TNPSC Thervupettagam

உடலைத் துறந்த அம்மை

June 23 , 2024 8 days 50 0
  • காரைக்காலம்மையார் என்ற தொன்ம மதிப்புடைய பெண்ணைப் பற்றிய ‘என்புதோல் உயிர்’ என்கிற எழுத்தாளர் அ.வெண்ணிலாவின் சிறுகதை, அம்மையாரின் வாழ்க்கை குறித்த கதையாடலில் மீள் வாசிப்பைக் கோருகிறது. கணவனுக்காகத் தன் அழகைக் காத்துவந்த புனிதவதி, திடீரென இறைவனிடம் பேய் உருவம் கேட்டதற்குக் கணவனின் இரண்டாவது திருமணம் மட்டும்தான் காரணமா? என்ற கேள்வியை முன்வைத்து இப்புனைவு உரையாடலை நிகழ்த்துகிறது.
  • பரமதத்தன் புனிதவதியாரைப் பிரிந்து சென்றபிறகு புனிதவதி இந்த உலகத்தை எப்படி எதிர்கொண்டிருப்பார் என்ற கேள்வி முக்கியமானது. வணிகம் செய்வதற்காகச் சென்றவன் ஏழு வருடங்களாகத் திரும்பவில்லை. புனிதவதியின் மனம் எத்தகைய துயரத்தில் ஆழ்ந்திருக்கும்? சில நாள்கள் மட்டுமே கணவனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தவர்; வனப்பில் கொஞ்சமும் குறைந்தவரில்லை. பரமதத்தனின் பிரிவுக்குப் பிறகு அவரது அழகே அவருக்குப் பெரும் துயரத்தை உருவாக்குகிறது. அதனால்தான் இந்த உடலை இழக்கத் துணிகிறார். அழகு பெருகிய உடலை அனைவரும் வெறுக்கும் உடலாக மாற்றிக்கொள்கிறார். ‘காரைக்கால் பேய்’ என்று தன்னை அழைத்துக் கொள்கிறார். திருத்தொண்டர் புராணம் ஒரு பக்திப் பனுவல். அதனால் புனிதவதியாரின் சிவபக்திக்கு மட்டுமே சேக்கிழார் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். நவீன இலக்கியங்கள் மட்டுமே மறைக்கப்பட்ட பக்கங்கள்மீது ஒளிபாய்ச்சி வருகின்றன. அ.வெண்ணிலா அதனைத்தான் இக்கதையில் செய்திருக்கிறார்.
  • கணவர்மீது அளவு கடந்த அன்பு கொண்டவர் புனிதவதியார். சிவத்தொண்டு எந்த வகையிலும் இல்லற வாழ்க்கையில் எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தவர். அப்படி இருந்தும் பிரிவு நிகழ்ந்து விடுகிறது. பரமதத்தன் பற்றிய தகவல் கிடைத்தவுடன் அவர் நம்பிக்கையுடன் பல்லக்கேறி மதுரைக்கு வருகிறார். புனிதவதியாரைத் தெய்வமாக நினைத்துப் பரமதத்தன் காலில் விழுகிறார். அவர் தனக்குள்ளே குமைந்து கொள்கிறார். கணவருடன் வாழ்ந்த நினைவுகள் அவரை அழுத்துகின்றன. கணவன் தொட்ட உடல் உறுப்புகள் ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்த்துப் பெருமூச்சு விடுகிறார். புனிதவதி யாரால் அவ்வளவுதான் செய்ய முடிகிறது. பெண்களுக்கான எல்லை அவ்வளவுதான். புனிதவதியாரின் பெருமூச்சுக்குப் பின்புள்ள துயரத்தைத்தான் வெண்ணிலா பேச நினைக்கிறார். திரும்பும் வழியில் குறுக்கிடும் ஆலமரக் காடு அவருக்கு வேறொரு துலங்கலைத் தோற்றுவிக்கிறது. பிரதி மீண்டும் மரபுக்குத் திரும்பி விடுகிறது.
  • பெண் உடல் குறித்த மீள் வாசிப்பையும் வெண்ணிலா இக்கதையினூடாக நிகழ்த்தியிருக்கிறார். காலந்தோறும் திருமணமான பெண்களின் உடல் கணவர்களுக்காகவே பராமரிக்கப்படுகிறது; அழகூட்டப்படுகிறது. கணவன் இல்லை என்றானபின் பெண் உடலும் இயல்பாகவே பொலிவை இழந்து விடுகிறது. அதற்குப் பிறகு உடல்மீது அவர்களே அக்கறை கொள்ள முடியாது. காரைக்காலம்மையாரின் புராணம், பக்தி சார்ந்த கதையாடலைக் கடந்து பார்த்தால் அதனைத்தான் தெளிவுபடுத்துகிறது. அம்மையாரின் உடல் துறப்பை ஓர் எதிர்ப்புக்கான குறியீடாகவும் அணுகலாம். எனக்கு உரிமையில்லாத என்னுடல் எனக்குத் தேவையில்லை என்ற கோபமும் இதிலிருப்பதாகக் கருதலாம். சேக்கிழார், இதற்கு பக்தி சார்ந்த அர்த்தத்தைக் கற்பித்தார். நவீன இலக்கியப் பிரதியான ‘என்புதோல் உயிர்’, லௌகீக வாழ்க்கையில் பெண்களுக்குள்ள போதாமைகளைக் குறிப்பிடுகிறது. பக்தி என்பதைக் கடந்து, இதிலொரு மீறலுணர்வு இருப்பதாகவும் புரிந்துகொள்ளலாம்.
  • பெண், பெண்ணுடல் சார்ந்த உரையாடலுக்குக் காரைக்காலம்மையார் வரலாறு மிகச்சிறந்த தொன்மம். இன்றும் காரைக்காலில் நடைபெறும் மாங்கனித் திருவிழாவின் மூலமாக அம்மையார் நினைவுகூரப்படுகிறார். கணவனின் பிரிவுக்குப் பிறகு, ஒரு பெண்ணாகப் புனிதவதியாரின் துயரம் என்னவாக இருந்திருக்கும் என்ற சிந்தனையே நவீனத்துவத்தின் கொடைதான். கண்ணகி, மணிமேகலை போன்று வரலாற்றில் ஒரு துயரமான கதாபாத்திரம் காரைக்காலம்மை. அதற்கு அப்பாத்திரம்மீது போர்த்தப்பட்டிருக்கும் சிவபக்தி என்ற போர்வையை விலக்கிப் பார்க்க வேண்டும். அதற்குள் வேறொரு காரைக்காலம்மை தெரிவார்.

நன்றி: இந்து தமிழ் திசை (23 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்