TNPSC Thervupettagam

உரிமை, விடுதலை எனும் இருவேறு இலக்குகள்

October 27 , 2024 76 days 137 0

உரிமை, விடுதலை எனும் இருவேறு இலக்குகள்

  • பெண்கள் அனைவருக்கும் அனைத்துத் தளங்களிலும் எல்லாவிதமான உரிமைகளும் கிடைத்துவிட்டன என்கிற மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கும் சூழலில் உலக வங்கியின் தரவின்படி இந்தியாவில் தங்களின் பெயரில் நிலம் வாங்கியிருக்கும் பெண்களின் எண்ணிக்கை 9.5 சதவீதம். உலகின் பெரும்பாலான நாடுகளில் பெண்களின் பெயரில் ஒரு சதுர அடி நிலம்கூட இல்லை. பெண்ணுரிமைப் போராட்டங்கள் ஏன் தேவைப்படுகின்றன என்பதற்கான பதிலையும் இந்தக் கணக்கு சொல்லிவிடுகிறது.

வாசிப்பின் வழியே விழிப்புணர்வு

  • இலக்கியம், நாடகம், திரைப்படம் போன்ற கலைவடிவங்கள் வாயிலாகப் பெண்ணுரிமைக் கருத்துகளை முன்வைத்தவர்கள் பலர். பிரெஞ்சு தத்துவஞானியும் பெண்ணியவாதியும் அறிவுஜீவியுமான சிமோன் து போவார் ‘The Second Sex’ நூலை 1949இல் எழுதினார். பெண்கள் மீது கட்டமைக்கப்பட்ட கற்பிதங்களையும் அவர்கள் எப்படிக் காலங்காலமாக ஆணுக்கு அடுத்த நிலையில் இரண்டாம் பாலினமாக நடத்தப்பட்டு வருகிறார்கள் என்பதையும் இந்த நூல் பேசியது.
  • மனிதர்களின் சமத்துவமற்ற நிலைக்குக் காரணமான முதலாளித் துவக் கருத்தாக்கத்தைச் சிறு வயதி லேயே எதிர்த்தார். தன் அப்பாவின் அறிவுக் கூர்மையைப் பார்த்து வியந்தவர், தான் வளர்ந்த பிறகு எக்காரணம் கொண்டும் மனைவி யாகவோ அம்மாவாகவோ ஆகிவிடக் கூடாது என நினைத்தார். ஆரம்பத்தில் பெண்ணுரிமைச் செயல்பாடுகளில் பெரிதாக ஈடுபடாத இவர் பின்னாளில் பெண்ணிய அமைப்புகளோடும் மார்க்ஸியப் பெண்ணியவாதிகளோடும் இணைந்து ‘Questions Feministe’ என்கிற பெண்களுக்கான இதழைத் தொடங்கினார்.
  • அமெரிக்கப் பெண்ணுரிமைச் செயற்பாட்டாளரான பெட்டி ஃப்ரீடன் 1963இல் ‘Feminine Mystique’ நூலை எழுதினார். வீட்டுவேலைகளிலும் குழந்தைப் பராமரிப்பு உள்ளிட்ட குடும்பப் பொறுப்புகளிலும் தொலைந்துபோய் அடையாள மிழந்து போகும் பெண்களின் நிலையை இந்த நூல் விவாதித்தது. இது போன்ற நூல்களும் பெண்ணுரிமைக்கான போராட்டங்களுக்கு வினையூக்கியாகச் செயல்பட்டன.

போராடி வெல்லும் பெண்கள்

  • மேற்கத்திய நாடுகளில் ஒலித்த பெண்ணுரிமைக் குரல்களோடு இந்தியப் பெண்களின் குரல்களும் இணைந்தன. பிரிட்டிஷ் இந்தியாவின் வங்கதேசத்தில் பிறந்த மகாஸ்வேதா தேவி, அடக்குமுறைக்கும் ஆணாதிக் கத்துக்கும் எதிராக ஒலித்த பெண்ணியக் குரல்களில் முதன்மையானவர். சுதந்திர இந்தியாவில் சாதியக் கட்டுமானங் களாலும் பொருளாதார ஏற்றத் தாழ்வாலும் அல்லல்பட்ட மக்களுக்கு ஆதரவாக நின்றார்.
  • ஏழை விவசாயிகள், பழங்குடியினர், ஆதரவற்ற பெண்கள், சுரண்டலுக்கும் பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கப் படும் பெண்கள் போன்றோரைத் தன் கதைகளின் மாந்தர்களாக்கினார். விளிம்புநிலை மக்களுக்குத் தன் கதைகளில் புராதன அடையாளம் கொடுத்து அவர்களது உரிமைக் குரலை ஒலிக்கச் செய்தார். பெண்களை அவர்களது பாலினம், சாதி, மதம், சமூக – பொருளாதார நிலை சார்ந்து நடத்துவதைவிட மனிதத்தன்மையோடு நடத்துவது முக்கியம் என்பதைத் தன் படைப்புகளின் வாயிலாகப் பதிவுசெய்தார். பெண்கள் மீதான ஒடுக்கு முறையைப் பற்றிச் சொன்னதோடு அவற்றைச் சகித்துக்கொண்டும் பொறுத்துக்கொண்டும் எப்படி அவர்கள் உயிர்பிழைத்திருக்கிறார்கள் என்பதையும் பேசப்படாத அவர்களது அக உலகத்தையும் தன் எழுத்தில் வடித்தார். பெண்ணுடல் மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் புனிதத்தைத் தன் கதைகளின் வாயிலாகத் தோலுரித்தார். சந்தால் பழங்குடியினப் பெண்ணைப் பற்றிய ‘திரௌபதி’, பழங்குடியினப் பெண்ணின் அனுமதியின்றி அவரைப் படம்பிடித்த ஒளிப்படக் கலைஞர் பற்றிய ‘காங்கோர்’ போன்றவை பெண்ணுலகின் அறியப்படாத பக்கங் களைக் கொண்டவை. பலரும் பேசத் தயங்கியவற்றைத் துணிச்சலோடு எழுதிச் சென்றார் கமலா தாஸ். சமைய லறைச் சுவர்களுக்குள்ளேயே அமுங்கிப் போகநிர்பந்திக்கப்பட்ட பெண்களின் அக உணர்வுகளைத் தன் எழுத்தின்மூலம் பேசு பொருளாக்கி யவர் இவர்.

ஏன் போராடுகிறார்கள்?

  • எட்டு மணி நேர வேலை நேரத்துக்காகப் போராட்டத்தை முன்னெ டுத்த பெண்களின் தொடர்ச்சியாகப் பெண்கள் தொழிலாளர் நலன் சார்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வெற்றிகண்டிருக்கிறார்கள். ‘சம உழைப்புக்குச் சம ஊதியச் சட்டம்’ அமெரிக்காவில் 1963இல்இயற்றப்படக் காரணமாக இருந்த வர்களில் முதன்மையானவர் எஸ்தர் பீட்டர்சன். அமெரிக்காவில் குடியேறிய டேனிஷ் மொழி பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவர். அமெரிக்க ரயில்வே தொழிலாளர்கள் எட்டு மணி நேர வேலையை வலியுறுத்தி 1918இல் போராட்டம் நடத்திய போது எஸ்தருக்கு 12 வயது ஆனது. அந்த வயதில் தொழிலாளர் உரிமை குறித்து எதுவும் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால், தொழிற்சங்கங்கள் தீங்கானவை, தொழிற்சங்கத் தலைவர்கள் பிரச்சினையை உருவாக்குபவர்கள் என நினைத்துக்கொண்டார். படித்துப் பட்டம் பெற்ற பிறகு தன்னார்வத் தொண்டு நிறு வனத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

பார்வையை மாற்றிய சிறுமி

  • அவரிடம் பயிலும் மாணவியர் அன் றைக்குப் பள்ளிக்கு வரவில்லை. அவர்கள் ‘வேலைநிறுத்தப் போராட்ட’த்தில் ஈடுபட்டிருப்பதாக அறிந்து ஐலின் என்கிற தனது மாணவியின் வீட்டுக்குச் சென்றார் எஸ்தர். ஐலினின் அம்மா, தங்கைகள் அனைவரும் போராட்டத்துக்கான துண்டுப்பிரசுரங்களைத் தயாரித்துக்கொண்டி ருந்தனர். அந்தப் பகுதியில் பெரும்பாலோர் ஆயத்த ஆடைத் தொழிற்சாலைப் பணியாளர்கள். அதுவரை அவர்கள் தைத்துக்கொண்டிருந்த ஆடைகளில் சதுர வடிவில் இருந்த சட்டைப்பைகள் இதய வடிவத்துக்கு மாற்றப்பட்டன. ஒரு டஜன் துணிகளுக்கு இவ்வளவு எனக் கூலி வழங்கப்பட்ட நிலையில் இதய வடிவிலான சட்டைப்பையை இயந்திரத்தில் வேகமாகத் தைக்க இயலவில்லை. இதனால், தையல் வேலையில் தாமதம் ஏற்பட்டுக் கூலியும் குறைந்துவிட்டது. இதற்கு எதிராகத்தான் அந்தப் பெண்கள் போராடினர். போராட்டத்தில் ஈடுபட்டி ருந்த பெண்களின் பின்னால் நின்றிருந்த எஸ்தருக்குத் தொழிலாளர் உரிமை, உழைக்கும் பெண்களின் ஊதிய உரிமை, தொழிற்சங்கப் போராட்டத்தின் அவசியம் என எல்லாமே புரிந்தன. அவரது பார்வை விசாலமடைந்தது. அதன் பிறகு தொழிலாளர் நலன் சார்ந்து முனைப்புடன் செயல்பட்டார். பெண்களுக்குச் சம ஊதியம் அளிக்கும் சட்டம் அன்றைய அமெரிக்க அதிபர் ஜான் கென்னடியால் கையெழுத்திடப்பட்டது அதன் நல்விளைவுகளில் ஒன்று.

பெண்களும் தொழிற்சங்கமும்

  • அமெரிக்காவில் எஸ்தர் என்றால் இந்தியாவில் உழைக்கும் பெண் களின் உரிமைக்காக 60களில் களமிறங்கியவர் இலா பட். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிறந்த இவர், அமைப்புசாராப் பணிகளில் ஈடுபடும் பெண்களுக்கான முதல் தொழிற் சங்கத்தை அமைத்தார்.
  • பீடி சுற்றுவது, நெசவு, தையல், சுள்ளி - குப்பை சேகரிப்பது போன்ற அமைப்புசாராத் தொழிலில் ஈடுபடும் பெண்கள் மத்தியில் பணியாற்றினார். பணம் படைத்தவர்களாலும் முதலாளிகளாலும் இந்தப் பெண்கள் உழைப்புச் சுரண்டலுக்கும் பாலியல் தொல்லைக்கும் ஆளாக்கப்படுவதை அறிந்தார். அதிகக் கடன் சுமையால் குடும்பத்தில் அனைவருமே காலம் முழுக்க உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதையும் உணர்ந்தார். இதுபோன்ற பெண்களின் உரிமைகளுக்காக சுயதொழிலில் ஈடுபடும் பெண்களுக்கான தொழிற் சங்கத்தை (Self Employed Women’s Association – SEWA) 1972இல் அமைத்தார். இது 1990களில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர் களைக் கொண்ட பெண்களுக்கான மிகப் பெரிய தொழிற்சங்கமாக வலுப்பெற்றது. அதிகாரம் இல்லாததுதான் ஏழைகள் ஏழைகளாகவே இருப்பதற்கான காரணம் என்று சொன்ன இலா பட், பெண்களை அதிகாரப்படுத்துவது அவசியம் என்றார். சுய தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கான முதல் கூட்டுறவு வங்கி 1974இல் அமைய காரணமாக இருந்தார். சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் உருவாக இலா பட்டின் தொழிற்சங்கத்துக்கு முக்கியப் பங்கு உண்டு.
  • “உரிமைகள் இருப்பதால் மட்டுமே எந்தப் பயனும் இல்லை. அவற்றைப் பயன்படுத்த நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். பெண்களுக்கு வாக்குரிமை இருக்கிறது. அதை நம் நலனுக்காகவும் வளமான எதிர்காலம் அமையவும் பயன்படுத்துகிறோமா என்பது முக்கியம்” என்றார் ரஷ்யப் புரட்சியாளரும் தத்துவ அறிஞருமான அலெக்சாண்ட்ரா கொலந்தாய். பெண்ணுரிமையும் பெண் விடுதலையும் பெண்கள் அடைய வேண்டிய இருவேறு இலக்குகள். மனித குலம் பெற்றிருக்கும் அனைத்து உரிமையும் அந்தக் குலத்தின் அங்கமான பெண்களுக்கும் வேண்டும் என்பது பெண்ணுரிமை; பெண்ணுரிமைப் போராட்டங்கள் தேவைப்படாத நிலையே பெண் விடுதலை. எவ்வித ஏற்றத்தாழ்வும் பாகுபாடுகளும் இல்லாத அனைவரும் சமமாக வாழும் சமத்துவ உலகத்தைக் கட்டமைக்க அனைவரும் இணைந்து செயல்படுவோம்.

நன்றி: இந்து தமிழ் திசை (27 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்