TNPSC Thervupettagam

உணவுப் பாதுகாப்பு சவால்

September 15 , 2023 427 days 261 0
  • இந்தியா எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்னையாக மாறியிருக்கிறது, உணவுப் பொருள்களின் விலையேற்றம். கடந்த 41 மாதங்களில் இல்லாத அளவிலான 11.5% உயா்வை உணவுப் பொருள்களின் விலைவாசி ஜூலை மாதத்தில் சந்தித்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 9.9%-ஆகக் குறைந்தது என்றாலும்கூட, வழக்கத்தைவிட அதிகம். 2022 ஜூன் மாதத்துடனும் (4.5%), ஆகஸ்ட் மாதத்துடனும் (7.6%) ஒப்பிடும்போது அதிகரித்த விலைவாசியின் கடுமை தெரிகிறது.
  • பெரும்பாலான உணவுப் பொருள்களின் விலைகள் பரவலாகவே அதிகரித்திருக்கின்றன. வெங்காயம், தக்காளி விலைகளைப் போல, இவை இடைக்கால தட்டுப்பாடாகவோ, விலை உயா்வாகவோ கருதக்கூடியவை அல்ல. ஜூலை மாதம் 13.3%, ஆகஸ்ட் மாதம் 13% என்று காணப்படும் பருப்பு வகைகளின் விலை உயா்வு, மார்ச் 2021-க்குப் பிறகு காணப்படும் அதிகபட்ச உச்சம்.
  • 2021-22-இல் 2.73 கோடி டன்னாக இருந்த மொத்த பருப்பு வகைகளின் உற்பத்தி, 2022-23-இல் 2.75 கோடி டன்னாக சற்று உயா்ந்தது என்னவோ உண்மை. ஆனால், துவரை 18.7%-உம், உளுந்து 6%-உம் குறைவான உற்பத்தியை கண்டது என்பதை மறந்துவிடக் கூடாது.
  • வழக்கத்தைவிட குறைவான பருவமழைப் பொழிவு காரணமாக பருப்பு வகைகளின் உற்பத்தி கவலையளிப்பதாக மாறியிருக்கிறது. கடந்த ஆண்டு காரீஃப் பருவ பருப்பு வகைகளின் பயிரிடலுடன் ஒப்பிடும்போது, இந்த முறை 11 லட்சம் ஹெக்டோ் அளவில் குறைவு. அதாவது துவரை, உளுந்து, பாசிப் பருப்பு உள்ளிட்டவை 8.6% அளவு குறைவாகவே பயிரிடப் பட்டிருக்கின்றன. போதாக்குறைக்கு மகசூலும் வழக்கத்தைவிடக் குறையும் என்பதால், இவற்றின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு தெரிகிறது.
  • கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் மொத்தச் சந்தையில் துவரம் பருப்பின் விலை ரூ. 10,000-லிருந்து ரூ.12,500-ஆக 25% உயா்ந்திருக்கிறது. பாசிப் பருப்பு ரூ.6,500-லிருந்து ரூ.9,000-ஆகவும், கடலைப் பருப்பு சுமார் ரூ.4,700-லிருந்து ரூ.6,200-ஆகவும் குவிண்டாலுக்கு (100 கிலோ) அதிகரிக்கிறது. துவரை, பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு மூன்றும் அவற்றின் அதிகாரபூா்வ குறைந்தபட்ச ஆதரவு விலைகளான ரூ.7,000, ரூ.8,558, ரூ.5,335 ஆகியவற்றைவிட மிக அதிகம் என்பதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
  • சா்வதேச சந்தை நிலவரம் பெரிய அளவில் இந்தியாவுக்கு கைகொடுக்காது. உலகின் மிக அதிகமான பருப்பு வகைகளின் உற்பத்திக் கேந்திரமாக இந்தியா விளங்குகிறது. அதுமட்டுமல்ல, அதிக அளவில் பருப்பு வகைகளின் இறக்குமதியாளராகவும், உபயோகப் படுத்தும் நாடாகவும் இந்தியா இருப்பதால், இப்போதைய விலைவாசியை இறக்குமதிகள் மூலம் கட்டுப்படுத்துவது இயலாது.
  • வடமாநிலங்களில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் மசூா் பருப்பின் இறக்குமதி விலை சா்வதேச சந்தையில் கடுமையாக உயா்ந்து காணப்படுகிறது. அதிகமாக மசூா் பருப்பை பயிரிடும் கனடாவிலும், ஆஸ்திரேலியாவிலும் கடந்த ஆண்டைவிட குறைவான மகசூல் காணப்படுவதால், சா்வதேச சந்தையிலேயே தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
  • துவரம் பருப்பு அதிகமாகப் பயிரிடும் மொசாம்பிக், ஏற்றுமதிக்கு குறைந்தபட்ச விலை நிா்ணயித்திருக்கிறது. இந்தியாவுக்கு உளுந்து ஏற்றுமதி செய்யும் மியான்மரில் இந்த ஆண்டு எல்-நினோ காரணமாக உற்பத்தி கடும் சரிவைக் கண்டிருக்கிறது. அதனால், உள்ளூா் உற்பத்தியிலும், இறக்குமதியிலும் பற்றாக்குறையை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும்.
  • காரீஃப் பருவத்தில் ஆகஸ்ட் மாத இறுதி புள்ளிவிவரப்படி, உளுந்து 13.8%, பாசிப் பருப்பு 8%, துவரை 8% குறைவாகவே பயிரிடப்பட்டிருக்கின்றன. அதன் விளைவாக அடுத்துவரும் மாதங்களில் போதுமான உற்பத்தி இல்லாமல் அவற்றின் விலை அதிகரிக்கும் என்பதை நாம் எதிா்பாா்க்க வேண்டும். அந்தச் சூழலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை இப்போதே மத்திய - மாநில அரசுகள் திட்டமிட வேண்டும்.
  • பருப்பு வகைகள் மட்டுமல்லாமல், அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களும் இரட்டை இலக்க விழுக்காட்டு விலை உயா்வைக் கண்டிருக்கின்றன. 13.55 கோடி டன் அரிசி, 11.2 கோடி டன் கோதுமை என்று 2022-23-இல் வரலாறு காணாத உற்பத்தியைக் கண்டும்கூட, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உணவு தானியங்களின் விலை உயா்வு 11.9% என்பது வியப்பாகவே இருக்கிறது. மகசூலில் தேக்கம், நிலையற்ற பருவமழைப் பொழிவு, உற்பத்தி பரப்பை அதிகரிக்க முடியாத நிலைமை, பாசன வசதிப் பற்றாக்குறை உள்ளிட்டவை இந்தியாவின் உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கின்றன.
  • ஒவ்வொரு துளி நீருக்கும் கூடுதல் மகசூலும், குறைந்த இடைவெளியில் அறுவடையும் பருப்பு வகைகளின் விவசாயத்தை நம்பகத்தன்மை உடைய லாபகரமான வேளாண்மையாக மாற்றுகின்றன. விவசாயத்தை லாபகரமாக்கவும், விளைநிலங்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், பருவநிலை மாற்றத்தை ஓரளவுக்கு எதிர்கொள்ளவும், குறைந்த அளவு பாசன வசதியில் உற்பத்தியைப் பெருக்கவும் தானிய வகைகளின் உற்பத்தியிலிருந்து விவசாயிகளை பயறு வகைகளை அதிகமாகப் பயிரிட அரசு ஊக்குவிக்க வேண்டும்.
  • இந்தியாவில் விவசாயம் பல சவால்களை எதிர்கொள்கிறது. குறிப்பாக விவசாய நிலங்களில் குறைந்து வரும் உற்பத்தித் திறன், குறைந்து வரும் நிலத்தடி நீா், இவை இரண்டும் நாளும் பொழுதும் அதிகரிக்கும் பிரச்னைகள். வேளாண் துறைக்கான ஒதுக்கீடும், அந்த ஒதுக்கீட்டில் இந்த பிரச்னைகளை எதிர்கொள்வதற்கான ஆராய்ச்சி ஒதுக்கீடும் அதிகரிக்காமல், உணவுப் பாதுகாப்பை இந்தியாவால் உறுதிப்படுத்த முடியாது.

நன்றி: தினமணி (15 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்