- பள்ளிக்கூடத்தில் பட்டியல் சாதிப் பெண் சமைத்த உணவை, பெற்றோர்களின் அழுத்தத்தால் மாணவர்கள் புறக்கணிக்கும் அவலம் அதிகரித்திருக்கிறது. கடந்த காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தபிரச்சினை, காலை உணவுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவிவிட்டதைச் செய்திகள் மூலம் அறிகிறோம்.
- பட்டியல் சாதியினர் மீது பொருளாதாரரீதியில்பின்னடைவை ஏற்படுத்துதல், உயிர்ச்சேதம் விளைவித்தல் என்பதாகத்தான் வழக்கமாகத் தாக்குதல்நிகழ்த்தப்படும். அதைத் தாண்டி, இன்றைக்குப் பள்ளிஉணவில் சாதி பார்க்கும் போக்கு வேகமாகப் பரவிவருவது கவலை அளிக்கிறது. காரணம், இதுபட்டியல் சாதியினருக்கு எதிரான மற்ற பிரச்சினைகளைப் போன்றதல்ல. பண்பாட்டு உளவியலோடு தொடர்புடையது.
- இதைச் சரிசெய்யாமல் கடந்து செல்வோமேயானால், மாபெரும் பிழையைச் செய்தவர்கள் ஆவோம். உண்மையில், ‘சமூகநீதி மண்’ என்று சொல்லப்படும் தமிழ்நாட்டுக்கு இது சவாலான பிரச்சினை. ஒப்பீட்டளவில் பிற மாநிலங்களில் இருந்து முன்னேறியிருப்பதாகச் சொல்லப்படும் தமிழ்நாட்டில், இப்பிரச்சினையை எப்படிச் சரிசெய்யப் போகிறோம்?
உணவும் பண்பாடும்
- இந்தியப் பண்பாட்டில் ‘உணவு’ மனித உறவைப் பலப்படுத்துவதில் முக்கிய அங்கமாக இருந்து வந்திருக்கிறது. ‘உணவு கொடுத்தவர்கள் உயிர் கொடுத்தவர்களுக்குச் சமம்’, ‘பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புக’, ‘ஐயம் இட்டு உண்’ என்கின்றன இலக்கியங்கள். ஒருவருக்கு உணவு கொடுப்பதன் வழி அவருடனான உறவை நெருக்கமாக்கிக்கொள்ள முடியும் என்பது இதன் உள்ளர்த்தம்.
- உணவின் வழி மனிதனின் உறவை நெருக்கமாக்கி, அதை வாழ்தலோடு இணைக்கும்போது வாழும் தருணம் மகிழ்ச்சியாக மாறும். அதையே ‘நற்கதி’ என்பதாக அவைதிக இலக்கியங்கள் பேசும். ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’, ‘உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யலாமா?’ என்பன போன்ற முதுமொழிகளும்கூட அன்றாட வாழ்வில் உணவளிப்பவரின் மேன்மையை உணர்த்தும்.
- அதாவது, இந்திய இலக்கிய, வாய்மொழி மரபுகளில் ‘உணவு’ என்பது பாகுபாடுகளைத் தீர்மானிக்கும் இடைவெளிகளை அகற்றி, மனிதர்களை உணர்வுரீதியாகப் பிணைக்கச் செய்யும் ஒரு கருத்தியல் செயல்பாடாக இருக்கிறது. இது உலகம் முழுமைக்கும் பொருந்தும். அதனால்தான் அனைத்துச் சமயங்களும் உணவை மையமிட்டுத் தத்துவக் கருத்தியலை உருவாக்கி வைத்திருக்கின்றன. ‘உணவு’ குறித்த கருத்தியலை விட்டுவிட்டு சமயமோ சாதியோ உயிர்ப்போடு இருக்க முடியாது.
- இன்றைக்குப் பள்ளி உணவில் சாதி பார்க்கும் செயலால் உணவின் வழி உணர்வுரீதியாக மனிதர் களைப் பிணைக்கும் ‘சமூக நல்லிணக்கம்’ என்பது விரும்பத்தகாத, தேவையற்ற ஒன்றாக மாறிவிட்டதோ என்று கருத வேண்டியிருக்கிறது. பள்ளி உணவை ஏன் சாதியோடு இணைத்துப் பார்க்கிறார்கள்? திடீரென்று அதற்கு என்ன தேவை வந்துவிட்டது என்கிற கேள்விகளை மனசாட்சியுள்ள எவராலும் இயல்பாகக் கடந்துபோய்விட முடியாது.
உணவின் வழியான கதவடைப்பு
- ‘அகமணத் திருமணத்தில் ஒருவிதக் கதவடைப்பு இருக்கிறது. அதுதான் சாதியைப் பாதுகாக்கிறது’ என்பார் அம்பேத்கர். அதோடுகூட இப்போது பள்ளி உணவின் வழியிலான கதவடைப்பையும் சேர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை பட்டியல் சாதியினர் தம் குடியிருப்புகளைத் தாண்டி உணவகங்கள் வைப்பதில் இருந்த சாதிக் கட்டுப்பாடுகள் இன்று வெகுவாகக் குறைந்திருக்கின்றன.
- பெருநகரங்களில் பட்டியல் சாதியினர் உணவகம் நடத்தினால் விற்பனை இருக்காது என்கிற பிம்பம் உடையத் தொடங்கிவிட்டது. அமைப்புசாராத் தொழிலாளர்களும் வட இந்தியத் தொழிலாளர்களும் தமக்கேற்ற விலையில் விரும்பி உண்பதற்குப் பட்டியல் சாதியினர் நடத்தும் உணவகங்களும் சரியான இடமாக அமைந்திருக்கின்றன.
- இது கடந்த 10 ஆண்டுகளில் உணவை மையப்படுத்தி நடந்த மிக முக்கியமான சமூக மாற்றம்; பண்பாட்டு அரசியல் நகர்வு. ஒரு காலத்தில் வீட்டில் சமைக்கும் முறைமைகளில்கூடத் தனித்துவத்தைக் காட்டியும் உணவு முறையில் வேறுபாட்டை நிலைநிறுத்தியும் பாதுகாக்கப்பட்டுவந்த சாதி, இன்று சமையல் குறிப்புப் புத்தகங்கள், யூடியூப் காணொளிகளால் அசைக்கப்பட்டிருக்கிறது.
- சில 10 ஆண்டுகளுக்கு முன்புவரை நிலமும் வணிகமும் சாதியைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகித்தன. வேளாண்மை நசிவுக்குப் பிறகு, நிலத்தின் வழியிலான அதிகாரம் கேள்விக் குறியானது. குறிப்பிட்ட சாதிக்கு மட்டுமே உரியதாக இருந்த வணிகத்தில், பட்டியல் சாதியினர் நுழைவும் வெளிநாட்டுப் பெரு நிறுவனங்களின் வரவும் உடைப்பை ஏற்படுத்தின.
- உணவகம் நடத்துவது மட்டுமின்றி, அது சார்ந்த துணைத் தொழில்களான மசாலா தயாரிப்பு, பார்சல் விநியோகம், உணவக நிர்வாகம் உள்ளிட்டவற்றிலும் பட்டியல் சாதியினர் வந்துவிட்டனர். அவர்களுக்கான வணிகச் சந்தையும் வணிக உறவுகளும் விரியத் தொடங்கிவிட்டன. அதன்வழி கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி அவர்கள் கடல் கடந்தும் தம்மை நிறுவிக்கொள்கிறார்கள்.
- சாதியைக் காரணம் காட்டி, பட்டியல் சாதியினரின் முன்னேற்றத்துக்குத் தடை ஏற்படுத்துவதற்கான சூழல் இப்போது இல்லை. எஞ்சியிருக்கும் தடைகளையும் விரைவில் சரி செய்து விடலாம். இவ்வளவு காலம் உணவு வணிகத்தில் கதவடைப்பு செய்தவர்களால், இப்போது அது முடியாத சூழலில் பள்ளி உணவில் வந்து நிற்கிறார்கள்.
- பள்ளி உணவும் அவர்களுக்கான கதவடைப்புக்கு உகந்ததாக இல்லாமல் போனால், வேறொன்றைக் கண்டறிவார்கள். அவர்களுக்கு ‘அனைவரும் சமம்’ என்பது காதால்கூடக் கேட்கக் கூடாத அபத்தச் சொல்.
சமத்துவச் சமூக உளவியல் மீதான தாக்குதல்
- பள்ளி உணவுப் புறக்கணிப்புக்காக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க முடியும். என்றாலும், அது நிரந்தரத் தீர்வைத் தராது. சமூக உளவியல் பிரச்சினையான இதைச் சட்டத்தால் மட்டுமே சரிசெய்துவிட முடியாது.
- அதனால்தான் அரசு அவர்களுக்குப் புரிதலை ஏற்படுத்தப் பேச்சுவார்த்தை நடத்துகிறது. அரசின் இந்தச் ஜனநாயகத்தன்மை ஆதிக்கச் சக்திகள் தம்மை மேலும் வலுவாக்கிக் கொள்வதற்கான வாய்ப்பாகவும் பல நேரம் அமைந்துவிடும். அதைத் தவிர்க்கப் பேச்சு வார்த்தை என்பதோடு, தாமதமற்ற சட்ட நடவடிக்கையும் அவசியம்.
- ‘பட்டியல் சாதிக்காரர் சமைக்கும் உணவைச் சாப்பிட, எங்கள் பிள்ளைகளை அனுமதிக்க மாட்டோம்’ என்கிற குரலை அன்றாடம் நடக்கும் சமூக முரணாகப் பார்க்காமல், ஆதிக்கச் சக்திகள் சமத்துவச் சமூகத்தின் உளவியல் மீது தொடுக்கும் தாக்குதலாகப் பார்க்க வேண்டும்.
- அதற்குச் சரியான தீர்வுகளை வரையறுக்க வேண்டும். தவறும்பட்சத்தில், பட்டியல் சாதியினர் மீதான தாக்குதல் அதிகரிக்கும். அரச அதிகாரத்தின் வீரியமும் நீர்த்துப்போகும். சாதியைக் காரணம் காட்டி உணவைப் புறக்கணிப்பது, பட்டியல் சாதியினருக்கு எதிரானது மட்டுமல்ல, மனித உரிமைக்கும் அரசமைப்புக்கும் எதிரானது.
- இங்கு பண்பாட்டின் அடிப்படையே சாதியாக இருக்கும்போது, அதில் தெளிவை ஏற்படுத்துவது சாதாரணமல்ல. ஆனாலும் அதைச் செய்தே ஆக வேண்டும். பள்ளி உணவில் சாதி பார்க்கும் தம்மால் என்ன விதமான கல்வியைத் தம் பிள்ளைகளுக்குத் தந்துவிட முடியும் என்ற கேள்வியோடு பெற்றோர்கள் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
- காலத்துக்கு ஏற்ற புரிதலோடு தம்மைத் தகவமைத்து மேம்படுத்திக் கொள்கிற பக்குவம் தம் பிள்ளைகளுக்கு இயல்பாகவே உண்டு என்பதை அவர்கள் உணர வேண்டும். அதுவே அனைவரையும் சமமாக்கும். உணவை உணவாகப் பார்க்க வைக்கும்.
- இதுவும் ஒரு வழி: சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் திராவிடக் கட்சிகளின் சமூக நீதி முழக்கம் ஓங்கி ஒலிக்கும் நிலையிலும் அரசுக்குச் சொந்தமான ஒரு பள்ளியில், குறிப்பிட்ட ஒரு சாதியைச் சார்ந்தவர்கள் சமைத்து, அவர்கள் கையால் உணவிடப்படுவதை ஒப்புக்கொள்ள மாட்டோம் என்று எழுப்பப்படும் குரல்களை இந்த அரசுக்கு எதிரான நேரடியான சவாலாகவே கருத வேண்டும்.
- சட்டத்தின் துணைகொண்டு இதை அடக்குவதில் ஏதேனும் சிரமம் இருந்தாலும், ஆளும்கட்சி உறுப்பினர்கள் அத்தனை பேருமே இதற்கென களத்தில் இறங்க வேண்டும். நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அத்தனை பேருமே அவரவர் பகுதியில் உள்ள பள்ளிக்குத் தொடர்ந்து வருகைபுரிந்து, பட்டியல் சாதிப் பணியாளர்கள் பரிமாறும் உணவை அனைத்து சாதிக் குழந்தைகளுடன் இணைந்து உண்டு காட்ட வேண்டும்.
- இப்பிரச்சினை முழுமையாகச் சரிசெய்யப்படும்வரை அந்தந்தப் பகுதியிலுள்ள தனது கட்சியின் அனைத்துச் சாதிப் பிரதிநிதிகள் அனைவரையுமேகூட இந்த நிகழ்வில்தொடர்ந்து பங்கேற்கும்படி ஆளுங்கட்சி வலியுறுத்தலாம்.
- சொல்வது மட்டுமல்ல, சொன்னதைச் செய்துகாட்டுவதிலும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்து, சமூக நீதியை நிலைநிறுத்த ஆளும்கட்சிக்கு இதுவும் ஒரு வாய்ப்பு. செய்வார்களா, பார்ப்போம்!
- சாதியைக் காரணம் காட்டி உணவைப் புறக்கணிப்பது, பட்டியல் சாதியினருக்கு எதிரானது மட்டுமல்ல, மனித உரிமைக்கும் அரசமைப்புக்கும் எதிரானது!
நன்றி: இந்து தமிழ் திசை (20 – 09 – 2023)