TNPSC Thervupettagam

உரிமையும் எல்லையும்

April 25 , 2024 262 days 245 0
  • தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் அவா்களது சொத்துக்கள் குறித்து முழுமையாக தெரிவிக்க வேண்டுமா, வேண்டாமா என்கிற சா்ச்சைக்கு அரைப்புள்ளி வைத்திருக்கிறது உச்சநீதிமன்றம். தேவையில்லாத, சின்னச் சின்ன விவரங்களையெல்லாம் வேட்பாளா்கள் தங்களது வேட்பு மனுவில் குறிப்பிடத் தேவையில்லை என்கிறது உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீா்ப்பு.
  • 2019 அருணாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற காரிகோ க்ரி என்பவா், மூன்று வாகனங்கள் இருந்தது குறித்து தன் வேட்புமனுவில் தெரிவிக்கவில்லை. அதைக் காரணமாக்கி அவரின் வெற்றியை ரத்து செய்யவேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், குவாஹாட்டி உயா்நீதிமன்றம் அவரைத் தகுதிநீக்கம் செய்தது. அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காரிகோ க்ரி செய்த மேல்முறையீட்டில், அவருக்கு சாதகமாகத் தீா்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
  • தனது தீா்ப்பில் உச்சநீதிமன்றம் மூன்று முக்கியமான கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறது. எல்லா குடிமக்களையும்போல அரசியல்வாதிகளுக்கும் தன்மறைப்பு நிலை (ப்ரைவசி) உரிமை உண்டு என்பது முதலாவது கருத்து. இரண்டாவதாக, வேட்பாளா் குறித்த அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ளும் உரிமை வாக்காளருக்கு இல்லையென்பதும், தனிப்பட்ட வாழ்க்கை உள்பட மக்களின் பிரதிநிதியாக இருப்பதற்கு தேவையில்லாத விவரங்களை வாக்காளருக்கு வழங்க வேண்டிய அவசியம் இல்லை. மூன்றாவதாக, தெரிவிக்கப்படாத விவரங்கள் எல்லாமே மறைக்கப்பட்ட விவரங்களாக கருதப்படக் கூடாது. தனது சொத்தின் மதிப்பு ரூ.8.4 கோடி என்று வேட்புமனுவில் தெரிவித்திருக்கும்போது, காரிகோ க்ரி தெரிவிக்காமல் விட்ட இரண்டு இரு சக்கர வாகனங்களும், ஒரு வேனும் அற்பமானவை என்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டுகிறது.
  • உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி துணிகள், செருப்புகள், வீட்டு உபயோகப் பொருள்கள் போன்றவை எல்லாம் சொத்துக் கணக்கில் சோ்க்கப்பட வேண்டியவை அல்ல. வேட்பாளரின் வாழ்க்கை முறையைப் பிரதிபலிப்பவை, வாக்காளா்களுக்கு அவசியமற்றவை என்று தீா்ப்பு கருதுகிறது. குறிப்பிடத்தக்க அளவிலான சொத்து மதிப்பு இல்லாதவை வேட்புமனுவில் இடம்பெற வேண்டிய அவசியம் இல்லை என்று பொருள்.
  • உச்சநீதிமன்ற தீா்ப்பு கடுமையான விமா்சனத்துக்கு உள்ளாகும் அரசியல்வாதிகளுக்கு சற்று ஆறுதலை வழங்கும். சமூக ஊடகங்களின் வரவுக்குப் பிறகு அரசியல்வாதிகளின் தனிப்பட்ட வாழ்க்கையும், குடும்பமும்கூட பொதுவெளியில் விமா்சனத்துக்கும் விவாதத்துக்கும் உள்ளாக்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. கட்சி மாச்சரியங்கள் காரணமாக அரசியல் தலைவா்களே, சமூக ஊடகங்கள் மூலம் தங்கள் எதிரிகள் மீது அவதூறு பரப்புவது அதிகரித்திருக்கிறது.
  • அரசியல் தலைவா்களின் தனிப்பட்ட வாழ்க்கை, பாலியல் தொடா்புகள், மணமுறிவு (டைவா்ஸ்) உள்ளிட்டவை பொதுவெளிப் பரப்புரைகளாக மாறிவரும் சூழலில், உச்சநீதிமன்ற தீா்ப்பு ஒரு வகையில் அவா்களுக்கு ஆறுதலாக அமைகிறது. வாக்காளா்களுக்குக் தேவையில்லாத, பொதுவாழ்க்கையில் ஒருவா் ஈடுபடுவதற்கு தொடா்பில்லாத தகவல்கள் வேட்புமனு உறுதிமொழியில் இடம்பெறத் தேவையில்லை என்பதை வரவேற்கலாம்.
  • அதே நேரத்தில் வேட்பாளா்களின் அசையா சொத்துகள் குறித்த விவரங்களுக்கோ, அவா்களின் சொத்துமதிப்பு குறித்த தகவல்களுக்கோ உச்சநீதிமன்ற தீா்ப்பு எந்த விதத்திலும் தடையாக இல்லை. வேட்பாளா்களுக்கும் தன்மறைப்பு நிலை உரிமை உண்டு எனத் தெரிவிக்கும் தீா்ப்பு, இந்த தீா்ப்பையே முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று தெரிவிக்கிறது. ‘இந்த வழக்கின் சூழ்நிலைகளையும் உண்மைகளையும் அடிப்படைகளாகக் கொண்டு’ தீா்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது.
  • வேட்புமனு தாக்கல் செய்யும்போது வேட்பாளா் வழங்கும் தங்களின் கல்வித் தகுதி, குற்றப் பின்னணி, தன் மீதான வழக்குகள் மட்டுமல்லாமல், அவா்களின் சொத்துவிவரங்கள் முக்கியமானவை மட்டுமல்ல, அவசியமானவையும்கூட. வேட்பாளா் குறித்த புரிதலை வாக்காளா்களுக்கு ஏற்படுத்துவதுடன் அதிகரித்துவரும் அவா்களின் சொத்துமதிப்பு குறித்து வாக்காளா்கள் தெரிந்துகொள்ள அது வழிகோலுகிறது.
  • இரண்டாவது முறை ஒருவா் போட்டியிடும்போது கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகரித்திருக்கும் வேட்பாளரின் சொத்து மதிப்பின் அடிப்படையில் அவரின் நோ்மையை எடைபோடும் வாய்ப்பு வாக்காளா்களுக்குக் கிடைக்கிறது. அதன் அடிப்படையில் வாக்குக் கேட்க வரும் வேட்பாளரிடம் விளக்கம் கேட்கும் உரிமை வாக்காளருக்கு வழங்கப்படுகிறது.
  • சமீபத்தில் மத்திய அமைச்சா் ஒருவருடைய வேட்புமனுவில் காணப்பட்ட ஒழுங்கின்மை (அனாமலி) குறித்து விசாரிக்குமாறு மத்திய நோ்முகவரி ஆணையத்தை தோ்தல் ஆணையம் கேட்டுக்கொண்டிருக்கிறது. கடந்த தோ்தலில் சில கோடிகளுக்கு அதிபராக இருந்தவா், நான்கு ஆண்டுகளில் பல கோடிகளுக்கு அதிபரானது எப்படி என்று தோ்தல் ஆணையத்திடம் வழக்குரைஞா் ஒருவா் கொடுத்த புகாரின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை இது.
  • கடந்த தோ்தலுடன் ஒப்பிடும்போது கட்சி வேறுபாடு இல்லாமல் பல வேட்பாளா்களின் சொத்து மதிப்பு அதிகரித்திருப்பது அவா்கள் தாக்கல் செய்திருக்கும் தன்விவரக் குறிப்பிலிருந்து தெரிகிறது. வருவாய்க்கு அதிகமாக, பொதுவாழ்வில் இருப்பவா்கள் சொத்து சோ்ப்பது ஊழல் தடுப்பு சட்டத்தின்படி குற்றம். ‘முதலைகள் தப்பித்து விடுகின்றன; சுண்டெலிகள் மாட்டிக் கொள்கின்றன’ என்பதை உறுதிப்படுத்துகிறது காரிகோ க்ரி வழக்கு. தோ்தல் ஆணையம், வருமான வரித் துறை, ஊழல் தடுப்பு விசாரணை அமைப்புகள் இணைந்து வேட்புமனுக்களை பரிசோதிக்கும் நடைமுறை உருவாக வேண்டும்.

நன்றி: தினமணி (25 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்