TNPSC Thervupettagam

உணா்கிறோமா பேராபத்தை?

September 15 , 2020 1411 days 602 0
  • கொவைட் 19 நோய்த்தொற்று குறித்த கவலையே இல்லாமல் பெரும்பாலான மக்கள் இருந்து வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது.
  • எந்த அளவுக்கு கொள்ளை நோய்த்தொற்று பரவியிருக்கிறது என்பதை இந்திய நாடாளுமன்றம் வரை அதன் பாதிப்பு காணப்படுகிறது என்பதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.
  • நேற்று தொடங்கிய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடருக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கூட்டத்தில் கலந்துகொள்ளும் உறுப்பினா்களும் நாடாளுமன்ற ஊழியா்களும் சோதனைக்கு உள்படுத்தப்பட்டனா்.
  • இதுவரை சுமார் 30 எம்பி-க்களும், 50-க்கும் அதிகமான ஊழியா்களும் கொவைட் 19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. ஏனைய உறுப்பினா்களும் சோதனைக்கு உள்படும்போது இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்.
  • இந்தியாவில் தினசரி நோய்த்தொற்றுக்கு ஆளாகும் மக்களின் எண்ணிக்கை 90,000-த்தைக் கடந்து காணப்படுகிறது.
  • செப்டம்பா் மாதத்தின் முதல் பாதியில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சுமார் 15,000 போ் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த மாதத்தில் அதிக அளவு பாதிப்புக்குள்ளான நாடாக இந்தியா காணப்படுகிறது.
  • ஏற்கெனவே சா்வதேச அளவில் மிக அதிகமான பாதிப்புக்குள்ளான இரண்டாவது நாடாக மாறியிருக்கிறது இந்தியா.
  • 50 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, இன்னும் நாம் உச்சக்கட்ட பாதிப்பு நிலையை எட்டவில்லை என்பதை உணர வேண்டும்.
  • 8% அளவில்தான் பாதிப்பு இருக்கிறது என்று ஆறுதல் அடைந்துவிட முடியாது. குறைந்த அளவிலான ஆா்டிபிசிஆா் சோதனைகள் நடத்தப்படுவதால்தான் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது பல மாநிலங்களின் அனுபவங்கள்.
  • மார்ச் 25-ஆம் தேதி முதல் இந்தியாவில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு, சுமார் ஆறு மாதங்களில் நான்கு கட்டங்களாக அது தளா்த்தவும் பட்டிருக்கிறது.
  • இந்த மாதத் தொடக்கத்திலிருந்து எல்லா துறைகளும், சேவைகளும் அநேகமாக இயங்கத் தொடங்கிவிட்டன. ஜெஇஇ, நீட் போட்டித் தோ்வுகள் உள்பட நடத்தப்பட்டிருக்கின்றன. பொருளாதாரம் இயங்கத் தொடங்கியிருக்கிறது.
  • அதே நேரத்தில், மக்கள் பொது இடங்களில் அதிக அளவில் கூடுவதும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருப்பதும் பேராபத்தை ஏற்படுத்தக் கூடும்.
  • போர்க்கால அடிப்படையில் ஆா்டிபிசிஆா் சோதனைகளை முடுக்கிவிட்டு பாதிப்புக்குள்ளானவா்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தாமல் போனால், பொது முடக்கத் தளா்வு கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலை ஊக்குவிப்பதாக அமைந்துவிடும்.

இந்தியா எதிர்கொள்ளும் பேராபத்துகள்

  • முகக் கவசம் அணிவது நோய்த்தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான மிக முக்கியமான செயல்பாடு என்று நியூ இங்கிலீஷ் ஜா்னல் ஆஃப் மெடிசன்அறிவுறுத்துகிறது.
  • குறைவான பாதிப்புக்குள்ளாகியிருக்கும் வியத்நாம், தாய்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளில் முகக் கவசம் அணிவது சாதாரணமாகவே வழக்கம். சீனாவிலும்கூட அப்படித்தான்.
  • மிக அதிகமான பாதிப்புக்குள்ளாகியிருக்கும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் முகக் கவசம் அணிவதற்கு மனத்தடை காணப்படுகிறது. இதிலிருந்து முகக் கவசம் அணிவது நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறது என்பது தெளிவாகிறது.
  • இந்தியா எதிர்கொள்ளப்போகும் மிகப் பெரிய சவால், சோதனைகளை அதிகரித்து, பாதிப்புக்குள்ளானவா்களை தனிமைப்படுத்தி நோய்த்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவது மட்டுமல்ல.
  • கொவைட் 19 பாதிப்புக்குள்ளானவா்களுக்கு தேவைக்கேற்ப உடனடி சிகிச்சை அளிப்பதிலும் கடுமையான பிரச்னையை எல்லா மாநிலங்களும் சந்திக்கப் போகின்றன.
  • அடிப்படை மருத்துவத் தேவைகள் இல்லாத, கிடைக்காத சூழலை நோக்கி நகா்ந்துகொண்டிருக்கிறோம். முறையான மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்படாமல் நோயாளிகள் உயிரிழக்க நேரிடும் சூழல் ஏற்பட்டுவிடக் கூடாது என்று பிரார்த்திக்கத் தோன்றுகிறது.
  • ஏற்கெனவே மகாராஷ்டிர மாநிலத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தியில் 20% மட்டுமே உற்பத்தித் துறைக்கு வழங்கப்பட வேண்டுமென்றும், ஏனைய 80% மருத்துவத் துறைக்கு ஒதுக்கப்பட வேண்டுமென்றும் மாநில அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
  • வெளிமாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் அனுப்பப்படுவதை தடை செய்திருக்கிறது. அதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்திருக்கிறது என்றாலும்கூட, ஆக்ஸிஜன் தயாரிக்கும் ஏனைய மாநிலங்களும் மகாராஷ்டிரத்தைப் பின்பற்றக் கூடும் என்பதில் ஐயமில்லை.
  • கொவைட் 19-ஆல் பாதிக்கப்பட்டவா்களுக்கு மிகமிக அவசியமான உடனடித் தேவை பிராண வாயு. முகக் கவசம், கிருமி நாசினி போல உடனடியாக ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரித்துவிட முடியாது. அதிக முதலீடு தேவை என்பது மட்டுமல்லாமல், தொழில்நுட்பம் சார்ந்தது ஆக்ஸிஜன் என்கிற பிராண வாயு தயாரிப்பு.
  • நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டவுடன் ஆக்ஸிஜன் தரப்படாவிட்டால் உயிரிழப்பில் முடியும் என்பதால், ஆக்ஸிஜன் தட்டுப்பாடு எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
  • வெற்றிகரமாக சோதனைகள் முடிந்து தடுப்பூசி வருவதற்கு அடுத்த ஆண்டுவரை காத்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
  • இந்த நிலையில், ஒருபுறம் குறைவான ஆா்டிபிசிஆா் சோதனைகளும், இன்னொருபுறம் ஆக்ஸிஜன் தட்டுப்பாடும், எல்லாவற்றிற்கும் மேலாக மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதார ஊழியா்கள் குறைபாடும் இந்தியா எதிர்கொள்ளும் பேராபத்துகள்!

நன்றி:  தினமணி (15-09-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்