- விவாதம் எதுவும் இல்லாமல் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் சட்டமாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா, மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டு சட்ட அங்கீகாரம் பெற இருக்கிறது.
- என்ஜிஓ-க்கள் என்று பரவலாக அறியப்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைப் பதிவு செய்யவும், பதிவைப் புதுப்பிக்கவும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படுகிறது.
- பல்வேறு மத அமைப்புகள் வெளிநாட்டு நன்கொடைகள் பெறுவதற்கு தரப்பட்டிருந்த அனுமதி தொடரும் என்றும் அரசு உறுதி அளித்திருக்கிறது. அதே நேரத்தில் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பது தெரிந்தால் தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கும் சட்டத்திருத்தம் வழிகோலுகிறது.
- வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் நன்கொடைகளில் 20%க்கு மேல் நிர்வாகச் செலவுகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்பதும், அந்த தன்னார்வத் தொண்டு அமைப்பில் உள்ள அனைத்து நிர்வாகிகள், இயக்குநர்களின் ஆதார் எண் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதும் நியாயமான, தேவையான விதிமுறைகள்.
- அதேபோல, வெளிநாட்டினராக இருந்தால் அவர்களது கடவுச்சீட்டு அல்லது வெளிநாடுவாழ் இந்தியருக்கான அட்டையின் நகல் இணைக்கப்பட வேண்டும்.
- அரசு ஊழியர்களும், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகளும் வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
- இவையெல்லாம் கோடிக்கணக்கில் வெளிநாட்டு நன்கொடை பெறும் அமைப்புகளின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்
- இந்தியாவைப் பொருத்தவரை, நமது வளர்ச்சியில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு கணிசமானது.
- குறிப்பாக, விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்தில் என்ஜிஓ-க்கள் பெரும்பங்கு வகிக்கிறார்கள். அவர்களால் நடத்தப்படும் ஆதரவற்றோர் இல்லங்களும், மகளிர் மேம்பாட்டுக்கான செயல்பாடுகளும், முதியோர் இல்லங்களும், மகளிர் காப்பகங்களும் ஆற்றிவரும் சேவை அளப்பரியது.
- அரசுத் துறைகளால் நேரடியாக செய்ய முடியாத பல சமுதாயப் பணிகளை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் முன்னெடுத்து முனைப்புடன் நடத்துகின்றன.
- அதே நேரத்தில் சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சேவை என்கிற போர்வையில் முறைகேடாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிடமிருந்தும் பெறும் நன்கொடையை பயன்படுத்துவதும், வெளிநாட்டு நன்கொடைகள் மூலம் மதப் பிரசாரத்திலும், நாட்டின் பாதுகாப்புக்கு எதிரான செயல்களிலும் ஈடுபடுவதும் பொய்க் குற்றச்சாட்டுகள் அல்ல.
- நரேந்திர மோடி அரசு பதவிக்கு வருவதற்கு முன் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த முறையான கண்காணிப்பு இல்லாமல் இருந்தது என்கிற உண்மையையும் மறுக்க இயலவில்லை.
- ஏறத்தாழ 30 லட்சத்துக்கும் அதிகமான தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன.
- அவை அரசின் சமூகநலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலும், கண்காணிப்பதிலும் அரசுக்கு உதவுகின்றன.
- அடித்தட்டு அளவில் விளிம்புநிலை மக்களின் உணர்வுகளுக்கு வடிகாலாக என்ஜிஓ-க்கள் செயல்படுகிறார்கள்.
- அவர்கள் குறித்து பிரச்னை எதுவும் கிடையாது. அதே நேரத்தில், 22,400 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆண்டுதோறும் ஏறத்தாழ ரூ.60,000 கோடி வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெறுகின்றன. அவை புதிய சட்டத்திருத்த மசோதாவின் வரம்பில் வரும்.
உறுதிப்படுத்தப்பட வேண்டும்
- நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்ததும் 2015-இல் முறையான கணக்கு தாக்கல் செய்யாத வெளிநாட்டு நன்கொடைகள் குறித்த வெளிப்படைத்தன்மை இல்லாத 9,000 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்தது.
- 2018-இல் 42 என்ஜிஓ-க்கள் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டத்தை மீறியது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டது.
- பல என்ஜிஓ-க்கள் வெளிநாடுகளிலிருந்து பெறும் நன்கொடையை நிர்வாகச் செலவாகக் கணக்குக் காட்டி அதன் நிர்வாகிகள் ராஜபோக வாழ்க்கை நடத்துவது வாடிக்கையாகிவிட்டிருக்கிறது.
- இப்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மசோதாவின்படி, நிர்வாகச் செலவுகள் குறித்தக் கட்டுப்பாட்டை விதித்திருப்பது தேவையான, வரவேற்கப்பட வேண்டிய முடிவு.
- அதே நேரத்தில், என்ஜிஓ-க்களுக்கு இடையேயான பணப் பரிமாற்றத்திற்கு தடை விதித்திருப்பது தவறான முடிவு.
- பல தொண்டு நிறுவனங்கள் சக அமைப்புகளுடன் இணைந்து செயல்படும் நிலையில், இந்த முடிவு அவர்களது செயல்பாட்டைப் பாதிக்கும். குறிப்பிட்ட வங்கிகள் மூலம் மட்டுமே பணப் பரிமாற்றம் நடத்தப்பட வேண்டும் என்கிற விதியும் தேவையற்றது.
- தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், வெளிநாட்டு நன்கொடை பெறுவதை கண்காணிப்பதும், ஒழுங்குமுறைப்படுத்துவதும் சரி.
- ஆனால், 2016 நிதிநிலை அறிக்கையின் மூலம் அரசியல் கட்சிகள் வெளிநாட்டு நன்கொடைகள் பெறுவதை நரேந்திர மோடி அரசு சுலபப்படுத்தியிருக்கிறதே, அது எப்படி சரி?
- 1976 முதல் அரசியல் கட்சிகள் வெளிநாட்டு நன்கொடை பெற்றதை தணிக்கை செய்வதிலிருந்து விலக்கு வழங்கப்பட்டிருக்கிறதே அது 1951 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை மீறியது ஆகாதா?
- வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைப் போலவே அரசியல் கட்சிகளையும் கொண்டுவராமல் இருப்பது ஆட்சியாளர்களின் போலித்தனத்தை எடுத்தியம்புகிறது.
- வெளிநாட்டு நன்கொடையை யார் வாங்கினாலும் அதற்கான கண்காணிப்பும், கணக்குத் தணிக்கையும், வெளிப்படைத்தன்மையும் பாரபட்சமில்லாமல் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
நன்றி: தினமணி (23-09-2020)