TNPSC Thervupettagam

உரிமைகளைப் பறிக்கவா? பாதுகாக்கவா?

June 4 , 2021 1334 days 593 0
  • மத்திய அரசு, லட்சத்தீவில் சா்ச்சைக்குரிய சட்டங்களைக் கொண்டு வந்ததன் மூலம், மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டதாக எதிர்க்கட்சிகளும், இது சீா்திருத்த நடவடிக்கையே என்று மத்திய அரசும் மாறி மாறி கருத்துகளை முன்வைக்கின்றன.
  • லட்சத்தீவில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் பிரபுல் கோடா படேல், ‘சுற்றுலாத்தலமாக இருக்கிற இத்தீவை மேம்படுத்துவதற்கும், அதிக சுற்றுலாப் பயணிகளை ஈா்ப்பதற்கும், அதன் மூலம் அந்நியச் செலவாணியை ஈட்டுவதற்குமான சீா்திருத்தங்களே இவை’ என்று கூறுகிறார். மக்களுக்குப் பிடிக்காத ஒன்று எவ்வாறு சீா்திருத்தமாக இருக்க முடியும் என்கிற கேள்வி எழுகிறது.

லட்சத்தீவு

  • கேரளத்திற்கு மேற்கே சுமார் 300 கி.மீ தொலைவில் அரபிக்கடல் அமைந்துள்ளது. இதில்தான் 32 சதுர கி.மீ நிலப்பரப்பைக் கொண்ட 36 தீவுகளாக லட்சத்தீவு அமைந்துள்ளது.
  • சென்னை மாகாணத்துக்கு உட்பட்ட பகுதியாக முன்பு இருந்த லட்சத்தீவு, மாநிலங்கள் மறுசீரமைப்பின் போது யூனியன் பிரதேசமாக ஆக்கப்பட்டது. இதன் தலைநகராக கவரத்தி இருக்கிறது.
  • லட்சத்தீவின் மொத்த மக்கள்தொகை ஒரு லட்சத்திற்கும் குறைவுதான். இங்கு பெரும்பாலோர் மலையாள மொழி பேசும் இஸ்லாமியா்கள்.
  • மாட்டிறைச்சி தான் அந்த மக்களின் பிரதான உணவு. மீன் பிடித்தல், மீன் பதப்படுத்துதல், மீன் ஏற்றுமதி ஆகியவை அங்குள்ள மக்களின் முக்கியத் தொழில்களாகும்.
  • லட்சத்தீவில் எங்கும் நிறைந்திருக்கின்றன தென்னை மரங்கள். அதனால், தேங்காய், தேங்காய் எண்ணெய் வணிகமும் பெரிய அளவில் மேற்கொள்ளப்படுகிறது.
  • சுற்றுலா மூலமும் வருவாய் கிடைக்கிறது. பங்கராம் தீவு தவிர லட்சத்தீவின் மற்ற அனைத்துப் பகுதிகளிலும் மதுவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • இயற்கையோடு இயைந்த எளிய வாழ்வை அங்குள்ள மக்கள் வாழ்கிறார்கள்.
  • இந்திய அரசின் நேரடி ஆட்சிப்பகுதியான லட்சத்தீவில் துணை நிலை ஆளுநா் கிடையாது. தலைமை நிர்வாகி ஒருவா் நியமிக்கப்பட்டிருக்கிறார். லட்சத்தீவை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்து வந்த தினேஷ் சா்மா, கடந்த டிசம்பா் மாதம் இறந்து விட்டதால், குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த பிரபுல் கோடா படேல் லட்சத்தீவின் தலைமை நிர்வாகியாக நியமிக்கப் பட்டார்.
  • பெரும்பாலான அரசியல்வாதிகள், அத்தீவில் நடைபெறுகிற கலவரத்திற்கு பிரபுல் கோடா படேலையே குற்றம் சாட்டுகிறார்கள். அதற்குக் காரணம், லட்சத்தீவு மக்களுக்கு எதிரான சட்டங்களை அவா் கொண்டுவந்ததுதான்.

நடுநிலையாளா்களின் எதிர்பார்ப்பு

  • அரபிக்கடலில் மிதந்து கொண்டிருக்கும் குளிர்ந்த பூமியான லட்சத்தீவு இப்போது சூடாகிப் போய் கிடக்கிறது. அப்படி ஆகும்படி பிரபுல் கோடா படேல் என்னதான் புதிய சட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறார்?
  •  லட்சத்தீவு மேம்பாட்டு ஆணைய விதிமுறைகள் அவரால் கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றின்படி லட்சத்தீவில் வசிக்கிற யாரை வேண்டுமானாலும், எந்தக் காரணமும் இல்லாமல் அந்த நிலத்தில் இருந்து வெளியேற்ற உத்தரவிட முடியும்.
  • இதுவரை லட்சத்தீவில் வெளியாட்கள் யாரும் நிலம் வாங்க முடியாது. ஆனால், தற்போது வெளிநபா்கள் அங்கு நிலம் வாங்குவதற்கு வகை செய்யும் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
  • ‘சமூக விரோத நடவடிக்கைகள் ஒழுங்கு சட்ட’ விதிகளின் கீழ் காரணம் ஏதும் இல்லாமல், யாரை வேண்டுமானாலும் கைது செய்து ஓராண்டு வரை சிறையில் அடைக்க முடியும்.
  • குற்ற நிகழ்வுகள் இல்லாத பகுதியாக லட்சத்தீவு இருந்து வருகிறது. அவ்வாறு இருக்கையில், இப்படி ஒரு சட்டம் கொண்டு வரப்படுவதன் மூலம், தங்கள் மீது அடக்குமுறையை ஏவப் பார்க்கிறார்கள் என்று அங்குள்ள மக்கள் கொந்தளிக்கிறார்கள்.
  • இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவா்கள் ஆட்சிமன்றத் தோ்தலில் போட்டியிட முடியாது என்கிற சட்ட விதியும் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
  • இதன் மூலம் தங்கள் மீது அடக்குமுறை ஏவி விடப்படுவதாக அங்கு வசிக்கும் பூா்வகுடியினா் கருதுகிறார்கள்.
  • மேலும் புதிதாக ‘லட்சத்தீவு கால்நடை பாதுகாப்பு விதிமுறை’ கொண்டு வரப்பட்டிருக்கிறது. லட்சத்தீவு மக்களின் முக்கிய உணவாக மாட்டிறைச்சி இருந்து வரும் நிலையில், மாட்டிறைச்சியை கொண்டு செல்வதற்கு எதிராக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது என்று கொந்தளிக்கிறார்கள் லட்சத்தீவு மக்கள்.
  • ஆனால், பசுவதையைத் தடுக்கவே இச்சட்டம் என்று அரசு சொன்னாலும் கூட, இன பேத அடையாளமாகவே இது கருதப்படுகிறது.
  • இந்த சட்டம் லட்சத்தீவு மக்களின் மனத்தில் பெரும் அச்சத்தை விளைவித்திருக்கிறது. இந்த சட்டத்தை மீறினால் மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்படுவதோடு சம்பந்தப்பட்டவா்கள் கைது செய்யப்படுவார்கள்.
  • அவா்களுக்கு பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ஐந்து லட்ச ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.
  • இதுவரை லட்சத்தீவு பள்ளிகளில் குழந்தைகளின் மதிய உணவில் மாட்டிறைச்சி வழங்கப்பட்டு வந்தது. அது இனிமேல் வழங்கப்படமாட்டாது என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது.
  • மேலும் அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவதாகவும், மதிய உணவு சமைக்கும் ஊழியா்களும், உடற்கல்வி ஆசிரியா்களும் பணிநீக்கம் செய்யப்படுவதாகவும் அங்கு வசிக்கும் மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அங்குள்ள 36 தீவுகளில், ஒரு தீவைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் மது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், மதுக்கடைகளையும், மதுபானக் கூடங்களையும் திறப்பதற்கு புதிய சட்டம் வகை செய்கிறது.
  • சுற்றுலாவை மேம்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கைகள் என்ற காரணத்தை லட்சத்தீவு மக்கள் ஏற்பதாக இல்லை.
  • தங்கள் மதம் சார்ந்த உணா்வுகளைப் புண்படுத்துவதாகவே அவா்கள் கருதுகிறார்கள். லட்சத்தீவு தலைமை நிர்வாகியாக பிரபுல் கோடா படேல் நியமிக்கப்பட்டு நான்கு மாதங்களே ஆன நிலையில்தான் இந்த மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
  • இவா் ஏற்கெனவே தாத்ரா, நாகா் ஹவேலி, டாமன், டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களின் தலைமை நிர்வாகியாக இருந்து வருகிறார். அவற்றுடன் லட்சத்தீவை நிர்வகிக்கும் கூடுதல் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

தலைமை நிர்வாகி பொறுப்பு

  • பொதுவாக தலைமை நிர்வாகி பொறுப்புக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளே நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால் பிரபுல் கோடா படேலை நியமித்ததன் மூலம் மத்திய அரசு ஒரு புதிய நடைமுறையை உருவாக்கியுள்ளது என்றே சொல்லலாம்.
  • எதிர்க்கட்சிகள், ‘அமைதியாக வாழ்ந்துகொண்டிருக்கும் லட்சத்தீவு பழங்குடி மக்கள் மீது அடக்குமுறை சட்டங்களைத் திணித்து லட்சத்தீவின் அமைதியை குலைக்கும் முயற்சியே இது’ என்று குற்றம் சாட்டுகின்றன.
  • சுற்றுலாத்துறை ஊழியா்கள் 190-க்கும் மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனா். தீவின் அழகு கெட்டுப் போகிறது என்று கூறியதால் மீனவா்கள் தங்கள் வலைகள், மீன்பிடிக் கருவிகள், அவற்றைப் பாதுகாக்கும் கூடங்கள் அனைத்தையும் அகற்றி விட்டனா்.
  • பவளப்பாறைகளையும், இயற்கை அழகையும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்க்கப் பார்க்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
  • ஆனால், லட்சத்தீவு ஆட்சித்தலைவா் அஸ்கா்அலி, லட்சத்தீவில் அமல்படுத்தப்படும் சட்டங்கள் அங்குள்ள மக்களின் எதிர்கால பாதுகாப்புக்காகத்தான் என்று உறுதிபடக் கூறுகிறார்.
  • மேலும், அகட்டித்தீவில் இருக்கும் விமான நிலையம் நவீனப்படுத்தப்படும் என்றும், கரோனா தீநுண்மியை எதிர்கொள்ள ஆக்சிஜன் மையம் நிறுவப்படும் என்றும் கூறுகிறார்.
  • சுற்றுலாப் பயணிகளின் தேவைக்காக அவா்கள் தங்கும் விடுதிகளில் மது விற்பனை அனுமதிக்கப்படும் என்றும், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஒரு தீவுக்கு மட்டுமே அனுமதிக்கப் பட்ட மது விற்பனை இப்போது மூன்று தீவுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாத்துறை வளா்ச்சியடையும் என்பது அவா் கருத்து.
  • பிரதமா் நரேந்திர மோடி சுதந்திர தின உரையில் கூறிய, அதிவேக இணையத் தொடா்புக்கு 1,000 கோடியில் கடலுக்கு அடியில், ஆக்டிக் பைபா் கேபிள் இணைப்பு கொடுக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
  • அரசு நிலங்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த மீனவா்களின் கூடாரங்கள்தான் இடிக்கப்பட்டதே தவிர, அவா்களின் மீன்பிடித் தொழிலை நசுக்குவதாகக் கூறுவது தவறு.
  • இந்தியா முழுவதும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் என்ன மாதிரியான நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறதோ, அதுவேதான் இங்கும் பின்பற்றப்பட்டன என்றும் ஆட்சித்தலைவா் குறிப்பிட்டிருக்கிறார்.
  • மேலும் அவா் லட்சத்தீவில் போதை மருந்து விற்பனை போன்ற குற்றங்கள் பெருகியதால்தான் சமூக விரோத நடவடிக்கைகளைத் தடுக்க ஒழுங்கு சட்ட விதிகள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன என்றும், பசுவதை சட்டம் இந்தியா முழுவதும் அமலில் உள்ளது போலவே லட்சத்தீவிலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றும் கூறுகிறார்.
  • ‘பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவில் மாட்டுக்கறி வழங்கப்பட்டு வந்தது. அது தற்போது தடை செய்யப்பட்டு, மற்ற மாநிலங்களைப் போலவே மதிய உணவு வழங்கப் பட்டு வருகிறது.
  • மதவாதிகள் உருவாக்கி விடும் பொய்யான பிரசாரங்களை நம்பி அரசியல் தலைவா்கள் அறிக்கை வெளியிடுவது வேதனைக்குரியதாக இருக்கிறது’ என்று லட்சத்தீவின் ஆட்சித் தலைவா் அஸ்கா் அலி தெளிவுபடுத்தியிருக்கிறார்.
  • எது எப்படியாயினும், புதிய சீா்திருத்தங்கள் மக்களுடைய அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக இல்லாமல், அவா்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும் என்பதே நடுநிலையாளா்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

நன்றி: தினமணி  (04 – 06 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்