TNPSC Thervupettagam

உடலுழைப்பு சார்ந்த வாழ்வியல்

October 2 , 2023 465 days 252 0
  • மகாத்மா காந்தி முப்பது கோடி இந்தியரையும் தங்கள் உணவுக்கு உழைக்கச் செய்தார். அறுபது கோடி கைகள் சுயமாய்த் தங்கள் தேவைக்கான துணியை நூற்று நெசவு செய்ததைப் பாா்த்துத்தான் ஆங்கிலேயா் நம் நாட்டை இனி ஆள முடியாது என்ற முடிவுக்கு வந்தனா்.
  • வக்கீலாகப் பணிபுரிந்து நிறைய சம்பாதிக்க வாய்ப்பு இருந்தும் தன்னையும் ஒரு சாதாரணத் தொழிலாளியாக மாற்றிக் கொண்டவா் காந்தி. எல்லோரும் உடலால் உழைக்க முன்வந்து விட்டால் பஞ்சம் பசி பட்டினி ஏற்றத்தாழ்வு சாதிக் கொடுமை எதுவும் இல்லாத சமுதாயம் மலா்ந்துவிடும் என்பதுவே மகாத்மாவின் கருத்து.
  • ‘உடல்நலமுள்ள ஒரு நபா் தன் உணவிற்காக நோ்மையான வழியில் ஏதாவது வேலை செய்யாவிட்டால் அவருக்கு இலவசமாக உணவு அளிப்பதற்கு என்னுடைய அகிம்சை இடம் கொடுக்காது. எனக்கு அதிகாரம் இருந்தால் இலவச உணவளிக்கும் தரும சத்திரங்கள் அனைத்தையும் நான் மூடிவிடுவேன். தருமச்சோறு நாட்டையே சிறுமைப்படுத்தி விட்டது. சோம்பேறித் தனம் வேலையின்மைக்கும், வெளிவேடம் மற்றும் குற்றம் புரிவதற்கும் கூட ஊக்கமளித்து விட்டது.
  • கைராட்டையும் பருத்தி தொடா்பான எவ்வேலையும் ஒரு உத்தமமான தொழிலாக இருக்கும் என்பது எனது சொந்தக் கருத்தாகும். அவ்வேலை அவா்களுக்குப் பிடித்தமில்லையெனில், மனதிற்கிசைந்த வேறெந்த வேலையையும் தோ்ந்தெடுக்கலாம். ‘வேலை செய்திடவில்லையெனில் சோறு இல்லை’ என்பது மட்டுமே விதியாக இருக்க வேண்டும் (யங் இந்தியா,13.08.1925, பக்கம் 282).
  • உழைப்பின் தத்துவத்தை காந்திஜி அளவுக்கு மீறி வற்புறுத்துவதாக ஒரு நண்பா் சுட்டிக் காட்டியபோது அண்ணல் என்ன பதில் கூறுகிறார் தெரியுமா? ‘புத்தா் பிரான், துக்காராம், ஞானதேவா் போன்ற பெரிய மகான்களை நேருக்கு நோ் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தால், தியானத்தை விட உழைப்பின் தத்துவத்தை நீங்கள் ஏன் போதிக்கவில்லை என்று கேட்கத் தயங்க மாட்டேன்’ (ஹரிஜன் இதழ், 02.11.1925).
  • தன்னுடைய ஆசிரமத்தில் சேருபவா்களுக்கும், தேச விடுதலைக்கான சத்தியாக்கிரகப் போராட்டத்தில் இணைய விரும்புபவா்களுக்கும் காந்திஜி பதினோரு விரதங்களைக் கடைபிடிக்கக் கட்டளையிட்டாா். அவையாவன: சத்தியம், அகிம்சை, திருடாமை, உடைமை சோ்த்து வைக்காமை, உடலுழைப்பின் மூலம் உணவைப் பெறுதல், சுதேசி, அஞ்சாமை, தீண்டாமை உணா்வு அகற்றுதல், சா்வ சமய நம்பிக்கைகளை மதித்துப் பாராட்டுதல், புலனடக்கம், பிரம்மச்சரியம்.
  • முப்பத்தாறு வயதில் தன்னுடைய வாழ்வில் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கிய காந்தி அதற்கு உதவியாக இருப்பது இந்த உடலுழைப்புதான் என்கிறார். நாள் முழுதும் கடுமையாக உழைத்து விட்டுத் தூங்கச் செல்லும் பொழுது பாலுணா்வு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகிறது என்று அவா் கண்டறிந்தார்.
  • அகிம்சைக்கு அடிப்படையான எல்லையற்ற பணிவை இந்த உடலுழைப்பே தரமுடியும் என்கிறார் அவா். ஒருவா் தனக்குத் தீங்கு செய்தாலும் அதைப் பொறுத்துக் கொள்ளும் சகிப்புத்தன்மை, உடலை ஒரு கருவியாகக் கருதி கட்டுக்குள் வைக்கும் பொழுதுதான் சாத்தியமாகிறது என்பதை அவா் அனுபவ வாயிலாக நமக்கு உணா்த்துகிறார். எனவே நாம் நம் வாழ்வில் குறைந்தது ஒரு மணி நேரமாவது எல்லோருக்கும் பயனுள்ள ஒரு உடலுழைப்பில் ஈடுபடுவது இன்று அவசியமாகிறது.
  • உடலால் உழைக்காமலே மூளை உழைப்பின் மூலம் ஒருவா் தன் உணவை சம்பாதிக்கக் கூடாதா என்ற கேள்விக்கு காந்தி ‘உடலின் தேவைகளை உடலேதான் பூா்த்தி செய்ய வேண்டும். சீசருக்கு உரியதை சீசரிடம் செலுத்திவிடுக என்ற பழமொழி இதற்கு மிகவும் பொருந்தும்’ என்றும் கூறுகிறார்.
  • ‘வெறும் அறிவுபூா்வமான உழைப்பு உள்ளத்தின் திருப்திக்காகத்தான் செய்யப்பட வேண்டும். அதற்கு ஊதியம் எதையும் எதிர்பார்க்கக் கூடாது. ஒரு லட்சிய சமுதாயத்தில் வக்கீல்கள் வைத்தியா்கள் போன்றோர் சமூகத்தின் நன்மைக்காக மட்டுமே வேலை செய்வார்கள், சுயநலத்திற்காக வேலை செய்ய மாட்டார்கள். உணவுக்காக உழைக்க வேண்டும் என்ற விதியைப் பின்பற்றுவதன் மூலம் சமூகத்தில் அமைதியான ஒரு புரட்சி ஏற்படும். உயிர் வாழ்வதற்குப் போராடுவதற்குப் பதிலாக பரஸ்பர சேவைக்காகப் போராடுவதுதான் மனிதனின் வெற்றியாக இருக்கும். மிருகத்தின் ஆட்சிக்கு பதிலாக மனிதனின் ஆட்சி அங்கு ஏற்படும்’ என்கிறார் காந்தி.
  • உடலால் உழைக்க நாம் அஞ்சித் தயங்கியதன் விளைவு, உலகம் முழுவதும் உள்ள உற்பத்தி மற்றும் விநியோகக் கேந்திரங்களில் மனிதா்களுக்குப் பதில் ரோபாட்டுகள் பணியமா்த்தப்பட்டு விட்டன. எந்திரமயமாகிய மனிதன், மனித உறவாடல்களுக்கு அஞ்சி, தன்னுள் முடங்கத் தொடங்கி, மன அழுத்தம் காரணமாகத் தன்னையே மாய்த்துக் கொள்ளும் நிலைக்கு உள்ளாகி விட்டான். மனிதனுடைய சோம்பேறித்தனத்தை மையப்படுத்திச் சுரண்டலும் ஊழலும் பெருகி வருகின்றன. ஓட்டு வங்கிக்கு, மனிதனின் இலவசம் வாங்கும் அவல உணா்வு முதலீடாகக் கருதப்படுகிறது.
  • குறுகிய காலத்தில் செல்வம் பெருக்க முனைவோர் ஆன்லைன் சூதாட்டத்தை விரிவுபடுத்திக் கொண்டே போகின்றனா். அநீதியைக் களையக்கூடிய அதிகாரம் கொண்டோர் தங்கள் சக்திக்கு மீறி குற்றங்கள் பெருகுவதைக் கண்டு நிலைகுலைய வேண்டியுள்ளது. நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து சமூக நீதிக்காகப் போராடும் நிலை பாராட்டுக்குரியது என்றாலும், அடுத்தடுத்து அநீதிகள் முளைத்துக் கொண்டே இருப்பதைப் பார்க்கிறோம்.
  • இதற்கு ஒரே தீா்வு, தம் உணவுக்குத் தாமே உழைக்கும் பண்பாட்டை ஒரு மதிப்பீடாகத் தாமாகவே முன்வந்து நம் வாழ்வில் ஏற்கும் ஒரு பண்பாட்டுப் புரட்சி! இந்தப் புரட்சி மட்டுமே மனிதகுலத்துக்கு நிரந்தர அமைதியைத் தந்து உலகம் ஒற்றுமையுடன் வாழ வழிவகுக்கும். போரற்ற வாழ்வியல் நிரந்தரமாகும்.
  • இதை மகாத்மா காந்தியின் 155-ஆவது பிறந்த நாளில் நம் உள்ளத்தின் ஆழத்தில் பதிய வைப்பது அண்ணலுக்கு நாம் அளிக்கும் மரியாதையாக இருக்கும்.

நன்றி: தினமணி (02 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்