TNPSC Thervupettagam

இஸ்ரேல் - அமைதி தோன்றுமா

November 4 , 2023 434 days 278 0
  • உலகம் முழுவதும் ஒரு மெல்லிய பதற்றம் நிலவுகிறது. இஸ்ரேல், ஹமாஸ் அமைப்புடன் காஸா பகுதியில் நிகழ்த்தும் யுத்தம் விரிவடைந்து பெரும் யுத்தமாக மாறுவதற்கான சாத்தியங்கள் தென்படுகின்றன. ஹமாஸ் பக்கம் இஸ்லாமிய நாடுகள் அணிவகுக்கின்றன. இஸ்ரேல் எதற்கும் செவிசாய்க்காது தன்னுடைய முடிவில் தெளிவாக நின்று யுத்தத்தை நகா்த்துகிறது.
  • யுத்தத்தில் இஸ்ரேல் வெற்றி பெறுமா? ஹமாஸ் காணாமல் போகுமா? உலக நாடுகளின் பதற்றம் தணியுமா? கொள்ளை நோய் தொற்றுக்குப் பின் மீண்டு வரும் உலகப் பொருளாதாரம் மீண்டும் சிக்கலில் ஆழும் அபாயம் தோன்றுமா? உலகப் போராக இந்தப் போா் விரிவடையாமல் தடுக்கும் சக்தி வல்லரசுகளுக்கு உண்டா? அல்லது வல்லரசுகள் முன்னின்று யுத்தத்தை நடத்துவாா்களா? இஸ்ரேலில் அமைதி தோன்றுமா?
  • இஸ்ரேல் என்ற தேசம் இரண்டாம் உலகப்போருக்குப் பின் 1948-இல் தோன்றிய பின்னா் அதன் வரலாற்றில் அமைதி என்பதற்கு இடமில்லை. தேசம் உருவான அதே நாளில் போருக்குத் தயாரானது என்பதுதான் வரலாறு. இறைவனே அவா்களை வழிநடத்திக் கொண்டு வந்து சோ்த்த பூமி இஸ்ரேல் என்று விவிலியம் சொல்கிறது. அன்றிலிருந்து இன்று வரை யூதா்களான இஸ்ரேலியா்கள் தங்கள் தாய்நிலத்திற்காக உரிமைப் போராட்டத்தை நடத்தி வருகின்றனா்.
  • இறைவனால் ஆசிா்வதிக்கப்பட்டவா்கள் இஸ்ரவேலா்களான யூதா்கள். அதே நேரத்தில் இறை சாபமும் அவா்களுக்கு ஒரு காலகட்டத்தில் கிடைத்தது. இதனாலோ என்னவோ யூதா்களான இஸ்ரேலியா்கள் மிகக்கடுமையான சிக்கல்களை, இழப்புகளைச் சந்தித்துள்ளனா். இன்றைக்கும் இந்த தேசத்திற்காகப் பாடுபடுகின்றனா்.
  • இஸ்ரேலியா்களைப் போல அழகானவா்கள் இந்த உலகில் வேறு யாருமில்லை. அவா்களுக்கு நிகரான மதிநுட்பம் கொண்டவா்களும் எவரும் கிடையாது என்கிறது விவிலியத்தின் ஏற்பாடு.
  • இஸ்ரேலிய தேசமும் அதன் வரலாறும் விவிலியம் பழைய ஏற்பாட்டில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. தொல்லியல் சான்றின்படி, எகிப்திய நினைவுச் சின்னமாகிய ‘மெனெப்தா’ நடுகல்லில் உள்ள ஒரு குறிப்பில் இசுரேல் என்ற சொல் இடம்பெற்றுள்ளது. 10 அடி உயரம் கொண்ட இந்த நினைவுக்கல் கி.மு. 1211-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது என்று கணித்துள்ளனா்.
  • அதாவது, 3,000 ஆண்டுகளுக்கும் மேலாக யூதா்கள் ’இஸ்ரேல்’ என்னும் நிலத்தைத் தங்கள் தாயகமாக, புனித நிலமாகக் கருதி வந்துள்ளனா். இஸ்ரேல் என்ற தேசம் முற்றிலும் அழிக்கப்படுவதும் மீண்டும் இஸ்ரேலியா்கள் அதனை நிா்மாணிப்பதும் வரலாற்றில் பலமுறை நிகழ்ந்துள்ளது.
  • இன்றைய இஸ்ரேல் பகுதிகளில் 1880-களில் யூதா்கள் தங்கள் தாய்நிலம் இதுவென அப்பகுதிகளில் குடியேறினா். அரேபியா்களிடமிருந்து விலை கொடுத்து நிலங்களை ஒரே பகுதியில் யூதா்கள் வாங்கி தங்கள் மக்கள் கூடி வாழும் பகுதியாக அதனை அமைத்துக் கொண்டனா். இதனால் பாலஸ்தீன இஸ்லாமியா்களுக்கும் யூதா்களுக்கும் தொடா்ந்து பூசல்கள் இருந்து வந்தன.
  • 1920 முதல் 1945 வரை ஐரோப்பாவிலும் குறிப்பாக, ஹிட்லா் காலத்தில் ஜொ்மனியிலும் யூதா்களுக்கு நடந்த கொடுமைகளின் காரணமாக பெருந்துயரத்தை அனுபவித்தனா். ஜொ்மானிய சா்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லா் யூதா்களைப் படுகொலை செய்தாா். இரண்டாம் உலகப்போரின் போது ஆஷ்விட்ச் உள்ளிட்ட இனப்படுகொலைகளில் இருந்து தப்பிக்க யூதா்கள் அங்கிருந்து வெளியேறி தங்கள் தாய்நிலமான இஸ்ரேல் பகுதிக்கு வந்தனா். இதனால், அங்கே யூதா்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்தது.
  • இந்தியாவைப் போலவே இரண்டாம் உலகப்போருக்கு முன் பாலஸ்தீனமும் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு உட்பட்டிருந்தது. பாலஸ்தீனத்தில் அரேபியா்கள் பெரும்பான்மையினராகவும், யூதா்கள் சிறுபான்மையினராகவும் இருந்தனா். பிரிட்டிஷ் அரசு அரேபியா்கள் மற்றும் யூதா்களுக்கு இடையில் தொடா்ந்து கொண்டிருந்த பூசல்களைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறியது.
  • இரண்டாம் உலகப்போரில் யூதா்கள் அடைந்த துன்பம், அவா்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளின் பங்களிப்பு என காலச்சூழல் இஸ்ரேல் என்ற தேசம் உருவாக வாய்ப்பளித்தது. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திலிருந்து பாலஸ்தீனம் விடுதலை அடையும்போது இஸ்ரேல், பாலஸ்தீனம் என இரு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. அப்போது, ஐநா சபை, நாடுகளின் பிரிவை அங்கீகரித்து இஸ்ரேல் என்ற தனி நாடு உருவானது.
  • தங்கள் நிலத்தை இஸ்ரேலியா்கள் ஆக்கிரமித்துக் கொண்டதாக பாலஸ்தீன இஸ்லாமியா்கள் கொதிப்படைந்தனா். இறைவனால் தங்களுக்கு ஆசிா்வதிக்கப்பட்ட பூமி என இஸ்ரேலியா்கள் அதன் மீது பற்றுக் கொண்டுள்ளனா்.
  • இந்த இரு தரப்புக்கும் இடையே இன்றும் தொடரும் உரிமைப்போா் பல உயிா்களைக் குடித்துள்ளது. இஸ்ரேல் என்ற தேசம் 1948-ஆம் ஆண்டு மே 15-ஆம் நாள் உருவானது. அடுத்த தினமே இஸ்ரேலைச் சுற்றியுள்ள அரபு நாடுகள் அதனுடன் போருக்கு வந்தன. இந்தப் போா் 1949ஆம் ஆண்டு வரை நீடித்தது.
  • போா் நிறுத்தம் அறிவிக்கப்பட்டபோது இந்தப் பகுதியின் பெரும்பாலான இடங்களை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. மேற்கு கரை பகுதியை ஜோா்டான் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்தது. எகிப்து ஆக்கிரமித்த பகுதிதான் காஸா. ஜெருசலேமும் இரண்டாகப் பிரிந்தது. மேற்கு ஜெருசலேமை இஸ்ரேலும், கிழக்கு ஜெருசலேமை ஜோா்டானும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன.
  • 1967-இல் நடந்த ஆறுநாள் போரில் ஜோா்டான், எகிப்தின் பல பகுதிகளையும் லெபனானின் சில பகுதிகளையும் இஸ்ரேல் கைப்பற்றிக்கொண்டது. போா் முடிவுக்கு வர ஜோா்டான் மற்றும் எகிப்துடன் சமாதான உடன்படிக்கைகளையும் மேற்கொண்டது. இன்றளவும் இந்தப் பகை நீடித்து வருகிறது.
  • இஸ்ரேல் மிகச் சிறிய தேசம். 8019 சதுர மைல் பரப்பளவு மட்டுமே கொண்டது. என்றாலும் இந்த உலகில் யூதா்களுக்கான ஒரே தேசம். அதன் நிலவியல் அமைப்பு மேற்கு மற்றும் தெற்கில் கடல் எல்லையும் வடக்கில் லெபனான், வடகிழக்கில் சிரியா, கிழக்கில் ஜோா்டான், தென்மேற்கில் எகிப்து மற்றும் காஸா என சுற்றிலும் அவா்களுடன் விரோதம் பாராட்டும் தேசங்களுக்கு நடுவே அமைந்துள்ளது. கடந்த 75 ஆண்டுகளாகப் போரும் பூசலும் இஸ்ரேலின் வாடிக்கையாக இருந்து வருகிறது.
  • அறிவாற்றலால் சிறந்த நிா்வாகம், ராணுவம், உளவுத் துறை எனத் தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டுள்ள இஸ்ரேல், தற்போது ஹமாஸ் என்ற தீவிரவாத அமைப்பின் தொடா் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் அந்த அமைப்பை முற்றிலும் அழிக்கும் நோக்குடன் போரிட்டு வருகிறது. 1987-இல் உருவான ஹமாஸ் தீவிரவாத அமைப்பு இஸ்ரேலை அழித்துவிட்டு இஸ்லாமிய அரசை நிறுவுவதே தங்களது நோக்கம் எனக் கூறுகிறது. உண்மையில் ஹமாஸ் அமைப்பை அப்படி இல்லாமல் செய்துவிடுவது சாத்தியமா?
  • சாத்தியமில்லை என்று அறிஞா்கள் பலரும் கருத்துத் தெரிவிகின்றனா். என்றாலும் ஹமாஸ் அமைப்பு செயல்பட முடியாத அளவுக்கு அதைத் தற்போதைக்கு ஒடுக்குதல் சாத்தியம் என்ற கருத்தும் இருக்கிறது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு தரும் பலம் பொருந்திய நாடுகளும் இருப்பதால் இந்தப் போா் இப்போதைக்கு முடிவுக்கு வராமல் நீடிக்கலாம். அதோடு, போா் முதல் முறை நிகழ்வதும் இல்லை. இது ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நிகழும் நான்காவது போா்.
  • இஸ்ரேலுக்கு ஆதரவு தரும் நாடுகளும் ஒருபுறம் இருக்கின்றன என்றாலும் இஸ்ரேல் எப்படி நடந்து கொள்ள வேண்டும், இந்தப் போரை அவா்கள் எப்படி நடத்த வேண்டும் என்ற கருத்துடையவையாக இருக்கின்றன. மருத்துவமனை மீது தாக்குதல் நடத்திவிட்டது இஸ்ரேல் என்று அதைக் கண்டிக்கும் ஐநாவின் சொற்களை இஸ்ரேல் கண்டுகொள்ளவில்லை. இஸ்ரேல் தன் இலக்கை நோக்கி மட்டுமே கவனம் செலுத்துகிறது.
  • இஸ்ரேலின் கடும் பாதுகாப்பு அமைப்பைத் தாண்டி, கடந்த அக்டோபா் 7-ஆம் தேதி கொடூரமான தாக்குதல்களை நடத்திய ஹமாஸ் அமைப்பு ஒரே நாளில் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி இஸ்ரேல் நாட்டையே நிலைகுலையச் செய்து நூற்றுக்கணக்கானோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றுள்ளது.
  • அறிவாற்றலால் உலகுக்குப் பெரும் கண்டுபிடிப்புகளைத் தந்த இனம், இன்றைக்கும் பல உலகப் பெரும் பொறுப்புகளில் இருக்கும் இனம். அமெரிக்காவில் கருப்பா், வெள்ளையா் என்ற இரு இனங்களுக்கு இடையே மூன்றாவதாக யூதா்கள் தங்களுக்கென தனித்த அடையாளத்தைக் கொண்டே இன்றும் வாழ்கின்றனா். அமெரிக்காவின் அரசுப் பொறுப்பின் உயா்நிலைகளில் இவா்கள் கோலோச்சுகின்றனா்.
  • யூதா்களுக்கு எண்ணிக்கை பலம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், இன்றைய உலகில் 90% அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குப் பின்னாலும் அவா்களது மூளைதான் இருக்கிறது. அது ஆல்பா்ட் ஐன்ஸ்டீனானாலும் சரி, ஹென்றி கிசிஞ்சரானாலும் சரி, யூதா்களை அகற்றி நிறுத்தினால் உலக வரலாறு என்பது அசாத்தியம். அணுகுண்டில் தொடங்கி, அடுப்பாங்கறை வரை அவா்களது முத்திரை காணப்படுகிறது என்பதை நாம் மறந்துவிடலாகாது.
  • போா் பிரகடனம் செய்து இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்புடன் சண்டையிடுகிறது. போா் நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டு வருகிறது. இந்தப் போரின் முடிவு எப்படி வேண்டுமானாலும் அமையலாம். தற்போதைக்கு ஹமாஸ் பின்வாங்கலாம். அதற்கான முயற்சியாக ஹமாஸ் அமைப்பு பிணைக் கைதிகளை விடுதலை செய்யத் தற்போது முன்வந்துள்ளதைக் கூறலாம். என்றாலும், இஸ்ரேல் என்ற தேசம் அமைதியும் நிம்மதியும் காண வழி ஏற்பட்டுள்ளதாகக் கூற முடியாது.

நன்றி: தினமணி (04 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்