TNPSC Thervupettagam

இஸ்ரேல் 75 - இன்றும் முற்றுப்பெறா முரண்கள் அவசியம்

May 15 , 2023 419 days 254 0
  • “செல்வத்தைக் கொண்டோ, ராணுவ பலத்தைக் கொண்டோ, தொழில்நுட்பச் சாதனைகளைக் கொண்டோ அல்ல; ஒழுக்கத்தையும் மனித விழுமியங்களையும் கொண்டே இஸ்ரேல் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளும்” - இஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குரியன் (David Ben-Gurion) சொன்ன வார்த்தைகள் இவை. ஆனால், அப்படியொரு தருணம் இஸ்ரேலுக்கு வாய்க்கவே இல்லை. இஸ்ரேல் தனது 75ஆவது சுதந்திர விழாவைக் கொண்டாடிவரும் தருணத்தில், இப்படியொரு கசப்பான அவதானிப்பை முன்வைக்க நேர்வது துயரமானது.

தனித்துவமான தேசம்:

  • உலக வரலாற்றில் இஸ்ரேலைப் போல் தனித்துவமிக்க ஒரு தேசத்தைக் காண்பது அரிது. அமெரிக்கா நீங்கலாக உலகிலேயே அதிக அளவிலான ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் இயங்கிக்கொண்டிருப்பது இஸ்ரேலில்தான்.
  • சுற்றிலும் உள்ள நாடுகள் அனைத்தின் வளங்களையும் ஒன்றுதிரட்டினால்கூட இஸ்ரேலின் 100 பில்லியன் டாலர் பொருளாதாரத்தை அவர்களால் நெருங்கக்கூட முடியாது. அறிவியல், தொழில்நுட்ப பலத்தில் உலகை விஞ்சி நிற்கிறது இஸ்ரேல். 10,000 பேரில் 145 பேர் அறிவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள். சீனாவைக் காட்டிலும் அதிக நோபல் விருதுகளைப் பெற்றிருக்கிறது.
  • மணல் மேடுகள் பரவிக்கிடந்த டெல் அவிவ் இன்று வானை முட்டும் கட்டிடங்களால் மின்னிக்கொண்டிருக்கிறது. உலகின் பலமிக்க நாடுகளுள் ஒன்றாக இஸ்ரேல் திகழ்வதற்குக் காரணம் அதன் ராணுவ பலம். பெருமளவு அமெரிக்காவால் சாத்தியமான பலம் இது. இஸ்ரேலிடம் இருக்கும் நவீன ஆயுதங்களை வேறெங்கும் காண முடியாது.
  • 1948இல் இஸ்ரேல் மலர்ந்தபோது அதனை முதலில் அங்கீகரித்த நாடு, அமெரிக்கா. ஏற்ற, இறக்கங்களைக் கடந்து இத்தனை ஆண்டுகளாக அமெரிக்காவோடு தனிச்சிறப்பான உறவை இஸ்ரேல் பேணிவருகிறது.

சாதித்துக் காட்டிய யூதர்கள்:

  • மனித வளம் தவிர்த்து மற்ற வளங்கள் அதிகம் இல்லாத நிலையில் இவை அனைத்தையும் சாதித்துக் காட்டியிருக்கிறது இஸ்ரேல். போர், வறட்சி, வறுமை, நம்பிக்கையின்மை அனைத்தையும் கடந்து தங்கள் தேசத்தை இஸ்ரேலியர்கள் காப்பாற்றி வைத்திருக்கிறார்கள். மனிதகுல வரலாற்றில் அதிகம் வெறுக்கப்பட்ட, அதிகம் ஒடுக்கப்பட்ட, அதிகம் கொன்றொழிக்கப்பட்ட மக்கள், யூதர்கள்.
  • ரோமானியர்களால் பொ.ஆ. (கி.பி.) 70 வாக்கில் யூதேயாவிலிருந்து வெளியேற்றப்பட்ட யூதர்கள், கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகளாகத் தங்கள் தாய்நாடு குறித்த கனவோடு உலகெங்கும் சிதறி வாழ்ந்திருக்கிறார்கள். எங்கே வசிக்க நேர்ந்தாலும், ஜெருசலேம் இருக்கும் திசை நோக்கி வழிபட்டிருக்கிறார்கள்.
  • ‘கடவுள் நமக்காக உருவாக்கி வைத்திருக்கும் நிலத்துக்கு இன்றில்லாவிட்டாலும் ஒருநாள் திரும்பியே தீருவோம்’ என்று தங்களுக்குள் திரும்பத் திரும்பச் சொல்லி வந்திருக்கிறார்கள். வீடற்றவர்களாக இருந்த யூதர்கள் தங்களுக்கென்று ஒரு நாட்டை உருவாக்கிக்கொண்ட கதையை விவரிக்க ஆரம்பித்தால், அது ஓர் அற்புதம்போல் காட்சியளிக்கக்கூடும். “இஸ்ரேலில் ஒருவர் யதார்த்தவாதியாக இருக்க வேண்டும் என்றால் அவர் அற்புதங்களை நம்ப வேண்டும்” என்பார் பென் குரியன்.
  • 20ஆம் நூற்றாண்டு வரலாற்றில் இரு நிகழ்வுகள் யூதர்களுக்கு முக்கியமானவை. முதலாவது, ஹிட்லரின் இனவொழிப்பு. மிக பலவீனமான நிலையில் யூதர்கள் இருந்த காலம் அது. லட்சக்கணக்கான யூதர்கள், அவர்கள் யூதர்கள் என்பதற்காகவே வதைமுகாம்களில் அடைக்கப்பட்டுப் பலவிதங்களில் வதைக்கப்பட்டு, கொன்றொழிக்கப்பட்டனர். அப்போது அவர்களை மீட்பதற்கு எவரும் இல்லை.
  • இரண்டாவது நிகழ்வு, இஸ்ரேலின் உதயம். இரண்டாம் உலகப் போரின் முடிவில் தங்களை மீட்டெடுத்துக்கொண்ட யூதர்கள் அசாத்தியமான பலத்தோடும் அதிகாரத்தோடும் ஒரு புதிய தேசத்தை நிர்மாணித்துக்கொண்டனர். யூதேயா இன்று இஸ்ரேலின் ஒரு பகுதி. கனவாக இருந்த ஜெருசேலம் இன்று அவர்களுடைய முழுமையான கட்டுப்பாட்டின்கீழ் வந்து சேர்ந்திருக்கிறது. இஸ்ரேலின் வெற்றிக் கதை என்பது அதிகாரமற்ற நிலையிலிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றியதுதான்.

வரலாற்று முரண்:

  • அது ஏன் வெற்றிக் கதையாக மட்டும் இல்லை என்பதற்கான விடை, அதிகாரம் கைக்கு வந்த நொடியிலிருந்து விரியும் வரலாற்றில் அடங்கியிருக்கிறது. யாருமற்ற நிலத்தில் அல்ல, பாலஸ்தீனர்களின் நிலத்துக்குள் நுழைந்து, அவர்களோடு போரிட்டு, அவர்களுடைய குடியிருப்புகளை அகற்றிவிட்டு, ‘இனி இது எங்கள் இடம்’ என்று பிரகடனம் செய்து, அங்கே தங்கள் கனவுக் கோட்டையைக் கட்டியெழுப்பியிருக்கிறது இஸ்ரேல். அழிவிலிருந்து உயிர்த்தெழுந்து வந்த யூதர்கள், இன்று பாலஸ்தீனர்களுக்கு அதே அழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒடுக்கப்பட்டவர்கள் இன்று ஒடுக்குபவர்களாக மாறி நிற்கிறார்கள். இரண்டாம் தரக் குடிமக்களாக, மோசமான முறையில் நடத்தப்பட்டு வந்த யூதர்கள், இன்று பாலஸ்தீனர்களை அவ்வாறே நடத்துவது வரலாற்றின் பெரும் முரண்களுள் ஒன்று.
  • மேற்குக் கரையில் 30 லட்சம் பாலஸ்தீனர்களும் காஸாவில் 20 லட்சம் பேரும் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளனர். இன்றுவரை இப்பகுதிகள்மீது இஸ்ரேலியக் குண்டுகள் வந்து விழுந்து கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் தங்கள் சுதந்திரத்தைக் கொண்டாடிக்கொண்டே, இன்னொரு கையால் மற்றவர்களின் சுதந்திரத்தை அழித்துக்கொண்டிருக்கிறது இஸ்ரேல்.
  • பாலஸ்தீனப் பிரச்சினை என்பது அரேபியர்களின் பிரச்சினை மட்டுமல்ல, இஸ்ரேலின் பிரச்சினையும் தான் என்பதை முதல் பிரதமர் பென் குரியன் நன்கு உணர்ந்திருந்தார். எனினும், போர் தவிர்த்து வேறு வழியில் தீர்வு காண முடியும் என்று அவர் நம்பவில்லை. இன்றைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவின் அணுகுமுறையும் இதுவேதான்.
  • பாலஸ்தீனர்களை இல்லாமல் செய்வதன்மூலமே பாலஸ்தீனை இல்லாமல் செய்ய முடியும் என்னும் நம்பிக்கையில் மேலும் மேலும் போரைத் தீவிரப்படுத்திக்கொண்டு வருகிறார். அதன் விளைவை இஸ்ரேல் சந்தித்துவருகிறது. இன்று நெதன்யாஹுவின் அரசை எதிர்த்துப் போராடிக் கொண்டிருப்பவர்கள் பாலஸ்தீனர்கள் மட்டுமல்ல, இஸ்ரேலிய யூதர்களும்தான்.

இஸ்ரேலியர்களின் இரட்டை நிலை:

  • தீவிர வலதுசாரிகளோடும் மதவாதிகளோடும் இணைந்து ஆட்சியை நடத்திவரும் நெதன்யாஹு, இதுவரை சுதந்திரமாக இயங்கிவந்த நீதிமன்றத்தின் அதிகாரத்தைக் குறைத்து, நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை அதிகரிக்கச் செய்யும் மசோதா ஒன்றைச் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தினார்.
  • மக்களின் ஆதரவு கிடைக்கும் என்னும் அசாத்திய துணிவோடு களமிறங்கிய அவர், பெருத்த எதிர்ப்பையே சந்திக்க நேர்ந்தது. சட்டத்தின் கையை வளைக்கும் இந்த முயற்சிக்கு ஆதரவு அளித்தால், முழுமையான யதேச்சதிகார நாடாக இஸ்ரேல் மாறிவிடும் என்றே மக்கள் எதிர்த்தனர். வேறு வழியின்றி மசோதா நிறுத்திவைக்கப்பட்டது. ஆனாலும் போர் நின்றபாடில்லை.
  • இஸ்ரேலிய மக்கள் நெதன்யாஹுவின் தீவிர வலதுசாரி அரசியலைத்தான் எதிர்க்கிறார்களே தவிர, பாலஸ்தீனர்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பை அல்ல. இந்த இரட்டை நிலை எப்போது முடிவுக்கு வருகிறதோ, அப்போதுதான் இஸ்ரேலின் அடிப்படைப் பண்புகளும் மாற்றமடையும். ஆனால், அது அவ்வளவு எளிதல்ல.
  • ஒடுக்கப்பட்ட இனத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட தேசம் என்பதால் இனக்குழு மனப்பான்மையோடு தான் இஸ்ரேலியர்கள் இருப்பார்கள். இஸ்ரேலின் தேசியவாதம் என்பது பெரும்பான்மை இன தேசியவாதம். எங்கள் மூதாதையர் நிலம், எங்கள் மொழி, எங்கள் மதம், எங்கள் பண்பாடு என்னும் பெருமித உணர்வுதான் அவர்களைத் தேசமாக ஒன்று சேர்த்திருக்கிறது. அதிலிருந்து நெகிழ்ந்து வந்து மற்றவர்களையும் அவர்கள் அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளும் போது தான் ஜனநாயகம் அதன் மெய்யான பொருளில் மலர ஆரம்பிக்கும்.
  • அதற்கு முதல் படி ஓர் அரசமைப்பை உருவாக்கிக் கொள்வதுதான். இஸ்ரேல் உருவானபோது, கருத்து முரண்கள் அதிகம் இருந்ததால் அரசமைப்பை உருவாக்காமலேயே, அரசை உருவாக்கி விட்டார்கள். ஆனால் 75 ஆண்டுகள் கழிந்த பிறகும் அதே நிலை தொடர்வது உசிதமல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். இஸ்ரேலுக்குச் சவால்கள் வெளியே இல்லை. உள்ளேதான் அடங்கியிருக்கின்றன. தனது அடிப்படைப் பண்புகளை மாற்றிக் கொள்ளா விட்டால், தனது கவனத்தை எங்கே குவிக்க வேண்டும் என்னும் தெளிவு கிடைக்காவிட்டால், இஸ்ரேலால் சுதந்திரக் காற்றை முழுமையாக ஒருபோதும் சுவாசிக்க முடியாது.
  • மே 14: இஸ்ரேல் சுதந்திர தினம்

நன்றி: தி இந்து (15 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்