- உலக விளையாட்டுத் திருவிழாவான 33 ஆவது ஒலிம்பிக் போட்டி ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கோலாகலமாக இன்று தொடங்குகிறது. 1924க்குப் பிறகு, நூறாண்டு கழித்து பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் இது. 206 நாடுகளைச் சேர்ந்த 10,500 வீரர், வீராங்கனைகள் 32 விளையாட்டுகளில் பங்கேற்க உள்ளனர்.
- உலகில் நிலவிவரும் பல்வேறு ஒடுக்குமுறைகளைக் களைவதும் சமதர்மத்தைப் பேணுவதும் ஒலிம்பிக் போட்டிகளின் அடிப்படை நோக்கங்களில் ஒன்று. அதில் பாலினப் பேதத்தை நவீன ஒலிம்பிக் போட்டிகள் களைந்தது மிக முக்கியமானது. 1900இல் பாரிஸில் இரண்டாவது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றபோது, 22 பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
- மொத்தப் பங்கேற்பாளர்களில் பெண்களின் விகிதம் 2.2% மட்டுமே. 124 ஆண்டுகளுக்குப் பிறகு, பாரிஸில் தற்போது நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் மொத்தப் பங்கேற்பாளர்களில் பாதிப் பேர் (5,250) பெண்கள். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் 47.82% பெண்கள் பங்கேற்றதைவிட இந்த முறை சற்று அதிகம் (50%).
- அதேபோல், டோக்கியோவை அடுத்து பாரிஸிலும் 150க்கும் மேற்பட்ட பால்புதுமையினர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். பால் புதுமையினரை அங்கீகரிக்கப் பல நாடுகள் தயங்கிவரும் நிலையில், சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அவர்களை அங்கீகரித்துள்ளது முக்கிய முன்னெடுப்பு. 2016 ரியோ ஒலிம்பிக்கில் முதன்முறையாக 10 பேர் கொண்ட அகதிகள் ஒலிம்பிக் அணி அறிமுகமானது.
- 8 ஆண்டுகள் கழித்து அந்த எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளது. பலவந்தமாக இடம்பெயர நேரிட்ட, நாடற்ற மக்களை ஒலிம்பிக்கில் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலக சமுதாயம் ஆதரவுக் கரம் நீட்டுவதன் அடையாளமாக இதைக் கருதலாம். சில நாடுகளுக்கு இடையே யுத்தங்களும் பனிப்போர்களும் நிலவிவரும் சூழலில், எல்லோர் மனங்களையும் இணைத்துப் புது நம்பிக்கையைத் துளிர்க்கச் செய்ய இது ஒரு பொன்னான தருணம் என்பதில் இருவேறு கருத்தில்லை.
- இந்தியா சார்பில் இந்த முறை 16 விளையாட்டுகளில் 47 பெண்கள் உட்பட 117 பேர் பங்கேற்க உள்ளனர். ஒப்பீட்டளவில் டோக்கியோ ஒலிம்பிக்கைவிட 3 பேர் குறைவு. தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 வீரர், வீராங்கனைகளும் ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் ஒலிம்பிக் தொடக்க விழாவில் தேசியக் கொடியை ஏந்திச்செல்வது ஒரு பெருமிதத் தருணம். அவருடன் பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்துவும் இணைந்து தேசியக் கொடியை ஏந்திச்செல்கிறார்.
- 2020 ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா (தடகளம்), வெள்ளி வென்ற சாய்கோம் மீராபாய் சானு (பளு தூக்குதல்), வெண்கலம் வென்ற லோவ்லினா போர்கோஹைன் (குத்துச்சண்டை), வெண்கலம் வென்ற ஹாக்கி ஆடவர் அணி, 2016, 2020இல் வெள்ளி, வெண்கலம் வென்ற பி.வி.சிந்து ஆகியோர் இந்த ஒலிம்பிக்கிலும் பங்கேற்கின்றனர்.
- அனுபவம்வாய்ந்த வீரர்களான சரத் கமல் (டேபிள் டென்னிஸ்), ரோஹன் போபண்ணா (டென்னிஸ்), அமித் பங்கால் (குத்துச்சண்டை), தமிழ்நாட்டைச் சேர்ந்த நேத்ரா குமணன், விஷ்ணு சரவணன் (பாய்மரப் படகு), இளவேனில் வாலறிவன், பிரித்விராஜ் தொண்டைமான் (துப்பாக்கிச்சுடுதல்) ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
- 2020இல் 7 பதக்கங்களை வென்றதே, ஓர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் அதிகபட்ச சாதனை. அந்தச் சாதனையை முறியடித்து, இரட்டை இலக்கத்தில் பதக்கங்களை வெல்ல வேண்டும் என்பது நாட்டு மக்களின் ஆவல். அந்த எதிர்பார்ப்பு நிறைவேறட்டும்!
நன்றி: இந்து தமிழ் திசை (26 – 07 – 2024)