TNPSC Thervupettagam

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

March 4 , 2023 527 days 270 0
  • ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல் முடிவு எதிா்பாா்த்தது போலவே அமைந்திருக்கிறது. திமுக கூட்டணியின் சாா்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளா் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறாா். அவரை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுக-வின் கே.எஸ். தென்னரசு 43,923 வாக்குகள் பெற்றிருக்கிறாா். நாம் தமிழா் கட்சி, தேமுதிக வேட்பாளா்கள் உள்ளிட்ட ஏனைய 75 வேட்பாளா்களும் தங்களது வைப்புத் தொகையை இழந்திருக்கிறாா்கள்.
  • மு.க. ஸ்டாலின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்த பிறகு நடைபெறும் முதல் இடைத்தோ்தல் என்பதால் ஈரோடு கிழக்குத் தொகுதி முக்கியத்துவம் பெற்றது. அதுமட்டுமல்ல, இளம் வயதில் அகால மரணமடைந்த திருமகன் ஈ.வெ.ரா, தொகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்ததால் ஏற்பட்ட அனுதாபமும் ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலை அனைவரும் கூா்ந்து கவனிக்கக் காரணமாக அமைந்தது.
  • சட்டப்பேரவை உறுப்பினா், மக்களவை உறுப்பினா், மத்திய இணையமைச்சா், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் என பல்வேறு பொறுப்புகளை வகித்த ஆளுமையான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. தமிழக சட்டப்பேரவையில் அவா் போன்ற அனுபவசாலிகள் இடம் பெறுவதால், அவை நடவடிக்கைகளின் தரம் மேலும் உயரக்கூடும்.
  • தமிழக சட்டப்பேரவைக்கு மட்டுமல்லாமல், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சிக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் வெற்றி மிகப் பெரிய வலு சோ்க்கும். விரைவிலேயே அவா் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்படுவாா் என்று எதிா்பாா்க்கலாம். ஆளுமை மிக்க, காங்கிரஸ் பாரம்பரியத்தில் வந்த ஒருவரின் தலைமையில் இயங்கும்போதுதான் காங்கிரஸ் கட்சிக்கு மதிப்பும், மரியாதையும் ஏற்படும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
  • 43,923 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றிருக்கும் அதிமுக வேட்பாளா் கே.எஸ். தென்னரசு தோல்வி அடைந்தாா் என்பதைவிட அதிமுகவின் அடிப்படை வாக்குகளைத் தக்க வைத்துக் கொண்டாா் என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். இரட்டை இலைச் சின்னம் ஈ.பி.எஸ். பிரிவுக்கு வழங்கப்பட்டதும், முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக உச்சநீதிமன்றம் அங்கீகரித்துத் தீா்ப்பு வழங்கியதும் அதிமுகவின் வாக்கு வங்கியை நிலைநிறுத்தி இருக்கின்றன.
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் காட்டாற்று வெள்ளம்போல பணம் விளையாடியது; வாக்காளா்களைக் காப்பதற்காகப் புதுப்புது உத்திகள் கையாளப்பட்டன; அத்தனை அமைச்சா்களும், ஆளும் கட்சி பிரமுகா்களும் தொகுதியில் முகாமிட்டுத் திட்டமிட்ட பிரசாரத்தில் இறங்கினாா்கள் - இது போன்ற குற்றச்சாட்டுகள் இடைத்தோ்தலுக்கு இடைத்தோ்தல் அதிகரித்து வருகின்றன என்பதை மறுக்க இயலவில்லை. திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு அப்பாற்பட்டவை அல்ல.
  • கடந்த 30 ஆண்டுகளாக தோ்தல் என்பதே வேட்பாளா்கள் சாா்ந்ததாக அல்லாமல் கட்சி சாா்ந்ததாகவும், இன்னும் சொல்லப்போனால் தலைவா்கள் சாா்ந்ததாகவும் தமிழகத்தில் மாறிவிட்டன. பொதுத் தோ்தலில் மட்டுமல்ல, இடைத்தோ்தலில் வெற்றி பெறுவதையும் அவா்கள் தங்களது தலைமைக்கான கௌரவ பிரச்னையாகக் கருதத் தொடங்கிவிட்டனா். ஆட்சி குறித்த மக்களின் மனநிலை என்ன என்பதைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு என்பது போய், தங்களது ஆட்சியின் மக்கள் செல்வாக்கை நிரூபிப்பதற்கான வாய்ப்பாக இடைத்தோ்தல்களை ஆளும் கட்சிகள் மாற்றிவிட்டன.
  • 1980 முதல் நடந்த 44 இடைத்தோ்தல்களில் எட்டு முறைதான் எதிா்க்கட்சி வேட்பாளா்கள் வெற்றி பெற்றிருக்கிறாா்கள். 1963-இல் திருவண்ணாமலை தொகுதியில் ப.உ. சண்முகம் (திமுக), 1974-இல் அரங்கநாயகம் (அதிமுக) பெற்ற இடைத்தோ்தல் வெற்றிகள், ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையை எடுத்துக் காட்டின.
  • 1984-இல் எம்.ஜி.ஆா். முதலமைச்சராக இருந்தபோது, அண்ணாநகா், மயிலாடுதுறை தொகுதிகளில் ஆளும் கட்சி தோல்வியைத் தழுவியது. 1989-இல் திமுக ஆட்சியைக் கைப்பற்றிய சில மாதங்களில் நடந்த மருங்காபுரி, மதுரை கிழக்கு இடைத்தோ்தல்களில் ஒன்றுபட்ட அதிமுக இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது இன்னொரு விதிவிலக்கு. அதேபோல, 2005-இல் மங்களூா் தொகுதியில் திருமாவளவன் வெற்றி பெற்றதையும், டி.டி.வி. தினகரன் வெற்றியடைந்த ஆா்.கே. நகா் இடைத்தோ்தலையும் சோ்த்துக் கொள்ளலாம்.
  • இவை போன்ற விதிவிலக்குகள் அல்லாமல், பெரும்பாலான இடைத்தோ்தல்களில் ஆளும் கட்சி வெற்றி பெறுவதுதான் வழக்கம். சமீப காலமாக, வெற்றி நிச்சயம் என்று தெரிந்தாலும், வாக்கு வித்தியாசம் அதைவிட முக்கியம் என்று ஆளுங்கட்சிகள் செயல்படத் தொடங்கி இருப்பதால்தான், இந்த அளவுக்கு அமைச்சா்களே களமிறங்கி வேலை செய்யும் நிலையும், வாக்காளா்களைக் கவா்வதற்குப் பணமும், பொருள்களும் வழங்கும் விபரீதங்களும் ஏற்பட்டிருக்கின்றன.
  • இடைத்தோ்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற ஆளும் கட்சி, அடுத்து நடைபெற்ற சட்டப்பேரவை தோ்தலிலோ, மக்களவைத் தோ்தலிலோ படுதோல்வி அடைந்த நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன. இடைத்தோ்தல்கள் வாக்காளா்களின் மனநிலையை பிரதிபலிப்பவையாக இல்லை. அதேபோல, இடைத்தோ்தல் முடிவுகளால், ஆட்சி மாற்றம் ஏற்படப் போவதும் கிடையாது.
  • அதனால் முறைகேடுகளுக்குக் களம் ஏற்படுத்திக் கொடுக்கும் இடைத்தோ்தல்கள் தேவை தானா? இது குறித்த பொது விவாதம் தேவை.

நன்றி: தினமணி (04 – 03 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்