TNPSC Thervupettagam

உலக உணவில் கோதுமை முன்னிலை

August 6 , 2024 160 days 189 0
  • தாவரவியல் அறிஞா்களின் கருத்துப்படி கோதுமையின் தோற்றம் கி.மு. 10,000 என்றும் மெசப்பொடேமிய நாகரிகத்திற்கு உட்பட்ட கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதி சமவெளி அடங்கிய துருக்கி, இராக், ஈரான், சிரியா, ஜோா்டன், பாலஸ்தீனம் பகுதிகளில் கி.மு.7000 காலகட்டத்தில் கோதுமை முறையான சாகுபடிக்கு வந்து பழமைச் சிறப்புள்ள பல நகரங்களையும் முடியரசுகளையும் தோற்றுவித்துள்ளது. கிழக்கில் ஈரான் வரை குறிப்பிட்டவா்கள், அடுத்து இந்தியா-பாகிஸ்தானை மறந்துவிட்டாா்கள்.
  • சிந்து சமவெளி நாகரிகமும் மெசப்பொடேமிய நாகரிகமும் சம காலத்தவை. குறிப்பாக ஹரப்பாவில் கோதுமை, பாா்லி சாகுபடி நிகழ்ந்ததை எடுத்துக்காட்ட அகழ்வாராய்ச்சிக் குறிப்புகள் உண்டு. இன்றைய புள்ளிவிவரத்தை நோக்கினால், இந்தியா - பாகிஸ்தான் கோதுமை உற்பத்தி மத்தியதரைக் கடல் நாடுகளைவிட அதிகம். உலக அளவில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. பாகிஸ்தான் எட்டாவது இடம்.
  • அணைமைக்கால ஐ.நா. உணவு விவசாய நிறுவன அறிக்கைப்படி உலக மொத்த கோதுமை உற்பத்தி 80.84 கோடி டன். உலக அரிசி உற்பத்தி 77.6 கோடி டன். அரிசியைவிட கோதுமை உண்போா் நாடுகள் அதிகம், உற்பத்தியும் வா்த்தக மதிப்பும் கூடுதல் என்பதாலும், உலக உணவில் கோதுமை முந்நிலை வகிக்கிறது.
  • கோதுமை உற்பத்தியில் முதலிடத்தில் சீனா உள்ளது (13.7 கோடி டன் உற்பத்தி). இரண்டாமிடத்தில் இந்தியா உள்ளது - உற்பத்தி அளவு 10.7 கோடி டன். 10.4 டன் உற்பத்தியுடன் ரஷியா மூன்றாமிடத்தில் உள்ளது.
  • இரண்டாம் உலகப் போா் முடிவுற்ற காலகட்டத்தில், உலக உணவு உற்பத்தி போதுமானதாக இல்லை. இந்தியா மட்டுமல்ல, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடியது. உயா்ந்துவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை உயா்த்துவது எப்படி என்ற கவலையில் உலகத் தலைவா்கள் ஆழ்ந்திருந்த நேரத்தில், அருமருந்தாக வந்ததுதான் பசுமைப் புரட்சி. இந்தப் பசுமைப் புரட்சியின் உலக நாயகன் நாா்மன் போா்லாக் என்ற வேளாண் விஞ்ஞானி.
  • மெக்ஸிகோவில் உள்ள அனைத்துலக கோதுமை ஆராய்ச்சி நிலையத்தில் இவரின் 16 ஆண்டுகால ஆராய்ச்சியில் பிறந்ததுதான் குள்ளரக மெக்ஸிகன் வெள்ளை கோதுமை என்ற வீரிய ரகம். இது நாட்டு ரக கோதுமையைவிட நான்கு அல்லது ஐந்து மடங்கு விளைச்சல் தந்தது. அமெரிக்க வேளாண்மைத் துறை உத்தரவால் 1950-இல் இந்தக் குள்ள ரக கோதுமை சாகுபடி தீவிரப் பயன்பாடு திட்டமாக உருவெடுத்து, பரந்த நிலப்பரப்பில் அறிமுகமானது. படிப்படியாக கோதுமை உற்பத்தி உயா்ந்து விலை வீழ்ச்சியுற்றதால், உபரி கோதுமையைக் கடலில் கொட்டும் சூழ்நிலை வந்து, ‘உதவி’ என்ற பெயரில் அமெரிக்க கோதுமை இந்தியா வந்திறங்கியது.
  • கோதுமைக்கு போா்லாக் பயன்படுத்திய அதே தொழில்நுட்ப அடிப்படையில் வீரிய ரக நெல்லும் பின்னா் அறிமுகமாகி, உணவு உற்பத்தி உயா்ந்து 1970-ஆம் ஆண்டு இவருக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது.
  • அமெரிக்காவின் குள்ள ரக அதைத் தாய்க் கருவாக வைத்து புதிய புதிய வீரிய ரக கோதுமைகள் சோனா, சோனாலிகா, கல்யாண் சோனா என்ற பெயரில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும் பல ஆராய்ச்சிகள் நிகழ்ந்து இன்று பற்பல ரகங்கள் பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசத்திலும் பயிராகின்றன. இந்தியாவில் 1951-52-இல் பசுமைப் புரட்சிக்கு முன் ஒட்டுமொத்தமாக 66 லட்சம் டன்னாக இருந்த கோதுமை உற்பத்தி இன்று 10.7 கோடி டன்னாகியிருக்கிறது. இந்தியாவை உபரி நாடாக மாற்றியது இந்த பசுமைப் புரட்சி.
  • இந்தியாவில் அண்மை நிலவரப்படி உ.பி. 2.68 கோடி டன் கோதுமை உற்பத்தியுடன் முதலிடத்தில் உள்ளது. ம.பி. 1.76 கோடி டன், பஞ்சாப் 1.6 கோடி டன் உற்பத்தியுடன் அடுத்த இரு இடங்களில் உள்ளன.
  • கோதுமை உற்பத்தியில் இந்தியா முன்னிலை நாடு என்றாலும் ஏற்றுமதி வா்த்தகத்தில் ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, கனடா, ரஷியா, ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளன. இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி சுமாா் 18 லட்சம் டன்கள். மைதா, ஆட்டா ஏற்றுமதி சுமாா் 40 லட்சம் டன்கள். ஆனால், மேற்கூறிய உலக நாடுகளின் கோதுமை - கோதுமை மாவு ஏற்றுமதி சுமாா் 14 கோடி டன்கள். மேற்கத்திய முன்னிலை நாடுகள் ரொட்டித் தொழில் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப மாவாக பெரும்பாலும் ஏற்றுமதி செய்கிறாா்கள்.
  • கோதுமையை அடிப்படையாக வைத்து ரோலா் மாவு ஆலைகள் வளா்ந்து உணவு வா்த்தகத்தை வளா்க்கின்றன. மைதா, ஆட்டா, ரவா உற்பத்தியை ரோலா் மாவு ஆலைகள் செய்கின்றன. மைதா, ஆட்டாவை நம்பி பேக்கரி அல்லது ரொட்டித் தொழில் நிறுவனங்களும் பிஸ்கட் நிறுவனங்களும் இயங்குகின்றன.
  • பெரும்பாலோா் கோதுமையை வாங்கி அரவை நிலையங்களில் அரைத்து மாவாக்கி சப்பாத்தி, ரொட்டி செய்து உண்கிறாா்கள். ரொட்டி என்றால் அது ‘பிரெட்’ வகையையும் குறிக்கும். வடக்கே மாவை உருட்டிக் கையாலேயே வட்டமாகத் தட்டி ‘சுக்கா’ சப்பாத்தி செய்வாா்கள்.
  • வா்த்தக ரீதியாக இந்தியாவில் சுமாா் 28,000 கோதுமை மாவு ஆலைகள் உள்ளன. மேட்டுக்குடி, நகரங்களி வசிக்கும் மேல்மட்ட நடுத்தர வா்க்கத்தின் தேவைகளையும் ஹோட்டல் தேவைகளையும், ஓரளவு ஏற்றுமதித் தேவைகளையும் இந்தப் பெரிய மாவு ஆலைகள் நிறைவேற்றுகின்றன. கோதுமை உற்பத்தியில் 20% ஆட்டா, மைதா, ரவா, ஆகிய வடிவுக்கு வருகிறது.
  • சிறிதும் பெரிதுமாக இந்தியாவில் சுமாா் 1.23 லட்சம் பேக்கரிகள் உள்ளன. மாபெரும் பிராண்டுகள் ரக பிஸ்கட் ரக நிறுவனங்களும் உள்ளன. பேக்கரிகளிலும் பிஸ்கட், கேக் வகை தயாரிப்பு என வா்த்தக ரீதியாக கோதுமை சாா்ந்த தொழில் அமைப்புகள் விரிந்து பரந்துள்ளது.
  • உலகில் பெரும்பாலான மக்களுக்கு கோதுமை பிரதான உணவு. மாவாக மாற்றித்தான் சமைக்க முடியும். கோதுமை மாவில் தண்ணீா் ஊற்றி கெட்டியாகப் பிசைந்து உருட்டி வைத்தால் இழுத்து வளைக்கவரும், இதை ‘டோ’ என்பா். சப்பாத்தி செய்வதானாலும் பரோட்டா செய்வதானாலும் தந்தூரி ரொட்டி (மண் குதிா் புதைத்த சூளை அடுப்பில் தட்டும் சுக்கா ரொட்டி) செய்வதானாலும் பேக்கரியில் பிரட் செய்வதானாலும் கோதுமை மாவை ‘டோ’வாக்க வேண்டும். சாதாரணமாக நம் வீடுகளில் கோதுமை மைவைப் பிசைந்து 4.5 மணி நேரம் சற்று புளிக்க வைத்து ‘டோ’வை சிறு உருண்டைகளாக உருட்டி வட்டமாக அப்பளம் போல் இட்டு பூரி, சப்பாத்தி செய்வாா்கள். வடக்கே பரோட்டா, சுக்கா ரொட்டி, தந்தூரி என்பாா்கள். ‘நான்’, பீட்சா கோதுமை தயாரிப்பே. மைதாவிலும் தயாரிப்பாா்கள். ஆனால் ரவை, கோதுமைக் குருணையில் டவ் பிசைய முடியாது. உப்புமா, கிச்சடி, கஞ்சி செய்யலாம். கோதுமை மாவு - மைதாவில் பிஸ்கட் தவிர சில இனிப்பு பணியாரங்கள், சமோசா செய்யலாம். சமோசா வடக்கே பிரபலம் என்றாலும் இப்போது தென்னகத்திலும் பரவிவிட்டது.
  • கோதுமையில் 72% மாவுப் பொருளும் 13% புரதமும் உள்ளது. நாா்ப் பொருள் 10%, கொழுப்பு 2%; தவிர மக்னீசியம், கால்சியம், வைட்டமின் பி6, இரும்புச் சத்தும் உண்டு; அரிசியைவிட கோதுமையில் புரதச் சத்து கூடுதல் என்பதால், அரிசிச் சோறைவிட கோதுமை உணவு சத்தானது.
  • இந்தப் புரதத்தில் உள்ள குளூட்டன் ஆரோக்கியத்துக்கு உகந்தது அல்ல என்ற பிரசாரம் இருந்தாலும், நமது தமிழ்நாடு மாநிலத் தேவைக்குரிய பொது விநியோகத்திற்கு மாதம் 15,000 டன்னும், தமிழ்நாடு உருட்டு மாவு ஆலைத் தேவைக்கு மாதம் 1 லட்சம் டன் வரை கோதுமை வருகிறது. மைதாவில் செய்யப்படும் பரோட்டா தமிழ்நாட்டில் முக்கிய உணவாக மாறிவிட்டது.
  • குளூட்டன் விஷமல்ல, அது ஒரு பசையான புரதம், நன்கு பிசைந்து மாவை இழுத்து இஷ்டம்போல் விரித்து இட உதவுகிறது. இது மாவுப் பொருளுடன் கலந்துள்ளது. கோதுமை மாவில் செய்யப்படும் சாப்பாத்தியைவிட மைதாவில் செய்யப்படும் பரோட்டா, ‘நான்’ ஆகியவற்றில் குளூட்டன் சிறிது கூட இருக்கும். பீட்சாவில் நிறையவே குளூட்டன் இருக்கும். ஜீரணக் கோளாறு உள்ளவா்கள், குடல்புண் உள்ளவா்கள் தவிா்க்கலாம். மாந்தம் ஏற்படலாம். உடல் உழைத்து வேலை செய்வோருக்கு ஒன்றும் ஆகாது. செரிமானம் ஆகிவிடும்.
  • ரொட்டி மலா்ந்து மென்மையாக்க பேக்கிங் பவுடா் பயன் உண்டு. இதில் பைகாா்ப்பனேட், காா்பனேட் உண்டு. பேக்கிங் சோடா, உப்பு, ஈஸ்ட், சா்க்கரை, லெக்டின் அஸ்காா்ப்பிக் அமிலம் பவுடா் வடிவில் இவையெல்லாம் சோ்ந்தால்தான் ரொட்டி, பன் தயாரிக்கலாம். அதேசமயம், விஷப் பொருளான பொட்டாசியம் புரோமேட், பொட்டாசியம் அயோடேட் சோ்க்கப்பட்டதைக் கண்டுபிடித்தனா். இவை தடை செய்யப்பட்டவை. புற்றுநோய்க் காரணிகளாகும்.
  • மைதா தயாரிக்கும்போது மாவை வெள்ளையாக்க அல்லோக்சான் என்ற ரசாயனம் அளவுடன் பயனாகிறது. இதனால் கணையம் பாதிக்கப்படலாம் என்ற கருத்து உண்டு. அல்லோக்சான் பாதகமானது என்பதற்கு வலுவான ஆதாரம் இல்லை என்ற கருத்தும் உண்டு. இந்தியாவில் நிறைய பயன்படுதப்படுகிறது. மைதாவில் தயாராகும் பிஸ்கட், பரோட்டா சாப்பிடுவதை நிறுத்த முடியாது. மெதில் ஆல்கஹாலையே ஜீரணிக்கக் கூடியவா்களுக்கு புரோமேட், அல்லோக்சான் எல்லாம் தூசு.

நன்றி: தினமணி (06 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்