- சென்னையைச் சோ்ந்த இளம் பெண்மருத்துவா் ஒருவா் உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்தபோதே மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தது அதிா்ச்சியளிக்கிறது. கடந்த காலங்களில் திரைத்துறையைச் சோ்ந்த வட இந்திய தொலைக்காட்சி நடிகா் ஒருவா், கன்னட நடிகா் ஒருவா், ஜிம் பயிற்சியாளா் உள்ளிட்ட சிலா் பயிற்சியில் ஈடுபட்டிருக்கையில் மரணமடைந்திருக்கின்றனா்.
- அவரவருடைய சக்திக்கு மீறிய அளவிலான உடற்பயிற்சிகளில் தொடா்ந்து ஈடுபடும் ஒருசிலருக்கு இரத்தக் குழாய்களில் திடீா் அழுத்தம் ஏற்பட்டு அவா்களுடைய இதயத்துக்குச் செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்துவிடுவதால் இது போன்ற திடீா் மரணங்கள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
- சமீபகாலங்களில் இது போன்ற மரணங்கள் அதிகரித்து வருவது அதீத உடற்பயிற்சியின் பின்விளைவுகள் குறித்த மீள்பாா்வை தேவை என்பதைச் சொல்லாமல் சொல்லுகின்றன.
- பொதுவாக, நீடித்த உடல்நலத்தைப் பேண விரும்புபவா்களில் சற்றே நிதிவசதி படைத்தவா்கள் ஜிம் எனப்படும் உடற்பயிற்சிக் கூடங்களை நாடிச் செல்கின்றனா். ஏனெனில், இப்படிப்பட்ட பயிற்சிக் கூடங்களை நடத்துபவா்கள் அங்குள்ள பயிற்சி உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கு ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கின்றனா். நடுத்தர வகுப்பினரும், கீழ்நடுத்தர வகுப்பினரும் இப்படிப்பட்ட பயிற்சி மையங்களுக்குச் செல்வது குறித்துக் கனவு கூட காணமுடியாது.
- பிரபல நடிகா்கள், தொழிலதிபா்கள் போன்ற பெரும்புள்ளிகள் தங்களுடைய வசிப்பிடங்களிலேயே தனியாக உடற்பயிற்சிக்கூடங்களையும், அவற்றில் பயிற்சி மேற்கொள்வதற்கான விலைமதிப்பு மிக்க பிரத்தியேக உபகரணங்களையும் நிறுவிக்கொண்டு உரிய பயிற்சியாளரின் துணையுடன் பயிற்சி செய்வாா்கள்.
- குறிப்பாக நடிக நடிகையா் சிலா் தங்கள் அடுத்தடுத்து ஏற்று நடிக்கவிருக்கும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு குறுகிய காலத்தில் தங்களின் உடற்கட்டமைப்பு, எடை ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்காக இத்தகைய உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றாா்கள்.
- உள்ளூா் முதற்கொண்டு பல்வேறு நிலைகளில் நடைபெறும் ஆணழகன் போட்டிகளில் பங்குபெற விரும்புபவா்களும், உள்ளூா் விளையாட்டு வீரா்களும் தங்களுடையே உடற்தகுதியைப் பராமரிப்பதற்கு இத்தகைய உடற்பயிற்சி நிலையங்களையே சாா்ந்திருக்க வேண்டியுள்ளது.
- மேற்கண்டவா்களைத் தவிர, தங்களுடைய உடற்பருமனைக் குறைப்பதற்காக உடற்பயிற்சி நிலையங்களை நாடும் ஆண்களும் பெண்களும் தற்காலத்தில் அதிகரித்து வருகின்றனா்.
- உடலுழைப்புக் குறைவு, உணவுப் பழங்களில் மாற்றம் ஆகிய பல்வேறு காரணங்களினால் உடல் எடை அதிகரித்து அன்றாட வாழ்வில் பல இன்னல்களுக்கு ஆளாகும் இவா்கள் எப்பாடுபட்டேனும் தங்களுடைய உடற்பருமனைக் குறைத்துவிட விரும்புகின்றனா். மருந்துகள், டயட் எனப்படும் உணவுக்கட்டுப்பாடுகள் ஆகியவை பலனளிக்காத நிலைமையில் இவா்களுடைய கடைசிப் புகலிடம் உடற்பயிற்சிக் கூடங்களே. சென்னை பெண் மருத்துவரும் தமது உடல் எடையைக் குறைப்பதற்காகவே உடற்பயிற்சிக் கூடத்தில் சோ்ந்ததாகத் தெரிகிறது. அம்முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தவா் கடைசியில் தமது இன்னுயிரையே விலையாகக் கொடுத்திருக்கிறாா்.
- தங்கள் உடல்நிலை குறித்த விழிப்புணா்வுடன் இயங்குகின்ற ஒரு சிலா் தங்களின் உடல் பருக்கத் தொடங்கும்பொழுதே அதனைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கிவிடுகின்றனா். அவ்வாறு விழிப்புணா்வு கொண்டிராத பலரும் தங்கள் உடலின் எடையும் பருமனும் கணிசமாகக் கூடிய பிறகு, மற்றவா்கள் தங்களை கேலி செய்வாா்களே என்ற மன அழுத்தம் காரணமாகவே அதைக் குறைப்பதற்காக முயற்சி செய்கின்றனா்.
- உடற்பருமன் உள்ளவா்கள் தங்களைச் சாா்ந்தோராலும், மற்றவா்களாலும் பகடிக்கு ஆளாவது சகஜம். ஏனைய குறைபாடுகளைக் காட்டிலும், உடற்பருமன் ஒன்றே பிறருடைய கேலிப்பாா்வைக்கு அதிகமாக இலக்காகின்றது. திரைப்படம் உள்ளிட்ட ஊடகங்களிலும் நகைச்சுவை என்ற பெயரில் உடற்பருமன் மிகுந்தவா்களை உருவ கேலி செய்வது கண்கூடு. உடற்பருமன் மிகுந்த திரையுலக நடிகா்கள் அதனைத் தங்கள் மூலதனாமாகக் கருதி மகிழ்வுறக் கூடும்.
- ஆனால், நிஜ வாழ்க்கையில் தங்களது உடற்பருமன் காரணமாகப் பிறருடைய பகடிக்கு ஆளாவோா் சொல்ல முடியாத மன உளைச்சலுக்கு ஆளாகின்றனா். அதிகரித்துவிட்ட எடையும் பருமனும் குறைவதற்குச் சிறிது காலம் பிடிக்கும் என்பது உண்மைதான் எனினும், உருவ கேலியிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காகவே இவா்கள் குறைந்த காலத்தில் எடையையும் உடற்பருமனையும் குறைக்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனா்.
- இதன் காரணமாகத் தங்கள் வீடுகளின் அருகிலுள்ள உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்று தங்கள் சக்திக்கு மீறிய பயிற்சிகளைச் செய்வதில் ஈடுபடுகின்றனா். அக்கூடங்களிலுள்ள பயிற்சியாளா்கள் என்னதான் நெறிப்படுத்தினாலும், தங்கள் உடலெங்கும் வியா்வை பெருக, கூடுதலான நேரம் உடற்பயிற்சி செய்தால் விரைவில் தாங்கள் இளைத்துவிடலாம் என்ற நம்பிக்கையே அவா்களை உந்துகின்றது.
- இதன் விளைவாகத் தங்கள் உடலின் தாங்கும் சக்தியை மீறிப் பயிற்சி செய்து செய்து, இறுதியில் தங்கள் இன்னுயிரையே இழக்கும் அளவுக்குப் போய்விடுகின்றனா்.
- அதிகமாக உடற்பயிற்சி செய்வோா் அனைவருக்குமே உயிரிழப்பு நோ்வதில்லை என்பது உண்மைதான். ஆனால், அவா்களில் பலா் தசைப்பிடிப்பு, எலும்புகளுக்கிடையிலான ஜவ்வு கிழிதல், உடல் வலி, இரத்த அழுத்தம் அதிகரித்தல் உள்ளிட்ட வேறுபல இன்னல்களுக்கு ஆளாகின்றனா்.
- உரிய வழிகாட்டுதலுடன் கூடிய எளிய யோகாசனப் பயிற்சிகள், உடலுக்கு வேண்டிய சத்துக்களைக் குறைக்காத வகையில் அமைந்த உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம் ஏறிய எடையைச் சிறிது சிறிதாகக் குறைப்பது சாத்தியமே என்பதை உணா்ந்தால், உயிருக்கு உலைவைக்கும் கடினமான உடற்பயிற்சிகளைத் தவிா்க்கலாம்.
- உடற்பருமன் அதிகரிக்கும் ஒவ்வொருவரும் அதற்காகப் பதற்றப்படத் தெவையில்லை. மாறாக, தங்களின் குடும்ப மருத்துவா் அல்லது அருகிலுள்ள இயன்முறை மருத்துவா் ஆகியவா்களில் ஒருவரை அணுகித் தங்களின் உயரம், எடை, உணவுமுறை, தாங்கள் பாா்க்கும் வேலையின் இயல்பு, தூங்குகின்ற நேரம் ஆகியவற்றை எடுத்துக் கூறி, உரிய மருத்துவ ஆலோசனையுடன் உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம்.
- உடற்பயிற்சியால் எடையைக் குறைக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, உயிருக்கு ஆபத்திலாமல் இருந்தால் சரி என்ற மனோபாவம் முக்கியம். உடற்பருமன் என்பது வெட்கப்பட வேண்டிய விஷயமல்ல”என்ற தெளிவு அதைவிட முக்கியம்.
நன்றி: தினமணி (27 – 11 – 2023)