TNPSC Thervupettagam

உயிர் பறிக்கும் சாகசம் வேண்டாம்

November 24 , 2023 415 days 266 0
  • திரைப்படங்களின் இறுதிக்கட்ட காட்சிகளில் இரு சக்கர மோட்டார் வாகனங்களில் சாகசப் பயணம் செய்யும் காட்சிகளைப் பார்ப்போம்.
  • கதாநாயகனும் வில்லனும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் வேகமாகச் செல்வர். இருதரப்பினரின் ஆதரவாளர்களும் இது போன்றே விரைவர். பலரது வாகனங்கள் வெடித்துச் சிதறும். பார்க்கும் நம்மனம் பதைபதைக்கும். திரைப்படத்தில் இதற்கென பயிற்சி பெற்ற கலைஞர்கள்மூலம் இந்தக் காட்சிகள் படமாக்கப்படும்.
  • அண்மைக் காலங்களில் மக்கள் புழங்கும் சாலைகளிலேயே இதுபோன்ற சாகச முயற்சிகளை இளையோர் மேற்கொள்வதைப் பார்க்க முடிகிறது. வாகனத்தின் ஒலிப்பானிலும் இதற்கென பிரத்யேகமான ஒலிகளை இயக்கி சாலையில் செல்வோரை பதற்றமடையச் செய்கின்றனர்.
  • இதுபோன்ற சாகசங்களை நண்பர்களின் துணையுடன் காணொலிகளாக்கி இணையதளங்களில் பகிரும் போக்கும் அதிகரித்துள்ளது.
  • இரண்டு மாதங்களுக்கு முன்னர் காஞ்சிபுரம் பகுதியில் ஒரு இளைஞர் இது போன்ற சாகசம் செய்து பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தீபாவளி நேரத்தில் வாகனம் செலுத்திக் கொண்டே பட்டாசுகளை வெடிக்கும் காட்சிகளையும் காணொலிகளாக்கிப் பகிரும் முயற்சியும் நடந்தது.
  • எல்லாக் காலங்களிலுமே  சாகசங்களை விரும்பிச் செய்யும் போக்கு இளைஞர்களிடம் உள்ளது. உயிரைத் துச்சமாக மதித்து பலரைக் காப்பாற்றிய வரலாறுகளும் நம்மிடையே உண்டு. பெருவெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் மக்களை எச்சரித்து காப்பாற்றுதல், ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளைத் தெரிவித்து ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்தல் போன்றவற்றைக் கூறலாம்.  இது போன்ற வீரதீர சாகசங்களில் ஈடுபடுவோருக்கு விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.
  • 1957}ஆம் ஆண்டு முதல் "தேசிய வீரதீர விருது' என்ற பெயரில் இது வழங்கப்பட்டு வருகிறது. இதுபோக "சஞ்சய் சோப்ரா விருது', "கீதா சோப்ரா விருது',  போன்ற பல விருதுகளும் இதில் அடங்கும்.  இப்படிப்பட்ட விருதுகள் இருப்பது குறித்துக்கூட இன்றைய சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் தெரியுமா என்பது கேள்விக்குறி.
  • இன்றைய காலகட்டத்தில்  உயிரைத் துச்சமாக மதித்து இளைஞர்கள் செய்யும் சாகசங்கள் காரணமாக, மேலே குறிப்பிட்ட உயிர் காக்கும் பணிகள் ஏதும் செய்வதில்லை. மாறாக அவர்களுக்கு எதிரில் வரும் அப்பாவி மனிதர்களின் உயிருக்குப் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றனர்.
  • இவர்களால் ஏற்படுத்தப்படும் விபத்துகளில் சிக்கி பலர் தற்காலிக, நிரந்தர உறுப்பு செயல்பாட்டின்மையையும் அடைகின்றனர்.
  • இளையோர் இது போன்று செய்யும் சாகசங்களை இணையவெளியில் பகிர்ந்து விருப்பக் குறிகளையும், பின்னூட்டங்களையும் பெறுகின்றனர். இவையில்லாவிட்டாலும்கூட எத்தனை நபர்கள் அதைப் பார்க்கின்றனர், பகிர்கின்றனர் என்ற கணக்கீட்டிலும் மகிழ்ச்சி அடைகின்றனர்.
  • ஒவ்வொரு பதிவுக்கும் வரக்கூடிய பின்னூட்டங்கள், விருப்பக் குறிகள் மேலும் மேலும் இதுபோன்ற ஆபத்தான சாகசங்களுக்கு வழிகோலுகின்றன.
  • தாம் அங்கீகரிக்கப்பட வேண்டும், பாராட்டப்பட வேண்டும் என்று ஒருவர் கருதுவதில் தவறில்லை. ஆனால், அதற்கான வழிமுறைகள் பலரையும் துன்பத்துக்குள்ளாக்கி, அவர்களும் துன்பத்துக்குள்ளாவதால்தான் பேசுபொருளாகிறது. இப்படிப்பட்ட சாகசங்களை செய்து ஒருவேளை அந்த இளைஞர் நிரந்தரமாக உடல் உறுப்பை இழந்து, அவரை அந்தக் குடும்பம் தாங்க வேண்டிய நிலை வந்தால் எப்படி இருக்கும்?
  • வாழ்வின் நீண்ட நெடும் பகுதியை பெற்றோரையோ அல்லது உடன் பிறந்தோரையோ நம்பி வாழ நேரிடுவது எப்படிப்பட்ட மனநிலையை உண்டாக்கும்? அவர்களுக்கிடையே ஏற்படும் தலைமுறை இடைவெளியாலும், பொருளாதார சிக்கல்களாலும் அந்த இளைஞர் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலைக்குக்கூட தள்ளப்படலாம்.
  • இது போன்ற பாதிப்புகளை அவர்களுக்கு உணர்த்துவது ஓரிரு நாளில் நடைபெற வாய்ப்புள்ள விஷயமல்ல. மாறாக, அவர்களுக்கு நெருக்கமான மொழியில் பேசி உணர வைக்கும் நேரத்தை பெற்றோர் செலவிட முன்வர வேண்டும். பெற்றோர்களுக்கு இணையாக சமுதாயமும் முன்வர வேண்டும்.
  • இன்றும் இது போன்று பலர் பங்களிப்பு செய்ய விரும்புகின்றனர். சிலர் செயல்பாடுகளிலும் ஈடுபடுகின்றனர். அவர்கள் இளைஞர்களை நெருங்கி அமர்ந்து அறிவுறுத்துவதற்குப் பதிலாக அவர்களை திட்டுதல், அடித்தல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு விடுகின்றனர்.
  • இளையவர்களோடு பேசும்போது தோழமையான மொழியில் பேச வேண்டும். மேலும், இந்தச் செயல்பாடுகளில் ஈடுபடுவோரை குழுவாக அமர வைத்து கலந்துரையாட வேண்டும். அவர்களது மொழியிலேயே பேசி முதலில் புரிந்துணர்வை உண்டாக்கிக் கொள்ள வேண்டும்.
  • அதன்மூலம் நெருக்கத்தைக் கூட்டி, அவர்களிடமுள்ள மாற்றுத் திறன்களைக் கண்டறிந்து அவற்றை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உண்டாக்கித் தரலாம். எடுத்துக்காட்டாக,  ஒருவரால் பாட முடியலாம்; மற்றொருவரால் பல குரலில் பேச முடியலாம்; சிலருக்கு கருவியை இசைக்க இயலலாம்; இதுபோன்ற திறன்களைக் கண்டறிந்து ஊக்குவித்து அவற்றின் மூலம் நிகழ்வுகளை நடத்தி காணொலிகளாக்க பரிந்துரை செய்யலாம்.
  • பொதுவாக இது போன்ற செயல்பாடுகளில் அந்த இளையோரின் பெற்றோர் தவிர்த்து வேறு யாரேனும் பங்களிப்பு செய்யலாம். இந்த இளையோரின் பெற்றோர் வேறு இளையோர் குழுமத்தினருடன் கலந்துரையாடல் நடத்தி வழி காட்டலாம்.
  • இவ்வாறு ஈடுபட விரும்புவோர்  வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலம் தொடர்புகளை உண்டாக்கி, அதில் தொடர் உரையாடல்கள் நடத்தி நெறிப்படுத்திக் கொள்ளலாம். இளையோரை குற்றவாளிகளாகப் பார்க்காமல் அவர்களை எவ்வாறு நெறிப்படுத்த முடியும் என்ற கோணத்தில் ஊருக்கு நால்வர் இணைந்தால்கூட அது பெரிய வெற்றியாக வாய்ப்புண்டு.

நன்றி: தினமணி (24 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்