TNPSC Thervupettagam

உயிரினங்களால் ஒளியை உருவாக்க முடியுமா?

April 10 , 2024 281 days 210 0
  • ஒளி எல்லா உயிரினங்களுக்கும் இன்றியமையாதது. உயிரினங்கள் ஒளியைப் பயன்படுத்தி தான் உணவு தேடுகின்றன. பெரும்பாலும் அவை சூரிய ஒளியைத்தான் தங்கள் தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றன. மனிதர்கள் மட்டுமே செயற்கை ஒளியை உருவாக்குகின்றனர். பல வகை உயிரினங்கள் தன்னியல்பாகவே ஒளியை உண்டாக்கும் ஆற்றலுடன்தான் உருவாகியுள்ளன.
  • உயிரினங்கள் இரண்டு வகையில் ஒளியை உண்டாக்குகின்றன. ஒன்று, ஒளிரும் தன்மை (Fluorescence) மூலம் அவை ஒளியை உண்டு பண்ணுகின்றன. இத்தகைய உயிரினங்கள் சூரிய ஒளியை உடலில் உள்வாங்கி, அவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளன. சில வகை தவளைகள், ஜெல்லி மீன்கள் போன்றவை இந்த வகையில் அடங்கும். இரண்டாவது வகை உயிரினங்கள் ஒளியை உடலிலேயே உற்பத்தி செய்கின்றன. இத்தகைய உயிரினங்களை உயிரொளிர்வு (Bioluminescence) உயிரினங்கள் என்கிறோம்.
  • உயிரொளிர்வு உயிரினங்கள் பூமியில் நிறையவே காணக் கிடைக்கின்றன. மிகச் சிறந்த உதாரணம் மின்மினிப் பூச்சிகள். மின்மினிப் பூச்சிகள் உடலில் லூசிஃபெரின் எனும் வேதிப்பொருள் சுரக்கும். இது சுற்றுப்புறத்தில் இருந்து உள்வாங்கப்படும் ஆக்சிஜனுடனும், உடலில் ஆற்றலை உற்பத்தி செய்ய உதவும் ஏடிபி (ATP - Adenosine Triphosphate) மூலக்கூறுகளுடனும் இணைந்து லூசிஃபெரெஸ் எனும் நொதியத்தின் உதவியுடன் வினைபுரியும்போது ஒளி உண்டாகிறது.
  • மின்மினிப்பூச்சிகள் இணையைக் கவர்வதற்காக இந்த ஒளியைப் பயன்படுத்துகின்றன. ஆண் மயில் தோகையைக் கொண்டிருப்பதுபோல, ஆண் மான்கள் கொம்புகளைக் கொண்டிருப்பதுபோல, மின்மினிப்பூச்சிகளிலும் ஆண்கள்தாம் அதிக அளவில் ஒளியைத் தயாரிக்கின்றன. பெண் மின்மினிப்பூச்சிகள் சம்மதம் தெரிவிக்க மட்டுமே ஒளியை வெளியிடுகின்றன.
  • மின்மினிப்பூச்சிகள் மட்டுமல்ல, சில வகை பூஞ்சைகள், புழுக்களும்கூட ஒளியை உமிழ்வதாக இருக்கின்றன. இவ்வாறு பூமியில் உள்ள வெவ்வேறு உயிரினங்கள் தனித்தனியாக ஒளியை வெளிப்படுத்தும் தன்மையைப் பரிணாமம் மூலம் அடைந்துள்ளன.
  • ஒளியை உண்டாக்கும் உயிரினங்கள் நிலத்தைவிடக் கடலிலேயே அதிக அளவில் காணக் கிடைக்கின்றன. கடலில் உள்ள உயிரினங்களில் நான்கில் மூன்று பங்கு உயிரினங்கள் ஒளியை உண்டாக்கும் தன்மையைக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த உயிரினங்கள் மின்மினிப்பூச்சிகளைப் போல இணையைத் தேடுவதற்காக ஒளியைப் பயன்படுத்துவதில்லை. எதிரிகளிடம் இருந்து தங்களைப் பாதுகாக்கவும் வேட்டையாடவுமே ஒளி பயன்படுகிறது.
  • ஒளியை உண்டாக்கும் உயிரினங்கள் நிலத்தைவிடக் கடலில் அதிகம் இருப்பதற்குக் காரணம், கடலில் வெட்டவெளி அதிகம் என்பதால்தான் என்கின்றனர் விஞ்ஞானிகள். நிலத்தில் வாழும் உயிரினங்கள் ஒளிந்துகொள்வதற்குப் பாறைகள், மரங்கள், பொந்துகள் எனப் பல இருப்பிடங்கள் உண்டு.
  • ஆனால், கடல் வாழ் உயிரினங்களுக்கு அவை கிடையாது. கடல் வாழ் உயிரினங்கள் பதுங்கிக்கொள்ளப் பவளத்திட்டுகள் இருந்தாலும் அவை குறைந்த அளவிலேயே இருக்கின்றன. பெரும்பாலான உயிரினங்கள் கடலின் மேற்பரப்பிலேயே வாழ்வதால் அவை ஒளியைப் பயன்படுத்தித் தற்காத்துக்கொள்கின்றன.
  • டைனஃபிளகெல்லேட்ஸ் (Dinoflagellates) எனும் ஒருவகை கடல் நுண்ணுயிரி ஒளியை உண்டாக்குவதன் மூலம் எதிரியிடம் இருந்து தன்னைத் தற்காத்துக்கொள்கிறது. பொதுவாக இறால்கள் இந்த நுண்ணுயிரிகளை அதிகம் சாப்பிட வருகின்றன. அப்போது இந்த நுண்ணுயிரிகள் ஒளியை வெளியிட்டு பெரிய மீன்களைக் கவர்கின்றன. உடனே அந்த இடத்திற்கு வரும் பெரிய மீன்கள் இறால்களைச் சாப்பிட்டுச் செல்கின்றன. இது ஒரு தற்காப்பு முயற்சி.
  • ஆஸ்ட்ரகாட் (Ostracod) எனும் இறால் உள்ளிட்ட சில உயிரினங்கள் ஒளியைப் புகைபோலப் பீய்ச்சி அடித்து எதிரியின் பார்வையில் ஒளியைத் தூவிவிட்டுத் தப்பிக்கின்றன. சில கணவாய் மீன்கள் ஒளிர்ந்துகொண்டே சூரிய ஒளிபடும் இடத்தில் மிதப்பதன் மூலம் தம்மை எதிரியின் பார்வையிலிருந்து மறைத்துக்கொள்கின்றன. ஒருவகை கணவாய் மீன் (Humboldt Squid) ஒளியைப் பல்வேறு விதமாக வெளிப்படுத்துவதன் மூலம் சக கணவாய் மீன்களிடம் பேச்சுவார்த்தையே நடத்துகிறது.
  • சில கடல் வாழ் உயிரினங்களுக்கு ஒளியை உருவாக்கும் தன்மை கிடையாது. ஆனால், அவை பிற உயிரொளிர்வு உயிரினங்களைத் தங்கள் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன. உதாரணமாகத் தூண்டில் மீன்கள் ஒளியை உண்டு பண்ணும் பாக்டீரியாவைத் தங்கள் உடல் பாகங்களுக்குள் அடக்கி ஒளிரச் செய்கின்றன. இதன் மூலம் இரையை ஈர்த்து அவற்றை உணவாக்கிக் கொள்கின்றன. இதை ‘இணைவாழ் உயிரொளிர்வு செய்கை’ என்கிறோம்.
  • ஆழ்கடல் துடுப்பு மீன் உள்ளிட்ட சில வகை கடல் உயிரினங்கள் இருளில் வழியை அறிவதற்கு மனிதர்களைப்போல ஒளியைப் பயன்படுத்துகின்றன. ஆழ்கடலுக்குள் சூரிய ஒளி செல்வதில்லை என்பதாலும் அங்குள்ள உயிரினங்கள் உயிரொளி ர்வுதன்மையைப் பெற்றிருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
  • கடலில் வாழும் பலவகை பாக்டீரியாக்கள் ஒளியை உண்டு பண்ணக்கூடியவை. இவற்றை ஆராய்ந்ததன் மூலம் உயிர்கள் 200 கோடி ஆண்டுகளுக்கு முன்பே ஒளியை உருவாக்கும் வகையில் பரிணாமம் பெற்றிருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
  • நிலத்தில் உள்ள உயிரொளிர்வு உயிரினங்களின் எண்ணிக்கை கடலில் உள்ள உயிரொளிர்வு உயிரினங்களைவிட மிகவும் குறைவு. இதற்கு மற்றொரு காரணம் உயிரினங்களின் உடலில் ஒளியை உண்டாக்கும் வேதிப்பொருள் அவற்றின் உயிரையே கொல்லக்கூடிய அளவுக்கு ஆபத்தானது என்றும் சொல்லப்படுகிறது.
  • ஒளியை உமிழுவதற்குப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள்கள் நச்சுத்தன்மை கொண்டவை. அதனால், அவை சுரந்தவுடன் அவ்வப்போது நீக்கப்பட வேண்டும். அவற்றை உயிரினங்களின் உடலிலிருந்து அகற்ற கடல்நீர் உதவுகிறது. ஆனால், நிலம் சார்ந்த உயிரினங்களுக்கு அத்தகைய சாத்தியம் இல்லாததால் நிலத்தில் உயிரொளிர்வு உயிரினங்கள் அதிகமாகப் பரிணமிக்க வில்லை.
  • தாவரங்கள் இயற்கையாக உயிரொளிர்வுத் தன்மையைப் பெற்றிருக்கவில்லை. ஆனால், விஞ்ஞானிகள் மரபணு மாற்றம் செய்வதன் மூலம் அவற்றை உருவாக்கிவருகின்றனர். இதனால் பல வண்ண மலர்களுக்குப் பதில், பல வண்ண ஒளிகளை உருவாக்கும் தாவரங்களை வீட்டில் வாங்கி வைத்து அழகு பார்க்கலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (10 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்