உதவும் கரங்களாகும் உண்மையான நண்பர்கள்
- நம் ஆடை அவிழும்போது யாரும் அழைக்காமலேயே நமது கைகள் உதவிக்கு வந்து நம் மானத்தைக் காப்பாற்றுகின்றன. அப்படித்தான் ஒரு நல்ல நட்பும். நம்மால் நல்ல நட்புகளைத் தக்க வைத்துக் கொள்ளவும், தீய நட்புகளை விலக்கி வைக்கவும் முடியும். உறவுகள் சுருங்கி வரும் இந்நாள்களில் நட்பின் பெருமையை காலம் நமக்கு கொடுத்த மிகப்பெரிய கொடையாகக் கருதி வளர்க்க வேண்டும்.
- நட்புக்கு வயது இடைவெளி, பாலினம், மதம், கலாசாரம், தூரம், மொழி இவையெல்லாம் கிடையாது. நட்பு என்பது இரு தரப்பினருக்கும் ஆதரவு, மகிழ்ச்சி, பாசம், துன்பகாலத்தில் உதவுதல் போன்ற சிறப்புகளைக் கொண்டது. குழந்தைப் பருவத்தில் நட்புகள் ஏறத்தாழ அதே வயதுடையவர்களுடன் மட்டுமே அமைகின்றன. இவை பெரும்பாலும் அதே பள்ளியிலும் பகுதியிலும் வாழும் குழந்தைகளுடன் ஏற்படுபவை. ஒரே மாதிரியான விருப்பங்கள், திறமைகள், வயது ஆகியவற்றின் தாக்கம் இந்நட்பில் அதிகம் காணப்படும். காரணமின்றி ஒட்டிக்கொள்வதும், வெட்டிக்கொள்வதும் குழந்தைக் கால நட்பில் அடிக்கடி நிகழும்.
- குழந்தைகளின் நட்புகளில் நிரந்தரத்தன்மை காணப்படுவதில்லை. ஆனால், பழக்கத்தில் இருக்கும் நண்பர்களோடு மிகவும் பாசத்துடன் நடந்துகொள்வார்கள். தம் உணவுகளைப் பகிர்ந்து கொள்வதும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் நண்பனுடன் விளையாடுவதும் இவர்களின் விருப்பமான செயல்பாடுகள் ஆகும். வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நட்பாகவும் இவை பின்னாள்களில் அமைய வாய்ப்புகள் உண்டு. குழந்தைகள் முதன் முதலாக குடும்பங்களுக்கு வெளியே உள்ள மற்றவர்களுடன் தொடர்புகொள்ள இந்த நட்புகள் உதவுகின்றன.
- வாலிப வயது நட்புகள் சிக்கலானவை. பள்ளியில் மேல்வகுப்பிலும், கல்லூரியில் பட்டப் படிப்பிலும் பொதுவாக இவர்கள் படிப்பார்கள். பெற்றோர்கள்கூட அவர்களுடன் நட்புணர்வுடன்தான் பழக வேண்டியிருக்கும். "எல்லாம் தனக்கு தெரியும்' என்னும் எண்ணத்தில் அவர்களுடைய நடை உடை பாவனைகள் இருக்கும். அவர்களையும், அவர்களுடைய கொள்கைகளையும் மதிப்பவர்களையும் மட்டுமே இவர்கள் தனது நட்பு வட்டாரத்தில் சேர்த்துக் கொள்வர்.
- இவர்களது நட்புகள் பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வுகளைப் பார்ப்பது இல்லை. எதிர்பாலின கவர்ச்சிகள் சிலரை தடுமாறச் செய்யலாம். அதனால் படிப்பிலோ, செய்யும் தொழிலிலோ கவனம் குறையலாம். கவனம் தேவை. ஆனால், எடுத்துக் கொண்ட இலட்சியத்தை நிறைவேற்ற இறுதி வரை பாடுபடுவார்கள். நட்புக்காக உயிரையும் கொடுக்கத் துணிவார்கள். சமீபத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இவர்களின் ஆளுமைசக்தியை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது.
- பணியிட நட்புகள் பெரும்பாலும் நிரந்தரமானவை அல்ல. பணிசெய்யும் இடத்துக்கு ஏற்ப தனது நட்புகளை மாற்றிக் கொள்வது அவர்களுக்கு அவசியமாக இருக்கும். பணியிடத்தில் அனைவருடனும் விருப்பு வெறுப்பு எதுவுமின்றி நடுநிலையுடன் நட்பு பாராட்டுதல் நல்லது. அலுவலக நட்பில் விரிசல் ஏற்பட்டால், நட்புக் காலத்தில் பகிரப்பட்ட தனிப்பட்ட தகவல்கள் வெளிச்சத்துக்கு வர வாய்ப்புகள் உள்ளன. எனவே, இவர்கள் தங்கள் நட்புகளுடன் கவனமாக இருக்க வேண்டும். உணவு இடைவேளை, பணி நேரம் முடிந்தபின் சற்று நேரம் செலவிடுவது, குழு விளையாட்டுகளில் ஈடுபடுவது ஆகியவற்றின் மூலம் பொதுவாக இவ்வகைத் தொடர்புகள் உறுதிப்படுகின்றன.
- முதுமை காலத்தில் நண்பர்கள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள். அவர்களின் உதவி பிறருக்கு மிகவும் குறைவாகவே தேவைப்படும். அதனால் இவர்களை நேரில் சந்தித்துப் பேசும் நட்புகளும் மிகவும் குறைவாகவே இருக்கும். அப்படி சந்திப்பவர்களும் ஓய்வூதிய சந்தா வாங்க வருபவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு வரக்கூடிய தொலைபேசி அழைப்புகள்கூட மிகக் குறைவாகவே இருக்கும். ஆனால், காலம் செல்ல செல்ல முதியோர்களுக்கு தனிமை வந்து ஒட்டிக் கொள்ளும். நட்பு வட்டாரமும் மிகவும் சுருங்கிவிடும்.
- முகநூல் நண்பர்களில் உண்மையானவர்களை அடையாளம் கண்டு பழகுவது நல்லது. எந்தச் சூழ்நிலையிலும் தன் அந்தரங்க தகவல்களையும், படங்களையும் சமூகவெளிகளில், குறிப்பாக பெண்கள் தவிர்ப்பது நல்லது. இவற்றின் மூலம் புதிய தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும்.
- வாழ்க்கையில் நாம் கொண்டுள்ள உள்ளார்ந்த நட்புகளுக்கு இதயபூர்வமான பாராட்டுகளை அவ்வப்போது புன்முறுவல்களுடன் தெரிவிக்க வேண்டும். நண்பர்களுடன் உள்ள பிணைப்பை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ள தேவையான முனைப்புகளை முன்னெடுப்பதில் சுணக்கம் காட்டக் கூடாது. உண்மையான நட்புகளை கல்விக் கூடங்களிலும், பணியிடங்களிலும், பொதுவெளிகளிலும் இனம் கண்டு வாழ்வில் சேர்த்துக் கொள்வதில் ஆர்வத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும். வறுமையிலும், செழுமையிலும் நட்புகளுடன் இணைந்தே இருக்க வேண்டும்.
- குழந்தைப் பருவத்தில் ஓடி விளையாட ஒரு நட்பு. காளைப் பருவத்தில் ஊர் சுற்ற ஒரு நட்பு. வாலிப பருவத்தில் பேசி ரசிக்க ஒரு நட்பு. முதிர்ந்த பின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு நட்பு. இப்படி நட்புகள் ஆயிரம் இருந்தும் அதன் தேவைகள் குறைவதில்லை. துயரின்போது உதவும் கரங்களாகும் நட்பு ஒரு பொழுதும் பிறரின் முன் நம்மை தலைகுனிய வைப்பதில்லை.
- ஒரு நல்ல நண்பன் நூறு உறவினர்களுக்கு ஈடானவன். நல்ல நண்பர்களாய் தொடர்ந்து வாழ்வதில்தான் நட்பின் வெற்றி அடங்கி இருக்கிறது. நட்புகளில் காணும் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் பிணைப்புகளை தொடர்ந்து வளர்த்துக்கொள்வோம். நட்பில் கருணை, அன்பு, சரியான புரிதல் ஆகியவற்றை வளர்த்துக் கொண்டு, சிறந்த நண்பர்களாக தொடர்ந்து பரிமளிக்க அடுத்த தலைமுறையினருக்கு முன்மாதிரியாக வாழ்வோம்.
நன்றி: தினமணி (30 – 08 – 2024)