TNPSC Thervupettagam

உண்மையை மறைப்பதால் கரோனாவை வெல்ல முடியாது

May 6 , 2021 1359 days 568 0
  • தற்போது உலகிலேயே மிகத் தீவிரமாக கரோனா பரவிவரும் நாடு இந்தியா.
  • மூன்று நாட்களுக்கு ஒரு முறை 10 லட்சம் புதிய தொற்றுகளும் 10 ஆயிரம் இறப்புகளும் ஏற்படுகின்றன.
  • இது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் தெரிவிக்கும் தரவுகளின் படி. இந்தியாவைத் தற்போது சூறையாடிக்கொண்டிருக்கும் இரண்டாவது அலையின் தீவிரமானது அதிகாரபூர்வ எண்ணிக்கைகள் உணர்த்து வதைவிட மிகவும் மோசமாக இருக்கும்.

காரணங்கள்

  • எல்லா கரோனா தொற்றுகளையும் கரோனா இறப்புகளையும் கணக்கில் எடுத்துக்கொள்வது ஏன் இவ்வளவு கடினமாக இருக்கிறது?
  •  அறிகுறியற்ற தொற்றுகள், பரிசோதிப்பதற்கான செலவு, போக்குவரத்து போன்ற தடைகள், சமூக விலக்கம் குறித்த தயக்கத்தால் பரிசோதனை செய்துகொள்ளாமல் இருப்பது, பரிசோதனை வசதிகள் போதிய எண்ணிக்கையில் இல்லாமை போன்ற பல காரணங்களால் எல்லாத் தொற்றுகளையும் கணக்குக்குள் கொண்டுவர முடிவதில்லை.
  • மருத்துவமனைக்கு வெளியே நிகழும் கரோனா இறப்புகள், கரோனாவிலிருந்து குணமடைந்தாலும் முன்பே இருந்த இதய நோய், சிறுநீரகச் செயலிழப்பு போன்ற துணைநோய்களால் நிகழும் இறப்புகள் தவறவிடப்படுகின்றன.
  • இறப்புகளைத் தெரிவித்தல், இறப்புக்கான காரணத்துக்குச் சான்று வழங்குதல் போன்றவற்றைப் பொறுத்தவரை இந்தியா மோசமான கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது; குறிப்பாக, கிராமப்புறங்களில்.
  • 2017-ல் செய்யப்பட்ட ஒரு மதிப்பீட்டின்படி, ஐந்தில் ஒரு இறப்புதான் மருத்துவரீதியில் கணக்கில் கொள்ளப்படுகிறது.
  • கணக்கில் வராத தொற்று எண்ணிக்கையை எப்படிச் சரிபார்ப்பது? தொற்றுகள் எந்த அளவில் குறைத்துக் காட்டப்படுகின்றன என்பதை இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சீரோசர்வேக்களுடன் (serosurveys) ஒப்பிட்டுச் சரிபார்த்துக்கொள்ளலாம்.
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மேற்கொண்ட மூன்றாவது சீரோசர்வேயானது (டிசம்பர் 17, 2020-லிருந்து ஜனவரி 8, 2021 வரை) 18 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்களில் 21.5% பேரின் உடலில் கரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பணுக்கள் இருப்பதைக் கண்டறிந்தது.
  • இவர்களுக்குக் கடந்த காலத்தில் தொற்று இருந்திருப்பதை இது உணர்த்துகிறது. இந்தியாவின் 136 கோடி மக்கள்தொகையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஏறத்தாழ 59%.
  • இந்தக் கணக்கில் பார்த்தால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் கிட்டத்தட்ட 17.3 கோடிப் பேருக்கு இதுவரை தொற்று ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தமாகும்.
  • ஜனவரி 8 வரை அரசு தெரிவித்த தொற்றுகளின் எண்ணிக்கை 1.10 கோடி என்பதை வைத்துப் பார்த்தால், இந்தியாவின் கரோனா தொற்றுகளில் 6% மட்டுமே கணக்கில் வருகிறது.

இறப்புகள் குறித்த தரவுகள்

  • கணக்கில் வராத இறப்புகளின் எண்ணிக்கையை எப்படி அளவிடுவது: முதல் அலையின்போது செய்தித்தாள்களில் வெளிவந்த இரங்கல் குறிப்புகளைத் தன்னார்வலர் குழு ஒன்று சேகரித்தது. அரசு வெளியிட்ட இறப்பு எண்ணிக்கையுடன் அதை ஒப்பிட்டபோது இறப்பு எண்ணிக்கை இரு மடங்கு இருந்ததை அந்தக் குழு கண்டறிந்தது.
  • ஏப்ரலின் நடுப்பகுதியில் குஜராத்தில் ஒவ்வொரு நாளும் கரோனா தொடர்பான இறப்புகள் 73-121 என்று அம்மாநில அரசு தெரிவித்திருந்ததையும், குஜராத்தின் முன்னணிப் பத்திரிகைகளுள் ஒன்றான ‘சந்தேஷ்’ அந்த மாநிலம் முழுவதிலும் உள்ள சுடுகாடுகளுக்கும் இடுகாடுகளுக்கும் செய்தியாளர்களை அனுப்பி விசாரித்ததில் ஒவ்வொரு நாளும் 600 இறப்புகள் நிகழ்ந்ததாகச் செய்தி வெளியிட்டிருந்ததையும் ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை குறிப்பிட்டிருந்தது.
  • கரோனா இறப்புகள் எந்த அளவுக்கு அதிகம் என்பதைக் கண்டறிய ஒரு வழி, குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தில் தற்போதைய காலகட்டத்தில் எவ்வளவு இறப்புகள் நிகழ்ந்திருக்கின்றன என்பதையும், கடந்த காலத்தில் அதே பிரதேசத்தில் அதே காலகட்டத்தில் எவ்வளவு இறப்புகள் நிகழ்ந்திருக்கின்றன என்பதையும் ஒப்பிடுவதுதான்.
  • கூடுதல் இறப்புகளைக் கண்டறியும் இந்த உத்தியை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பின்பற்றியிருக்கின்றன (அமெரிக்காவில் 2020-ல் 22% கூடுதல் இறப்புகள் நிகழ்ந்திருக்கின்றன, இவற்றில் 72% இறப்புகள் கரோனா காரணமாக நிகழ்ந்தவை).
  • இந்தியா இதுபோன்ற காலரீதியிலான ஒப்பீட்டை நிகழ்த்தவில்லை. 2020 தொடர்பாகப் பொதுவெளியில் கிடைக்கும் தரவுகள் தற்போதைய கணக்கீட்டுக்கு உதவுவது எந்த வகையிலும் சாத்தியமில்லை.

இந்தியாவில் பரிசோதனைகள்

  • இந்தியாவில் எந்த அளவுக்குப் பரிசோதனைகள் நடைபெறுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள அமெரிக்காவை, அதாவது கரோனா தொற்றுகள் அங்கே உச்சத்தை எட்டிய ஜனவரி காலகட்டத்தை (நவம்பர் 1 – பிப்ரவரி 15), இந்தியாவின் தற்போதைய தொற்று அதிகரிப்புக் காலகட்டத்துடன் (மார்ச் 28 – ஏப்ரல் 27) ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
  • இந்தியாவின் தினசரி தொற்று கண்டறிதல் விகிதம் (test positivity rate) 25% ஆகவும், அமெரிக்காவில் இது 15% ஆகவும் இருக்கிறது.
  • அமெரிக்காவில் பரிசோதனைகளும் தொற்றுகளும் ஒப்பீட்டளவில் அதிகரிக்கிறது என்றால், இந்தியாவில் பரிசோதனைகள் அதிகரிக்கும் விகிதத்தைவிட தொற்றுகள் அதிகரிக்கும் விகிதம் 5 மடங்கு அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் போதுமான அளவு பரிசோதனைகள் நடத்தப்படவில்லை.
  • தொற்றுகள், இறப்புகள் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதால் என்ன பிரச்சினை? தற்போது, உச்சத்தைத் தொடும் தொற்றாலும் இறப்பு எண்ணிக்கைகளாலும் நாடு அதிர்ந்துபோயிருக்கிறது.
  • கரோனா இந்த அளவுக்கு அதிகரித்துக்கொண்டே வருவது நம் மருத்துவக் கட்டமைப்பைத் தள்ளாட வைத்திருக்கிறது.
  • முக்கியமான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் போன்றவை போதுமான அளவுக்குக் கிடைப்பதில்லை, நோயாளிகளைத் திருப்பியனுப்பும் நிலைக்கு மருத்துவமனைகள் தள்ளப்பட்டிருக்கின்றன.
  • ஆக்ஸிஜன், மருத்துவமனைப் படுக்கைகள், தீவிர சிகிச்சைப் பிரிவு போன்றவை எந்த அளவுக்குத் தேவைப்படும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. பயனுள்ள தரவுகள் இல்லாமல் துல்லியமான கணிப்புகளைச் செய்வது கடினம்.
  • உண்மை நிலை என்ன என்பதை அறிவது மக்களுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் பெருந்தொற்றின் உண்மையான நிலையை அறிந்துகொள்வதற்குப் பெரிதும் உதவும்.

நன்றி: இந்து தமிழ் திசை (06 - 05 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்