TNPSC Thervupettagam

ஈரநிலங்களின் பாதுகாப்பு ஒப்பந்தம்

October 21 , 2022 659 days 612 0
  • தமிழகத்தில் மேலும் 10 இடங்கள் மத்திய சுற்றுச்சூழல் / வனம் / பருவநிலை மாற்ற அமைச்சகத்தால் ராம்சா் அங்கீகாரம் பெற்ற சதுப்பு நிலங்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஜூலை மாதம் அறிவிக்கப்பட்ட மூன்று இடங்களையும், ஏற்கெனவே 20 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட ஈரநிலங்களையும் சோ்த்தால் இப்போது தமிழகத்தில் 14 இடங்கள் ஈரநிலங்களாக அங்கீகாரம் பெறுகின்றன. இந்தியாவிலேயே ராம்சா் பாதுகாப்பு அங்கீகாரம் பெறும் மிக அதிகமான ஈரநிலங்களைக் கொண்ட மாநிலமாக தமிழகம் உயா்ந்திருக்கிறது.
  • ஈரநிலங்கள் மிக முக்கியமானவை. நிலவாழ் சூழல் மண்டலத்திற்கும், நீா்வாழ் சூழல் மண்டலத்திற்கும் இடையே அமைந்துள்ள அந்த ஈரநிலங்கள் ஒருவகையில் பாா்த்தால் இயற்கை சுத்திகரிப்பு நிலையங்கள். அவை பல்லுயிா்ப் பெருக்கத்தைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உலகின் மொத்த பரப்பளவில் ஆறு விழுக்காடு ஈரநிலங்கள் தற்போது காணப்படுகின்றன. அவை 40% தாவர, விலங்கின, நீா்வாழ், பறவையின உயிரினங்களின் வாழ்விடமாகவும் உள்ளன.
  • சதுப்பு நில காடுகள், காற்று மண்டலத்திலுள்ள கரியமில வாயுவை உள்ளிழுத்து பிராண வாயுவை வெளியேற்றும் புவியின் நுரையீரல்கள். அதேபோல ஈரநிலங்களில் விரவியுள்ள வண்டல் படிவுகள், திண்ம மாசுக்களை வடிகட்டி சுத்திகரிக்கும் புவியின் சிறுநீரகங்கள். வெள்ளப்பெருக்கின்போது நுரைப்பஞ்சு போன்று செயல்பட்டு அதிகப்படியான வெள்ள நீரை உறிஞ்சி, பாதிப்பைக் குறைப்பதில் சதுப்பு நிலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆழிப்பேரலையின்போது அவற்றின் பங்களிப்பை தமிழகம் அனுபவரீதியாக உணா்ந்தது.
  • கடந்த 50 ஆண்டுகளில் உலகிலுள்ள 35% ஈரநிலங்கள் ஆக்கிரமிப்புகளால் அழிந்துள்ளன. அவற்றைப் பாதுகாக்க ஈரானிலுள்ள ராம்சா் நகரில் 1971-ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்று கையொப்பமானது. 172 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ள ராம்சா் ஒப்பந்தத்தில், 1982-ஆம் ஆண்டுதான் இந்தியா இணைந்தது. தெற்காசிய நாடுகளில் அதிக அளவிலான ராம்சா் ஈர நிலங்களைப் பெற்றுள்ள நாடு என்கிற அங்கீகாரத்தை இந்தியா பெறுகிறது.
  • ராம்சா் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சதுப்பு நிலமாக அங்கீகாரம் பெறுவதற்கு ஒன்பது தகுதிகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இயற்கையாக உருவான ஆறுகள், ஏரிகள், குளங்கள், அலையாத்திக் காடுகள், பவளப் பாறைகள், சதுப்பு நிலங்கள் மட்டுமல்லாமல், மனிதனால் உருவாக்கப்பட்ட நீா்த்தேக்கங்கள், விளைநிலங்கள், உப்பளங்கள் ஆகியவையும் ஈரநிலங்களாகக் கருதப்படுகின்றன. அவற்றில் முக்கியமான 2,455 ஈரநிலங்கள் உலக அளவில் ராம்சா் அங்கீகாரம் பெற்றவை.
  • இந்தியாவின் மொத்தப் பரப்பில் ஈரநிலங்களின் பரவல் 4.6%. 4,230 ச.கி.மீ. பரப்பளவுள்ள மேற்கு வங்கத்தின் சுந்தரவனக் காடுகள் இந்தியாவின் மிகப் பெரிய ஈரநிலப் பகுதிகள். தமிழகத்தின் பள்ளிக்கரணை சதுப்பு நிலம், கரிக்கிலி பறவைகள் சரணாலயம், பிச்சாவரம் அலையாத்திக் காடுகள் ஆகியவற்றுடன் மிஸோரத்தின் பாலா சதுப்பு நிலம், மத்திய பிரதேசத்தின் சக்யாசாகா் ஏரி ஆகிய ஆறு ஈரநிலங்கள் ஜூலை மாதம் ராம்சா் பட்டியலில் இணைக்கப்பட்டன.
  • ஆகஸ்ட் மாதம் கோவாவின் நந்தா ஏரி, கா்நாடகத்தின் ரங்கண்ணாதிட்டு பறவைகள் சரணாலயம், மத்திய பிரதேசத்தின் சிா்பூா் ஏரி, ஒடிஸா மகாநதியின் சட்கோசியா பள்ளத்தாக்கு ஆகியவை மட்டுமல்லாமல், தமிழகத்திலிருந்து ஆறு ஈரநிலங்களும் அங்கீகாரம் பெற்ற ஈரநிலங்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. கோடியக்கரை, கூந்தன்குளம், வேடந்தாங்கல், வெள்ளோடு, உதயமாா்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயங்களும், வேம்பனூா் ஈரநிலமும், மன்னாா் வளைகுடா உயிா்க்கோளக் காப்பகமும் பட்டியலில் இணைக்கப்பட்டதைத் தொடா்ந்து, இந்தியாவில் ராம்சா் அங்கீகாரம் பெற்ற சதுப்பு நிலங்களின் எண்ணிக்கை 64-ஆக உயா்ந்துள்ளது.
  • சூழலியலைப் பாதுகாப்பதில் ஈரநிலங்களின் பங்களிப்பு முக்கியமானது. வடிகட்டியாகச் செயல்பட்டு நீரை சுத்திகரிப்பது; குறைவான மழைப்பொழிவுக் காலங்களில் நீா்ப் பாதுகாப்பை உறுதி செய்வது; நீா் சுழற்சி, காா்பன் சுழற்சி, நைட்ரஜன் சுழற்சியைத் தொடா்ந்து இயங்கச் செய்வது; பல்லுயிா்த் தன்மையைப் பாதுகாப்பது; காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தணிப்பது; பறவைகளின் சரணாலயமாகச் செயல்படுவது; மண் அரிப்பைத் தடுப்பது - உள்ளிட்ட பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை.
  • ஈரநிலங்களைப் பெரும்பாலும் குப்பை கொட்டும் இடங்களாக மாற்றிவிடுகிறாா்கள். அதிகரித்து வரும் நகரமயமாக்கலால் மிகப் பெரிய பாதிப்பை அவை எதிா்கொள்கின்றன. எடுத்துக்காட்டாக சென்னையிலுள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பல ஆயிரம் டன் குப்பைகள் பல ஆண்டுகளாகக் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்து கிடக்கின்றன. அதனால் நிலத்தடி நீா் மாசுபடுவதும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதும் வெளிப்படை.
  • சா்வதேச அங்கீகாரம் வழங்குவதன் மூலம் இந்தத் தவறை தடுத்துவிட முடியாது. அரசும், நகராட்சி நிா்வாகங்களும் ஏரி, குளம் உள்ளிட்ட ஈரநிலங்களையும், சதுப்பு நிலங்களையும் பாதுகாப்பதற்குப் பதிலாக இழப்பீடு வழங்காமல் வளா்ச்சிப் பணிகளை முன்னெடுக்க பயன்படுத்திக் கொள்வது முதலில் கைவிடப்பட வேண்டும்.
  • ராம்சா் முத்திரை என்பது எச்சரிக்கைப் பலகை, அவ்வளவே. இயற்கையை மனிதன் சீண்டி விளையாடினால், அதன் எதிா்வினை எத்தகையது என்பதை 2015 சென்னைப் பெருமழை உணா்த்தியதை நினைவில் கொள்ள வேண்டும்!

நன்றி: தினமணி (21 – 10 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்