TNPSC Thervupettagam

உடல் என்​கிற நிலை​யாமை

March 9 , 2025 3 days 12 0

உடல் என்​கிற நிலை​யாமை

  • கிருஷ்ணருக்​கும் ஜாம்​பவ​திக்​கும் பிறந்​தவன் சாம்​பன். இவன் சிறந்த உடல் நலமும் அழகும் அமையப் பெற்றவன். துரியோதனனுடைய மகளாகிய இலக்​கணையை இவன் மணம் புரிந்​திருந்​தான். ஒரு​நாள் மாலை​யில் சாம்​பன் நண்​பர்​களு​டன் விளை​யாடிக் கொண்​டிருந்​தான். நண்​பர்​கள் இவனுக்​குக் கர்ப்​பவதி வேடம் புனைந்தனர். அங்கு விஷ்​வாமித்​திரர், கன்​வர், நாரதர் ஆகிய மூன்று முனிவர்​களும் தவம் செய்​து​கொண்​டிருந்​தனர். அவர்​களிடம் சாம்​பனைக் கொண்​டு​சென்று நிறுத்​தினர். ‘இந்​தப் பெண்​ணுக்கு ஆண்​குழந்தை பிறக்​கு​மா? பெண்​குழந்தை பிறக்​கு​மா?’ என்று நண்​பர்​கள் கேட்​டனர். உண்​மையை உணர்ந்த முனிவர்​கள், ‘உங்​கள் குலத்தை அழிப்​ப​தற்கு ஓர் இரும்பு உலக்கை பிறக்​கும்’ என்று கூறினர். அவ்​வாறே சாம்​பனுக்கு இரும்பு உலக்கை பிறந்​தது. சாபத்​தின் தீவிரத்தை உணர்ந்​து​கொண்ட யாதவர்​கள், அந்த உலக்​கை​யைத் தூள் தூளாக்​கிக் கடலில் கரைத்​தனர். ஆனாலும் அதிலிருந்து தோன்​றிய கோரைப் புற்​கள் அவர்​கள் குல அழி​வுக்​குக் காரண​மானது. இது​தான் வியாச பாரதத்​தின் மௌசல பரு​வம் கூறும் சாம்​பனின் கதை.
  • சாம்​பனின் பிற்​பகு​திக் கதையை வடமொழிப் புராணங்​கள் வேறு​மா​திரி​யாகச் சொல்​லி​யுள்​ளன. அதிவீர​ராம பாண்​டியர் வடமொழி நூலான சங்​கரசங்​கிதையைத் தழு​வி, ‘காசி காண்​டம்’ என்​றொரு நூல் எழு​தி​யுள்​ளார். எழுத்​தாளர் இமை​யம் ‘சாம்​பன் கதை’ என்​றொரு சிறுகதை எழு​தி​யுள்​ளார். ஒடுக்​கப்​பட்ட மனிதர்​களின் யதார்த்த வாழ்க்​கை​யின்​மீது நடத்​தப்​படும் இடை​யீடு​கள்​தாம் இமை​யத்​தின் புனை​வு​கள். எளிய மக்​களின் மொழியையே தன் புனைவு மொழி​யாக​வும் கொண்​டிருக்​கிறார். தற்​போது தொன்​மம் சார்ந்த கூறுகளை​யும் தம் புனை​வு​களில் பயன்​படுத்​தி, மறு​வாசிப்​புச் செய்​து​வரு​கிறார். இதனை இமை​யத்​தின் அடுத்​தகட்ட நகர்​வாக​வும் கருதலாம். சாம்​பன், யாதவர் குலத்தை அழிக்​கப் பிறந்​தவன் என்ற அடை​யாளத்தை இவரது சிறுகதை உடைக்கிறது; அவனது வரலாற்றை விரிக்​கிறது.
  • சாம்​பனின் வரலாற்​றைக்​கொண்டு இமை​யம் தன் அரசி​யல் பார்​வையை​யும் இக்​கதை​யில் ஆங்​காங்கே ஊடாட விட்​டிருக்​கிறார். சாம்​பன் தன் சாபத்​தின் காரண​மாகத் துவாரகையை விட்​டுப் பிரி​கிறான். அவன் மனைவி இலக்​கணை​யும் உடன்வர விரும்​பு​கிறாள். சாம்​பன் அவளுக்கு அறி​வுரை கூறுகிறான். “நீ​யும் நானும் கணவன் மனைவி என்​றாலும் இரு​வரும் ஒன்​றல்ல. சந்​தர்ப்​பத்​தால் இணைந்​திருக்​கிறோம். எனக்​கான சாபம் உன்​னைச் சேராது. இரண்டு உடல்​கள்; இரண்டு உயிர்​கள்; இரண்டு மனங்​கள்; இரண்டு உலகங்​கள். கணவன் மனைவி என்ற பந்​தத்​தால் மட்​டுமே நாம் இணைந்​திருக்​கிறோம்” என்​கிறான். இந்த இடம் சிறுகதை​யில் அழகாகத் தொழிற்​பட்​டுள்​ளது. ரா​மாயணப் பிர​தி​மீது நிகழ்த்​தப்​பட்ட இடை​யீ​டாக​வும் இதனைக் கருதலாம்.
  • காந்​தா​ரி​யின் சாபம், கிருஷ்ணன் மூல​மாகச் சாம்​பனை அரண்​மனையை விட்டு வெளி​யேற்​றுகிறது. அங்கே தசரதன் கைகே​யிக்​குக் கொடுத்த வரம் ராமனைக் காட்​டுக்கு அனுப்​பு​கிறது. தண்​டனை ராமனுக்​கானது. ஆனால், சீதை​யும் ராமனுடன் காட்​டுக்​குச் சென்று பெருந்​துன்​பத்தை அனுபவிக்​கிறாள். ராமன் எவ்​வளவோ மறுத்​தும், ‘நின் பிரி​வினும் சுடுமோ பெருங்​காடு?’ என்று உடன் செல்​கிறாள். இந்த இடத்​தில் ராமனை​விட சாம்​பன் தெளி​வாக முடி​வெடுத்​திருப்​ப​தாகப் பிரதி கூறுகிறது. இந்த ஒப்​பீடு என்​பது வாசிப்​பில் அடைவது​தான்.
  • சாம்​பன் அழகன். பெண்​களை எளி​தில் வசீகரிக்​கக் கூடிய​வன். இது​தான் அவனுக்​குள் ஆணவத்தை உரு​வாக்​கு​வ​தாக நாரதர் கருதுகிறார். அதனைச் சாம்​பனுக்கு உணர்த்​தவே அப்​படியொரு சாபத்தை அளிக்​கிறார். இந்​தப் பார்​வை​யில் பிர​தியை வாசிக்​கும்​போது, ‘யாக்கை நிலை​யாமை’ என்ற தத்​து​வத்​தைச் சாம்​பன் வரலாற்​றின் மூலம் இமை​யம் நிறுவ முயன்​றிருக்​கிறார் என்​றும் கருதலாம். சாம்​பன், விஷ்வகர்ம இனத்​தவர்​களைக் கொண்டு சூரியனுக்கு மூன்று கோயில்​களைக் கட்​டு​கிறான். அவன் பெய​ரால் ‘சம்பா பூர்’ என்ற நகரமே உரு​வாகிறது. மகர் இனத்​தவர்​களைக்​கொண்டு தம்​மைப்​போன்ற குஷ்ட நோயால் பாதித்​தவர்​களைக் குணப்​படுத்​துகிறான். யாக்​கை, செல்​வம், காமம் எல்​லா​வற்​றை​யும் கடந்த சாம்​பனை நாரதர் இறு​தி​யில் ஆசீர்​வ​திக்​கிறார். சாபம் தீர்ந்​த​தாகக் கூறி, துவாரகைக்​குப் புறப்​படச் சொல்​கிறார். “நான் இப்​போது விரும்​பும் வாழ்க்கை துவாரகை​யில் இல்​லை. இந்த மித்​திர​வனத்​தில்​தான் இருக்​கிறது. மலை​யளவுக்​குக் குவியல் குவிய​லாக ஒன்​பது வகை ரத்​தினங்​களைக் கொட்​டிக் கொடுத்​தா​லும் போக மாட்​டேன்” என்​கிறான் சாம்​பன். ஆண் பெண் என்​பது சதைப் பிண்​டம்; மாமிசம் என்​பதை அறிந்​து​கொண்​டேன் என்ற இடத்​திற்​குச் சாம்​பன் நகர்ந்து விடு​கிறான். இந்தப் பகு​தி​யில் பிர​திக்​குக் கொஞ்​சம் நீதி இலக்​கி​யத்​தின் சாயை வந்​து​விடு​கிறது. பிர​தி​யில் இது​வொரு பகு​தி; அவ்​வளவு​தான்.
  • சாம்​பனின் வழி​யாக இந்த உரை​யாடலை நிகழ்த்​தி​யிருக்​கிறார் இமை​யம். மகா​பாரதக் கதை​யில் சாம்​பனுக்குப் பெரிய இடமில்​லை. ஆனால், சாம்​பன் குறித்து எழுதப்​பட்ட வடமொழிப் புராணங்​களில் அவனது இடம் முக்​கிய​மான​தாக இருந்​திருக்​கிறது. சாபத்தை வரமாக மாற்​றும் விந்​தையைச் சாம்​பன் நிகழ்த்​துகிறான். பிரிக்​கப்​ப​டாத பாரத தேசத்​தில் சூரியனுக்கு மூன்று கோயில்​களைக் கட்​டி​யிருக்​கிறான் சாம்​பன் என்று சொல்​லப்​படு​கிறது. குலோத்​துங்​கச்​சோழனின் ஆட்​சிக்​காலத்​தில் கட்​டப்​பட்​ட​தாகக் கல்​வெட்​டுத் தகவல் கூறும் தஞ்​சைக்கு அரு​கில் உள்ள ஒரு கோயிலும் இவ்​வாறு கட்​டப்​பட்​ட​தாகச் சொல்​லப்​படு​கிறது. இக்​கதை​யின்​மொழி இது​வரை இமை​யத்​தின் புனை​வு​களில் காண​விய​லாதது. பொருண்மை சார்ந்து மொழி​யிலும் வேறு​பாட்​டைக் காட்​டியிருக்​கிறார் இமை​யம்.
  • இக்​கதை விவா​திக்​கும் தளங்​கள் அதி​கம். மனிதன் தன்​னிலிருந்தே தன்னை முதலில் விடு​வித்​துக்​கொள்ள வேண்​டும்; அப்​பொழுது​தான் இந்த உலகத்​தை​யும் சக உயிர்​களை​யும் நேசிக்க முடி​யும் என்ற இடத்​தை​யும் இக்​கதை அடைகிறது. இமை​யம் இக்​கதைக்கு முன்​புவரை இப்​படி எழு​தி​ய​தில்லை என்றே கருதுகிறேன். ‘சாம்​பன் கதை’​யில் தத்​து​வத்​தை​யும் புராணத்​தை​யும் மோத​விட்​டிருக்​கிறார். அதனால் வாசிப்​பவர்​களுக்​குப் பல்​வேறு திறப்​பு​களை உரு​வாக்​கு​கிறது. சூரியனுக்​கே கோயில்​ கட்​டிய சாம்​பனின்​மீது புதி​ய வெளிச்​சம்​ விழுந்​திருக்​கிறது. அதற்​குத்​ துணை நின்​றிருக்​கிறார்​ இமையம்.

நன்றி: இந்து தமிழ் திசை (09 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்