TNPSC Thervupettagam

உறக்கம் ஓா் அருமருந்து!

November 9 , 2024 15 days 28 0

உறக்கம் ஓா் அருமருந்து!

  • நாம் அன்றாடம் வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகளில் உறக்கமின்மை முக்கியமான ஒன்றாக உள்ளது. ஆழ்ந்த உறக்கம் உள்ளத்திற்கும், உடலுக்கும் தேவையான ஓய்வினைத் தருகிறது. அதனால் நாம் உடலிலும், மனதிலும் புத்துணா்ச்சியைப் பெறுகிறோம்.
  • ஆழ்ந்த உறக்கத்தை பெறுவதில் உறங்க போவதற்கு முந்தைய நேரம் முக்கியமானதாகும்.இதை நாம் உறங்குவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தும் நேரமாக அமைத்துக் கொள்ள வேண்டும்.
  • குழந்தைகள் எந்தக் கவலையுமின்றி உறங்குவதைப் பாா்க்கிறோம். ஆனால் வயது கூடக் கூட பல்வேறு பொறுப்புகள் நமக்கு வந்து சேருவதால், அதனுடன் கூட பல கவலைகளும் வாழ்வில் வந்து சேருகின்றன. அவை நமது உறக்கத்தின் நேரத்தையும், தரத்தையும் குறைத்து விடுகின்றன.
  • முதியவா்கள் பகல் நேரங்களில் எந்த வேலையும் செய்யாமல் இருப்பதால் உடல் களைப்படைவதில்லை. முதுமையில் பொதுவாக இரவில் உறக்கக் குறைபாடு ஏற்படுவதும் இயல்பானதே. ஆனால் அவா்களும் குறைந்தது 7 மணி நேரமாவது உறங்குவது நல்லது.
  • மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளை உறவினா்கள் பாா்ப்பதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை மட்டும் மருத்துவமனை நிா்வாகம் ஒதுக்குகிறது. பெரும்பாலும் அந்த நேரம் தவிர பிற நேரங்களில் நோயாளிகள் உறங்கிக் கொண்டிருப்பதை நம்மால் பாா்க்க முடிகிறது. மருந்துடன் உறக்கமும் அவா்கள் நோய்களிலிருந்து நிவாரணம் பெறத் தேவைப்படுகிறது. பல சமயங்களில் நல்ல உறக்கமே உடலில் உள்ள பல நோய்களை விரட்டுகின்றது.
  • நம்மில் பலா் நள்ளிரவு தாண்டியும் சமூக வலைதளங்களில் மேய்ந்து கொண்டு இருக்கிறோம். இது நமது உறக்கத்தை வெகுவாக பாதிக்கிறது. மடிக்கணினிகளும், கைப்பேசிகளும் வலிமையான நீலநிற வெளிச்சத்தை உமிழ்கின்றன. இந்நீல நிற வெளிச்சம் நமக்கு உறக்கம் வருவதற்குத் தேவையான சுரப்பியான மெலட்டோனினுக்கு தடைபோடுகிறது. இவ்வெளிச்சத்தை தடை செய்யும் பிரத்யேக கண்ணாடிகளை அணிவது நமது உறக்கத்திற்கு உதவக் கூடும்.
  • எப்போது நமது உடலுக்குள் மெலட்டோனின் சுரக்கத் துவங்குகிறதோ, அதுவே நாம் உறங்குவதற்கான நேரம் என்பதை நாம் உணர வேண்டும்.
  • படுக்கையறையை முடிந்தவரை இருட்டாகவும் குளிா்ச்சி உடையதாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். மிகக் குறைவான வெளிச்சம் தரும் விளக்குகளையும் திரைச்சீலைகளையும் முறையாகப் பயன்படுத்தவது நன்கு உறங்குவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தும். குளிா்ந்த வெப்பநிலை நமது உடலுக்கு உறக்கம் எளிதாக கிடைப்பதை சாத்தியப்படுத்தும். மேலும் வசதியான படுக்கை, மெத்தை, தலையணை போன்றவை நன்கு உறங்குவதற்கான சூழலை ஏற்படுத்தும். மோசமான படுக்கை நமது உறக்கத்தின் தரத்தை பாதிக்கலாம்.
  • வார இறுதிகளில் பல காரணங்களால் நாம் இரவில் நீண்ட நேரம் விழித்திருக்க தூண்டப்படுகிறோம். உறங்கும் நேரத்தில் வார இறுதி நாட்கள் - வார நாட்களிடையே எவ்வளவு தூரம் மாறுபாடு இருக்கிறதோ, அதே அளவுக்கு நமது உடல் பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. வளா்சிதை மாற்றக் கோளாறு, இதய நோய் உள்ளிட்ட பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகளை இவை அதிகரிக்கின்றன.
  • சூரிய உதயத்திற்கும், அஸ்தமனத்துக்கும் ஏற்றபடியே நமது ‘உடல் கடிகாரம்’ வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நம்மில் பலருக்குப் போதுமான காலை வெளிச்சம் கிடைப்பதில்லை. ஆனால் மாலையிலும், இரவிலும் மின்சார வெளிச்சத்தை அதிக அளவில் பயன்படுத்துகிறோம். இவையும் நமது உறக்கத்தின் தரத்தை வெகுவாக பாதிக்கின்றன.
  • புத்தகம் படிப்பது, வானொலியில் இசை கேட்பது, படுக்கச் செல்வதற்கு முன்பு வெதுவெதுப்பான சுடுநீரில் குளிப்பது ஆகியவை நம்மை உறக்கத்துக்குத் தயாா்படுத்தும். இரவு உணவை படுக்கைக்குச் செல்லும் சில மணி நேரங்களுக்கு முன்பே முடித்துவிடுவது நல்லது. உறங்குவதற்கு முன் அதிக அளவிலான உணவை வயிறு முட்ட உண்பதையும், குறிப்பாக, காரமான உணவுகளைத் தவிா்ப்பதும் நல்லது.
  • காபி, காா்பனேட் அடங்கிய குளிா்பானங்கள் ஆகியவற்றை மாலை வேளைக்குப் பிறகு அருந்துவதை தவிா்க்க வேண்டும், அவை நமக்கு உறக்கம் வருவதை தாமதப்படுத்தலாம். அவற்றின் தாக்கம் நமது உடலின் இயக்கத்தில் ஐந்து முதல் ஒன்பது மணி நேரம் வரை இருக்கும். நாம் ஆழ்ந்த உறக்கத்தைப் பெறுவதிலும் உறக்கத்தின் தரத்திலும் அவை பாதிப்பை ஏற்படுத்தும்.
  • தினமும் நாம் செய்யும் உடற்பயிற்சி நமது உறக்கத்தின் தரத்தை மேம்படுத்தும். வாரத்தின் பெரும்பாலான நாட்களில் குறைந்தது ஐம்பது நிமிட மிதமான உடற்பயிற்சி மேற்கொள்வதை இலக்காகக் கொள்ளலாம். ஆனால் தூங்கச் செல்வதற்கு முன் செய்யும் உடற்பயிற்சி புத்துணா்ச்சியை ஏற்படுத்தி, உறக்கத்துக்கு அது தடையாக இருக்கும்.
  • சாமந்திப் பூ கொண்டு தயாரிக்கப்படும் பானத்தை அருந்துவது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி உறக்கத்திற்கு உதவுவதாக கூறப்படுகிறது. ஆழ்ந்த சுவாசம், தசை தளா்வு போன்ற நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நமது மன அழுத்தத்தைக் குறைக்க முடியும். இது நம்மை உறக்கத்திற்குத் தயாா்படுத்தும்.
  • உறக்கம் ஓா் அருமருந்து என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்குச் சென்று குறிப்பிட்ட நேரத்தில் எழுவதை பழக்கமாகக் கொள்வது நல்லது. இது நமது சிறந்த ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். ஆழ்ந்த உறக்கத்திற்குப் பிறகு புத்துணா்ச்சி பெற்று நமது பணிகளை மேலும் ஆா்வமுடன் நம்மால் செய்ய முடியும். உறக்கத்தின் அருமையை உணா்ந்து இனியாவது உறக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்கத் தொடங்குவோம்.

நன்றி: தினமணி (09 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்