ஒருமுறை இஸ்ரேலிய காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்! ஏதோ பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்த வழக்கு. ஒப்புக்கு ஒரு விசாரணை. உள்ளே போட்டு ஒன்றிரண்டு வருடங்கள். ஹமாஸின் யாரோ ஒரு கடைநிலைச் சிப்பாய் என்றுநினைத்துவிட்டார்கள். விடுதலையான பின்னர் அவர் மேற்குக் கரையில் தமது சொந்த கிராமத்திலேயேதான் இருந்தார். சாதாரணமாக நடமாடிக் கொண்டு, ஊர்க்கதை பேசிக் கொண்டு, எப்போதாவது வெளியூருக்குப் போய் கொண்டு எல்லோரையும் போல ஒரு வாழ்க்கை. யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் வந்துவிடாதபடி.
- கடந்த 2006-ம் ஆண்டில் இருந்துதான் மொசாட், இப்ராஹிமை சந்தேகவளையத்துக்குள் கொண்டு வந்தது. ஒரே காரணம், அன்றைய தேதியில் நடந்து கொண்டிருந்த ஹமாஸ் தாக்குதல்களில் பெருமளவு மேற்குக் கரையைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள். இது அதற்குமுன் வழக்கத்தில் இல்லாதது. தொண்ணூறு சதவீதம் காஸாவில் பிறந்து வளர்ந்தவர்களே ஹமாஸின் முதல் வரிசை வீரர்களாக இருப்பார்கள். அந்த வழக்கம் மெல்ல மெல்ல மாறி, யாசிர் அர்ஃபாத்தின் கோட்டைக்குள் வசிப்பவர்கள் ஹமாஸ்கோட்டைக்கு இடம் பெயர்வது எப்படிஎன்று ஆராயத் தொடங்கிய போதுதான்இப்ராஹிம் அதற்குக் காரணம் என்பது தெரிய வந்தது.
- அப்போது ஹமாஸ் ஆளும் கட்சியாகவும் இருந்தபடியால் இஸ்ரேலியஅரசு மிக நேரடியாக அன்றைய பாலஸ்தீன அத்தாரிடி பிரதமரின் சட்டையைப் பிடித்தது. சொல்லப் போகிறாயா இல்லையா? யார் இந்த இப்ராஹிம்?
நன்றி: இந்து தமிழ் திசை (04 – 11 – 2023)