TNPSC Thervupettagam

உணவும் ஒரு மருந்து காசநோய்க்குப் புதிய தீர்வு

September 22 , 2023 482 days 295 0
  • காசநோய் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலக அளவில் உள்ள காசநோயாளிகளில் இந்தியர்கள் மூன்றில் ஒரு பங்கு என்கிறது உலகக் காசநோய் அறிக்கை (2022). இந்தியாவில், 2025ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழித்துவிட வேண்டும் என்பது 2020இல் அறிவிக்கப்பட்ட தேசியக் காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் (National TB Elimination Programme) குறிக்கோள்.
  • இந்தியாவில் ஆண்டுதோறும் புதிதாக இடம்பெறும் காசநோயாளிகளில் 40% பேருக்கு ஊட்டச்சத்துக் குறைபாடுதான் முக்கியக் காரணியாக இருக்கிறது. காசநோயை ஒழிக்க வேண்டுமானால், நீரிழிவு, புகைப்பழக்கம், மதுப்பழக்கம், ஹெச்ஐவி தொற்று ஆகிய காரணிகளைக் கட்டுப்படுத்துவதோடு, ஊட்டச்சத்துக் குறைபாட்டையும் சரிசெய்ய வேண்டும்என்று உலக சுகாதார நிறுவனம் 2017இல் அறிவுறுத்தியது.
  • இந்தச் சூழலில், முறையான ஊட்டச்சத்துள்ள உணவின் மூலம் காசநோயைக் கட்டுப்படுத்த முடியும் என்று, ‘ரேஷன்ஸ்’ (RATIONS – Reducing activation of tuberculosis by improvement of nutritional status) எனும் புதிய ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வின் முடிவு ஆகஸ்ட் மாத லான்சட்மருத்துவ ஆய்விதழில் வெளிவந்துள்ளது. இதுவரை மருந்துகள் மூலமே காசநோயை வெற்றிகொள்ள முடியும் என்றிருந்த நிலையில், உணவும் அதற்கு உதவும் என்பது மக்களுக்கும் மருத்துவர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் செய்தி.

முக்கியத்துவம் பெறும் ரேஷன்ஸ்

  • தேசியக் காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் வழிகாட்டுதலுடன், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தேசியக் காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் (NIRT-ICMR) மேற்கொண்ட ஆய்வு இது. ஜார்கண்ட் மாநிலத்தில் 4 மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து, அங்குள்ள 28 காசநோய் மருத்துவமனைகளில் 2019 ஆகஸ்ட் முதல் 2022 ஆகஸ்ட் வரை ரேஷன்ஸ்ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
  • காசநோய் உறுதிசெய்யப்பட்ட 2,800 பேர் ஒரு குழுவிலும், அவர்களோடு மிக நெருங்கிய தொடர்புடைய உறவினர்களில் 5,621 பேர் மற்றொரு குழுவிலும் சேர்க்கப்பட்டனர். மேலும், அவர்களோடு சாதாரணமாகத் தொடர்புகொள்பவர்களில் 4,724 பேர் மூன்றாம் குழுவில் சேர்க்கப்பட்டனர். இந்தக் குழுவினரில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேற்பட்டவர்கள் ஏற்கெனவே ஊட்டச்சத்துக் குறைபாடு உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இவர்களில் முதல் குழுவினருக்கு வழக்கமான காசநோய் மாத்திரைகளோடு 5 கிலோ அரிசி, ஒன்றைரை கிலோ பால் பவுடர், 3 கிலோ பருப்பு, 500 மி.லி. எண்ணெய், சத்து மாத்திரை ஆகியவை 6 மாதங்களுக்கு வழங்கப்பட்டன. இரண்டாம் குழுவினருக்கு மாதந்தோறும் 5 கிலோ அரிசி, ஒன்றைரை கிலோ பருப்பு, சத்து மாத்திரை ஆகியவை அதே காலகட்டத்துக்கு வழங்கப்பட்டன. மூன்றாம் குழுவினருக்கு அவர்கள் எடுத்துக்கொள்ளும் வழக்கமான உணவு வகைகள் மட்டுமே வழங்கப்பட்டன; ஊட்டச்சத்துள்ள உணவு வழங்கப்படவில்லை.
  • இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 3 குழு உறுப்பினர்களையும் பரிசோதித்தபோது, ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்ட முதல் இரண்டு குழுக்களில் 48% பேருக்குக் காசநோய் குறைந்திருந்தது; 28% பேருக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு நீங்கியது. இவற்றின் பலனால், காசநோய் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முன்பைவிட 35% குறைந்திருந்தது. அதேவேளை, மூன்றாம் குழுவினரில் 122 பேருக்குப் புதிதாகக் காசநோய் ஏற்பட்டிருந்தது.

ஆய்வின் முடிவுகள்

  • உடல் எடை 25 கிலோவுக்கும் குறைவாக இருப்பவர்கள்கூட முறையான சிகிச்சை எடுத்துக்கொள்வதோடு, சரியான ஊட்டச்சத்து உணவையும் உட்கொண்டால், நோயிலிருந்து முழுமையாக மீண்டெழுந்து, வழக்கமான பணிகளுக்குத் திரும்ப முடியும் என்பது ரேஷன்ஸ்ஆய்வின் மூலம் உறுதியாகியுள்ளது.
  • அடுத்ததாக, காசநோயாளியின் உடல் எடையையும் ஊட்டச்சத்து அளவையும் கவனித்துச் சிகிச்சை வழங்க வேண்டும் என்பதும், நோயாளிக்குச் சிகிச்சைக்கு முன்பு இருந்த உடல் எடையைவிட 5% அதிகரித்தாலே அவரை இறப்பிலிருந்து 60% காப்பாற்ற முடிகிறது என்பதும், ஊட்டச்சத்தான உணவைக் கொடுப்பதன் மூலம் காசநோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பு உடையவர்களுக்கும் காசநோய் வராமல் தடுக்க முடியும் என்பதும் உறுதியாகியுள்ளன.

கவனம் கோரும் ஊட்டச்சத்துக் குறைபாடு

  • இந்தியாவில் 40% பேருக்குக் காசநோய்த் தொற்று இருக்கிறது. ஆனால், அது அறிகுறிகளைக் காட்டாத - உள்ளுறைத் தொற்றாக (Latent TB) - உடலில் மறைந்திருக்கிறது. உடலில் ஊட்டச்சத்து குறைந்து, நோய் எதிர்ப்புச் சக்தி குறையும்போது, இவர்களில் 5-10% பேருக்குக் காசநோய் ஏற்பட்டுவிடும். மேலும், ‘இவர்களுக்கு வழங்கப்படும் மருந்து, மாத்திரைகள் உடலில் முழுமையாகச் செயல்படாமல் போகும். மருந்துகளுக்கு எதிர்ப்புத்தன்மை (Drug resistance) ஏற்பட்டுவிடும்.
  • சிகிச்சை பலன் தராமல் போகும். மறுபடியும் இவர்களைக் காசநோய் தாக்கும். அதேவேளை, இவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவைக் கொடுத்தால், காசநோய் வராமலே தடுக்க முடியும்என்கிறது உலக சுகாதார நிறுவனம். ரேஷன்ஸ்ஆய்வும் இதையே உறுதிப்படுத்துகிறது. ஆகவே, உள்ளுறைக் காசத்தொற்று உள்ளவர்களைக் கண்டறிந்து, ஊட்டச்சத்துள்ள உணவு வழங்க அரசுகள் முன்வர வேண்டும். இதற்கான திட்டத்தை ஏற்கெனவே இருக்கும் காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் இணைத்துச் சுமை கூட்டுவதைவிட, தனித் திட்டமாகச் செயல்படுத்துவது நல்லது.

உணவுக்கு ஊக்கத்தொகை

  • 2018இல், ‘நிக்ஷய் போஷன் யோஜனா’ (Nikshay Poshan Yojana) எனும் திட்டம் இந்தியாவில் தொடங்கப்பட்டது. இதன்படி, காசநோயாளிகளின் உணவுச் செலவுக்கு மாதந்தோறும் ரூ.500 வீதம் சிகிச்சை முடியும் வரை வங்கிக் கணக்குக்கு அனுப்பப்படுகிறது. 2018லிருந்து 2022 வரை 70,000 காசநோயாளிகள் இதனால் பலன் பெற்றுள்ளனர். ரூ.2,089 கோடி இதற்குச் செலவிடப்பட்டிருக்கிறது. மேலும், நாட்டில் 9.55 லட்சம் காசநோயாளிகள் தன்னார்வ அமைப்புகளால் தத்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • இவர்களுக்கான உணவுச் செலவை இந்த அமைப்புகள் ஏற்றுக்கொள்கின்றன. தற்போதைய ரேஷன்ஸ்ஆய்வு முடிவின்படி, காசநோயாளிகளுக்கு மட்டுமல்லாமல், அவர்களோடு நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கும் உணவு வழங்கப்பட வேண்டியிருக்கிறது. ஆகவே, ‘நிக்ஷய் போஷன் யோஜனாதிட்டத்தை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு அதிக அளவு நிதி ஒதுக்கப்பட வேண்டும். அத்தோடு இலவச உணவு வழங்கும் தன்னார்வலர்களையும் அதிகப்படுத்த வேண்டும்.

ஊட்டச்சத்துச் சமமின்மை

  • 2021இல் திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில், இந்தியாவில் 74% பேருக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை என்கிறது, .நா. அவை. அனைத்துப் பொருளாதார வகுப்புப் பிரிவினரிடமும் ஊட்டச்சத்துச் சமச்சீரின்மை இருப்பதாகப் பல்வேறு காலகட்டங்களில் தமிழ்நாடு உள்பட இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகவே, ஊட்டச்சத்துள்ள உணவைப் பெறுவது குறித்த விழிப்புணர்வைச் சமூகத்தில் ஏற்படுத்துவதோடு, புதிய அணுகுமுறைகள் மூலம் நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சத்தான உணவு கிடைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
  • தமிழ்நாட்டில் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் இலவச காலை-மதிய உணவுத் திட்டங்கள் காசநோயையும் தடுக்க உதவும் என்பது நிதர்சனம். இப்போது அரசுப் பள்ளிகளில் மட்டும் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் முன்னோடித் திட்டமான இலவச காலை உணவுத் திட்டத்தை அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தினால், இன்னும் நிறைய குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு நீங்கும்.
  • அப்போது காசநோய் மட்டுமல்ல, மற்ற தொற்றுநோய்களும் கட்டுப்படும். ரேஷன்ஸ்ஆய்வின் மூலம் ஊட்டச்சத்துக் குறைபாடு இல்லாத இந்தியாவை உருவாக்கி, ‘காசநோய் இல்லாத தேசம்எனும் இலக்கை அடைய இன்னும் பல புதிய முன்னெடுப்புகளை அரசு எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

நன்றி: இந்து தமிழ் திசை (22 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்