- கிராமப்புற இந்தியாவில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் கல்வி கற்கும் திறன் குறித்த ஆய்வு "ஏர்' என்று பரவலாக அறியப்படும் "ப்ரதம்' என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் 2005 முதல் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. நான்கு முதல் எட்டு வயது வரையிலான கிராமப்புறக் குழந்தைகளின் கற்கும் திறனை முன்னிலைப்படுத்தி "ஏர் 2019' அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.
அறிக்கை
- கடந்த வாரம் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, இந்தியாவின் ஆரம்பக் கல்வி முறையில் காணப்படும் குறைபாடுகளை மட்டுமல்லாமல், முதல் வகுப்பில் சேர்க்கப்படுவதற்கு முன்பு உள்ள மழலையர் கல்வி முறையின் பலவீனங்களையும் வெளிப்படுத்துகிறது. கல்வி கற்கும் உரிமைச் சட்டமும், அனைவருக்கும் கல்வி என்கிற திட்டமும் கல்வி மேம்பாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பது என்னவோ உண்மை. அனைவருக்கும் கல்வி வழங்குவதும், கல்வி கற்கும் உரிமையைச் சட்டமாக்கி இருப்பதும், பெரும்பாலான குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்படுவதையும், படிப்பதையும் உறுதிப்படுத்தியிருப்பதுபோல, அந்தக் குழந்தைகளின் கல்வித்தரமும் மேம்பட்டிருக்கிறதா என்பதுதான் கேள்வி.
- "ஏர் 2019' அறிக்கையின்படி, முதலாம் வகுப்பில் படிக்கும் கிராமப்புற குழந்தைகளில் 20%-க்கும் அதிகமான குழந்தைகள் வரையறுக்கப்பட்ட ஆறு வயதுக்கும் குறைந்தவர்கள். நியாயமாகப் பார்த்தால் அவர்கள் மழலையர் பள்ளியில்தான் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அதேபோல கல்வி கற்கும் உரிமைச் சட்டத்தின்படி, முதலாம் வகுப்பில் ஆறு வயது குழந்தைகள்தான் சேர்க்கப்பட வேண்டும். ஆனால், ஒன்றாம் வகுப்பில் படிக்கும் 36% குழந்தைகள் ஆறு வயதுக்கும் அதிகமான வயதுப் பிரிவினர்.
கற்கும் திறன்
- முதலாம் வகுப்பு குழந்தைகளின் கற்கும் திறன் என்பது அவர்களது வயதுடன் தொடர்புடையது. புரிதல், ஆரம்ப மொழிப் பயிற்சி, ஆரம்ப அரிச்சுவடிப் பயிற்சி, உணர்வு ரீதியான கற்பிதங்கள் போன்றவை வயதுடன் தொடர்புடையவை என்கிறது "ஏர் 2019'.
- முதலாம் வகுப்பில் படிக்கும் குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மழலையர் பள்ளிகளிலோ அல்லது மேல் வகுப்புகளிலோ படிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்பதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஆரம்பப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்க வேண்டிய சரியான வயது எது என்பது குறித்த விவாதத்தை "ஏர் 2019' அறிக்கையின் அடிப்படையில் மீள்பார்வை செய்வது அவசியம்.
- நான்கு முதல் எட்டு வயதுள்ள குழந்தைகளுக்கு விளையாட்டுடன் தொடர்புடைய செயல்முறைக் கல்விதான் சிறப்பாக அமையும் என்கிற கருத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விவாதம் நடத்தப்பட வேண்டும். நினைவாற்றல் பயிற்சிகள் மூலம் குழந்தைகளின் அறிவாற்றலை அதிகரிப்பதற்கும், புதிர்கள், அரிச்சுவடி கணக்குகள் மூலம் திறமையை வளர்த்துக் கொள்வதற்கும் ஊக்கப்படுத்துவதற்கு அறிக்கை முன்னுரிமை வழங்குகிறது. தொடக்கக் கல்வி நிலையில் பிஞ்சுக் குழந்தைகளின் மீது அவர்களது வயதுக்கு மீறிய அறிவார்ந்த விஷயங்களைத் திணிக்கக் கூடாது என்றும், அதன் மூலம் கல்வி கற்பதன் மீது குழந்தைகளுக்கு வெறுப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்றும் "ஏர் 2019' வலியுறுத்துகிறது.
- மழலையர் கல்விக்கு முன்னுரிமை அளிக்கிறது "ஏர் 2019'. 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்ட அங்கன்வாடி மையங்கள் முறையாகவும், முழுமையாகவும் பயன்படுத்தப்படாத நிலைமை காணப்படுகிறது. இப்போதிருக்கும் அங்கன்வாடி மையங்களை மேம்படுத்தி, தொடக்கக் கல்விக்குத் தயார் நிலையில் குழந்தைகளை உருவாக்கும் பணி ஒப்படைக்கப்பட வேண்டும்.
மழலையர் பள்ளிக் கல்வி
- பள்ளிக்குச் செல்வதற்கு முந்தைய மழலையர் பள்ளிக் கல்வி என்பதும்கூட, அங்கன்வாடி மையங்களின் நோக்கமாக இருந்தது என்பதை "ஏர் 2019' நினைவுபடுத்துகிறது. இப்போது இந்த மையங்கள் அந்தக் கடமையைச் செய்யாமல், குழந்தைகளின் ஊட்டச்சத்துத் திட்டங்களை நிறைவேற்றும் மையங்களாகத்தான் செயல்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டி, அதில் மாற்றங்களை ஏற்படுத்த வலியுறுத்துகிறது அறிக்கை.
- ஆரம்பகால கல்வித் திட்டத்தின் குறைபாடுகளை மட்டுமல்லாமல், குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான இடரையும் இந்தியா சந்தித்து வருகிறது. அதற்குக் காரணம், அங்கன்வாடி மையங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் முழுமையாகச் செயல்படாமல் இருக்கிறது என்பதை பலமுறை எத்தனையோ அறிக்கைகள் எடுத்தியம்பிவிட்டன.
அங்கன்வாடி மையங்களில் பணியாற்றுபவர்கள் முறையான தேர்ச்சி பெற்ற மழலையர் கல்வி ஆசிரியைகளாக இல்லாமல் இருப்பதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
சூழல்
- அவர்களுக்கு மிகக் குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது என்பதுடன், உற்சாகத்துடன் பணியாற்றும் சூழல் இல்லாமல் தளர்வடைந்த நிலையில் காணப்படுகிறார்கள் என்பதையும் அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் ஐந்து வயதில் குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்க்கப்படுகிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் அரசுப் பள்ளியில் படிப்பவர்கள். அவர்கள் படிப்பதற்கு குடும்பத்தில் ஆதரவோ, உதவியோ இருப்பதில்லை.
- பெற்றோரும் கல்வி கற்றவர்களாக இல்லாமல் இருக்கிறார்கள்.
வயதும், குடும்பத்தில் கற்பதற்கான உதவியும் இல்லாமல்தான் பெரும்பாலான கிராமப்புறக் குழந்தைகளின் கல்விப் பயணம் தொடங்குகிறது. அவர்கள் ஏதாவது வகையில் கல்வி கற்பதில் பின்தங்கிவிட்டால் அதை ஈடுசெய்யவோ, மேம்படுத்திக் கொள்ளவோ வாய்ப்பில்லாத நிலை காணப்படுகிறது.
நன்றி: தினமணி (22-01-2020)