உதவி பெறும் கல்லூரிகளுக்கு மீட்சி எப்போது?
- உயர் கல்வித் துறையில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களைவிட முன்னுதாரணமாகத் திகழ்ந்தாலும், தமிழ்நாட்டில் உயர் கல்வித் துறை சார்ந்த சிக்கல்களைப் பற்றி நீண்ட விவாதங்கள் நடைபெறுகின்றன. அப்படி ஒரு சிக்கல் குறித்த நீதிமன்றத் தீர்ப்பு சமீபத்தில் நாளிதழ்களில் செய்தியாக வந்தது.
- திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஓர் அரசு உதவிபெறும் தனியார் கல்லூரியில் 2009ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட சில பேராசிரியர்களுக்கு 2020இல் கல்லூரிக் கல்வி இயக்குநரகம் பணிநியமன அங்கீகாரம் வழங்கியது. இருப்பினும் நீண்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, 2022 ஜூலை மாதம்தான் இப்பேராசிரியர்கள் அரசு ஊதியத்தைப் பெறமுடிந்தது.
- 2009 முதல் பணி செய்ததற்கான ஊதியத்தை வழங்குமாறும் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஆனால், அதை நடைமுறைப்படுத்தாமல் மேல்முறையீட்டுக்குச் சென்றது உயர் கல்வித் துறை. இதை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடுமையாகச் சாடியது. கடந்த பல ஆண்டுகளாகவே பரவலாக இருக்கும் பிரச்சினை இது!
- தமிழகத்தில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரிகளில் அரசு உதவிபெறும் பாடப்பிரிவில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்துவதும், நிரப்பப்பட்ட இடங்களுக்கு ஊதியம் பெறுவதற்கான அங்கீகாரம் வழங்காமல் காலதாமதப்படுத்துவதும் தமிழக உயர் கல்வித் துறையில் கடந்த 20 ஆண்டுகளாக முளைத்துள்ள புதிய சிக்கல்கள். இது போன்ற சிக்கல்கள் அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர் பணி நியமனத்தில் ஏன் வருகிறது என்பதற்கான பின்னணியை அரசு உதவிபெறும் கல்லூரிகள் உருவான வரலாற்றுடனும், அதில் ஆசிரியர் பணி நியமனங்களில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களிலிருந்தும் புரிந்துகொள்ளலாம்.
உட்ஸ் அறிக்கை:
- இந்தியாவில் அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கான கருத்துரு 1854ஆம் ஆண்டு வெளிவந்த உட்ஸ் அறிக்கையின் (Wood’s Dispatch) வாயிலாகத்தான் கிடைத்தது. இதன் காரணமாக அரசுக் கல்லூரிகளுடன் சேர்ந்து அரசு உதவிபெறும் கல்லூரிகளும் வளர்ச்சி பெற்றன. 1871ஆம் ஆண்டின் கணக்குப்படி, சென்னை மாகாணத்தில் நான்கு அரசுக் கல்லூரிகளும், ஏழு அரசு உதவிபெறும் தனியார் கல்லூரிகளும் செயல்பட்டுவந்தன.
- 1981ஆம் ஆண்டின் கணக்குப்படி தமிழகத்தில் செயல்பட்ட மொத்த கலை-அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 195 (இதில் 51 அரசுக் கல்லூரிகள்; 144 அரசு உதவிபெறும் கல்லூரிகள்) ஆக உயர்ந்தது. 1980களின் தொடக்கம் வரை, அரசு, அரசு உதவிபெறும் தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் மட்டுமே இருந்தன.
- மேற்குலக நாடுகளின் அழுத்தம் காரணமாக 1990களில் மத்திய அரசு பொருளாதாரக் கொள்கையில் மாற்றங்கள் கொண்டுவந்தது. இதன் விளைவாகக் கல்வி போன்ற சேவைகளுக்கான நிதி குறைக்கப்பட்டதுடன், கல்வியில் முழுமையான தனியார்மயம் ஊக்குவிக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் தமிழக அரசு சுயநிதிக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதி வழங்கியது. ஆனால், புதிதாக அரசு உதவிபெறும் கல்லூரிகள் தொடங்கப்பட அனுமதிக்கவில்லை.
- தனியார் கல்லூரிகள் பெருகின; ஆசிரியர்களின் பிரச்சினைகளும் அதிகரித்தன. 1970களில் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் ஊதியம் வழங்குவதில் சிக்கல்கள் தோன்றின. பல கல்வி நிறுவனங்கள் பேராசிரியர்களைத் தன்னிச்சையாகப் பணியிலிருந்து நீக்கின. இந்த அவலங்களுக்கு எதிராக ஆசிரியர் சங்கங்கள் அக்காலக்கட்டத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்தின.
- அதே காலக்கட்டத்தில் கல்லூரி ஆசிரியர்களுக்கு இடையில் நிலவும் ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துத் தமிழ்நாடு மட்டுமின்றி, இந்திய அளவிலும் ஆசிரியர் அமைப்புகள் போராடின. இந்தப் பின்னணியில், பல்கலைக்கழக மானியக் குழு, உயர் கல்வி தொடர்பான பிரச்சினைகளைக் களைவதற்கு அரசுக்கு வழங்கிய அறிக்கையை 1974 நவம்பர் மாதம் நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டது.
- இருப்பினும் தமிழ்நாட்டுக் கல்லூரி ஆசிரியர்களின் நிலைமையில் பெரிதாக மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. எனவே, ஆசிரியர் இயக்கங்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டன. தமிழ்நாடு தனியார் கல்லூரி ஒழுங்காற்றுச் சட்டம், பணிப் பாதுகாப்பு, பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்த ஊதியம், ஊதியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் பெற்றது எனப் பல்வேறு நலன்களை ஆசிரியர்கள் போராட்டங்களின் மூலம் பெற்றனர்.
சுயநிதிக் கல்லூரிகளும் ஆசிரியர்களும்:
- 1980களில் அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களின் நிலைமையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. இந்நிலையில், புதிதாகத் தோன்றிய சுயநிதிக் கல்லூரி/பிரிவுகளில் பணிப் பாதுகாப்பின்றிக் குறைவான ஊதியத்தில் ஆசிரியர்கள் பணிபுரியும் புதிய சிக்கல் உருவானது.
- கல்வி தனியார்மயமானதன் விளைவாகக் கடந்த 40 ஆண்டுகளில் பல்கிப் பெருகியுள்ள சுயநிதிக் கல்லூரி/பிரிவுகளில் மோசமான பணிச் சூழலில் பல ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதன் காரணமாகவே பணிப் பாதுகாப்புடன் கூடிய நல்ல ஊதியத்தைப் பெறும் வாய்ப்புள்ள அரசு உதவிபெறும் ஆசிரியர் பணியைப் பெறுவதற்குக் கடும் போட்டி நிலவுகிறது.
- இப்போட்டியைப் பயன்படுத்தி, அரசு உதவிபெறும் கல்லூரிப் பணியிட நியமனங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இப்படியான குற்றச்சாட்டுகள் இன்றி, விதிவிலக்காகச் சில கல்லூரிகள் மட்டுமே நியாயமான முறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதாகவும், அப்படியான கல்லூரிகளின் பணி நியமனங்களுக்குத்தான் உயர் கல்வித் துறை அங்கீகாரம் தராமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
- ஏழை எளிய குடும்பங்களில் இருந்து வரும் தகுதியானவர்களுக்கு இது போன்ற கல்லூரிகளில்தான் ஓரளவுக்காவது பணிபுரியும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. வாய்ப்பு கிடைத்தாலும் பணி நியமன ஆணை, அரசு ஊதியத்தைப் பெறுவதற்கு நீதிமன்றத்துக்கும் உயர் கல்வித் துறை அலுவலகங்களுக்கும் அவர்கள் அலைய வேண்டிய நிலை உள்ளது.
அரசு செய்ய வேண்டியது என்ன?
- சமூக நீதி பேசும் திமுக அரசு, இந்தப் பிரச்சினையில் உரிய கவனம் செலுத்த வேண்டும். நீண்ட நாள்களாகப் பணி நியமன ஆணை கிடைக்காமலும், ஆணை கிடைத்தும் உரிய ஊதியமின்றிப் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உடனடியாகப் பணி நியமன ஆணையுடன் ஊதியத்தையும் வழங்குவது அவசியம்.
- தமிழ்நாட்டின் உயர் கல்வித் துறையில் நிலவும் இத்தகைய குளறுபடிகளால் கல்வியின் தரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. அரசுக் கல்லூரிகளுக்கு இணையாக ஏழை எளிய மாணவர்களின் கல்விக் கனவை நிறைவேற்றும் இடமாக அரசு உதவிபெறும் கல்லூரிகளே உள்ளன.
- எனவே, இந்தச் சிக்கல்களைக் களைந்து இப்பணியிடங்களை நியாயமாக நிரப்புவது ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் எதிர்காலத்தோடு தொடர்புடையது என்பதை அரசு உணர வேண்டும். மேலும் சுயநிதிக் கல்லூரி/ பிரிவுகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்குப் பணிப் பாதுகாப்புடன் அரசு உதவிபெறும் பிரிவில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கப்படுவது இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்கு உதவும்.
- உயர் கல்வியை மேன்மைப்படுத்தும் மாற்றங்களைப் போராட்டங்களின் மூலமே சாத்தியப்படுத்த முடியும் என்பதைக் கடந்த காலங்களில் நடைபெற்ற ஆசிரியர்களின் போராட்டங்கள் நமக்கு உணர்த்துகின்றன. எனினும், அந்த அழுத்தம் ஆசிரியர்களுக்கு ஏற்படாத வகையில் அரசு கரிசனத்துடன் நடந்துகொள்ள வேண்டும்!
நன்றி: இந்து தமிழ் திசை (14 – 09 – 2024)