TNPSC Thervupettagam

உயிர் பறிக்கும் உணவு நிரந்தரத் தடுப்பு நடவடிக்கை அவசியம்

September 27 , 2023 415 days 283 0
  • நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா என்னும் உணவுப் பண்டத்தைச் சாப்பிட்ட 14 வயதுச் சிறுமி உயிரிழந்திருப்பதும் 21 கல்லூரி மாணவர்கள் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டதும் அதிர்ச்சி அளிக்கிறது; அடுத்த சில நாள்களில், கிருஷ்ணகிரியில் உணவகம் ஒன்றில் ‘சிக்கன் ரைஸ்’ சாப்பிட்ட புலம்பெயர் தொழிலாளிகள் 27 பேர், உணவு ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
  • உணவகங்களில் அவ்வப்போது நிகழும் இதுபோன்ற சம்பவங்கள், உணவுத் தரக் கட்டுப்பாடு குறித்த அழுத்தமான கேள்விகளை எழுப்புகின்றன. முந்தைய சம்பவங்களிலிருந்து அரசும் உணவகங்களும் மக்களும் பாடம் கற்காததையும் உணர்த்துகின்றன.
  • நாமக்கல்லில் ஏற்பட்ட உயிரிழப்பின் காரணமாக உணவக உரிமையாளர் உள்பட மூவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உணவு மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவு வகைகளில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்ற சோதனைகளும் ஆய்வுகளும் தமிழ்நாடு முழுவதும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் இப்போது முடுக்கி விடப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 355 கிலோ அளவுள்ள கெட்டுப்போன இறைச்சி கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது; பிற பகுதிகளிலும் கெட்டுப்போன இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது. 2 ஷவர்மா கடைகள் உள்பட 3 உணவகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
  • ஆனால், இவை அனைத்தும் ஒரு மரணம் நிகழ்ந்துவிட்ட பிறகு மேற்கொள்ளப்படும் வழக்கமான நடவடிக்கைகளாகவே உள்ளன. கடந்த ஆண்டு கேரளத்தில் ஷவர்மா சாப்பிட்டு உயிரிழப்பு நிகழ்ந்த விவகாரம் தமிழ்நாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அப்போதும் ஷவர்மா கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர். பிரச்சினை வெடிக்கும்போது விழித்துக்கொண்டு நடவடிக்கை எடுப்பது போதாது. தொடர்ச்சியாக, குறிப்பிட்ட இடைவெளியில் உணவகங்களில் ஆய்வு நடைபெற வேண்டியது அவசியம்.
  • கேரள சம்பவத்தின்போது, அந்த ஷவர்மா கடையின் உணவு மாதிரிகளில் ஷிகெல்லா (Shigella), சால்மோனெல்லா (salmonella) பாக்டீரிய வகைகள் இருந்ததையும் அதுவே உயிரிழப்புக்குக் காரணம் என்பதையும் கேரள சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, மத்தியக் கிழக்கு நாடுகளைச் சேர்ந்த உணவாகக் கருதப்படும் ஷவர்மாவைத் தயாரித்தல், சேமித்தல், சுகாதாரத்தைப் பராமரித்தல் தொடர்பான வழிகாட்டுதலைக் கேரள உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்டது. தற்போது தமிழ்நாட்டிலும் அதிக அளவில் ஷவர்மா கடைகள் முளைத்திருக்கும் நிலையில், இதுபோன்ற உணவைத் தயாரிப்பது தொடர்பான வழிகாட்டுதல்களைத் தமிழ்நாடு அரசும் வெளியிட வேண்டியது அவசியம்.
  • அதற்கு முன்பாக, தற்போது உயிரிழப்பு ஏற்பட்ட உணவகத்திலிருந்து கைப்பற்றப்பட்ட உணவு மாதிரிகளில் இருந்து கிடைக்கும் முடிவை வைத்து, அறிவியல் அடிப்படையில் விசாரணையை முடுக்கிவிட்டு, உணவில் கலந்திருந்த நச்சுப் பொருளின் மூலத்தைக் கண்டறிய அரசும் அதிகாரிகளும் முனைப்புக் காட்ட வேண்டும். உணவு தயாரிக்கும் இடம் சுத்தமாகப் பராமரிக்கப்பட்டு சுகாதாரம் பேணப்பட வேண்டும், தரமான உணவுப் பொருளைப் பயன்படுத்துவதில் சமரசத்துக்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதற்கான விழிப்புணர்வை உணவக உரிமையாளர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
  • அவை முழுமையாகப் பின்பற்றப்படுவதையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும். இவ்விஷயத்தில் தொடர்ச்சியான கண்காணிப்பு அவசியம். பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் வெளியே ஆரோக்கியமான உணவை மட்டுமே சாப்பிடப் பழக்கப்படுத்த வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை இணைந்து மேற்கொண்டால் மட்டுமே, உணவு விஷமாகி நிகழும் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை (27 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்