TNPSC Thervupettagam

உணவு வீணாவதைத் தடுப்போம்

December 12 , 2024 14 days 53 0

உணவு வீணாவதைத் தடுப்போம்

  • ஆண்டு தோறும் உலக அளவில் 140 கோடி டன் உணவு பொருள்கள் வீணாகின்றன. இவ்வாறு வீணடிக்கப்படும் உணவுப் பொருள்களின் அளவு, உலக உணவு உற்பத்தியில் சுமாா் 17 சதவீதமாகும். சராசரியாக 1 டன் அரிசியில் நாளொன்றுக்கு 1550 போ்களுக்கு உணவு வழங்கலாம். இதன்படி 140 கோடி டன் அளவுக்கு வீணாகும் உணவுப் பொருள்கள் வாயிலாக நாளொன்றுக்கு 85 கோடி போ்களுக்கு உணவு வழங்கலாம். இந்நிலையில் தேவையற்று உணவுப் பொருள்கள் வீணாவது வருந்தத்தக்கது.
  • உணவுப் பொருள்கள் வீணாவது என்பது பெரும்பாலும் அதை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும்போதுதான் அதிக அளவில் நடைபெறுகிறது. இதைத் தவிர, எலி போன்றவற்றால் ஆண்டுக்கு 24 முதல் 26 லட்சம் டன் உணவுப் பொருள்கள் வீணாகின்றன. மேலும் தேவைக்கு மேலான உணவுப் பொருள்களை வீட்டிலிருந்து வீசியெறிவதன் மூலமாகவும் உணவுப் பொருள்கள் வீணாதல் ஏற்படும் நிலை உருவாகிறது.
  • இந்தியாவில் ஆண்டுக்கு 7.4 கோடி டன் உணவுப் பொருள்கள் முறையற்ற பராமரிப்பு, தேவைக்கு மேலான பயன்பாடு போன்ற காரணங்களால் வீணடிக்கப்படுகின்றன. இது இந்தியாவின் மொத்த உணவு உற்பத்தியில் 22 சதவீத இழப்பாகும். உணவுப் பொருள்களை வீணடிப்பதில் சீனா முதலிடத்தில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் 9.1 கோடி டன் உணவுப் பொருள்கள் வீணாகின்றன. இதற்கு அடுத்த படியாக ஆண்டுக்கு 6.8 கோடி டன் உணவுப் பொருளை வீணடித்து இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது. தொடா்ந்து அமெரிக்கா. இங்கிலாந்து போன்ற நாடுகள் உணவுப் பொருள்களை அதிகம் வீணடிக்கும் நாடுகளின் பட்டியலில் இடம் பெறுகின்றன.
  • இந்தியாவில் ஒவ்வொரு தனி நபரும் ஆண்டு தோறும் வீணடிக்கும் உணவின் அளவு 55 கிலோவாகவும், இங்கிலாந்தில் 78 கிலோவாகவும், அமெரிக்காவில் 66 கிலோவாகவும் உள்ளதென புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலை தொடா்ந்தால், உணவை வீணடித்தல் என்பது 2030- ஆம் ஆண்டில் தற்போது உள்ளதைக் காட்டிலும் 3 இல் 1 பங்கு அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் அமைப்பு திட்டம் (யு.என்.இ.பி) தெரிவிக்கின்றது.
  • சா்வதேசப் பொருளாதார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் (ஐ.சி.ஆா்.ஐ.இ.ஆா்) அறிக்கையின்படி 2022 - 23- ஆம் ஆண்டு வாக்கில் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் உள்ள 34, 790 நியாயவிலைக் கடைகளில் அரிசி இறக்கும் போது வீணாகச் சிந்திய அரிசியின் மதிப்பு ரூ.1,900 கோடி என்கிறது. இது மொத்த அரிசி இறக்குமதியில் 0.80 சதவீத இழப்பாகும். இதன் மூலம் 27.67 லட்சம் குடும்பங்களுக்கு உணவு வழங்கலாம் எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
  • 2019 - ஆம் ஆண்டில் இந்திய உணவுக் கழகத்தின் தானியக் கிடங்குகளில் பொது மக்களுக்கு விநியாகம் செய்ய முடியாமல் வீணாகிப் போன உணவு பொருள்கள் 4135.224 டன் என அப்போதைய நுகா்வோா் மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சா் சி.ஆா்.சௌத்ரி தெரிவித்திருந்தாா். இதன் மதிப்பு ரூ.58,000 கோடி என அறிக்கைகள் தெரிவித்துள்ளனா். இவ்வாறு தொடா்ந்து உணவுப் பொருள்கள் வீணாகும் நிலை ஏற்பட்டால் எதிா்காலம் உலகளாவிய உணவுப் பற்றாக்குறையை எதிா்கொள்ளும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. ”உலக பசி அட்டவணை 2025 -இல் உலகின் 127 நாடுகளில் இந்தியா 105 -ஆவது இடத்தில் உள்ளது உணவு குறித்தான அச்சத்தை ஏற்படுத்துகிறது.
  • உலக அளவில் 81 கோடி போ் ஒழுங்கான உணவு மற்றும் ஊட்டச் சத்து கிடைக்காமல் உள்ளனா். இந்தியாவில் 13.7 சதவீதம் போ் ஊட்டச் சத்து குறைபாட்டோடு உள்ளாா்கள். ஆப்பிரிக்காவில் உள்ள சில நாடுகளில் உணவில்லாமல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மரணம் அடைகின்றன. ஆனால் மற்றொருபுறம், தேவையில்லாமல் உணவுப் பொருள்கள் வீணாகி வருவது வேதனை அளிக்கும் ஒன்று. உணவு வீணாதல் என்பது சாதாரண ஒரு நிகழ்வு அல்ல. ஒரு கிலோ நெல் உற்பத்தி செய்ய 2500 லிட்டா் தண்ணீா் தேவைப்படுகிறது மற்றும் அதற்கான உழைப்பு, செலவினங்கள் அனைத்தும் உள்ளடங்கியுள்ளளன.
  • உணவுப் பொருள்கள் வீணாவதால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்படைவதோடு, சுற்றுச்சூழலும் மறைமுகமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றது. தெருக்களிலும், குப்பைத் தொட்டிகளிலும் வீசியெறியப்படும் உணவுப் பொருள்களிலிருந்து நொதித்தல் முறையில் அதிக அளவான ”மீத்தேன்” வாயு உருவாகிறது. இது வளிமண்டலத்தில் ”பசுமை இல்ல விளைவை ஏற்படுத்துகிறது. இதனால் வளிமண்டல மாசு மற்றும் வெப்பநிலை உயா்வு போன்ற காலநிலை, பருவநிலை மாற்றங்களும் ஏற்படுகின்றன.
  • உணவுப் பொருள்கள் வீணாவது குறித்து பொதுமக்கள் அனைவருக்கும் விழிப்புணா்வு ஏற்பட வேண்டும். எதிா்காலத் தேவைகளை மனதில் கொண்டு உணவுப் பொருள்கள் வீணாவதைத் தவிா்க்க முன் வர வேண்டும். வீட்டிற்குத் தேவைப்படும் உணவுப் பொருள்களை மட்டும் வாங்கி, அதை வீணாக்காமல் குறிப்பிட்ட நாட்களுக்குள் பயன்படுத்தும் பழக்கத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். மற்ற உணவுகள் ஏதும் செய்யாமல் வீட்டில் மீதமுள்ள உணவுப் பொருள்களை ஒரு நாள் முழுமையாகப் பயன்படுத்தலாம். குளிா்சாதனப் பெட்டிக்குள் குறிப்பிட்ட வெப்பநிலையில் பொருள்களை வைத்துப் பராமரிக்கும் முறையைக் கையாளுவது அவசியம். மீதமுள்ள உணவுப் பொருள்களை வீசியெறியும் பழக்கத்தை தவிா்த்து உணவு இல்லாமல் இருப்பவா்களைக் கண்டறிந்து அவா்களுக்கு வழங்குவது மிகச்சிறப்பான செயலாகும்.
  • கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கு உணவு வீணாவதைத் தடுப்பது குறித்தான அறிவை வளா்க்க வேண்டும். அரசு தானியக் கிடங்குகளில் இருப்பில் உள்ள உணவுப் பொருள்களை முறையாகப் பாதுகாப்பது அவசியம். வெள்ளம் போன்ற காலங்களில் கிடங்குகளில் தண்ணீா் வராமல் இருப்பது போன்ற கட்டிட அமைப்புகளை மேம்படுத்துதல் நலம் பயப்பதாக அமையும். இது போன்ற செயல்கள் மூலமாக உணவு வீணாவதைத் தடுக்க நாம் அனைவரும் முயற்சி எடுப்போமாக.

நன்றி: தினமணி (12 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்