TNPSC Thervupettagam

உயர் கல்விச் சேர்க்கை முறையில் தலைகீழ் மாற்றம்!

December 12 , 2024 16 days 47 0

உயர் கல்விச் சேர்க்கை முறையில் தலைகீழ் மாற்றம்!

  • புதிய தேசியக் கல்விக் கொள்கை 2020 இன்படி பட்டப்படிப்புகளின் சேர்க்கை விதிமுறைகள் பல்கலைக்கழக மானியக் குழுவால் (யூஜிசி) மாற்றி அமைக்கப்பட்டு, நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இது அரசிதழில் (gazette) வெளியான தேதியிலிருந்து நடைமுறைக்கு வரவிருக்கிறது. மத்திய / மாநில அரசுச் சட்டங்களின்படி உருவாக்கப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்.
  • இதனை ஏற்காத, நடைமுறைப்படுத்தாத பல்கலைக்கழகங்கள், யூஜிசி திட்டங்களில் பங்கேற்பதற்குத் தடை விதிக்கப்படலாம். பட்டங்கள் வழங்குவதற்குத் தடையாணை பிறப்பிக்கப்படலாம். தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் யூஜிசி பட்டியலில் இருந்தே அகற்றப்படலாம். பல நிபந்தனைகளோடு வந்திருக்கும் யூஜிசி சேர்க்கை விதிமுறைகள் என்ன சொல்கின்றன?

புதிய மாற்றங்கள்:

  • கல்வி ஆண்டு என்பது இனிமேல் இரண்டு. ஜனவரி / பிப்ரவரி மற்றும் ஜூலை / ஆகஸ்ட். இரண்டு பருவத்​திலும் சேர்க்கை நடைபெறும். 12ஆம் வகுப்பில் எந்தப் பாடம் எடுத்துப் படித்​திருந்​தா​லும், பட்டப் படிப்பில் எந்தப் படிப்​புக்கும் விண்ணப்​பிக்​கலாம். ஆனால், அந்தந்தப் பட்டப் படிப்​புக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.
  • இந்தச் சேர்க்கை முற்றாக நடைமுறைக்கு வரும்​போது, நாடு முழுவதும் தனிப் பயிற்சி மையங்கள் நீக்கமற நிறைந்​திருக்கும் என்பதில் ஐயமில்லை. முதுகலைப் பட்ட வகுப்​புக்கும் அதேபோல்​தான். எந்த இளநிலைப் பட்டம் படித்​தவரும் எந்தவொரு முதுகலைப் பட்டப் படிப்பையும் தேர்வு செய்ய​லாம். அதற்கும் நுழைவுத் தேர்வு உண்டு.
  • பட்டப் ​படிப்பில் மூன்று வருடப் படிப்பு நீடிக்​கும். நான்கு வருடப் படிப்பு​களும் வரவிருக்​கின்றன. முதுகலைப் பட்டப் படிப்பில் ஒரு வருட, இரண்டு வருடப் படிப்புகள் உண்டு. இளநிலை​யிலும் முதுகலை​யிலும், ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்பு​களைத் தேர்வுசெய்து படிக்​கலாம்.‌ தேர்வுகள், மதிப்​பீட்டு முறைகள், நேரிடையான எழுத்துத் தேர்வு, இணையவழித் தேர்வு, வாய்மொழித் தேர்வு என எப்படி வேண்டு​மா​னாலும் இருக்​கலாம்.
  • அதனைச் சம்பந்​தப்பட்ட பல்கலைக்​கழகங்கள் முடிவுசெய்​யும். இரட்டைப் பட்டம் படிக்​கலாம் என்பதால், அதற்குத் தக்கவாறு வருகைப்​ப​திவைக் குறைத்​துக்​கொள்​ளலாம். அது எவ்வளவு என்பது சம்பந்​தப்பட்ட பல்கலைக்​கழகங்​களின் முடிவைப் பொறுத்தது.
  • பட்டப் படிப்பில் சேர்ந்து ஓராண்​டில், முதன்மைப் பாடத்தில் குறைந்​த​பட்சம் 40 புள்ளி​களும் (Credit) கள அனுபவத்தில் 4 புள்ளி​களும் பெற்றிருந்​தால், அவர் இளநிலைச் சான்றிதழ் (Certificate) பட்டத்​துடன் வெளியேறலாம் அல்லது தொடர்ந்து இரண்டாம் ஆண்டு படிக்​கலாம்.‌
  • இரண்டாம் ஆண்டில் 80 புள்ளிகள் மற்றும் களப் பணி புள்ளிகள் நான்கு இருந்​தால், அவர் பட்டயத்​துடன் வெளியேறலாம் அல்லது மூன்றாம் ஆண்டு தொடர்ந்து படிக்​கலாம். மூன்றாம் வருட முடிவில் 120 புள்ளிகள் பெற்றிருந்தால் அவருக்குத் தற்போது வழங்கப்​படு​வதுபோல் பட்டம் வழங்கப்​படும்.
  • மூன்றாம் ஆண்டில் இரண்டு முதன்மைப் பாடங்கள் எடுத்துப் படித்​தால், அவருக்கு ஒருங்​கிணைந்த இரண்டு பாடத்​துக்கான பட்டம் (Integrated Double Major Degree) வழங்கப்​படும். நான்காம் ஆண்டில் தொடர்ந்து படித்தால் இளங்கலை ஆனர்ஸ் பட்டம் பெறலாம். முதுகலை முதலாண்டு படிப்பில் 40 புள்ளிகள் பெற்றால் முதுகலைப் பட்டயம் (P.G. Diploma) பெறலாம். அல்லது தொடர்ந்து இரண்டாம் ஆண்டு படித்தால் முதுகலைப் பட்டம் வழங்கப்​படும். பட்டப் படிப்பின் முதன்மைப் பாடத்தில் குறைந்​த​பட்சம் 50% புள்ளிகள் எடுக்க வேண்டும். மீதமுள்ள புள்ளி​களைக் கள அனுபவம், வேறு புலம் சார்ந்த பாடங்​களைப் படித்து எடுத்​துக்​கொள்​ளலாம்.
  • இங்கு புள்ளிகள் என்பது, ஒரு பருவத்​துக்கான பாடங்களை, ஒரு வாரத்தில் நடத்திடத் தேவைப்​படும் பாட வேளைகளைக் குறிக்​கிறது. பட்டப் படிப்பில் இப்போது இரண்டு வகைகள் உருவாக்​கப்​பட்​டுள்ளன. ஒன்று, முடுக்​கி​விடப்பட்ட பட்டப் படிப்புத் திட்டம் (Accelerated Degree Programme - ADP). மூன்று அல்லது நான்கு ஆண்டு​களுக்கான பட்டப் படிப்பை ஒரே ஆண்டில் முடிக்கும் முறை இது. ஒரு பட்டப் படிப்பில் சேர்க்​கப்​படும் 10% மாணவர்கள் இதற்குத் தேர்வு செய்யப்​படு​வார்கள். முதல் அல்லது இரண்டாம் பருவத்தில் மாணவர்கள் இதற்கு விண்ணப்​பிக்​கலாம். இப்படி ஓராண்டில் முடிப்​ப​தற்குத் தகுதி இருக்​கிறதா என்று ஆராய ஒரு குழு அமைக்​கப்​படும்.
  • இது இளங்கலைப் பட்டப் படிப்​புக்கு மட்டுமே. மற்றொன்று - விரிவடைந்த பட்டப் படிப்பு முறை (Extended Degree Programme - EDP). குறிப்​பிட்ட பட்டப் படிப்பு முடியும்வரை ஒரு பருவத்தின் குறைந்​த​பட்சப் புள்ளி​களைப் பெறலாம். அதற்குக் குறைவாகவும் பெறலாம். விரும்​பும்போது அல்லது முடியும்போது மீதமுள்ள புள்ளி​களைப் பெறலாம். இதற்கும் முதல் அல்லது இரண்டாம் பருவத்தில் விண்ணப்​பித்து அனுமதி பெற்றுக்​கொள்ள வேண்டும்.
  • இந்தச் சேர்க்கை முறை இந்திய உயர் கல்விச் சேர்க்கை முறையில் தலைகீழ் மாற்றம் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய சேர்க்கை நடைமுறையை அனைத்து மாநிலங்​களும் அதன் சட்டத்தின் கீழ் உருவாக்​கப்பட்ட பல்கலைக்​கழகங்​களில் நடைமுறைப்​படுத்த வேண்டும். இதனை ஏற்க மாட்டோம்; மாற்று கல்விக் கொள்கை உருவாக்கி நடைமுறைப்​படுத்துவோம் என்று அறிவித்​துள்ள மாநிலங்​களும் நடைமுறைப்​படுத்த வேண்டும் என்பது குறிப்​பிடத்​தக்கது.

முக்கியக் கேள்விகள்:

  • மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று கூறக் கூட்டாட்சி முறையில் மாநிலங்​களுக்கு உரிமை உண்டா இல்லையா என்பது முதல் கேள்வி. எப்போது வேண்டு​மா​னாலும் வெளியேறலாம். எப்போது வேண்டு​மா​னாலும் உள்ளே வரலாம் என்கிற நெகிழ்வுத்​தன்​மையில் வெளியேறுவது எளிது.
  • மீண்டும் சேர்ந்து படிப்பது கடினம். பல கல்வி​யாளர்கள், கல்வி நிறுவனங்கள் இதைச் சுட்டிக்​காட்டி உள்ளனர். முந்தைய தொழில் கல்விப் பயிற்சிச் சான்றிதழ், பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு எல்லா​வற்றுக்கும் வேலைவாய்ப்பு சார்ந்த தகுதி தீர்மானம், தேவைகள் உள்ளன. பட்டப் படிப்பில் சான்றிதழ், பட்டயம் ஆகிய பிரிவினை​களின் தேவை என்ன என்றும் கேள்வி எழுகிறது.
  • எல்லாம் நுழைவுத் தேர்வு எனில், பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் எதற்கு என்று கேள்வி​களும் முன்வைக்​கப்​படு​கின்றன. முறை சார்ந்தும் முறை சாராமலும் கற்றுத் தெரிந்​து​கொண்டது (Prior Learning) பட்டப் படிப்பில் முக்கிய அங்கம் ஆகப்போகிறது. குறைந்​த​பட்சப் புள்ளிகள் எடுக்க வேண்டும். தனித் திறன்கள், அறிவு, அனுபவம் என இது வரையறை செய்யப்​படு​கிறது. இந்த வரையறை ஆழமான சிக்கல்கள் நிறைந்தது.
  • குடும்பத் தொழில், சாதித் தொழில் என ஐயங்கள் நீளும். மூன்றாண்டு படிப்பை ஓராண்டில் முடிக்​கலாம் என்றால், அதில் ஏன் பத்து விழுக்காடு நிபந்தனை, அதற்கு மேல் விரும்​பி​னால், தகுதி இருந்​தால், கொடுத்தால் என்ன தவறு என்றும் கல்வி​யாளர்கள் கேட்கின்​றனர்.
  • எப்போது வேண்டு​மா​னாலும் உள்ளே வரலாம்; வெளியேறலாம் என்கிற முறையால் பெரும் மாற்றங்கள் ஏற்படும். கல்லூரி, பல்கலைக்​கழகங்​களில் நிரந்தரப் பேராசிரியர்​களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்​து​விடும். முற்றிலும் கௌரவப் பேராசிரியர்கள் அல்லது நிரந்தரம் இல்லாத பணி என்கிற நிலை நிரந்தரம் ஆகிவிடும். ஆக, புதிய சேர்க்கை விதிமுறைகளை மாநில அரசுகளும் கல்வி நிறுவனங்​களும் எப்படி எதிர்​கொள்​ளப்​போகின்றன என்பது மிக முக்கியமான கேள்வி!

நன்றி: இந்து தமிழ் திசை (12 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்