TNPSC Thervupettagam

உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும் உள்ளாட்சித் தேர்தல்கள்!

September 12 , 2024 125 days 120 0

உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும் உள்ளாட்சித் தேர்தல்கள்!

  • உள்ளாட்சித் தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்​படா​விட்டால் என்னென்ன சிக்கல்கள் நேரும் என்பதை - சமீபகால வரலாற்றைச் சொல்லி - நினைவூட்ட வேண்டிய தருணம் இது. காரணம், வருகின்ற 2025 ஜனவரி 6ஆம் தேதியோடு 27 மாவட்​டங்​களுக்கான ஊரக உள்ளாட்​சிகளின் பதவிக் காலம் முடிவடைய இருக்​கிறது. வரும் டிசம்பர் மாதத்​துக்குள் தேர்தல் நடத்தி முடிக்​கப்பட வேண்டும். இந்நிலையில், அந்தத் தேர்தல் நடைபெறுமா அல்லது மீண்டும் ஒரு வரலாற்றுப் பிழை நிகழ்த்​தப்​படுமா என்கிற அச்சம் எழுந்​துள்ளது.

தடையின்றி நடந்த தேர்தல்கள்:

  • 1994 முதல் புதிய பஞ்சா​யத்துச் சட்டம் வந்த பிறகு, அரசமைப்புச் சட்டம் வழங்கிய அதிகாரங்​களின்படி 1996இல் தமிழ்​நாட்டில் முதலாவது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. கிராமசபை அதிகாரங்கள், மகளிர்/ பட்டியல் சாதியினர் /பட்டியல் பழங்குடி​யினருக்கான இடஒதுக்​கீடு, கிராம அளவிலான திட்ட​மிடு​தலுக்கான அதிகாரங்கள் உள்ளிட்ட பல அதிகாரங்​களோடுதான் இந்தப் புதிய உள்ளாட்​சிகள் செயல்​பாட்டுக்கு வந்தன. 1996 முதல் எந்தத் தடையும் இன்றி உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்று​வந்தன.
  • 1996 முதல் 2001, 2001 முதல் 2006, 2006 முதல் 2011, 2011 முதல் 2016 வரை தொடர்ச்​சி​யாகத் தேர்ந்​தெடுக்​கப்பட்ட மக்கள் பிரதி​நி​திகள் மூலம் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று​வந்தன.
  • இதில் குறிப்பாக, காலங்​காலமாக அதிகாரம் மறுக்​கப்பட்ட பெண்களும், பட்டியல் பிரிவினரும் பட்டியல் பழங்குடி​யினரும் தொடர்ந்து இரண்டு முறை (10 ஆண்டுகள்) பொறுப்பில் இருப்​ப​தற்கான வழிவகையும் செய்யப்​பட்டது தமிழ்​நாட்டில் மட்டும்​தான். பெரும்​பான்​மையான மாநிலங்​களில் இல்லாத இந்தச் சிறப்பு நடைமுறை தமிழ்​நாட்டில் புதிதாகத் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட, தேர்ந்​தெடுக்​கப்பட இருக்​கின்ற பல்லா​யிரக்​கணக்கான பெண்கள், பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடி​யினர் ஆகியோர் நிர்வாக நடைமுறை​களைப் புரிந்​து​கொண்டு செயல்​படு​வதற்குச் சிறந்த வாய்ப்பாக - வழிமுறையாக இருக்​கிறது.
  • மேலும், சுதந்​திரம் பெற்ற காலம் முதற்​கொண்டு போதிய கவனம் செலுத்​தப்​படாமல் இருந்த ஊரக வளர்ச்சி, எங்கள் ஊர் - எங்கள் மக்கள் - எங்கள் நிர்வாகம் என்கிற புதிய சிந்தனை​யுடன் இப்புதிய ஊராட்சி நிர்வாகத்தின் வழியாக வளர்ச்சிப் பணிகள் நடைபெறத் தொடங்கின.
  • இப்படித் தொடர்ச்​சி​யாகத் தடையின்றி நடைபெற்றுவந்த உள்ளாட்சித் தேர்தல் 2016 செப்டம்​பரில் அறிவிக்​கப்​பட்டு, பின்பு ரத்து செய்யப்​பட்டது. ஒருமுறை ரத்தான தேர்தல், பல காரணங்​களைச் சொல்லி நடத்தப்​படாமல் இருந்தது. பிறகு, 2019 இறுதியில் நடைபெற்ற 27 மாவட்​டங்​களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் மூலம் சிறப்பு அலுவலர்கள் காலம் முடிந்து மீண்டும் மக்கள் பிரதி​நி​திகள் பொறுப்​பேற்​றார்கள்.

சிறப்பு அலுவலர்​களும் சீரழிவும்:

  • உள்ளாட்​சிகளுக்கான நிதிப் பகிர்வு குறித்த பரிந்​துரைகளை ஐந்தாண்​டு​களுக்கு ஒருமுறை வழங்கு​கிறது மாநில நிதிக் குழு. கடந்த 2022ஆம் ஆண்டு தனது அறிக்கையை வெளியிட்ட ஆறாவது தமிழ்நாடு மாநில நிதிக் குழு, உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறாத 2016 முதல் 2021 காலக்​கட்​டத்​தில், உள்ளாட்​சிக்கென ஒதுக்​கப்பட்ட நிதிகள் பெரும்​பாலும் பயன்படுத்​தப்​படாமல் இருந்​ததைச் சுட்டிக்​காட்​டி​யிருக்​கிறது. ஏற்கெனவே, குறைந்த நிதியோடு இயங்கும் உள்ளாட்​சிகள் இந்த நிதியைக்கூட முறையாகப் பயன்படுத்​தவில்லை என்பது, நிதிக்குழு குறிப்​பிடும் அந்தக் காலக்​கட்​டத்தில் மக்கள் நலப் பணிகள் நடைபெற​வில்லை என்பதையே காட்டுகிறது.
  • மக்களால் தேர்ந்​தெடுக்​கப்பட்ட பிரதி​நி​திகள் மூலமாக நிர்வாகம் நடப்பதுதான் ஜனநாயக முறை நிர்வாகம். அதற்கு நேர் எதிராகச் சிறப்பு அலுவலர்கள் கையில் உள்ளாட்சி நிர்வாகம் இருந்தது. ஜனநாயகத்​துக்கான இருண்ட காலம் அது. அதிகாரம் பறிக்​கப்​பட்டு மக்களை மனுக் கொடுப்​பவர்​களாக​வும், வரிசையில் நின்று வழியில்​லாமல் தவிப்​பவர்​களாகவும் ஆக்கு​வதுதான் ‘சிறப்பு அலுவலர்’ நிர்வாகம்.
  • 2016இல் தமிழ்​நாட்டில் உள்ளாட்​சிகள் சிறப்பு அலுவலர்​களின் காலக்​கட்​டத்​துக்குள் அடியெடுத்து வைத்த​போது, ஜனநாயக விழுமி​யங்கள் பாதிப்​புக்​குள்​ளாகின. 100 நாள் வேலை அட்டை வழங்கு​வதற்​குக்கூட லஞ்சம் பெறப்​பட்டது என அளவுக்கு அதிகமான ஊழல் நிலவியது. தலைவர்கள், உறுப்​பினர்கள், கவுன்​சிலர்கள் என யாரும் இல்லாத நிலை. கிராமசபைகளில் மக்களின் கருத்​துக்கு ஏற்ப முடிவெடுக்க முடியாமல் ஊராட்சிப் பணியாளர்கள் தவித்​தனர்.
  • பல ஊராட்​சிகளில் கிராமசபைக் கூட்டங்​கள்கூட முறையாக நடத்தப்​பட​வில்லை. தடையின்றிக் குடிநீர் வழங்குவது, பழுதுபட்ட தெரு விளக்​குகளை மாற்றுவது உள்ளிட்ட அடிப்​படையான பணிகளில்கூட அளவுக்கு அதிகமான காலதாமதம் நிலவியது. சான்றிதழில் கையெழுத்து வாங்கு​வதற்காகக் கிராமத்​திலிருந்து ஊராட்சி ஒன்றிய அலுவல​கத்​துக்கு மக்கள் அலைய வேண்டி​யிருந்தது. நிர்வாகத்தில் முன்னுக்குச் செல்ல வேண்டிய தமிழ்நாடு பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளப்​பட்டது.

மக்களின் அச்சம்:

  • 40 அல்லது 50 கிராம ஊராட்​சிகளுக்கு ஒரே ஒரு அலுவலராக வட்டார வளர்ச்சி அலுவலர் இருந்​தார். அதாவது, ஒரு ஒன்றி​யத்தில் 50 ஊராட்​சிகள் என்றால், 50 ஊராட்​சிகளுக்கான தலைவர்கள், வார்டு உறுப்​பினர்கள், ஒன்றிய கவுன்​சிலர், மாவட்ட கவுன்​சிலர் ஆகியோர் செய்த பணிகளை ஒரே ஒரு வட்டார வளர்ச்சி அலுவலர் செய்ய​ வேண்டிய அவலம் நேர்ந்தது. அந்தக் காலக்​கட்​டத்தில் சமூக அமைப்புகள் மூலம் நாங்கள் சந்தித்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிலர், “இந்தச் சிறப்பு அலுவலர் முறையில் எங்களுக்குச் சற்றும் விருப்ப​மில்லை. நிர்வாகம் செய்வது எங்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்​கிறது” என்று புலம்​பினார்கள்.
  • இப்படிப்பட்ட மக்கள் விரோத நிர்வாக முறை மீண்டும் வந்து​விடுமோ என்ற அச்சத்​துடன் ஊரகப் பகுதி மக்கள் தற்போது இருப்​பதைப் பார்க்க முடிகிறது. குறிப்பாக, பல கிராம ஊராட்​சிகளை நகரங்​களோடு இணைப்​ப​தற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து​வரும் நிலையில், சிறப்பு அலுவலர்கள் மூலம் அதனைச் சுலபமாக இணைத்து​விடலாம் என்பதற்​காகக்​கூடத் தேர்தல் நடத்தப்​படாமல் தள்ளிவைக்​கப்​படுமோ என மக்கள் அச்சப்​படு​வதைப் பார்க்க முடிகிறது.

சொன்னதைச் செய்த முதல்வர்:

  • எந்த ஒரு சூழ்நிலை​யிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தள்ளி வைக்கப்படக் கூடாது, டிசம்பர் மாதத்தில் நடத்தப்​பட்டே ஆக வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்​கிறது. கடந்த கால நிர்வாகப் பிழையினால் ஏற்பட்ட இன்னல்களை மீண்டும் தமிழ்​நாடும் தமிழ்​நாட்டு மக்களும் அனுபவித்து​விடக் கூடாது.
  • கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்ட நேரத்​தில், பத்திரி​கை​யாளர் சந்திப்​பின்போது அன்றைய எதிர்க்​கட்சித் தலைவர், இன்றைய முதல்வர் மு.க.ஸ்​டாலின் எதிர்​கொண்ட முதல் கேள்வி, ‘திமுக தேர்தலில் வென்றால், நடத்தப்​படாமல் இருக்கும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்​படுமா?’ என்பது​தான். “நாங்கள் கண்டிப்பாக நடத்து​வோம்” என்று வாக்குறுதியை அளித்து, சொன்னபடி அதை நடத்தியும் காட்டினார் மு.க.ஸ்டாலின்.
  • இன்றைய சூழலில், திராவிட மாடல் அரசு எந்தச் சூழ்நிலை​யிலும் சாமானிய மக்களின் அடிப்படை உரிமையான ஊராட்சிப் பிரதி​நி​தி​களைத் தேர்ந்​தெடுக்கும் உரிமையை, பல்லா​யிரக்​கணக்கான பெண்கள், பட்டியல் சாதியினர் / பட்டியல் பழங்குடி​யினர் தேர்தலில் போட்டி​யிட்டு மக்கள் பணியாற்றும் உரிமையைப் பறித்துவிடாது என்றே நம்பப்படுகிறது. முறையாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்பதைத் தவிர, மக்களுக்கு உறுதி​செய்யும் ஜனநாயக உரிமைகள் வேறு எதுவும் இருக்க முடியாது. உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்​டும்​.

நன்றி: இந்து தமிழ் திசை (12 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்