உறவுக்கு கைகொடுப்போம்!
- தலிபான் ஆட்சியாளா்களுடன் இந்தியா தனது தொடா்பையும் நெருக்கத்தையும் அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.
- இரு நாள் பயணமாக புது தில்லிக்கு திங்கள்கிழமை வந்திறங்கிய கத்தாா் அரசா் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானியை விமான நிலையத்தில் வரவேற்ற பிரதமா் நரேந்திர மோடி.
- இரு நாள் பயணமாக புது தில்லிக்கு திங்கள்கிழமை வந்திறங்கிய கத்தாா் அரசா் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானியை விமான நிலையத்தில் வரவேற்ற பிரதமா் நரேந்திர மோடி.
- அரசு முறைப் பயணமாக கத்தாா் மன்னா் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு விஜயம் செய்து திரும்பியிருக்கிறாா். மரபுக்கு விரோதமாக, பிரதமா் நரேந்திர மோடியே விமான நிலையம் சென்று கத்தாா் அரசரை வரவேற்றாா் என்பது எந்த அளவுக்கு இந்தியா கத்தாருக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
- குடியரசுத் தலைவா் மாளிகையில் கத்தாா் அரசருக்கு அணிவகுப்பு மரியாதை செய்யப்பட்டது. பிரதமா் நரேந்திர மோடிக்கும், கத்தாா் மன்னா் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானிக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை வியூக அந்தஸ்துக்கு உயா்த்த முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு வா்த்தகத்தையும் நட்புறவையும் தாண்டிய நெருக்கமாக மாறும் என்று எதிா்பாா்க்கலாம்.
- இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையே 7 ஒப்பந்தங்கள் கையொப்பமாகியிருக்கின்றன. வா்த்தகம், எரிசக்தி, முதலீடு, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு கூட்டுறவு இதன்மூலம் புதிய உத்வேகம் பெறுகிறது. புத்தாக்கம், உணவுப் பாதுகாப்பு, கலாசாரம், மக்கள் ரீதியிலான தொடா்புகள் உள்ளிட்டவற்றை மேலும் வலுப்படுத்துவது குறித்த விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. பரஸ்பர நலன் சாா்ந்த பிராந்திய, உலகளாவிய விவகாரங்கள் குறித்தும் இரு தலைவா்களும் ஆலோசனை நடத்தினா்.
- கத்தாா் அரசரின் விஜயத்தின்போது, இரட்டைவரி விதிப்பு தவிா்ப்பு குறித்தும், நிதிமுறைகேடுகள் தடுப்பு தொடா்பாகவும் திருத்தப்பட்ட ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. பயங்கரவாத எதிா்ப்பு, சா்வதேச சட்ட விரோதப் பணமோசடி, இணையவழி மோசடி, தகவல் தொழில்நுட்ப வளா்ச்சியில் கூட்டு நடவடிக்கை உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டன.
- ‘எல்.என்.ஜி.’ எனப்படும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, ‘எல்.பி.ஜி..’ எனப்படும் பெட்ரோலிய எரிவாயு இரண்டும் கத்தாரில் இருந்தான இந்தியாவின் முக்கிய இறக்குமதிகள். எத்திலின், புரோபலீன், அமோனியா, யூரியா உள்ளிட்ட பல்வேறு வித ரசாயனங்களும், பிளாஸ்டிக் உள்ளிட்டவையும் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் இருந்து தானியங்கள், காய்கறிகள், பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள், மின்பொருள்கள், கட்டுமானப் பொருள்கள், ஜவுளி உள்ளிட்டவை கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
- இந்தியாவின் எல்.என்.ஜி. தேவையின் 45% கத்தாரிலிருந்து வழங்கப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான வா்தகம் 15 மில்லியன் டாலா் ஒப்பந்தத்தில் ஏறத்தாழ பாதி கத்தாரில் இருந்தான எல்.என்.ஜி., எல்.பி.ஜி. இறக்குமதிகள். இந்தியாவில் 10 மில்லியன் டாலா் முதலீடு செய்யவும், இரு நாடுகளுக்கு இடையேயான வா்த்தகத்தை 28 மில்லியன் டாலராக அடுத்த 5 ஆண்டுகளில் உயா்த்தவும், வா்த்தகத்தையும் பொருளாதாரக் கூட்டுறவையும் விரிவுபடுத்தவும் கத்தாா் அரசரின் விஜயத்தின்போது முடிவெடுக்கப்பட்டிருக்கின்றன.
- ஏறத்தாழ 8.30 லட்சம் இந்தியா்கள் கத்தாரில் பணிபுரிகிறாா்கள். கத்தாரில் உள்ள வெளிநாட்டுப் பணியாளா்களில் பெரும் பகுதியினா் இந்தியா்கள். இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களுக்கு 200-க்கும் அதிகமான விமான சேவை வாரந்தோறும் நடைபெறுகிறது என்பதில் இருந்து எந்த அளவுக்கு கத்தாா் நமக்கு முக்கியமானது என்பதை உணரலாம்.
- சமீபகாலமாக ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் ஆட்சியாளா்களுடன் இந்தியா தனது தொடா்பையும் நெருக்கத்தையும் அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. அதற்கு கத்தாா் அரசு உதவி செய்கிறது. ஏற்கெனவே வளைகுடா கூட்டுறவு கவுன்சிலின் உறுப்பு நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, ஓமன், குவைத் ஆகிய நாடுகளுடன் வியூக நட்புறவை இந்தியா ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், இப்போது கத்தாருடனான உறவையும், அதேபோல மேம்படுத்த இந்தியா முற்பட்டிருக்கிறது.
- சா்வதேச அளவில் வல்லரசு நாடுகளுடன் நெருக்கமான உறவை வைத்திருப்பதுடன் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், இஸ்ரேல் உள்ளிட்ட மேற்காசிய நாடுகளுடன் நெருக்கமாக இருக்கும் இந்தியாவுடன் கத்தாா் இணக்கமாக இருக்க விரும்புவதில் வியப்பில்லை. கத்தாரின் பொருளாதாரத்தில் இந்தியா்கள் முக்கியப் பங்கு வகிக்கிறாா்கள். கத்தாருக்கு இந்தியா எவ்வளவு முக்கியமோ, அதேபோல் இந்தியாவுக்கு கத்தாரும் முக்கியம். இந்தியாவுக்கு வெளிநாடுவாழ் இந்தியா்கள் அனுப்பும் அந்நியச் செலாவணியில் கணிசமான பங்கு கத்தாருடையது என்பதை நாம் மறந்துவிட கூடாது.
- கத்தாரில் அமெரிக்கா தனது ராணுவ தளத்தை அமைத்திருக்கிறது. அதில் பிரிட்டன், ஆஸ்திரேலிய விமானப் படைகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இன்னொருபுறம் ஹமாஸ், தலிபான் உள்ளிட்ட மதத் தீவிரவாத அமைப்புகளும் கத்தாரின் ஆதரவில் இயங்குகின்றன. மேற்காசியாவில், குறிப்பாக வளைகுடா நாடுகளில் அமைதி நிலவுவதற்கு கத்தாரின் உதவி தேவைப்படுகிறது என்று பரவலாகக் கருதப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில், கத்தாருடன் இணக்கமான நட்புறவை இந்தியா பேண விரும்புவதில் வியப்பில்லை.
- இரட்டைவரி விதிப்பு முறையைத் தவிா்ப்பதற்கான வழிமுறைகளை ஆராய்வதுடன் தடையற்ற வா்த்தகக் கூட்டுறவை ஏற்படுத்திக் கொள்ள இரு நாடுகளும் முடிவெடுத்திருக்கின்றன. கத்தாருக்கு ஏற்கெனவே சீனா உள்ளிட்ட பல நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் இருக்கும்நிலையில், கத்தாா் வழியாக அந்த நாடுகள் தங்களது பொருள்களை இந்தியச் சந்தையில் குவித்துவிடும் அபாயம் இருக்கிறது, ஜாக்கிரதை!
நன்றி: தினமணி (22 – 02 – 2025)