TNPSC Thervupettagam

உயர்கல்வியில் இடையில் வெளியேறும் வாய்ப்பு

September 30 , 2023 469 days 333 0
  • தேசியக் கல்விக் கொள்கை 2020 இன்படி, உயர்கல்விப் படிப்புகளில் மாணவர்கள் எந்த ஆண்டிலிருந்தும் வெளியேறிவிட்டுப் பின்னர் மீண்டும் நுழைவதற்கான (Multiple Entry and Exit System) வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இப்படியான ஏற்பாடு இந்தியச் சூழலுக்கு ஒத்துவராமல் போகலாம் என கல்விக்கான நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்திருக்கிறது. இதையடுத்து, இது தொடர்பான விவாதங்கள் எழுந்திருக்கின்றன.
  • புதிய தேசியக் கல்விக் கொள்கையின்படி, உயர் கல்விப் படிப்புகளில் சேரும் மாணவர்கள் அந்தப் படிப்பின் எந்த ஆண்டில் வேண்டுமானாலும் வெளியேறலாம்; வெளியேறும் மாணவர் எத்தனை ஆண்டுகளை நிறைவுசெய்திருக்கிறாரோ அதற்கு உரிய சான்றிதழ் வழங்கப்படும். வெளியேறிய மாணவர் விரும்பும்போது அந்தப் படிப்பை விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்பும் வழங்கப்படும்.
  • இளநிலை, முதுநிலைப் பட்டப்படிப்புகள், முனைவர் ஆய்வுப் பட்டங்களுக்கு இது பொருந்தும். இது உயர்கல்விப் படிப்புகளை நெகிழ்வுத்தன்மை மிக்கதாகவும் வாழ்நாள் முழுவதுமான கற்றலுக்கு வழிவகுப்பதாகவும் மாற்றும் திட்டம் என்பது தேசியக் கல்விக் கொள்கையை ஆதரிப்பவர்களின் வாதம். அதேநேரம், இது கல்வி இடைநிற்றலை அதிகரிக்கும்; பட்டப்படிப்புகளின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிடும் என்கிற விமர்சனமும் முன்வைக்கப் படுகிறது.
  • இந்தப் பின்னணியில், பாஜக மாநிலங்களவை உறுப்பினர் விவேக் தாகுர் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக் குழு, இந்த விவகாரம் குறித்த தனது பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கையை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை அதிகம் என்பதால் ஒவ்வோர் ஆண்டும் உயர்கல்விப் படிப்புகளில் சேரக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்.
  • இந்தப் பின்னணியில் மாணவர்கள் குறிப்பிட்ட பட்டப்படிப்பின் எந்த ஆண்டில் வேண்டுமானாலும் வெளியேறி, மீண்டும் சேர்ந்துகொள்ளலாம் என்னும் வாய்ப்பை வழங்கினால், குறிப்பிட்ட கல்வி ஆண்டில் எத்தனை மாணவர்கள் இடையில் வெளியேறுவார்கள், எத்தனை மாணவர்கள் ஒவ்வொரு வகுப்பிலும் சேர்வார்கள் என்பதைக் கணிப்பது கடினமாக இருக்கும். இது மாணவர்-ஆசிரியர் விகிதத்தைப் பாதிக்கும் என்கிறது நிலைக் குழுவின் அறிக்கை.
  • அதேபோல் இந்தியாவில் உயர்கல்வி நிலையங்களின் எண்ணிக்கையில் புவியியல்ரீதியான ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. குறிப்பாக, கிராமப்புறங்களில் உயர்கல்வி நிலையங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனாலும் இந்த விஷயத்தில் பல சிக்கல்கள் உருவாகலாம் என்று கூறப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
  • அதே நேரம், உயர்கல்விப் படிப்புகளில் எந்த ஆண்டில் வேண்டுமானாலும் வெளியேறிவிட்டுப் பின்னர் மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்பை வழங்குவது, மாணவர்களுக்குக் கல்வி சார்ந்த நெகிழ்வுத்தன்மையையும் தெரிவுகளையும் அதிகரிக்கும் என்பதை நாடாளுமன்ற நிலைக் குழு அங்கீகரித்துள்ளது.
  • மாணவர்களைப் பாதிக்காமல் இதை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் பரிந்துரைத்துள்ளது. பல்கலைக்கழகங்கள், பிற உயர்கல்வி நிலையங்கள், இவற்றுக்கான ஒழுங்காற்று அமைப்புகள் ஆகியவற்றுடன் மத்தியக் கல்வி அமைச்சகம் விரிவான கலந்துரை யாடலை நடத்தி, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் என்று கூறியுள்ளது.
  • ஆளும்கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தலைமை வகிக்கும் குழு, தேசியக் கல்விக் கொள்கையின் குறிப்பிட்ட அம்சம் குறித்து வழங்கியுள்ள இந்தப் பரிந்துரைகள் மிகுந்த கவனத்துக்கு உரியவை. இது தொடர்பாக மத்திய அரசு மனம் திறந்து பரிசீலிக்க வேண்டும். இதில் எந்த விதமான அரசியலுக்கும் இடம் அளிக்கப்படக் கூடாது. தேசியக் கல்விக் கொள்கை உள்பட எந்த ஒரு கல்விக் கொள்கையும் மாணவர்களின் எதிர்காலத்தை எவ்வகையிலும் பாதிக்காத விதத்தில் அமல்படுத்தப்பட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (30 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்