- அண்மையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, பெரியார் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் ஆண்களைவிடப் பெண்கள் அதிக எண்ணிக்கையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர் என்றும் இதுதான் சம உரிமைக்காக பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் செய்த சாதனை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
- ஆராய்ச்சிப் படிப்புகளில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதைத் திராவிட இயக்கத்தின் சாதனையாக அமைச்சர் குறிப்பிட்ட அதே நாளில், நடப்புக் கல்வியாண்டில் அரசுக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 2,423 கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஆறு மாதங்களுக்கான தொகுப்பூதியத்தை அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டது.
- அக்டோபர், நவம்பர் மாதங்களுக்கான தொகுப்பூதியம் டிசம்பர் அரசாணைக்குப் பிறகுதான் வழங்கப்படுகிறது.
- உயர் கல்வியில் பெண்களின் சாதனைக்கு அரசும் உயர் கல்வித் துறையும் அளிக்கின்ற பூங்கொத்து என்பது அவர்களைக் கெளரவ விரிவுரையாளர்களாக்கித் தொகுப்பூதியத்துக்காகக் காத்திருக்க வைப்பதாக இருக்கிறது என்பதுதான் எதார்த்தம்.
- அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கல்வியைக் கொண்டுபோய்ச் சேர்த்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டை ஆண்டுவரும் திராவிடக் கட்சிகளின் சாதனை என்பதை மறுக்க முடியாது.
- எனினும், தமிழ்நாட்டில் உயர் கல்வி பெற்றவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் அமைப்பு சாரா வேலைகளையே நம்பியுள்ளனர் என்பதையும் பெரும்பாலானவர்கள் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் பயன்களைப் பெற முடியாத நிலையில் உள்ளனர் என்பதையும் பொருளியலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
- முறைசாரா வேலைவாய்ப்பு, கூலிச் சமநிலையின்மை இரண்டுக்கும் கடந்த மூன்று தசாப்தங்களாகத் தமிழ்நாட்டில் நிலவிவரும் மோசமான கல்விச் சூழலே காரணம் என்று அவர்கள் கருதுகின்றனர்.
- மோசமான கல்விச் சூழலுக்கு அரசு உயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களாக உரிய கல்வித் தகுதிகளைக் கொண்டவர்கள், நிரந்தர அடிப்படையில் நியமிக்கப்படாததும் ஒரு முக்கியமான காரணம்.
- தமிழ்நாட்டில் ஆராய்ச்சிப் படிப்புகளில் ஆர்வமுடன் சேர்ந்து முனைவர் பட்டங்களைப் பெறுவோர் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் போதுமான அளவில் இங்கு இல்லை.
- தனியார் துறை சார்ந்த ஆய்வு நிறுவனங்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவு.
- ஆராய்ச்சிப் பட்டங்களைப் பெற்றவர்களின் முன்னுள்ள வேலைவாய்ப்பு என்பது பெரும்பாலும் அரசு, தனியார் கல்வி நிறுவனங்களில் ஆசிரியராகச் சேர்வதுதான்.
- ஆனால், அரசுக் கல்லூரிகள் என்றாலே பெரிதும் கெளரவ விரிவுரையாளர்களைக் கொண்டே நடத்தப்படும் கல்லூரிகள் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது.
- பல்கலைக்கழகப் பேராசிரியர் நியமனங்கள் எழுத்துத் தேர்வுகளின்றி நேர்காணல் அடிப்படையிலேயே முடிவாகின்றன.
- இந்நிலையில், முனைவர் பட்டப் படிப்புகளுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் இல்லை என்பதே நிதர்சனம்.
- கலை, அறிவியல் துறைகளில் முனைவர் பட்டதாரிகள், கூடுதலாக பி.எட்., படிப்பை முடித்து விட்டுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களாகும் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கிறார்கள்.
- உயர் கல்வியில் பெண்களின் பெருமை பேசுகிற நேரத்தில், இந்த எதார்த்த நிலையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அரசு நடத்தும் உயர் கல்வி நிறுவனங்களில் நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (17 - 12 - 2021)