TNPSC Thervupettagam

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: சீமான் குறிவைக்கும் இலக்கு!

January 17 , 2025 3 days 22 0

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: சீமான் குறிவைக்கும் இலக்கு!

  • ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை இடைத்தேர்தலில் அதிமுக, பாஜக உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் போட்டியிடாமல் ஒதுங்கியுள்ள நிலையில் இந்தச் சூழலை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நாம் தமிழர் கட்சி முற்பட்டுள்ளது.
  • ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு கடந்த 2021- ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். அவரது மறைவுக்குப் பிறகு 2023- ஆம் ஆண்டு பிப்ரவரி 27- ஆம் தேதி நடந்த இடைத்தேர்தலில், திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரும் திருமகன் ஈவெராவின் தந்தையுமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றார்.
  • ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவால் வரும் பிப்ரவரி 5- ஆம் தேதி ஈரோடு கிழக்கில் 2- ஆவது முறையாக இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 2021 மற்றும் 2023 என ஈரோடு கிழக்கு தொகுதியில் இரண்டு முறை காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை ஆளும் திமுகவே களம் காண்கிறது. திமுக வேட்பாளராக இந்த தொகுதியின் முதல் சட்டப் பேரவை உறுப்பினரான (2011) வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறது. தேசிய கட்சியான பாஜகவும் தேர்தலில் போட்டி இல்லை என விலகிக் கொண்டுள்ளது. அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் களத்தில் இல்லாத நிலையில் நாம் தமிழர் கட்சி மட்டும்தான் களத்தில் இறங்கியுள்ளது. இதனால், ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை இடைத்தேர்தலில் இருமுனைப் போட்டி உருவாகி உள்ளது.
  • கவனத்துடன் திமுக: எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள சூழலில் இடைத்தேர்தலில் திமுக போட்டியின்றி களம் காண்பது, கண்ணுக்கெட்டிய தொலைவு வரை எதிரிகளே இல்லை என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2014 மக்களவைத் தேர்தலில் முழங்கியது, இப்போது திமுக தலைமைக்கு பொருத்தமாக உள்ளது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
  • கடந்த மாதம் சென்னையில் நடந்த திமுக செயற்குழுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை எங்களுக்கு எதிரிகளே இல்லை என ஆணவத்தில் பேசமாட்டோம் என்று குறிப்பிட்டார்.
  • இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிக்குதான் சாதகம் என்பது தமிழக தேர்தல் அரசியலின் தன்மை. சட்டப் பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது திமுகவுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்காது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
  • அதேபோன்று, திமுக வேட்பாளராக களமிறக்கியுள்ள வி.சி.சந்திரகுமார் மக்களிடையே மிகவும் அறிமுகமானவர் என்பதும், 30 சதவீதத்துக்கும் மேல் வாக்காளர்களைக் கொண்ட செங்குந்த முதலியார் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதும் அக்கட்சிக்கு மிகப்பெரிய பலம்.
  • பொங்கல் பரிசுத் தொகுப்பு அதிருப்தி, ஈரோடு தொகுதிக்கான பிரச்னைகள் போன்றவற்றால் ஆட்சிக்கு எதிரான மனநிலையில் உள்ள வாக்காளர்களை சமரசம் செய்ய திமுக
  • தரப்பு தேர்தல் உத்திகளைக் கையாள வேண்டியிருக்கும். கடந்த இரண்டு தேர்தல்களைப் போலவே வாக்காளர்கள் மத்தியில் திமுகவிடமிருந்தான எதிர்பார்ப்புகள் அதிகமாகவே
  • இருக்கும். அந்த எதிர்பார்ப்புகளை திமுக ஈடு செய்யாவிட்டால் எதிராக வாக்களிக்கவோ அல்லது வாக்களிக்காமல் இருக்கவோ வாய்ப்பும் காணப்படுகிறது.
  • இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது, எங்களுக்கு அக்கட்சி போட்டி என அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளதன் மூலம் இந்த தேர்தலிலும் முக்கியப் பிரமுகர்கள் முகாமிட்டு வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிக்கப் போவதாக அந்தக் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
  • நாதகவின் எதிர்பார்ப்பு: கடந்த முறை நடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா 10,827 வாக்குகள் பெற்று பதிவான வாக்குகளில் 6.37 சதவீத வாக்குகள் பெற்றிருந்தார். இந்த நிலையில் மாநிலக் கட்சியாக அண்மையில் நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்றுள்ளது. அதிமுக, பாஜக தேர்தலைப் புறக்கணித்ததால் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் ஒட்டுமொத்தமாக நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்குமா என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
  • ஆனால், கடந்த 10 நாள்களாக சீமானின் பேச்சுகள் எல்லாம் குறிப்பாக பெரியார் ஈவெரா எதிர்ப்பு பேச்சு, பெரியார் பிறந்த மண்ணான ஈரோட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இடைத்தேர்தலில் திமுகவுக்கு களம் சாதகமாக இருந்தாலும்கூட தேர்தல் ஆணைய கெடுபிடிகள் அதிகரித்தால், மாற்றம் குறித்து மக்கள் யோசித்தால் நாதகவின் வாக்கு பலம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
  • சர்ச்சை பேச்சுகளைத் தவிர்த்து ஆட்சியின் செயல்பாடுகளை மட்டும் விமர்சனம் செய்து சீமான் பிரசாரம் செய்தால், திராவிட சித்தாந்தத்துக்கு எதிரான நிலைப்பாடு, ஆட்சியின் மீது அதிருப்தி, மாற்றத்தை எதிர்பார்ப்பவர்கள் போன்றவர்களின் வாக்குகள் நாதகவுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
  • தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனது கட்சி போட்டியிடாது என அறிவித்துள்ளார். இது தங்களுக்கு சாதகமாகலாம் என்று நாதக எதிர்பார்க்கிறது.
  • 2019 மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் சீதாலட்சுமி போட்டியிட்டதன் மூலம் தொகுதிக்கு நன்கு அறிமுகமாகியிருந்தார். இந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நாதக வேட்பாளராக அவர் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார்.
  • திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் செங்குந்த முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்ற நிலையில், சீதாலட்சுமி கொங்கு வேளாளக் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இதனால் ஆட்சிக்கு எதிரான வாக்குகள், பிரதான கட்சிகள் களத்தில் இல்லாத தேர்தல் போன்ற காரணிகள் நாம் தமிழர் கட்சிக்கு சாதகமாகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
  • தேர்தல் வெற்றி என்பது எட்டாக்கனி என்று தெரிந்தாலும், ஏனைய கட்சிகள் இடைத்தேர்தலைப் புறக்கணித்திருக்கும் நிலையில் அதை தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள நினைக்கிறார் சீமான். தேர்தல் சின்னம் கிடைத்த கையுடன் இரட்டை இலக்க வாக்கு வங்கியைக் குறிவைத்து நகரும் நாம் தமிழர் கட்சியின் வியூகம் வெற்றி அடைந்தால் வியப்பில்லை.

நன்றி: தினமணி (17 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்