TNPSC Thervupettagam

இஸ்லாமியர்களை மட்டுமே பொது சிவில் சட்டம் குறி வைக்கிறது

August 19 , 2023 512 days 265 0
  • "இந்தியாவில் பல்வேறு சிவில் சட்டங்கள் அனைத்து மதத்தவர்களுக்கும் பொதுவாகத்தான் இருக்கின்றன... பாஜக கொண்டு வர திட்டமிடும் பொது சிவில் சட்டம் இஸ்லாமியர்களை மட்டுமே குறி வைக்கிறது... இஸ்லாமியர்கள் இந்தியச் சட்டங்களுக்கு கட்டுப்படவே மறுக்கிறார்கள் என்கிற முற்றிலும் தவறான செய்தியைப் பரப்புவதே இதன் நோக்கமாக இருக்கிறது... மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் அடையவே பொது சிவில் சட்டம் குறித்து பலமாகப் பேசப்பட்டு வருகிறது..." என்று அடுக்கடுக்காக குற்றம்சாட்டுகிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ். 
  • அனைவருக்கும் சம உரிமை, சமமான பாதுகாப்பு பெற்றிடும் உரிமை, சாதி, சமயம், இனம், மொழி, பால், பிறப்பிடம் அல்லது வேறு எந்த காரணத்துக்காகவும் இந்திய குடிமக்களிடம் அரசு பாரபட்சம் காட்டக் கூடாது என்கிற உரிமை, எந்தவொரு பொது இடத்தையும் பயன்படுத்திக் கொள்ளும் உரிமை. அரசு நிறுவனங்களிலோ, இதர அரசு அமைப்புகளிலோ பணியாற்றுகிற உரிமை.
  • அனைவருக்கும் சுதந்திரமான சிந்தனை உரிமை, அதனை வெளிப்படுத்தும் உரிமை, ஒன்று கூடும் உரிமை, சங்கங்கள் அமைத்துக் கொள்ளும் உரிமை, இந்திய எல்லைக்குள் தடையின்றி நடமாடும் உரிமை, விரும்பிய இடத்தில் வசிக்கும் உரிமை, சொத்துகளை வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் உரிமை, தொழில் வணிகம் ஆகியவற்றில் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஈடுபடும் உரிமை இவை அனைத்தும் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி சாதி, மதம், மொழி, இனம், வாழ்விடம் ஆகிய வேறுபாடுகள் இன்றி பொதுவானதாகவே இருக்கின்றன.
  • குற்றங்கள் தொடர்பான சட்டங்கள், அதாவது குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம், ஒருவர் மற்றவர்களுடன் அல்லது அரசுடன் ஊடாடும் சிவில் உரிமைகள் சட்டம், நீதிமன்ற நடவடிக்கைகள், கைது செய்யப்படுகிறபோது இருக்கிற உரிமைகள், நாடாளுமன்றம் சட்டமன்றம் உள்ளாட்சி மன்றம் ஆகியவற்றில் வாக்களிப்பதற்கான உரிமைகள், போட்டியிடுவதற்கான உரிமைகள் ஆகிய அனைத்தும் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி சாதி, மதம், மொழி, இனம், வாழ்விடம் ஆகிய வேறுபாடுகள் இன்றி பொதுவானதாகவே இருக்கின்றன.
  • மனிதர்களை விற்பது, வாங்குவது, வேலை செய்ய நிர்பந்திப்பது, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது போன்றவை குற்றம் என்பது அனைவருக்கும் பொதுவான சட்டங்கள் தான். எந்த ஒரு மதத்தை பின்பற்றுவதற்கும், எந்த ஒரு மதத்தை பரப்புவதற்கும் எவரொருவருக்கும் சட்டப்படியான உரிமை வழங்கப்பட்டிருக்கிறது.
  • நீதி பரிபாலன அமைப்பில் வழக்கமானவை தவிர ஆள் கொணர்வு மனு (ஹேபியஸ் கார்பஸ்), தடை விதிக்கும் (புரொஹிபிஷன்), தகுதிமுறை வினவும் (கோ வாரண்டோ), செயலுறுத்தம் (மாண்டமாஸ்), நெறிமுறை உறுத்தும் (செர்ஷியாராரி), நீதிப் பேராணை (ரிட்ஸ்) போன்றவற்றைப் பயன்படுத்தும் உரிமையும் பொதுவானதாகவே உள்ளது.
  • இப்படி இந்திய குடிமக்கள் சாதி, மதம், இனம், மொழி, வாழ்விடம் கடந்து தங்களுக்குள்ளேயோ அல்லது மற்றவர்களுடனோ சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு வாழ்வில் ஊடாடும் போது ஏற்படும் நன்மை, தீமைகளை கையாள்வதற்கு நடப்பில் இருக்கிற அனைத்து சட்டங்களும் அனைவருக்கும் பொதுவானவைதான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தனித்த சட்டங்கள்

  • தனியார் சட்டங்கள் அல்லது குறிப்பிட்ட பிரிவினரின் தனித்த சட்டங்கள் எவற்றைத் தான் கையாள்கிறன? விவாகரத்து, சொத்துரிமை, வாரிசு உரிமை, ஜீவனாம்சம், தத்தெடுத்தல் போன்ற தனிநபர் சார்ந்தவற்றை தனிநபர் சட்டங்கள் (personal laws) கையாள்கிறன. மதம் சார்ந்து மட்டும் இவ்வாறான தனித்த நடைமுறைகள் இல்லை. பழங்குடி சமூகங்கள் பலவற்றில் இன்னமும் எழுதப்படாத பல நடைமுறைகள் நீடித்து வருகின்றன. இவற்றையும் தனிநபர் சட்டங்கள் அங்கீகரித்து வருகின்றன.
  • சில குறிப்பிட்ட பழங்குடி சமூகங்களின் சமூக வாழ்வில் குறிப்பாக மணவாழ்வில் இணையர்களின் சுயதேர்வுதான் பிரதானமாக இருக்கிறது. ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழலாம் என்று முடிவு செய்துவிட்டால் அவர்கள் எந்தத் தடையும் இன்றி சேர்ந்து வாழத் துவங்கிவிடுகிறார்கள். ஊருக்கு விருந்து வைக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் திருமணம் என்கிற சடங்கை செய்து கொள்வோம் என்கிறார்கள். ஒருவேளை அவர்களுக்குள் பிணக்கு ஏற்பட்டால் அவர்களாகவே பிரிந்து கொள்கிறார்கள்.
  • இப்படி ஒவ்வொரு மதத்துக்குள்ளும், சமூக குழுக்களுக்குள்ளும் திருமணம், விவாகரத்து தொடர்பான தனித்த முறைகள் நீடிக்கின்றன. இந்தியா என்பது பல்வேறு இனங்களும் மொழிகளும் இருக்கிற ஒரு நாடு. எனவேதான் வேற்றுமையில் ஒற்றுமை என்கிறோம். இப்போது அதைவிட மிகச் சிறந்த பொருளில் பன்மைத்துவத்தின் ஒற்றுமை என்ற சொல்லாடலும் பயன்படுத்தப்படுகிறது.
  • இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, பௌத்த, சமண மதங்களின் திருமண முறைமைகள் மாறுபட்டு இருக்கின்றன என்பது மெய்யானதுதான். அதே நேரத்தில் இந்து மதத்துக்கு உள்ளேயும் திருமணம் மற்றும் குடும்ப நிகழ்வுகளில் பல நூற்றுக்கணக்கான மாறுபட்ட முறைமைகளில் சடங்குகளும், பழக்க வழக்கங்களும் கடைப்பிடிக்க படுகின்றன.
  • உதாரணமாக, நமது தமிழ்நாட்டில் தாய்மாமன் மகளை திருமணம் செய்து கொள்வது, அதேபோல் தந்தையின் உடன் பிறந்த சகோதரி மகளை திருமணம் செய்து கொள்வது என்பதும் நடைமுறையில் இருக்கிறது. ஆனால், இதனை இந்து திருமண சட்டம் ஏற்கவில்லை. இந்து திருமண சட்டம் பிரிவு 5(எ) உறவுமுறைத் திருமணங்களை சபின்டாஸ் (Sapindas) என தடை செய்கிறது. ஆனால் தென்னிந்திய பாரம்பரியம் என்று இத்திருமணங்கள் இந்துத் திருமணச் சட்டத்தால் அங்கீகரிக்கப்படுகிறன.
  • இந்திய மனிதர்களின் சிவில் வாழ்க்கையில் சக மனிதர்களால் அவர்கள் எதிர்கொள்கிற அனைத்தையும் பொதுச் சட்டங்களும், பொதுவாக நிலைநிறுத்தப்பட்டுள்ள மிகப் பிரமாண்டமான காவல் மற்றும் நீதி பரிபாலன முறையுமே கையாள்கின்றன. தனித்தனி குடும்ப வாழ்வில் இடம் பெறுகிற ஓரிரு நிகழ்வுகள் மற்றும் அக்குடும்பத்தின் சொத்துகள் தொடர்பானவற்றைத்தான் தனித்த சட்டங்கள் தீர்மானிக்கின்றன. இதில் ஜனநாயக ரீதியிலான மாற்றங்களே கூடாது என்பதல்ல நமது வாதம். எத்தகைய மாற்றங்கள் தேவை என்பதையும் அதன்பொருட்டு செய்திட வேண்டியவை பற்றியும் நிறைவுப் பகுதியில் விவாதிக்கலாம்.

ஏன் இந்த விவாதம்?

  • ஆனால் இந்தியர்களில் ஒரு பகுதியினர் இந்திய அரசமைப்புச் சட்டங்களில் இருந்து முற்றிலும் விலகி நிற்பது போலவும், இவர்கள் எந்த பொதுச் சட்டங்களுக்கும் கட்டுப்பட்டவர்கள் இல்லை என்பதைப் போலவும், எனவே நாடு நெருக்கடியில் உள்ளதாகவும் அதனைப் பாதுகாத்திட உடனடித் தேவை பொது சிவில் சட்டம் என்பதை எவ்வாறு புரிந்து கொள்வது. இது ஒரு அரசியல் அணி திரட்டலுக்கான கருவியாக மாற்றப்பட்டுள்ளது.
  • பொதுத் தளத்தில் இதனை பிரதான விவாதப் பொருளாக்கி ஒரு பகுதி மக்கள், குறிப்பாக இஸ்லாமியர்கள் இந்தியச் சட்டங்களுக்கு கட்டுப்படவே மறுக்கிறார்கள் என்கிற முற்றிலும் தவறான செய்திகளைப் பரவச் செய்வதும் இதன் நோக்கமாக இருக்கிறது. இவ்வாறு பரப்பப்படுவதின் விளைவாக இந்திய மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதும், அவ்வாறு பிரிக்கப்படும் மக்களில் ஒரு பகுதியினரின் பிரதிநிதியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு அரசியல் பயனடையவே இது இப்பொழுது மிகப் பலமாகப் பேசப்பட்டு வருகிறது.
  • அதுவும் நாடு ஓராண்டு காலத்துக்குள் ஒரு பிரமாண்டமான ஜனநாயக் திருவிழாவை எதிர்நோக்கி இருக்கும் நேரத்தையும் கணக்கில் கொண்டே இப்பொழுது பொது சிவில் சட்டம் மீண்டும் பேசப்பட்டு வருகிறது. தனிப்பட்ட சட்டங்களில் பெண்களுக்கு சம உரிமை இல்லாத நிலை இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்துகள் இல்லை. இன்னும் சொல்லப்போனால் சீர்திருத்தங்களை கொண்டு வருவது சமூக இயக்கங்களின், அரசியல் கட்சிகளின் கடமையாக இருக்கிறது. ஆனால், அத்தகைய சீர்திருத்தங்களை செய்வதற்கு மாறாக இஸ்லாமியர்களுக்கு எதிரான ஆயுதமாக பொது சிவில் சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உண்மையில் செய்ய வேண்டியது என்ன?

  • தேசத்தின் மதச்சார்பற்ற சட்டங்களை வலுப்படுத்தி விரிவாக்கிட வேண்டும். அனைத்து சமூகங்களின் பாரம்பரிய சட்டங்களில் செய்திட வேண்டிய சீர்திருத்தங்களை ஆய்வு செய்து அதனை அந்தந்தப் பகுதி மக்களுடன் பரந்துபட்ட உரையாடலை நடத்தி மாற்றங்களை கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு சமூகத்துக்குள்ளும் ஆண் மற்றும் பெண்களுக்கு இடையில் சமத்துவத்தை ஏற்படுத்துகிற மாற்றங்களைச் செய்வது. அதன் தொடர்ச்சியாக சமூகங்களுக்கிடையே சமத்துவத்தை உருவாக்குவது என்கிற முறையில் நீண்ட பயணம் அதற்கு தேவைப்படுகிறது. ஆனால், அத்தகைய நோக்கத்தோடு இப்போது பொது சிவில் சட்டம் பற்றிய விவாதம் முன்னெடுக்கப்படவில்லை. ஒரே நாடு ஒரே சட்டம் என்கிற இந்த முழக்கம் எதனைச் சொல்ல விரும்புகிறது என்றால் இந்துக்கள் கட்டுப்படுகிற சட்டங்களுக்கு இஸ்லாமியர்கள் கட்டுப்பட மறுக்கிறார்கள் என்பதையே.
  • இஸ்லாமியர்களை இழிவுபடுத்துவதும் இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் பகைமையை வளர்க்கும் நோக்கத்தை மையமாக கொண்டிருக்கிறது. மிகச் சமீபத்தில் நாகாலாந்து அரசின் 12 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு ஒன்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பொது சிவில் சட்டம் குறித்து பேசியது. இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நாகாலாந்து அரசு முறைக்குழு, பொது சிவில் சட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கும் நாகாலாந்து உள்ளிட்ட பழங்குடியினருக்கும் எவ்விதமான பாதிப்பும் வராது என்று உள்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தது.
  • பத்திரிகைகளில் வெளிவந்த இந்தச் செய்திக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இப்போது வரை மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. எனவே, இதனையே நாம் உண்மை என கருதியாக வேண்டும். மேலும், இதே காலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் ஒரே வீட்டில் எப்படி இரண்டு நடைமுறைகள் இருக்க முடியாதோ, அதே போல் ஒரே தேசத்தில் இரண்டு சட்டங்கள் இருக்க முடியாது என்று பிரதமர் பேசியுள்ளார். இவை இரண்டும் இஸ்லாமியர்களை மட்டுமே குறி வைக்கிறது என்பதற்கு விளக்கம் ஏதும் தேவையில்லை.

சட்ட ஆணையம்

  • உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற பி.எஸ்.சௌகான் தலைமையில் செயல்பட்ட தேசத்தின் 21-வது சட்ட ஆணையம், மிக விரிவான ஆய்வுகளை மேற்கொண்டது. சிறப்புத் திருமணச் சட்டம், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், மதம் சார்ந்த திருமணம் மற்றும் விவாகரத்து சட்டங்கள், தத்து எடுத்தல், சொத்துரிமை குறித்த சட்டங்கள், பாரம்பரிய வழக்கங்கள் குறித்த சட்டங்கள் ஆகிய அனைத்தையும் பற்றியதாக இந்த ஆய்வுகள் இருந்தன. 75,378 பேரிடம் கருத்துகள் அறியப்பட்டு அதன் அடிப்படையில் சட்ட ஆணையம் வெளியிட்ட அறிக்கை மிகவும் குறிப்பிடத்தக்கது. பொது சிவில் சட்டம் தேவையற்றது என்று அந்த அறிக்கை ஆணித்தரமாக தெரிவிக்கிறது. பிரதமர் மோடியின் ஆட்சிக் காலத்தில் 2016-ல் அமைக்கப்பட்டது தான் 21-வது சட்ட ஆணையம் என்பது இங்கே கவனம் கொள்ளத்தக்கது. பொது சிவில் சட்டம் வேண்டாம் என்கிற 21-வது சட்ட ஆணையம் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆக்கபூர்வமாக தெரிவித்ததை இங்கு பார்ப்போம்.

தனியார் சட்டங்களில் தான் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்

  • இஸ்லாமிய தனியார் சட்டங்களில் தேவையான சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். அதேபோல் இந்து சட்டத் தொகுப்பில் உள்ள குறைபாடுகள் மற்றும் பாகுபாடுகள் குறித்தும் தெரிவித்து அதனையும் சீர்திருத்த வேண்டும் என்றது. குறிப்பாக குடும்பத்தின் பிரிக்கப்படாத சொத்துக்களில் இந்துப் பெண்களுக்கான உரிமையை பெறுவதில் இச்சட்டம் பாரபட்சமாக உள்ளது. எனவே, எல்லா மதம் சார்ந்த தனியார் சட்டங்களிலும் மாற்றங்களும் முன்னேற்றங்களும் சீர்திருத்தங்களும் அவசியப்படுகின்றன என்பதைத் தான் இவை உணர்த்துகின்றன.
  • இஸ்லாமிய ஆண் தனது இணையரை விவாகரத்து செய்வதற்கு மூன்று முறை தலாக் சொன்னால் போதும் என்ற நடைமுறைக்கு ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தடை விதித்து விட்டது. எனவே "முத்தலாக்" நடைமுறையில் இல்லை. ஆனால் பெண்களுக்கு இருக்கிற இதே உரிமையான "குலா" தொடர்கிறது. இஸ்லாமியப் பெண்கள் தனது கணவரை விவாகரத்து செய்திட நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டியதில்லை. குலா சொன்னால் போதும் என்கிற உரிமையை இந்து பெண்களுக்கும் வேண்டும் என்று பொது சிவில் சட்டம் கேட்பவர்கள் மறந்தும் கூட சொல்வதில்லை.
  • அதேபோல் இஸ்லாமியப் பெண்களின் ஜீவனாம்சம் பெறுகிற உரிமையை "ஷா பானு" வழக்கில் பொதுச் சட்டம் பெரிதா தனிச் சட்டம் பெரிதா என்று விவாதம் நடைபெற்று இறுதியில் உச்ச நீதிமன்றம் பொதுசட்டங்களின் அடிப்படையில் ஷா பானு ஜீவனாம்சம் பெறுகிற உரிமையை உறுதிப்படுத்தியது. அதன் பிறகு ஏராளமான இஸ்லாமிய பெண்கள் ஜீவனாம்சம் கேட்டு வழக்குகளை தொடுத்து பரிகாரம் பெற்று வருகிறார்கள். அதேபோல பலதார மணம் என்கிற பிரச்சினையில் பொதுச்சட்டத்தில் ஒன்றிய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று இருப்பதைப் போல் மதம் சார்ந்தவர்களையும் இணைத்துவிட்டால் இப்பிரச்சனைக்கும் தீர்வு காண முடியும்.

எது தீர்வு

  • எந்த சீர்திருத்தங்களையும் நிறைவேற்ற தற்போதைய பொது சட்டங்களிலேலேயே வழிகள் இருக்கின்றன என்கிறபோது பொது சிவில் சட்டம் என்று பேசுவது பொது மக்களை மத அடிப்படையில் திரட்டுவதற்க்காகத்தான். பி.எஸ்.சவுகான் தலையிலான 21-வது சட்ட ஆணையம் 2018-ல் தனது அறிக்கையை ஒன்றிய அரசிடம் சமர்பித்தது. ஆனால் இந்த அறிக்கையின் அடிப்படையில் எதுவும் செய்யப்படவில்லை என்பதோடு பொதுமக்கள் பார்வைக்கே வைக்கப்படவில்லை.
  • 21-வது சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் அவசியமற்றது என்று கூறிவிட்டது. இந்நிலையில், ரித்து ராஜ் அஸ்வதி தலைமையில் அமைக்கப்பட்ட 22-வது சட்ட ஆணையம் இதனை மறு பரிசீலைனைக்கு எடுத்துக் கொண்டது அவசியமற்றது. இது மக்கள் பணத்தையும், நேரத்தையும் வீணடிக்கும் செயலே ஆகும்.
  • உண்மையில் பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் நோக்கம் என்றால் நாடாளுமன்றத்தில், சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்குகிற சட்டம், பெண்களின் சுய தேர்வை எதிர்த்து நடைபெறக்கூடிய சாதி ஆணவப்படுகொலைத் தடுப்பு சட்டம், திருமண உறவுகளில் பெண்களின் சொத்துரிமை தொடர்பான சட்டங்கள் போன்றவை இன்னும் கிடப்பில் கிடப்பது பெண்ணுரிமை குறித்த அரசின் நிலைபாட்டுக்குச் சான்றாக உள்ளது.
  • 21-வது சட்ட ஆணையம் குறிப்பிட்டிருப்பதை போல், பொது சிவில் சட்டம் இயற்றப்பட்டால், அது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 6-வது அட்டவணைக்கு எதிரானதாக அமைந்திடும். அதாவது திரிபுரா, அசாம், மிசோரம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் இருக்கிற மாவட்ட கவுன்சில்கள் தங்களுடைய பாரம்பரிய மரபு சார்ந்த பிரச்சினைகளுக்காக ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று சட்டம் இயற்றிக் கொள்ளலாம் என்கிறது. அதேபோல் அரசியலமைப்புச் சட்டம் 371 A துவங்கி H வரை இருக்கிற சட்டப்பிரிவுகள் வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு உரிமைகளைத் தருகிறது.

கோவா தவறான உதாரணம்

  • இவற்றுக்கெல்லாம் பொது சிவில் சட்டம் எப்படி விடையளிக்கப் போகிறது என்பதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க வேண்டும். கோவா பொது சிவில் சட்டத்தை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுகிறார். பொது சிவில் சட்டத்துக்கான உதாரணம் கோவா என்கிறார். ஆனால் ஒரு சிவில் சட்டம் எவ்வாறு இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் கோவா பொது சிவில் சட்டம்தான். புதிதாக அதில் ஏதுமில்லை. ஏற்கெனவே இருக்கிற பல்வேறு மதங்களின் பாரம்பரிய மரபு சார்ந்த சட்டங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுத்து ஒரு சட்ட தொகுப்பை அவர்கள் உருவாக்கியுள்ளார்கள். அது பெண் உரிமைகளை பாதுகாப்பதற்கு பதிலாக மேலும் பறிப்பதாகவே அமைந்துள்ளது.
  • ஒரு இந்து பெண் 25 வயதிற்குள் குழந்தை பெற்றுக் கொள்ளாவிட்டால் 30 வயதுக்குள் ஆண் குழந்தையை பெற்றுக் கொடுக்காவிட்டால் அல்லது ஒரு திருமணமான பெண் மற்றொருவருடன் உறவு வைத்திருந்தால் கணவன் விவாகரத்து செய்து கொள்ளலாம் என்று இந்தப் புதிய சட்ட தொகுப்பு கூறுகிறது. ஆனால், ஒரு கணவன் வேறு உறவு வைத்துக் கொண்டால் மனைவி அதை விவாகரத்துக்கான காரணமாக கொள்ளலாம் என்று இந்தச் சட்ட தொகுப்பு கூறவில்லை. இது பொது சிவில் சட்டம் அல்ல. தனிப்பட்ட சட்டங்களின் தொகுப்பு தான்.
  • சமத்துவம் என்பதும் ஒற்றைத் தன்மையும் ஒன்றல்ல. எல்லாம் சமமாக இருக்க வேண்டும் என்பதற்கும் ஒற்றைத் தன்மையையே அனைவரும் ஏற்க வேண்டும் என்பதற்கும் மிகப் பெரிய வேறுபாடுகள் இருக்கின்றன. இப்போதும் இந்தியர்களின் ஒட்டுமொத்த உரிமைகளையும், பின்பற்ற வேண்டிய சட்டங்களையும் அரசியல் அமைப்புச் சட்டமே தீர்மானிக்கிறது. விதிவிலக்குகளாக பல்வேறு சமயம் மற்றும் இனக் குழுக்களை சார்ந்தவர்களுக்கு அவர்களின் கலாசாரம், பண்பாடு, வாழ்விடம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு தனித்த சில உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன.
  • இத்தகைய தனித்த உரிமைகளால் அதே குழுவில் உள்ள பெண்களுக்கு அல்லது இதர குழுக்களில் உள்ளவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்றால் அதனை நேர் செய்ய வேண்டியது கட்டாயமானது. அந்த அடிப்படையில் சீர்திருத்தங்கள் தேவையானதுதான். ஆனால், அந்த சீர்திருத்தங்கள் நாட்டு மக்களை மேலும் ஒருங்கிணைத்து அவர்களிடையே ஒற்றுமையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். மாறாக, இயற்கையாகவே வெவ்வேறு அடையாளங்களால் பிரிக்கப்பட்டுள்ள மக்களிடையே வெறுப்பும், ஒற்றுமையின்மையும் ஏற்பட்டுவிடக் கூடாது.
  • இந்து மதத்துக்கு உள்ளே ஏறக்குறைய அதனுடைய கோட்பாடாகவும், இந்தியாவில் செயல்படுகிற இதர மதங்கள் இந்து மதத்தை பின்பற்றி தனக்குள்ளே சாதிய பாகுபாடுகளை கடைப்பிடிக்கின்றன என்பதையும் நியாய உணர்ச்சி உள்ள எவரும் மறுதலிக்க முடியாது. அவ்வாறு தான் மக்களிடேயே பொருளாதாரச் சமத்துவமின்றி இருக்கிறோம் என்பதை விட மலைக்கும், மடுவுக்குமான அளவுக்கு பொருளாதார இடைவெளிகள் அதிகரித்து வருகின்றன.
  • இவற்றில் பொதுத் தன்மையை உருவாக்கிட வேண்டாமா. இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு உண்மையில் மகிழ்ச்சிகரமான ஒரு தேசம் உருவாக்கப்பட வேண்டும். இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் மாண்புடன் கூடிய வாழ்க்கையை வழங்குகிற நாடு உருவாக்கப்பட வேண்டும். அதற்கு நாட்டு மக்களின் ஒற்றுமையும் விழிப்புணர்வும் தான் பிரதானமான பங்களிப்பைச் செய்திட முடியும்.

நன்றி: தி இந்து (19 – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்