TNPSC Thervupettagam

உலகத் தற்கொலைத் தடுப்பு நாள்: செப்டம்பர் 10 தற்கொலைகளை ஏன் தடுக்க முடியவில்லை

September 10 , 2023 594 days 334 0
  • தற்கொலைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதுவும் குறிப்பாக இளம் வயதினர் அதிகமாகத் தற்கொலை செய்து கொள்ளும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் இருக்கிறது. போட்டித் தேர்விற்கு தயார் செய்யும் மாணவர்கள் ஆங்காங்கே தினம் தினம் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்பதை செய்திகளில் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. இந்தத் தற்கொலைகளைத் தடுக்கவே முடியாதா என்கிற கேள்வி நமக்குள் அப்போது எழுகிறது. தற்கொலைகளைப் பற்றியும், தற்கொலைக்கு முயல்பவர்களைப் பற்றியும் பொதுச் சமூகத்தில் நிலவும் சில தவறான நம்பிக்கைகளுமேகூட தற்கொலைகளை முழுமையாகத் தடுக்க முடியாமல் போவதற்கு முக்கியமான காரணங்களே.

தவறான நம்பிக்கைகள்

தற்கொலை முயற்சி என்பது மனநோயின் வெளிப்பாடு

  • தற்கொலைகளுக்கு பல்வேறு சமூக, பொருளாதார, உளவியல் காரணங்கள் இருக்கின்றன. அதை வெறும் தனிநபரின் பலவீனமாகவோ நோயாகவோ கருத முடியாது. பெரும்பாலான மனநோய்கள் சரியான சிகிச்சை செய்யப்படாதபோது தற்கொலையில் முடிய வாய்ப்பிருக்கிறது. ஆனால், தற்கொலைக்கு முயல்பவர்கள் அனைவருக்குமே மனநோய் இருக்கிறது எனச் சொல்ல முடியாது. வளரும் நாடுகளில் தற்கொலைகளுக்கு சமூக, பொருளாதார, அரசியல் காரணங்களே, தனிநபர் காரணங்களைவிட முதன்மையாக இருக்கின்றன என்கின்றன ஆய்வுகள்.

தற்கொலை பற்றிப் பேசுவதே ஒருவரை தற்கொலை செய்துகொள்ளத் தூண்டும்

  • நிறைய நேரம், நமக்குத் தெரிந்த ஒருவரின் நடவடிக்கைகளின் வழியாக ‘அவர் சரியில்லை, ஒருவேளை தற்கொலை எண்ணம்கூட அவருக்கு இருக்கலாம்’ என்கிற உள்ளுணர்வு நமக்கு வந்தாலும்கூட அதைக் குறித்து வெளிப்படையாக அவரிடம் பேச மாட்டோம். ஏனென்றால், தற்கொலை எண்ணங்கள் பற்றி அவரிடம் பேசுவதாலேயே அவர் தூண்டப்பட்டு ஒருவேளை தற்கொலை செய்துகொள்வாரோ என்கிற பயம்தான் அதற்கு காரணம். ஆனால், உண்மையில் தற்கொலை எண்ணம் இருக்கும் ஒருவரிடம் அந்த நேரத்தில் நாம் பேசுவதும், அவரைப் பேசச் சொல்லிக் கேட்பதும் மிக மிக முக்கியமானவை. ஏனென்றால் பெரும்பாலான தற்கொலை சார்ந்த முடிவுகள் கண நேரத்தில் ஓர் உணர்வுவயப்பட்ட நிலையில் எடுக்கப்படக்கூடியவை. அந்த நேரத்தில் யாராவது ஒருவர் அவருக்கு ஆறுதலாக இருந்தாலே அந்தக் கணத்தைத் தாண்டிவிடலாம், தற்கொலையையும் தடுத்துவிடலாம்.

தற்கொலைக்கு முயல்பவர்கள் கவன ஈர்ப்பிற்காகவே செய்கிறார்கள், உண்மையில் தற்கொலை செய்துகொள்ள மாட்டார்கள்.

  • மிக மிகத் தவறான எண்ணம் இது. தற்கொலைக்கு முயல்வது என்பது ‘ஓர் உதவிக்கான அழைப்பு' (Cry for help) என்பதுதான் உண்மை. ‘நெருக்கும் துயரங்களிலிருந்து விடுபடவே முடியாது’ என்கிற நம்பிக்கையிழந்த நிலையில்தான் ஒருவர் தற்கொலையைப் பற்றிச் சிந்திக்கிறார், அந்தத் துயரங்களிலிருந்து ஏதேனும் ஒரு கரம் நம்மை மீட்காதா என்கிற எதிர்பார்ப்பு அவரிடம் இருந்துகொண்டேயிருக்கும். உதவியை நாடும் அவருக்கு நம்மால் முடிந்த அளவிற்கு நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும். வெறும் கவன ஈர்ப்பு உத்தி என்று அதை நிராகரிக்கக் கூடாது.

தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று ஒருவர் முடிவெடுத்துவிட்டால், யாராலும் தடுக்கவே முடியாது.

  • நிச்சயமாக இல்லை. தற்கொலைகளைத் தடுக்க முடியும். தற்கொலை செய்துகொள்ளலாம் என்கிற விபரீத முடிவுக்கு ஒருவர் செல்வது என்பது ஓர் உணர்வுவயப்பட்ட நிலையில் நடப்பது. அந்த மனநிலையையும் அவரின் சூழலையையும் சரி செய்யும்போது, அந்த எண்ணத்தையும் மாற்றிவிட முடியும். ஒருவரிடம் தற்கொலை எண்ணம் இருக்கிறது என்பதை சரியான நேரத்தில் கண்டறிந்து, அவருடன் உடனிருந்து நம்பிக்கையைக் கொடுப்பதன் விளைவாகவும், தேவைப்பட்டால் அவருக்குத் தேவையான முறையான ஆலோசனையை அல்லது சிகிச்சையை அளிப்பதன் வழியாகவும் தற்கொலை எண்ணங்களிலிருந்து அவரை முழுமையாக மீட்டுக் கொண்டுவர முடியும்.

தற்கொலை முயற்சி ஒரு கோழைத்தனம்

  • தற்கொலை முயற்சி என்பது கோழைத்தனமல்ல, கோரிக்கை. அது அந்தத் தனிப்பட்ட நபரின் பலவீனமல்ல, அவர் சார்ந்த சூழலின் ஆரோக்கியமற்ற நிலை. கண்ணுக்கெட்டிய தூரத்தில் நம்பிக்கையின் வெளிச்சமே இல்லாத சூழலில்தான் ஒருவருக்கு வாழ வேண்டும் என்பதன் மீதான பிடிப்பு குறைகிறது. அந்த நம்பிக்கையைக் கொடுக்காதது அந்தச் சூழலின் பிரச்சினையே தவிர, தனிநபரின் பிரச்சினையல்ல. அதேபோல சவால்களையும், சிக்கல்களையும் எதிர்கொள்வதற்கு உரிய மனவலிமையையும் சமூகம்தான் கொடுக்க வேண்டும். ஓர் ஆரோக்கியமான சமூகம் எப்போதும் எளியவர்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதையே முதற்கடமையாகக் கொண்டிருக்க வேண்டும்.

ஒருமுறை தற்கொலைக்கு முயன்றவர் வாழ்நாள் முழுவதும் தற்கொலையைப் பற்றி யோசிக்கவே மாட்டார்.

  • தவறான கருத்து. தற்கொலை செய்துகொண்ட பெரும்பாலானவர்கள், அதற்கு முன்பு ஒருமுறையாவது தற்கொலைக்கு முயன்றவர்களாகவே இருக்கிறார்கள். அதனால் தற்கொலைக்கு முயலும் ஒருவர் பின்னாளில் தற்கொலை செய்துகொள்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே, அலட்சியப்படுத்தாமல் உடனிருப்பவர்கள் அவர்களின் மனநிலை சார்ந்து கவனமாக இருக்க வேண்டும்.

ஒருவர் தற்கொலை செய்துகொள்ளப் போகிறார் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது

  • நிச்சயமாக இல்லை. தற்கொலை எண்ணமிருப்பவர்கள் ஏதேனும் ஒரு வழியில் அதை வெளிப்படுத்தவே செய்வார்கள், ஆனால், உடனிருப்பவர்கள்தாம் அந்தச் சமிக்ஞைகளை அலட்சியபடுத்தி விடுவார்கள். மிகவும் கவனமாக இருக்கும்பட்சத்தில் ஒருவரிடம் தற்கொலை எண்ணமிருப்பதை அவரின் நடவடிக்கைகளை வைத்தே உணர்ந்துகொள்ள முடியும்.

என்னென்ன மாற்றங்கள் இருக்கும்?

  • வழக்கத்தைவிட மிக அதிகமாகத் தற்கொலைகளைப் பற்றிப் பேசுவார்கள்.
  • எப்போதும் இல்லாத வகையில் மரணம், மரணத்திற்குப் பிறகான வாழ்க்கை போன்றவற்றைப் பற்றித் தத்துவார்த்தமாகப் பேசிக் கொண்டிருப்பார்கள்.
  • எதிலும் நம்பிக்கையில்லாமல், எல்லா வற்றிலுமே எதிர்மறையான கருத்துகளையே கொண்டிருப்பார்கள்.
  • அனைவரிடமிருந்தும் விலகிப் பெரும்பாலும் தனிமையிலே இருப்பார்கள்.
  • புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு மனநிலை உணர்வுவயப்பட்ட நிலையில், சீரற்று மாறிக் கொண்டேயிருக்கும்.
  • அவர்களின் அன்றாட நடவடிக்கைகளில் மாற்றங்கள் இருக்கும், சாப்பிடுவது, தூங்குவது போன்றவை பெரிதும் மாறியிருக்கும்.
  • தனது பொருள்களை எல்லாம் எடுத்துப் பிறருக்குக் கொடுப்பார்கள், எதன் மீதும் பற்றற்ற வகையில் பேசுவார்கள்.
  • மீண்டும் பார்க்க வாய்ப்பிருக்கும் நபர்களிடம் கூட மிக உருக்கமாக விடைகொடுத்துச் செல்வார்கள்.
  • சில புதிய ஆபத்தான பழக்கங்களைக் கற்றுக் கொள்வார்கள்.
  • சமூக வலைத்தளங்களில்கூட அவரின் நடவடிக்கைகள் வழக்கத்தைவிட மாறானதாகவும், விசித்திரமானதாகவும் இருக்கும்.
  • ஒருவரின் இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் அவரிடம் தற்கொலை எண்ணங்கள் இருப்பதை ஓரளவிற்கு ஊகிக்க முடியும். அப்படி ஒருவரைப் பற்றி நாம் சந்தேகப்பட்டால் உடனடியாக அவரிடமே நேரடியாக இது தொடர்பாகப் பேச வேண்டும்; அவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்; குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்; தேவை ஏற்பட்டால் தகுந்த உளவியல் மருத்துவரை நாட வேண்டும். தற்கொலைகள் தொடர்பான எல்லா விழுமியங்களிலும் பொதுச் சமூகம் விழிப்புடன் இருந்தால் மட்டுமே, அதிகரிக்கும் தற்கொலைகளை நம்மால் முழுமையாகத் தடுக்க முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை (10 – 09 – 2023)

Be the first to Comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
Top