உண்மையிலேயே சாத்தியமா?
- ஒரே நாடு.. ஒரே தேர்தல் திட்டம் குறித்த விவாதம் தேசிய அளவில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. ஒரே நேரத்தில் நாடு முழுவதும் மக்களவைக்கான தேர்தலையும், மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலையும் நடத்துவது மட்டும் அல்ல. அதற்கு அடுத்த 100 நாள்களுக்குள் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி என அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்குமான தேர்தல்களையும் நடத்தி முடித்துவிட வேண்டும் என்பதும் இதன் முக்கிய சாராம்சம். சின்னாபின்னமாகி இருக்கும் தேர்தல் நடைமுறையை, அரசமைப்பை உருவாக்கியவர்களின் நோக்கத்துக்கு ஏற்ப மீட்டெடுக்கும் முயற்சியே இத்திட்டம் என்று மத்திய அரசு கூறுகிறது. உண்மை நிலவரம் என்ன?
ராம்நாத் குழு என்ன சொல்கிறது?
- 2023 செப்டம்பரில் அமைக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, 191 நாட்கள் தொடர்ந்து பணியாற்றியது. 21,558 பேரிடம் கருத்துகளைக் கேட்டறிந்து, 18,626 பக்க அறிக்கையை அளித்தது. பல்துறை நிபுணர்கள் இந்தக் குழுவினரிடம் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இக்குழு ஒரே தேர்தல் முறை அவசியமா என்று 47 அரசியல் கட்சிகளிடம் கருத்துக் கேட்டதில், 32 கட்சிகள் ஒரே தேர்தல் முறையை ஆதரித்தன.
- 15 கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றன. காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, திமுக போன்ற கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றன. முன்னாள் தலைமை நீதிபதிகளான தீபக் மிஸ்ரா, ரஞ்சன் கோகோய், எஸ்.ஏ.போப்டே, யு.யு.லலித் ஆகியோரின் கருத்துகளையும் இக்குழு கேட்டறிந்தது. அவர்கள் ஒரே தேர்தல் முறையை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் என்று கூறியிருக்கிறார்கள்.
- இதன் பின்னர், அக்குழு ஒரே தேர்தல் முறை அவசியம் என்று பரிந்துரைத்திருக்கிறது. அண்மையில் மத்திய அமைச்சரவையும் இக்குழுவின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டிருக்கிறது. இருந்தாலும் வெவ்வேறு இனங்கள், வெவ்வேறு மதங்கள், வெவ்வேறு குழுக்கள் என்று வேற்றுமையில் ஒற்றுமை கொண்டிருக்கிற நம் நாட்டில், ஒரே தேர்தல் சாத்தியமா என்பது குறித்துச் சிந்தித்தாக வேண்டும்.
- ஒரே நாடு.. ஒரே தேர்தல் திட்டத்தைச் செயல்படுத்த அரசமைப்புச் சட்டத்தின் 83, 85, 172, 285, 356 ஆகிய கூறுகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தச் சட்டத் திருத்தத்தை அனைத்து மாநில அரசுகளும் மத்திய ஆட்சிப் பகுதி அரசுகளும் அங்கீகரிக்க வேண்டும். அந்த அரசுகள் ஆதரிக்கவில்லையெனில், கூட்டாட்சிக் கட்டமைப்பு என்பது கேள்விக்குறியாகிவிடும்.
- ஒரு மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த பின், யாருக்கும் பெரும்பான்மையற்ற சட்டப்பேரவை அமைந்தாலோ, நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் ஆட்சி கலைக்கப்பட்டாலோ, அங்கு மீண்டும் தேர்தல் நடத்திப் புதிய அரசை அமைக்கலாம். ஆனால், அந்த ஆட்சி மத்தியில் இருக்கும் அரசின் ஆட்சிக் காலத்துக்கு மட்டுமே தொடர முடியும். இவ்வாறு பல்வேறு பரிந்துரைகளை இக்குழு வழங்கியுள்ளது.
நடைமுறைச் சிக்கல்கள்:
- அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்குப் பாதிக்கு மேற்பட்ட மாநிலங்களின் ஆதரவு தேவை. திருத்தம் செய்த பிறகு, ஒரே தேர்தல் முறையைத் தொடங்குவதற்குக் குடியரசுத் தலைவர் ஒரு நாளை அறிவிப்பார். அந்த அறிவிப்புக்குப் பிறகு, மாநிலத் தேர்தல்களில் தேர்வாகும் சட்டப்பேரவைகளின் காலம் நாடாளுமன்றக் காலத்துடன் முடிந்துவிடும். உதாரணமாக, 2024 தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற நாடாளுமன்றம் 2029இல் முடிவடையும். அதன்பிறகு, 2024 முதல் 2029 வரை எந்தச் சட்டப்பேரவை தேர்வானாலும், அதன் காலவரையறை 2029 நாடாளுமன்றத்துடன் முடிந்துவிடும்.
- இப்படித்தான் 2029இல் மக்களவை, மாநிலச் சட்டப்பேரவைகளுக்கான தேர்தல்கள் ஒரே முறையில் நடக்க முடியும். அதன் பின்னர், மக்களவைக்கும் மாநிலச் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுகிற முறை அமலில் வரலாம். ஒரே தேர்தல் முறை வந்த பிறகு, மத்திய அரசு, மாநில அரசுகளில் ஒன்று கவிழ்ந்தால், அல்லது அரசு அமைக்க முடியாத நிலை உருவானால், மீண்டும் தேர்தல் நடக்கும். அதில் தேர்வாகும் சபையின் காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்காது. அதில் மீதி இருக்கும் காலம் மட்டுமே அதன் ஆயுள் காலமாக இருக்கும்.
பழைய வரலாறு:
- 1956இல் மொழிவாரி மாநிலங்கள் அமைந்தபோது, ஏழு மாநிலங்களின் சட்டப்பேரவைகள் கலைக்கப்பட்டு, 1957இல் மக்களவைத் தேர்தலுடன் அந்த மாநிலத் தேர்தல்களும் நடத்தப்பட்டன. அப்படித் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட ஒரே தேர்தல் முறை பின்னர் மாறியது. மக்களவைத் தேர்தலும், மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களும் பிரிந்தன.
- ஒரு காலக்கட்டத்தில், இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு அரசியல் பகைமை காரணமாக அரசமைப்புச் சட்டக்கூறு 356-ஐப் பயன்படுத்தி மாநில அரசுகளைக் கலைத்தது, அதுவரை இருந்துவந்த தேர்தல் முறையில் ஒழுங்கற்ற தன்மையை ஏற்படுத்தியது கவனிக்கத்தக்கது. 1967இல் பல மாநிலங்களில் காங்கிரஸ் பெரும்பான்மை இழந்தது. நிலையற்ற கூட்டணி, கட்சித் தாவல்கள், அரசு கவிழ்க்கப்படுதல் போன்ற காரணங்களுக்காகப் பல்வேறு மாநிலங்களில் தனித்தனியாகத் தேர்தல்கள் நடைபெறத் தொடங்கின.
- 1967க்குப் பிறகு, 1972இல் நடக்க வேண்டிய நாடாளுமன்றத் தேர்தலை ஓராண்டுக்கு முன்னதாக நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, 1971இலேயே அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நடத்தினார்; மக்களவை - சட்டப்பேரவைத் தேர்தல்கள் பிரிந்தன. 1989இல் மத்தியில் காங்கிரஸ் பெரும்பான்மை இழக்க, அடுத்த 10 ஆண்டுகளில் பதவிக்கு வந்த எதிர்க்கட்சிக் கூட்டணி, அரசுகள் அடிக்கடி கவிழ்ந்ததால், 10 ஆண்டுகளில் ஐந்து மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்றன.
- மத்தியில் ஐந்து ஆண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி மாநிலத் தேர்தல்களில் தோற்றுவிட்டால், மத்திய அரசைப் பாதிப்பதும், மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்படுகிற கட்சி, மக்களவைத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டால், மாநில அரசுகள் கவிழ்வதும் தேர்தல் நடைமுறைகளில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தியது. தற்போது, ஒரே நாடு.. ஒரே தேர்தல் முறையால் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதைக் காரணம் காட்டி ஆட்சியைக் கலைப்பதும் இதுபோன்ற ஒரு பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.
- மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல் என்பது அரசமைப்பின் 7ஆவது அட்டவணையில் உள்ள மாநிலங்களின் பட்டியலில் உள்ளது. மாநிலச் சட்டப்பேரவையை முன்கூட்டியே கலைக்கும் உரிமை மாநில அரசுக்குத்தான் உண்டு. ஒரே நாடு.. ஒரே தேர்தல் நடைமுறை மூலமாக மாநில அரசுகளைக் கலைத்தால், அந்த உரிமைகள் பறிக்கப்பட்டுவிடும். ஆகவே, இது அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்புக்கு எதிரானது. ஆக, பதவிக் காலம் முடியாத மாநிலங்களில் சட்டப்பேரவையைக் கலைக்க வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றன.
- ஒரே நாடு.. ஒரே தேர்தல் நடத்தப்பட்டால், கறுப்புப் பணம் புழங்குவது கணிசமாகக் குறையும். இரண்டாவது, தேர்தல் செலவுகளின் சுமை குறையும். நேர விரயம், வேட்பாளர்கள் மீதான செலவின் அழுத்தமும் குறையும். சட்டப்பேரவைக்கும் நாடாளுமன்றத்துக்கும் தனித்தனியாகப் பிரச்சாரம் செய்ய வேண்டியதில்லை என்கிற வசதிகள் இருந்தாலும், அவற்றை எவ்வாறு முழுமையாகச் செயல்படுத்த முடியும் என்கிற கேள்வி எழுகிறது. அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரலாமே தவிர, அதன் அடிப்படைக் கட்டமைப்பை மாற்ற முடியாது என்பது சார்ந்து உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
- ஒரே நாடு.. ஒரே தேர்தல் திட்டத்துக்கான உயர்மட்டக் குழு 18 அரசமைப்புத் திருத்தங்களைப் பரிந்துரைத்திருக்கிறது. அவற்றில் பெரும்பாலான திருத்தங்களுக்கு மாநிலச் சட்டப்பேரவைகளின் ஒப்புதல் தேவை. இருப்பினும், இவற்றுக்குச் சில அரசமைப்புத் திருத்த மசோதாக்கள் தேவைப்படும். அவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். ஒற்றை வாக்காளர் பட்டியல், ஒற்றை வாக்காளர் அடையாள அட்டை தொடர்பாக முன்மொழியப்பட்ட சில மாற்றங்களுக்குக் குறைந்தது, பாதி மாநிலங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
- ஆகவே, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்துத் தனது அறிக்கையைச் சட்ட ஆணையம் விரைவில் கொண்டுவர வாய்ப்பு உள்ளது. அரசாங்கத்தின் மூன்று அடுக்குகளுக்கும் 2029 முதல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவும், யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நாடாளுமன்றம், சட்டப்பேரவை ஏற்பட்டால், ஒன்றிணைந்த அரசாங்கத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யவும், சட்ட ஆணையம் தயாராகி வருகிறது.
- ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது தேசியக் கட்சிகளுக்கே சாதகமாக அமையும்; இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என்று மாநிலக் கட்சிகள் கருதுகின்றன. ஒரே நாடு.. ஒரே தேர்தல் முறையை நடைமுறைப்படுத்துவதில், மத்தியிலும் மாநிலங்களிலும் ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான மோதல் போக்கு அதிகரிப்பதையும், பிரிவினைவாத சக்திகள் வலுவடைவதையும் தவிர்க்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (15 – 10 – 2024)