TNPSC Thervupettagam

உடனடி கவனம் கோரும் சுவாசக் கருவிகளின் தேவை

April 10 , 2020 1742 days 767 0
  • கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் ஆறு பேரில் ஒருவருக்கு சுவாசிப்பதில் சிரமங்கள் ஏற்படலாம். அவர்களைக் காப்பாற்றுவதற்கு வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாசக் கருவியும், எக்மோ (ECMO) கருவிகளும் அவசியம். எக்மோ கருவி இருந்தால் நுரையீரல் செயலிழப்புக்கு உள்ளானவர்களில் 60-70%-க்கும் மேற்பட்டோரைக் காப்பாற்ற முடியும். தமிழகத்தில் ஒருசில அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், சில தனியார் மருத்துவமனைகளிலும் மட்டுமே எக்மோ கருவிகள் உள்ளன.

சுவாசக் கருவிகளுக்குக் தட்டுப்பாடு

  • கரோனா வைரஸ் பரவலின் காரணமாகத் தற்போது உலகம் முழுவதுமே செயற்கை சுவாசக் கருவிகளுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மார்ச் 30 நிலவரப்படி, இந்தியா முழுவதும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காகப் பல்வேறு மருத்துவமனைகளில் 14,000 செயற்கை சுவாசக் கருவிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. மேலும், அக்வா ஹெல்த் கேர் நிறுவனத்திடம் 10,000; பிஎச்ஈஎல் நிறுவனத்திடம் 30,000 கருவிகளை உற்பத்திசெய்து வழங்கிட ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்திய வாகன உற்பத்தி நிறுவனங்களிடமும், வெளிநாட்டு நிறுவனங்களிடமும் ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சீனாவிலிருந்து 10,000 கருவிகள் வாங்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை, ‘ஏற்கெனவே அரசு மருத்துவமனைகளில் 1,100 செயற்கை சுவாசக் கருவிகள் இருக்கின்றன. இவற்றுடன் கூடுதலாக 560 கருவிகளை நிறுவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன’ என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மார்ச் 21-ல் கூறினார். ஏப்ரல் 7-ல் வெளிவந்த தமிழக சுகாதாரத் துறையின் அறிக்கையோ தமிழகத்தில் 3,371 செயற்கை சுவாசக் கருவிகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இது தனியார் மருத்துவமனைகளின் கரோனா சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள கருவிகளையும் சேர்த்துக் கணக்கிடப்பட்டதாக இருக்கலாம். கரோனா சமூகரீதியாக அதிகமாகப் பரவும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை போதுமா என்பது கேள்விக்குறிதான்.

உடனடி கவனம் தேவை

  • ஏற்கெனவே அரசு மருத்துவமனைகளில் உள்ள செயற்கை சுவாசக் கருவிகள், இதர நோயாளிகளின் பயன்பாட்டுக்கும் உள்ளதுதான். அவை அனைத்தும் நன்றாகச் செயல்படும் நிலையில் உள்ளனவா என்பதும் தெரியவில்லை. மேலும், சிகிச்சையில் வெறும் சுவாசக் கருவிகள் மட்டுமே போதுமானதல்ல. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆக்ஸிஜன் சிலிண்டர்களும், அதிக அளவில் ஆக்ஸிஜனும், அத்தியாவசிய மருந்துகளும், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான அனைத்து அடிப்படைக் கட்டமைப்புகளும் அவசியம். நன்கு பயிற்சி பெற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத் துறைப் பணியாளர்கள் ஆகியோர் மூன்று பணிநேரங்களில் வேலைசெய்ய அதிக எண்ணிக்கையில் தேவைப்படுகின்றனர். இந்தக் கட்டமைப்புகள் நம்மிடம் உள்ளனவா என்பது குறித்த கவலையும் எழுகிறது. செயற்கை சுவாசக் கருவிகள் தொடர்பில் மத்திய, மாநில அரசுகள் உடனடி கவனம் செலுத்த வேண்டும்.

நன்றி: தி இந்து (10-04-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்