உறையூர் சுருட்டுக்கும் இரண்டாம் உலகப் போருக்கும் என்ன சம்பந்தம்?
- இரண்டாம் உலகப் போரில் முக்கியப் பங்கு வகித்த பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது என்ன? நெறித்த புருவமும் கடுகடு முகமும் அவர் வாயில் புகையும் அந்தச் சுருட்டும்தானே? சுருட்டுப் புகைப்பது சர்ச்சிலுக்கு மிகவும் பிடிக்கும். போர் வியூகங்களை வகுக்கும்போது சுருட்டுப் புகைத்தபடி அவர் சுட்டிக்காட்டும் வரைபடத்தின்படி தொலைதூரத்தில் துருப்புகள் நகரும். புகைப்பதற்கும் சிந்திப்பதற்கும் தொடர்பு இருப்பதாக எங்கும் சொல்லப்படவில்லை. ஒரு மனிதர் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருப்பதன் அடையாளமாக அவர் பிடிக்கும் சுருட்டிலிருந்து எழும் புகை வளையங்களைச் சித்தரிப்பது திரைப்படங்களில் வருகிற வழக்கமான காட்சிதான்.
- போர்க் காலத்தில் சர்ச்சிலுக்கு ஹவானாவி லிருந்து சுருட்டுகள் வரும். இரண்டாம் உலகப் போர் மூண்டபோது அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிக்கொண்டு வரும் வணிகக் கப்பல்களை, அட்லாண்டிக் கரை ஓரம் நாஸிப் படைகள் தடுத்து நிறுத்தின. இது பிரிட்டனைக் கவலைகொள்ளச் செய்தது. ஏனெனில் சர்ச்சிலுக்குப் பிடித்தமான ஹவானா சுருட்டுகளின் பெட்டிகள் இந்தக் கப்பல்களில் இருந்தன. சென்னை மாகாண கவர்னருக்கு ஒரு யோசனை பளிச்சிட்டது. அவரது அதிகாரத்தைப் பயன்படுத்தி CCA என்கிற பதவியை உருவாக்கினார். சர்ச்சில் சிகார் அசிஸ்டென்ட் என்று அதற்குப் பெயர். அவரது வேலை திருச்சி உறையூரிலிருந்து உறையூர் சுருட்டுகளை வரவழைத்து, இங்கிலாந்திலிருக்கும் பிரதமரின் புகழ்பெற்ற 10, டவுனிங் தெரு என்கிற முகவரிக்கு அனுப்புவதுதான். ‘சுருட்டுச் சுவைஞர்’ (Cigar Taster) என்கிற பெயரில் அவர் அழைக்கப்பட்டார்.
- சர்ச்சிலுக்கு உறையூர் சுருட்டுகள் பிடித்துப் போயின. அதனாலேயே உறையூர் சுருட்டுகள் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாயின. உறையூர் சுருட்டு, தயாரிப்பு நிறுவனங்களின் கேந்திரமாகிவிட்டது. உலகெங்கும் உள்ள பிரபுக்கள், அதிகாரிகள் தமது அந்தஸ்தைப் பறைசாற்ற வாயில் சுருட்டுடன் காட்சியளித்தார்கள். ஷெர்லாக் ஹோம்ஸின் துப்பறியும் நாவல்களில் குற்றவாளி பற்றிய வர்ணனையில், ‘ஆறடி உருவம். அகோரமுகம். வாயில் புகையும் திருச்சிராப்பள்ளி சுருட்டு’ என்கிற வரி இடம் பெற்றது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் திகில் படங்களில் மர்ம ஆசாமிகளின் கையில் உறையூர் சுருட்டு புகைந்தது.
- உறையூர் சுருட்டின் மெலிதான காரமும் நறுமணமும் சர்ச்சிலுக்கு மிகவும் பிடித்துப்போனது. ஆனால், உறையூர் சுருட்டைத் தயாரிக்க மிகவும் மெனக்கெட வேண்டி இருந்தது. இந்தத் தொழிலில் தேர்ந்த வல்லுநர்கள் தரமான புகையிலையைப் பதினான்கு ஆண்டுகள் ஊறவைக்கப்பட்ட வெல்லம், பழச்சாறுகளில் ‘பதங்கமாதல்’ முறைப்படி பதப்படுத்தி, கையால் உருட்டி, ஆறு அங்குல நீளத்தில் தயாரித்தனர். உறையூர் சுருட்டின் சுவையும் மணமும் அபாரமாக இருந்தது. உறையூரில் செயல்பட்ட மொத்தம் 4 ஆயிரம் சுருட்டு யூனிட்களில் 1900ஆம் ஆண்டு சோலைத்தேவர் என்பவரால் தொடங்கப்பட்ட ஃபென் தாம்ஸன் மட்டுமே இன்று மிச்சமிருக்கிறது.
- தமிழ்நாட்டில் அந்தக் காலத்தில் உள்ளூர் தயாரிப்புகளான கடாமார்க் சுருட்டுகள், பெல் பிராண்டு சுருட்டுகள் பிரபலமாக இருந்தன. புதிய பறவை திரைப்படத்தில், ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என்கிற பாடலுக்கு ஆடியபடி வரும் செளகார் ஜானகியை, சுருட்டு பிடித்தபடியே சிவாஜி கணேசன் ரசிப்பார். சுருட்டைச் சற்றே புகைத்தபின் அதன் நெருப்பு நுனியை ‘கட்டரி’ன் துணைகொண்டு துண்டித்து, மீண்டும் பின்னர் புகைப்பது வழக்கம். சமயச் சடங்குகளிலும் சுருட்டு இடம் பெற்றிருக்கிறது. மதுரை வீரன், கருப்பசாமி, முனீஸ்வரன் ஆகிய நாட்டார் தெய்வங்களின் வழிபாட்டில் அசைவ உணவுப் படையல்களில் சுருட்டும் இடம்பெறும். ‘சுடலைமாடன் தெய்வத்துக்குச் சுருட்டு வச்சுதான் படைக்கணும்’ என்கிற சொலவடை திருநெல்வேலியில் உண்டு.
- ‘புகையிலை-வழக்காறும் வரலாறும்’ என்கிற அருமையான ஆய்வுப் படைப்பினைத் தாம் அரிதின் முயன்று தொகுத்த பல தரவுகளோடு தமிழுக்குத் தந்திருக்கிறார் தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புற இலக்கியத் துறைத் தலைவர் பேராசிரியர் இரா. காமராசு. அவர் எழுதியுள்ள நூலில் இடம்பெற்றுள்ள செய்திகளில் ஒன்று: தென் அமெரிக்கப் பழங்குடிகளின் மதச் சடங்குகளில் சுருட்டும் இடம்பெற்றிருந்ததைக் குறிப்பிடுகிறார். சுருட்டுகளில் எழுகின்ற புகையிலையின் மயக்கம் ஒருவகை தியான நிலைக்குத் தங்களை இட்டுச் செல்வதாகப் பழங்குடியினர் நம்புகின்றனர்.
- கொலம்பஸ் அமெரிக்காவுக்குச் சென்றபோது அதுவரை சுருட்டுகள் பற்றி அறிந்திராததால், கொள்ளிக்கட்டைகளை வாயில் கவ்வியபடி அலையும் மனிதர்களைக் கண்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார். சுவாமி விவேகானந்தரிடம் சுருட்டுப் பிடிக்கும் பழக்கம் இருந்தது. வட இந்திய கிராமம் ஒன்றில் சாலை ஓரம் ஹூக்கா புகைத்தபடி உட்கார்ந்திருந்த முதியவரை நெருங்கி, தாமும் ஹூக்கா புகைக்க விரும்புவதாகக் கூறியிருக்கிறார் விவேகானந்தர். முதியவர் தாம் ஒரு துப்புரவுத் தொழிலாளி என்று மறுத்தபோது, கடவுளுக்குமுன் எல்லாரும் சமம் என்று கூறி, அவர் புகைத்த ஹூக்காவை வாங்கிப் புகைத்திருக்கிறார், விவேகானந்தர்.
- சுருட்டுப் பிடிக்கும் வழக்கம் தற்போது மறைந்து வருகிறது. உறையூரில் மிஞ்சியிருக்கும் ஃபென் தாம்ஸன் கம்பெனியின் தற்போதைய உரிமையாளரிடம் உரையாடியபோது, இந்தத் தொழிலுக்கு விதிக்கப்படும் வரி, சுருட்டுக்கு வரவேற்பின்மை ஆகிய காரணங்களால் இத்தொழில் நசிந்து வருகிறது என்றார். தாம் தயாரிக்கும் தரமான சுருட்டின் தற்போதைய விலை ரூ.900/- என்றும் தெரிவித்தார். ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் குறிப்பிட்ட வெப்பநிலையில் அவை பாதுகாக்கப்படுவதைப் பார்க்கமுடிந்தது. 90 வயது வாடிக்கையாளர் இப்போதும் தம்மிடம் சுருட்டு வாங்கிச் செல்வதாகக் குறிப்பிட்டார். ‘புகையிலை கம்பெனிகள் மிகச் சிறந்த வாடிக்கையாளர்களைக் கொல்கின்றன’ என்கிற பிரான்ஸ் நாட்டு முதுமொழி நினைவுக்குவந்தது.
- சர்ச்சிலுக்கு உறையூரிலிருந்து சுருட்டு தவறாமல் அனுப்பப்பட்டு வருகிறதா என்பதைக் கண்காணிக்க திருச்சி மாவட்ட நிர்வாகத்தால் ஓர் அறிக்கை அனுப்பப்பட்டுவந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் போர் முடிந்து சர்ச்சில் மறைந்த பிறகும் இப்படி ஓர் அறிக்கை NIL REPORT என்கிற பெயரில் நம் நாடு சுதந்திரம் பெற்று வெகுகாலம் ஆனபிறகும் அனுப்பப்பட்டுவந்தது. பிறகு தணிக்கையில் கண்டறியப்பட்டு அறிக்கையும், இப்படி ஓர் அறிக்கையை அனுப்பும் CCA என்கிற உதவியாளர் பதவியும் தேவையில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டது.
நன்றி: தி இந்து (07 – 12 – 2023)