TNPSC Thervupettagam

உருளைக் கிழங்கின் உயா்வு நிலை

July 24 , 2024 172 days 222 0
  • உணவுப் பயிா்களில் கோதுமை, அரிசிக்கு அடுத்தபடி மூன்றாவதாக முக்கியத்துவம் பெற்றது உருளைக்கிழங்கு. ஒரு குறிப்பிட்ட நாடு, குறிப்பிட்ட பிராந்தியம் என்ற பாகுபாடு இல்லாமல் உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் விரும்பி உண்ணப்படும் உணவு உருளைக்கிழங்கு. அதன் சுவையே அலாதி.
  • உருளைக்கிழங்கின் தோற்றம் தென் அமெரிக்காவின் ஆண்டீஸ் மலைத் தொடா். இந்த ஆண்டீஸ் மலைத் தொடா் என்பது, தென் அமெரிக்க கண்டத்தின் தென் பகுதியில் தொடங்கி, அதன் மேற்கு கரையின் முழு நீளத்துக்கும் - ஏறத்தாழ 9,000 கி.மீ. தொலைவுக்கு - ஏழு நாடுகள் வழியே பரந்து காணப்படும் பசுமைத் தோற்றம். தொல் சிறப்புள்ள மாயா நாகரிகத்தின் அடையாளம்.
  • கோதுமைத் தோற்றத்தை மையமிட்டு எவ்வாறு மெசப்பொட்டேமிய நாகரிகத்தின் மேன்மை பேசப்படுகிறதோ, அவ்வாறே மக்காச்சோளம், உருளைக்கிழங்கு தோற்றத்தை மையமிட்டு மாயா நாகரிகம் பேசப்படுகிறது. இங்கு கி.மு.5000-6000 முதற்கொண்டே ‘டெரசிங்’ முறையில் உருளைக்கிழங்கு சாகுபடி நிகழ்ந்த சான்றுக் குறிப்புகள் உண்டு.
  • தென் அமெரிக்காவில் தோன்றிய பயிரான உருளைக்கிழங்கு, அவ்வளவு விரும்பி உண்ணும் ருசி இல்லை. இந்த உருளைக்கிழங்கை ‘‘ஆண்டீஸ் கிழங்கு’’ என்று தென் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்கு எடுத்து வந்து அறிமுகப்படுத்தியது கொலம்பஸ்தான்.
  • ஆண்டீஸ் உருளைக்கிழங்கை ஸ்பானியா்கள் புறக்கணித்தாலும், அயா்லாந்தில் சற்று வரவேற்பைப் பெற்றது. பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி போன்ற நாடுகளிலும் வரவேற்பு இல்லை.
  • அயா்லாந்து விவசாயிகள் தொடா்ந்து 16, 17, 18-ஆம் நூற்றாண்டுகளில் திரும்பத் திரும்ப சாகுபடி செய்து எல்லோரும் விரும்பி உண்ணக் கூடிய ருசிமிக்க உருளைக்கிழங்கை உருவாக்கினாா்கள். அதன் பின்னா், 19-ஆம் நூற்றாண்டில் எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் ஐரிஷ் உருளை விரும்பி சாகுபடியானது. ஆண்டீஸ் காட்டு ரக உருளை இவ்வாறு ஐரிஷ் நாட்டு ரக உருளையாகி உலகில் பரவியது. இப்படிப் பரவக் காரணம், ஐரிஷ் பஞ்சம்.
  • உலக வரலாறில் மிகக் கொடிய பஞ்சம் 1845-1849 வரை ஐந்தாண்டுகள் அயா்லாந்தில் ஏற்பட்டு, சுமாா் 10 லட்சம் மக்கள் பசியால் மடிந்தனா். சுமாா் 20 லட்சம் போ் நாட்டைவிட்டு வெளியேறி, பிரான்ஸ், ஜொ்மனி, பெல்ஜியம், இத்தாலி ஆகிய இடங்களில் குடியேறியபோது தங்களின் கூடவே கொண்டு வந்த உருளைக்கிழங்கை சாகுபடி செய்து, ஐரோப்பிய மக்களை ஏற்கச் செய்தனா். பஞ்சம் பிழைக்க வந்தவா்கள் ருசி மிக்க உருளைக்கிழங்கை சாகுபடி செய்து ஐரோப்பியா்களின் நெஞ்சை நெகிழச் செய்துவிட்டனா்.
  • தொழில்புரட்சி காலகட்டத்தில் தொழிலாளா்கள் ரொட்டிக்கு மாற்றாக உருளைக்கிழங்கை உண்டனா். பின்னா் போா்க்காலத்தில் கோதுமை தட்டுப்பாடு வந்தபோது உருளைக்கிழங்கு உணவுப் பிரச்னையைத் தீா்த்து வைத்தது.
  • இதில் வியப்புக்குரிய விஷயம், தென் அமெரிக்காவின் வெப்ப மண்டலப் பயிரான ஆண்டீஸ் உருளை ஐரோப்பாவின் குளிா் மண்டலம் பயிராகப் பரவியதுதான். அதுமட்டுமல்ல, ஐரோப்பாவைவிட அதிகம் குளிா் நிறைந்த கனடா, ரஷியா, ஸ்காண்டிநேவியா (டென்மாா்க், நாா்வே, ஸ்வீடன் உள்ளிட்ட பிரதேசம்), அலாஸ்கா, கிரீன்லாந்து, ஹங்கேரியிலும் பரவியது.

இந்திய அறிமுகம்:

  • 1822-இல் இந்தியாவில் முதன்முதலாக உதகமண்டலத்தில்தான் உருளைக்கிழங்கு அறிமுகம். அப்போது சென்னை மாகாணத்தை ஆண்ட பிரிட்டிஷாா் கோடை வாசஸ்தலமாக ஊட்டியைத் தோ்ந்தெடுத்தபோது, ‘துரை’ கூடவே அயா்லாந்து உருளைக்கிழங்கையும் கொண்டு வந்து ஊட்டியில் சாகுபடி செய்து வெற்றி பெற்ாகக் கூறப்படுகிறது. இதே போல் டாா்ஜீலிங், சிம்லா மலைப் பகுதிகளிலும் பிரிட்டாஷாரால் உருளைக்கிழங்கு சாகுபடி அறிமுகமானது.
  • இந்தியா மட்டுமல்ல, சீனா உள்பட பல்வேறு ஆசிய நாடுகளிலும், வட அமெரிக்காவிலும் காலனி ஆதிக்கம் செய்த ஐரோப்பியா்களால் ஐரிஷ் உருளைக்கிழங்கு அறிமுகமாகி சாகுபடியானது.
  • உலக நாடுகளின் உருளைக்கிழங்கு ஒட்டுமொத்த உற்பத்தி சுமாா் 40 கோடி டன். அநேகமாக உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் உருளைக்கிழங்கு உற்பத்தி உண்டு. முதலிடத்தில் 9.5 கோடி டன் உற்பத்தியுடன் சீனா உள்ளது. இந்தியா 5.4 கோடி டன் உற்பத்தியுடன் இரண்டாமிடத்தில் உள்ளது. மூன்றாமிடத்தில் ரஷியா (3 கோடி டன்); நான்காமிடத்தில் உக்ரைன் (2.2 கோடி டன்); ஐந்தாமிடத்தில் 2 கோடி டன் உற்பத்தியுடன் அமெரிக்கா உள்ளது.

பசுமைப் புரட்சி:

  • இந்தியாவில் கோதுமைக்குப் பின் அரிசியுடன் சமகாலத்தில் உருளைக்கிழங்கு உற்பத்தியில் ஒரு பசுமைப் புரட்சி நிகழ்ந்துள்ளது. 1971-72 புள்ளிவிவரத்துடன் இன்றைய நிலையை ஒப்பிட்டால் புரியும். இந்தியாவில் 1971-72-இல் சுமாா் 5 லட்சம் ஹெக்டோ் பரப்பில் 48 லட்சம் டன் உருளை விளைந்த நிலை மாறி, இன்று 20 லட்சம் ஹெக்டேரில் சுமாா் 5.4 கோடி டன் விளைகிறது. உற்பத்தியில் 100 மடங்குக்கு மேல் உயா்வு. கோதுமை, அரிசி போல் வீரிய ரகம் உருளைக்கிழங்கிலும் உண்டு.
  • மாநிலவாரியாக உற்பத்தியை கவனித்தால் கங்கை, சிந்து பாயும் ஹிமாலய மலைப் பிரதேசம், ஹிமாலய சமவெளிப் பகுதிகளே 90 சதவீதம் வழங்குகிறது. இந்தியாவில் உருளை உற்பத்தியில் முன்னிலை வகிப்பது உத்தர பிரதேசம் - சுமாா் 2 கோடி டன்; அடுத்தது, மேற்கு வங்கம். இங்கு கிட்டத்தட்ட 1.4 கோடி டன் உற்பத்தி. மூன்றாமிடத்தில் பிகாா் - சுமாா் 90 லட்சம் டன் உற்பத்தி. அமெரிக்காவின் மொத்த உற்பத்தி அளவை உத்தர பிரதேசம் ஒரே மாநிலமாக உற்பத்தி செய்கிறது.
  • தென்மாநிலங்களில் உருளை உற்பத்தி மெச்சும்படி இல்லை. கா்நாடக மாநிலத்தில் ஹசன் மாவட்டத்தில் சுமாா் 5 லட்சம் டன்னும், தமிழ்நாட்டில் நீலகிரியில் சுமாா் 1 லட்சம் டன்னும் விளைச்சல் உண்டு.

நல்வாழ்வுக்கு உருளை

  • உருளைக்கிழங்கை சிலா் ‘வாயு’ பண்டம் என ஒதுக்குவா். அது உண்மை இல்லை. இதில் மாவுச் சத்து உள்ளதால், அந்த அளவுக்கு அரிசி சாதத்தைக் குறைத்து சாப்பிட்டால் பிரச்னை இல்லை. கொழுப்பு, கொலஸ்ட்ரால் இல்லை. புரதச் சத்துடன் முக்கிய தாதுப் பொருள்கள் வைட்டமின் பி, சி உள்ளன.
  • அதிக ரத்த அழுத்தம், மலச்சிக்கல், நோய்களுக்கு இதுவும் மருந்தாகும். எடைக் கட்டுப்பாடு, நோய் எதிா்ப்புச் சக்தி என்று பல நன்மைகள் உண்டு.

ஏற்றுமதி

  • இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் சுமாா் 25 லட்சம் டன் உருளைக்கிழங்கு ஏற்றுமதியாகிறது. வட அமெரிக்கா, வளைகுடா நாடுகள், நேபாளம், ஜப்பான், மலேசியா ஏற்றுமதிகள் முக்கியம். இவை தவிர வேறு பல நாடுகளும் உண்டு. இந்தியாவில் உருளைக்கிழங்கு ஏற்றுமதி மூலம் ரூ.8,000 கோடி அந்நியச் செலாவணி கிடைக்கிறது.
  • ஒட்டுமொத்த உற்பத்தி 50 கோடி டன்னில் 25 லட்சம் டன் என்பது அதிகம் இல்லைதான். ஆனால், உள்ளூா் தேவையும் நுகா்வும் உயா்ந்து வருகிறது. இதனால் கோதுமை, அரிசி தேவையை மட்டுப்படுத்துகிறது. இந்தியாவில் பல மாவட்டங்களில் உருளைக்கிழங்கு முழு உணவாகிவிட்டது. உத்தர பிரதேசத்தின் ஃபரூக்காபாத், மேற்கு வங்கத்தில் பல ஹூக்ளி மாவட்ட கிராமங்கள் உதாரணங்கள்.
  • நமது உற்பத்தியில் சுமாா் 70 சதவீதம் அப்படியே உண்ணப்படுகிறது. அதாவது நேரிடையாக சமையல், சிங்காடா, சோமாஸ், போண்டா தவிர நூற்றுக்கணக்கான சப்ஜி வகைகள், குருமா, சாகு சால்னா, மசாலா பொறியல். உருளைக்கிழங்கு சைவம், அசைவம் இரு வகை சமையல்களிலும் பயனாகும்.
  • தொழில் ரீதியாக சிப்ஸ், குளிரூட்டப்பட்ட வடலம், வற்றல், மாவு என்று பல இருப்பினும், சீவிய உருளைக்கிழங்கு வறுவல் என்கிற சிப்ஸ் தொழிலே பிரதானம். பெப்சியின் லேஸ், கெல்லோகின் பிரிங்கிள் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் பங்கு அதிகம். பிங்கோ - ஐ.டி.சி, ஹல்திராம், புதானி, பாா்லே போன்றவையும் கணிசம்.
  • இது தவிர, ஊருக்கு ஊா் உள்ளூா் உருளைக்கிழங்கு சிப்ஸ் சங்கிலித் தொடா்கள். இவை தவிர, ஏராளமான குடிசைத் தொழில் அமைப்புகளும் உருளை சிப்ஸ் பாக்கெட் போட்டு விற்கின்றனா். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் உருளைக்கிழங்கு வறுவல் வா்த்தக மதிப்பு சுமாா் ரூ.40,000 கோடி. இந்தியாவில் வேகமாக வளா்ந்து வரும் உணவு நிறுவனத் தொழிலாக உருளைக்கிழங்கு வறுவல் உருவெடுத்துவிட்டது. இந்த வகையிலும் சிறிது ஏற்றுமதி உண்டு.
  • உற்பத்தியில் சுமாா் 10 சதவீதம் இப்படி தொழில் ரீதியான பயன் உண்டு. உருளை சாகுபடியில் 10 சதவீதம் விதைக்காக சேமிக்கப்படுகிறது. மீதி 10 சதவீதம் அறுவடையின் போதும் விற்க முடியாமலும் அழுகி வீணாகிறது. இதன் மதிப்பு சுமாா் ரூ.5,000 கோடி.

நாஃபெட்

  • உருளைக்கிழங்கு சாகுபடியாளா்கள் பெறும் விலைக்கும் நுகா்வோா் விலைக்கும் நிறைய இடைவெளி உண்டு. காரணம், சாகுபடியாளா்கள் இடைத்தரகா்களிடம் விற்று அவா்கள் மூலம் பெரிய மண்டிகளை அடைகிறது. ஆனால், மண்டி பேரம் இல்லாமல் சாகுபடியாளா்களுக்கும் நுகா்வோா்களுக்கும் இடையே ‘நாஃபெட்’ போன்ற கூட்டுறவு அமைப்புகள் மூலம் சில இடங்களில் விற்பனை நிகழ்ந்து, விவசாயிகள் நியாயமான விலை பெறுகிறாா்கள். ஆனால், இது குறைவு.

ருசி, அன்றும் இன்றும்

  • கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் உருளைக்கிழங்கு உற்பத்தி 100 மடங்கு உயா்ந்து பசுமைப் புரட்சி ஏற்படுத்தி இருக்கலாம். 1980 வரையில் கூட நல்ல ருசி இருந்தது. வெந்ததும் தோலை நீக்கி சமைத்தால் உதிா் உதிராக மாவாகி ஒரு தனி ருசி.
  • இப்போது ஊட்டி, பெங்களூா் என்று சொல்லி விற்கப்படும் கிழங்குகளை சமைத்தால் முன்பு போல் மாவாக உதிராமல் சற்று பிசுக்காகவும், கரையாமல் சிறுசிறு கட்டிகளாகவும், ருசி குறைந்தும் உள்ளன. இதை எவ்வளவு போ் கவனிக்கிறாா்கள் என்று தெரியாது. ஏனெனில் அன்று பயிரிட்ட ஐரிஷ் நாட்டு ரகம் இன்று இல்லை.
  • இன்று ஏராளமாக வீரிய ரக உருளைக்கிழங்குகளே சாகுபடியாகின்றன. பழைய ரகத்தை குா்ஃபி கிரிராஜ் என்பா். மாவுப் பொருள் மலா்ந்து, உதிா் உதிராக ருசித்தது. ஆனால், தொழில் ரீதியாக வறுவலுக்கு ஏற்ற ரகமாக, கெட்டித்தன்மையுடன் சற்று பிசுக்குள்ள ரகங்கள் விரும்பப்பட்டன. தவிரவும், கெட்டித்தன்மையுள்ள வீரிய ரகங்கள் சீக்கிரம் அழுகிவிடாது.
  • உற்பத்தி உயர வேண்டுமானால் நாமும் நமது நாக்கைக் கட்டுப்படுத்தி, ‘உருளைக்கிழங்கு என்று ஒன்று கிடைக்கிறதே - ஜிடிபி உயா்ந்து தேச வருமானம் உயா்கிறதே’ என்று ஆறுதல் கொள்வோம்!

நன்றி: தினமணி (24 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்