TNPSC Thervupettagam

உலக நாடுகளைப் போல இந்திய நாடாளுமன்றம் உடனடியாகக் கூட வேண்டும்

June 5 , 2020 1686 days 784 0
  • உலகெங்கும் உள்ள ஜனநாயக நாடுகளின் நாடாளுமன்றங்கள் கூடி, கரோனா கொள்ளைநோய்க்குத் தங்கள் அரசுகள் செயலாற்றும் விதம் குறித்துக் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கின்றன.
  • ஏப்ரல் இறுதியில், கனடிய நாடாளுமன்றம் கூடியது. இணையம்வழி நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 338 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 280 பேர் பங்கேற்றனர். 3 மணி நேரத்துக்கும் மேலாக விவாதித்தார்கள்.
  • நேரில் கூடுவது, காணொலி மூலம் கூடுவது என்று இருவகையிலும் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் கூடியது.
  • பிரான்ஸ், இத்தாலி, அர்ஜெண்டினா, பிரேசில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற ஏனைய பல நாடுகள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதன் மூலமாகவோ (எல்லாக் கட்சிகளிலிருந்தும் சில உறுப்பினர்கள் மட்டும் கலந்துகொள்வது என்ற ஒப்பந்தத்துடன்) காணொலி மூலமாகவோ இரண்டும் கலந்தோ நாடாளுமன்றங்களைக் கூட்டின.
  • இந்தக் கொள்ளைநோயின்போது வெவ்வேறு நாடுகளின் நாடாளுமன்றங்கள் பின்பற்றும் வழிமுறைகளை ‘சர்வதேச நாடாளுமன்றங்களின் ஒன்றியம்’ ஆவணப்படுத்தியிருக்கிறது.
  • உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உச்ச அமைப்பு என்று தன்னைப் பற்றிப் பெருமை கொண்டிருக்கும் இந்திய நாடாளுமன்றம் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.
  • நமது அரசு நிர்வாக அமைப்பில் நாடாளுமன்றம் பிரதானப் பங்கு வகிக்கிறது. முதலும் இறுதியுமாக, அதுதான் ஆட்சியில் இருக்கும் அரசைக் கட்டுப்படுத்துவதற்கும் சவால் விடுவதற்குமான அமைப்பு.
  • அதிபர் முறையிலான அரசாட்சிக்குப் பதிலாக நாடாளுமன்ற முறையிலான அரசாட்சியை அரசமைப்பு வரைவுக் குழு ஏன் தெரிவுசெய்தது என்பதை பி.ஆர்.அம்பேத்கர் விளக்கியிருக்கிறார்.
  • அதிபர் முறையில் அதிகபட்சமான நிலைத்தன்மைக்கு வாய்ப்பிருந்தாலும் நாடாளுமன்ற முறைதான் கேள்விகள், தீர்மானம் நிறைவேற்றுதல், விவாதங்கள் ஆகியவற்றின் மூலம் அரசாங்கத்தைப் பொறுப்புக்குள்ளாக்குவதில் சிறந்தது என்பது அவருடைய விளக்கம்.
  • நாடாளுமன்றமும் அதன் குழுக்களும் இந்தியாவில் இரண்டு மாதங்களாகக் கூடவில்லை என்பது அரசின் செயல்பாடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்பதை உணர்த்துகிறது.

பொதுமுடக்கச் சட்டம்

  • நாடு தழுவிய சட்டங்கள் எல்லாம் நாடாளுமன்றத்தால் உருவாக்கப்படுகின்றன. பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005-ன் கீழ்தான் தற்போதைய நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்துவருகிறது.
  • இந்தச் சட்டம் கொள்ளைநோய்களை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்படவில்லை.
  • கரோனா பரவலைத் தடுத்து நிறுத்துவதற்குத் தேவைப்பட்ட பொதுமுடக்கத்தைக் கொண்டுவருவதற்கு வேறெந்தச் சட்டமும் இல்லை என்பதால், ஒன்றிய அரசுக்கு வேறு வழியில்லை என்று வாதிடப்படுகிறது.
  • இந்த வாதம் ஒரு விஷயத்தைத் தவறவிடுகிறது. பொதுமுடக்கம் அறிவிக்கப்படும் நாள் வரை நாடாளுமன்றம் கூடியிருந்த காலத்தில், இதற்குப் பொருத்தமான ஒரு சட்டத்தைக் கொண்டுவந்திருக்கலாம்.
  • இதைத்தான் பல்வேறு நாடுகளும் செய்தன. தேவைப்படும் கட்டுப்பாடுகள், காலாவதி நாள், தேவையெனில் நாடாளுமன்றத்தால் புதுப்பித்துக்கொள்ளலாம் என்ற அம்சங்களுடன் அந்த நாடுகள் சட்டமியற்றின.
  • அரசாங்கத்தால் செய்யப்படும் செலவுகள் நாடாளுமன்றத்தால் ஒப்புக்கொள்ளப்பட வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. கரோனாவாலும் பொதுமுடக்கத்தாலும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள அரசு தொடர்ச்சியாகப் பல திட்டங்களை அறிவித்திருக்கிறது. இவையெல்லாம் நாடாளுமன்ற விவாதத்துக்கோ ஒப்புதலுக்கோ விடப்படவில்லை.

திட்டங்கள் தீட்டும் இடம்

  • இந்த நெருக்கடியான தருணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்காற்ற வேண்டும். நாடாளுமன்றத்தில் கேள்விகளைக் கேட்பதன் மூலம், அவர்கள் மக்களின் அக்கறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.
  • இந்தக் கொள்ளைநோயின் காரணமாக நாடு பல்வேறு வகையிலும் கடுமையான சவால்களை எதிர்கொண்டிருக்கிறது. பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.
  • மேலும், புலம்பெயர் தொழிலாளர்களின் துயரம் மனிதப் பேரவலமாக மாறியுள்ளது. இதுபோன்ற பிரச்சினைகளை விவாதித்துத் தேவையான திட்டங்களைத் தீட்டும் இடம் நாடாளுமன்றம்தான்.
  • தனிமனித இடைவெளியுடனான கூட்டங்களையும் தொலைசந்திப்புகளையும் நமது அரசமைப்புச் சட்டம் தடுக்கவில்லை. ‘எது பொருத்தமாக இருக்குமோ அந்த நேரத்திலும் இடத்திலும்’ கூடுமாறு நாடாளுமன்றத்துக்குக் குடியரசுத் தலைவர் அழைப்பு விடுக்கலாம் என்கிறது நம் அரசமைப்புச் சட்டம்.
  • அவையின் ‘அமர்வு நடைபெறுவதற்கான தேதியையும் இடத்தையும்’ ஒவ்வொரு உறுப்பினருக்கும் தெரிவித்து, பொதுச் செயல் அதிகாரி அழைப்பு விடுக்க வேண்டும் என்று இரு அவைகளின் நடைமுறை விதிகள் கூறுகின்றன.
  • கலவையான கூட்டங்களையும் தொலைசந்திப்புகளையும் நிகழ்த்துவதற்கான வாய்ப்புகளை இது வழங்குகிறது. நாடாளுமன்றக் குழுக்கள் அவையின் வளாகத்துக்குள்ளே கூட வேண்டும் என்பது விதிமுறை.
  • ஆனால், வெளியிலும் கூடுவதற்கு அவைத் தலைவர் அனுமதிக்கலாம். சொல்லப்போனால், துணைக் குழுக்கள் அடிக்கடி டெல்லிக்கு வெளியில் ஆய்வுப் பயணங்கள் மேற்கொள்கின்றன. இப்படியாக, காணொலிக் கூட்டங்கள் நடத்த நாடாளுமன்றத்தின் முன்னனுமதி தேவையில்லை.
  • குழுக்களின் கூட்டங்களுக்குத்தான் தொலைவிலிருந்து இயங்குவதற்கான சாதனங்கள் தேவை. உலகளாவிய பெருநிறுவனங்கள் பலவும் பல நாடுகளின் நாடாளுமன்றக் குழுக்களும் இந்தப் பிரச்சினையைத் தீர்த்திருப்பதால், இந்திய நாடாளுமன்றத்தால் அந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கு எந்தத் தடையும் இல்லை.
  • எல்லா மாவட்டத் தலைமையகங்களும் ‘ஃபைபர் ஆப்டிக்’ கம்பிகளால் இணைக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி அலுவலகத்தில் இணைய இணைப்பில் ஏதாவது பிரச்சினை என்றாலும் இதுபோன்ற அரசு வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

வழிமுறைகளைக் கண்டாக வேண்டும்

  • கடைசியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை எப்படிக் கருதிக்கொள்கிறார்கள் என்பதில்தான் எல்லாமே இருக்கிறது. தங்களை மக்களின் பாதுகாவலர்கள் என்று அவர்கள் நினைத்தால், தங்களின் அரசமைப்புச் சட்டக் கடமைகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளை அவர்கள் கண்டாக வேண்டும்.
  • கடந்த மூன்று மாதங்களாக மத்திய -மாநில அரசுகள் கரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதற்காக 5,000 அறிவிப்புகளுக்கும் மேலாக வெளியிட்டிருக்கின்றன.
  • இந்த அறிவிப்புகளின் பொருத்தப்பாடு நாடாளுமன்றத்தாலும் அதன் குழுக்களாலும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இதுவே, சாதாரண நாட்களென்றால் நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு ஜூலையின் இரண்டாம் பாதியில் நடைபெறும். ஆனால், தற்போது நிலவும் அசாதாரணமான சூழல்கள் காரணமாக நாடாளுமன்றம் உடனே கூட வேண்டும்.
  • உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் என்றும், உலகுக்கே தகவல் தொழில்நுட்ப சேவையை வழங்கும் நாடு என்றும் தன்னைப் பற்றிப் பெருமைகொண்டிருக்கிறது இந்தியா.
  • ஆகவே, ஜனநாயகத்தைச் செயல்படுத்துவதில் நமக்குள்ள நம்பகத்தன்மையை வலுப்படுத்திக்கொள்வதற்கு நாட்டின் தகவல் தொழில்நுட்ப சக்தியை நாடாளுமன்றம் பயன்படுத்திக்கொள்வது அவசியம்.

நன்றி: தி இந்து (05-06-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்